கவிஞர் மகுடேஸ்வரன் அவர்கள் தமிழ் மொழி தலைசிறந்த நிபுணராக பவனி வருகிறார். தமிழைப் பிழையின்றி மக்கள் எழுதவேண்டும் என்பதற்காக அவர் எடுத்துவரும் முயற்சிகளை எப்படிப் பாராட்டினாலும் தகும்.
நக்கீரன் இதழில் அவர் எழுதும் சொல்லேர் உழவு என்ற கட்டுரைத் தொடர் தமிழ் தெரிந்த அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
அந்தத் தொடரிலிருந்து சில பகுதிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
நன்றி : மகுடேஸ்வரன் ( சொல்லேர் உழவு – நக்கீரன் )
கடலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களை வீரமாமுனிவரின் சதுரகராதி கூறுகிறது. அத்தி, அப்பு, அம்பரம், அம்புராசி, அம்போதி, அரி, அருணவம், அலை, அளக்கர், ஆர்கலி, ஆழி, உத்தி, உந்தி, உப்பு, உவரி, உவர், ஓதம், கலி, கார்கோள், குரவை, சக்கரம், சமுத்திரம், சல்தி, சலநதி, சலராதி, சாகரம், சிந்து, தெண்டிரை, நதிபதி, நரலை, நீராழி, நேமி, யயோத்தி, பரப்பு, பரவை, பாராவாரம், புணரி, பெருநீர், பௌவம், மகராலயம், மகோத்தி, முந்நீர், வாரம் வாரணம், வாரி, வாரிதி, வாருணம், வீரை, வெள்ளம், வேலாவலயம், வேலை.
கடல் என்னும் ஒரு பொருளுக்கு நம் மொழியில் வழங்கப்பட்ட சொற்கள் இவை. இவற்றுள் சில பிறமொழிச் சொற்களாகவும் இருக்கலாம். ஆனாலும் கடல் என்றதும் இச்சொற்களில் பல நமக்கு நினைவுக்கு வரவில்லை என்றால் நமக்குச் சொல்லறிவு போதவில்லை என்பதே பொருள்.
பெண்கள் தங்கள் கூந்தலை ஐந்து வகைகளாக முடிப்பதற்கும் ஐம்பால் என்று பெயர். இது சங்க காலக் குறிப்பு. ஒரு பெண் தன் கூந்தலை ஐந்து வகைகளாக முடியிடுகிறாள். முடி, கொண்டை, குழல், சுருள், பனிச்சை என்பனவே அவ்வைந்து வகைகளாம்.
முடி என்பது என்ன ? மலையின் உச்சிப் பகுதியை முடி என்கிறோம். அதுபோல ஒரு பெண் தன் கூந்தலை மலையின் முடியைப்போலத் தன் தலையுச்சியில் வைத்து முடிவது முடி எனப்படும். கொண்டை என்பது நமக்குத் தெரியும். கூந்தலைச் சுருட்டி இடப்பக்கமோ வலப்பக்கமோ திரளாகத் தொகுத்துக்கொள்வது. கூந்தலை மலர்ச்சரங்களோடு வைத்துப் பின்னிச் செருகினால் அதற்குச் சுருள் என்று பெயர். கூந்தலை அள்ளி முடிந்தால் அதற்குக் குழல் என்று பெயர். கூந்தலைச் சடையாகப் பின்னிக்கொண்டால் அதற்குப் பெயர் பனிச்சை. இத்தகைய ஐவகைக் கூந்தல் முடிமுறைகளையும் ஐம்பால் என்கின்றனர்.
வழுக்கும் தன்மையால்தான் வழலைக்கட்டிகள், எண்ணெய்கள் ஆகியவற்றின் இயல்புகளை வழுவழுப்பு என்கிறோம். சிலர் அதனையும் வழவழப்பு என்று தவறாகக் கூறுவார்கள்.
முயல் + சி = முயற்சி,
பயில் + சி = பயிற்சி.
முயல் என்ற வினைவேரிலிருந்து முயற்சி என்ற பெயர்ச்சொல் தோன்றிய பிறகு அதனை வினைச்சொல்லாக்க முடியுமா ? சிலர் முயற்சித்தான் என்று எழுதுகிறார்கள். அது பெரும்பிழை. வேண்டுமானால் ‘முயற்சி செய்தான்’ என்று எழுதலாம். பயில் என்ற வினைவேரிலிருந்து பயிற்சி என்ற தொழிற்பெயர் தோன்றிய பிறகு பயிற்சித்தான் என்று எழுத இயலுமா ? இயலாது. நமக்கு முயல், பயில் என்னும் வினைவேர்கள் இருக்கின்றன. அவை முயன்றான், பயின்றான் என்று தெள்ளத் தெளிவான வினைமுற்றுகளாகும். மொழியின் இவ்வியற்கை தெரியாதவர்கள்தாம் முயற்சித்தான் என்று எழுதுவார்கள்.
துணைக்கால் – கா சா தா
கொம்புக்கால் – ஊ, கௌ, சௌ
மடக்கு ஏறுகீற்றுக் கால் – ணூ, தூ, நூ
ஒற்றைக்கொம்பு – கெ, நெ, செ
இரட்டைக்கொம்பு – கே, நே, சே
இணைக்கொம்பு/சங்கிலிக்கொம்பு – கை, சை, நை
சாய்வுக்கீற்று – ஏ
இறங்கு கீற்று – பு, சு, வு
மடக்கு ஏறு கீற்று – ணு, து, நு
பின்வளைகீற்று – கூ
மேல்விலங்கு – கி, தி, பி
கீழ்விலங்கு – மு, ரு, கு
இறங்குகீற