ஐந்தாம் பத்து
சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தொகுப்புக்காகத் தகவல்களை திரட்டும்போதுதான் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. இணையத்தில் எல்லாம் இருக்கிறது என்பர். அப்படியெல்லாம் இல்லை என்பது நன்றாக புரிகிறது. பல எழுத்தாளர்களைப்பற்றிய தகவல் இணையத்தில் இல்லாமல் இருப்பதை பெரும் குறையாகவே நினைக்கிறேன். இந்த கட்டுரை அந்த குறையை சிறிதளவாவது குறைக்கும் என்பது என் எண்ணம். இன்னும் இதில் இல்லாத சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை வேறொரு கட்டுரையில் காணலாம். –
-என். செல்வராஜ்
கல்கி
இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இவரது சிவகாமியின் சபதம் மற்றொரு புகழ் பெற்ற வரலாற்று நாவல்.கல்கியின் சிறுகதைகள் முழு தொகுப்பாக இரண்டு தொகுதிகளாக திருமகள் நிலையம் வெளியிட்டுள்ளது.சமூகப் புதினமான ‘அலைஓசை’ ஆகியவையும் பெரும் வரவேற்பைப் பெற்றன. கல்கி இறந்த பின் அவரின் அலையோசை நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கல்கியினால் சிறுகதை தமிழ் மண்ணில் இரண்டறக் கலந்தது. அந்த அஸ்திவாரத்தின் மீதே சிறுகதை கட்டியெழுப்பப்பட்டு சிகரமும் அமைக்கப்பட்டது. சிறந்த சிறுகதை கேதாரியின் தாயார்
சி சு செல்லப்பா
சி.சு.செல்லப்பா ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், “சுதந்திர தாகம்” போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர். சுதந்திரச் சங்கு” இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு “மணிக்கொடி” இதழ் கை கொடுத்தது. “சரசாவின் பொம்மை” என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது. சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த “எழுத்து” என்ற இதழைத் தொடங்கினார்.நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். இவரின் சிறந்த சிறுகதைகள் சரஸாவின் பொம்மை, மூடி இருந்தது
நீல பத்மநாபன்
நீல பத்மநாபன் என்னும் நீலகண்டப்பிள்ளை பத்மநாபன் , தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது விருது பெற்றுள்ளார்.இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள் முழு தொகுப்பாக வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நீல பத்மநாபனது இரண்டு மிக முக்கியமான, அதிகமாகப் பேசப்பட்ட நாவல்கள் தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம். புதிய தமிழ் இலக்கிய வரலாறு என்னும் மூன்று தொகுதிகளைக் கொண்ட நூலை சாகித்ய அக்காடமிக்காக நீல பத்மநாபனும் சிற்பி பாலசுப்ரமணியனும் இணைந்து பதிப்பித்துள்ளனர். இந்த நூலின் மூன்றாம் தொகுதி புத்திலக்கியத்தில் தொடங்கி புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வரையிலான வரலாற்றை சொல்கிறது. இவரது சிறுகதை நகுலன் தொகுத்த குருஷேத்திரம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் கடிகாரம், ஜின்னின் மணம், சண்டையும் சமாதானமும்
க நா சுப்ரமணியம்
வலங்கைமானில் பிறந்த க.நா.சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட, க.நா.சு தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார்.ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1986ம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. க.நா. சுப்ரமணியத்தையே தமிழ் விமர்சன மரபின் முதல் சிகரமாகக் கொள்ள வேண்டும். தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளின் பட்டியலைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுக் கொண்டிருந்தார். பட்டியலில் அவ்வப்போது இணங்கான முடிகிற முரண்பாடுகள் அவர் பார்வையைத் துலக்குவனவாக அமையவில்லை. ஆனால், அவர் இனங்காட்டிய இலக்கியப் படைப்புகள் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளாக ஏற்கப்பட்டன. மயன் என்ற பெயரில் கவிதைகளை அவர் எழுதிவந்தது பிரசித்தம். ‘படித்திருக்கிறீர்களா’ சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வந்த தொடர். இது மிகச்சிறப்பான தொடர் கட்டுரை. இவரின் சிறந்த சிறுகதை சாவித்திரி
வாஸந்தி
பங்கஜம் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர்.இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி துணிச்சலான பத்திரிக்கையாளர் என்று முத்திரை பதித்தவர். இவர் எழுதிய “வாஸந்தி சிறுகதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.பஞ்சாப், இலங்கை, ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சனைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் முறையே மெளனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் ஆகியவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாப் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான ’ஆகாச வீடுகள்’ இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது. சமூக, மனித உளவியல் கூறுகளை வெகு இயல்பாக எழுத்தில் கையாண்டவர். இவரின் சிறந்த சிறுகதை தேடல்,
சிவசங்கரி
சிவசங்கரி தமிழக எழுத்தாளர். நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு” என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.இவரது முதல் சிறுகதை “அவர்கள் பேசட்டும்” – குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, 1968 இல் கல்கியில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர். இரண்டாவது சிறுகதை “உனக்குத் தெரியுமா?” – ஒரு குடிகாரனைப் பற்றிய கதை, `ஆனந்த விகடன்’ பத்திரிகையில் பிரசுரமானது. அதன்பின் பல சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், வெளிநாட்டு அனுபவங்கள், கட்டுரைத் தொடர்கள் என எழுதியிருக்கிறார். சிவசங்கரியின் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளாக வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நெஞ்சில் நிற்பவை என்ற சிறுகதை தொகுப்பை சிவசங்கரி தொகுத்து வானதி பதிப்பகம் வெளியிட்டது. இதில் 60 எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்துள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் வைராக்கியம், பொழுது , செப்டிக்
மேலாண்மை பொன்னுச்சாமி
விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுசாமி. மேலாண்மை பொன்னுசாமி சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.அவருடைய அரும்புகள், உயிரைவிடவும், சிபிகள் போல தமிழில் குறிப்பிடத்தக்க பல கதைகளை தந்திருக்கிறார்.அவருடைய முற்றுகை நாவலில் கையாண்ட பிரச்னை மிக முக்கியமானது.அவருடைய படைப்புகள் அத்தனையும் ஒரு மானாவாரி கரிசல்காட்டு விவசாயியின் குரலில் சொல்லப்பட்ட கதைகள்தாம். சம்சாரியின் மனதோடு பேசிய கதைகள் தமிழில் மிக மிக அரிது.அப்படியான அரிய கதைகளைத் தந்தவர் மேலாண்மை.கரிசல் பூமி தந்த சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். கரிசல் பூமி மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும், உயிரோட்டமாகவும் எழுதுவதில் தலை சிறந்தவர். இவருடைய மானாவரிப்பூ 33 சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கு சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது கிடைத்துள்ளது. இவரின் சிறந்த சிறுகதை அரும்பு
ஜி நாகராஜன்
1950 முதலே சிறுகதைகள் எழுதியிருக்கிறார். 1957ல் ஜனசக்தி மாத இதழில் “அணுயுகம்” என்ற கதையை எழுதியதும் புகழ் பெற்றார். பித்தன் பட்டறை என்ற பதிப்பகம் வழியாக “குறத்திமுடுக்கு” என்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளே” இவரது புகழ் பெற்ற நூல். ஜி. நாகராஜன் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.இவருடைய மொத்தப் படைப்புகளையும் தொகுத்து “ஜி.நாகராஜன் ஆக்கங்கள் என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகம் முழு படைப்புக்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஜி.நாகராஜனின் கதை உலகம் என்பது சமூகத்தால் கண்டுகொள்ளப்படாத தகுந்த அங்கீகாரமில்லாத நகரத்தின் இடுக்குகளில் வாழும் விளிம்புநிலை மக்கள் சார்ந்தது. தமிழ்ப் புனைவுகள் அதுவரை கண்டிராத ஓர் உலகத்தை தம் கதைகளின் வாயிலாகக் கட்டமைத்தார்.நாகராஜனின் சிறுகதைகளைவிட அவருடைய இரு நாவல்களும் அதிகமாக கவனிக்கப்பட்டவை. அவருடைய இரண்டு நாவல்களுக்கும் இணையான ஒரு சிறுகதை, “கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா’ என்ற கதை. இதுகாறும் நம்பப்பட்டு வந்த ஒழுக்கத்தையும் அதன் விதிகளையும் அதன் எல்லைவரை சென்று தன் கதைகளின் மூலமாகத் தகர்த்தெறிந்தவர் ஜி.நாகராஜன். இவரின் சிறந்த சிறுகதைகள் ஆண்மை , இளிந்த ஜாதி, தீராக்குறை, டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ்டி அணிந்த மனிதரும்
பா செயப்பிரகாசம்
பா. செயப்பிரகாசம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. மனஓசை இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்துள்ளார். சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் எழுதியுள்ளார்.அன்று தொடங்கி இன்று வரை மொழி, தேசியம், வர்க்கம், சாதி, பாலியல் என்று எதுவானாலும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே சார்ந்து போதல் என்ற உண்மைக் கலைஞனுக்கே உரிதான உளவியலைச் சிந்திச் சிதறவிடாமல் தக்க வைத்துக் கொண்டு வருகிறார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் மன ஓசை இதழை நடத்துவதற்காக தனது படைப்பாக்க மனநிலையையே தாரை வார்த்திருக்கிறார். பா.செயப்பிரகாசம் கதைகள் முழுமையான தொகுப்பு எனும் இப்புத்தகம் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாகும். சந்தியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது.“ஜே. பி. என நண்பர்களால் அழைக்கப்படும் பா.செயப்பிரகாசம் 1941இல் பிறந்தவர். எழுபதுகளின் புகழ் பெற்ற இலக்கியப் போக்குகளில் ஒன்றான கரிசல் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான சிறுகதைக் கலைஞர்களுள் ஒருவர். வானம் பார்த்த பூமியான கரிசல் காட்டு வாழ்வின் துயரார்ந்த பகுதிகளைக் கவித்துவம் ததும்பும் தன் படைப்பு மொழியில் ‘உந்திக்கொடியோடும் உதிரச்சேற்றோடும்’ முன்வைத்த பா.செ., தொடக்கத்தில் தன் சொந்தப் பெயரிலும் பிறகு சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் சிறுகதைகள் எழுதியவர் மறைந்த கரிசல் படைப்பாளி வீர.வேலுச்சாமி அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் தேடிச் சேகரித்து ஒரே தொகுப்பாக தோழர் பா.செயப்பிரகாசம் ‘மண்ணின் குரல்’ என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் ஒரு ஜெருசலேம், அம்பலக்காரர் வீடு, கரிசலின் இருள்கள், இருளுக்கு அழைப்பவர்கள், தாலியில் பூச்சூடியவர்கள்
கோபிகிருஷ்ணன்
விளிம்பு நிலை மனிதர்கள்,கீழ்த்தட்டு மனிதர்கள்,நடுத்தர வர்க்கம்,அதிகாரங்களுக்குப் பழகிய இயந்திரமயமாகிப்போன மனிதர்கள் என இவரது கதைமாந்தர்கள் இயலாமையின் உச்சத்திலிருந்து சமூகத்தின் போலி மதீப்பீடுகளை விசாரணைக்குள்ளாக்குபவர்கள்.உளவியல் சிக்கல்கள்,அக மனதின் விசாரங்கள் என இவரது துறை சார்ந்த செறிவான உள்ளீடுகளையும் இவரது படைப்பில் காணலாம்.வாழ்வின் மீது மறைமுகமாகப் படிந்துபோயிருக்கும் குரூரத்தினை தனது அடையாளமாகவே ஏற்றுக் கொள்ளும் வாழ்வின் உச்சகட்ட இயலாமைகளை மிகவும் புதுமையான ஒரு நடையில் நமக்கு அறிமுகப்படுத்துவதாகவே இவரது கதைகள் இருக்கின்றன.மதுரையில் பிறந்த கோபிகிருஷ்ணன் உளவியல் துறையிலும்,சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆத்மன் ஆலோசனை மையம் என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.எந்த ஒரு வடிவிலும் குரூரத்தை தாங்கிக் கொள்ளாத மனநிலையே இவருக்கு வாய்த்திருக்கிறது. மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி ‘உள்ளிருந்து சில குரல்கள்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். இவரது படைப்புக்களின் முழு தொகுப்பை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் காணி நிலம் வேண்டும், புயல், மொழி அதிர்ச்சி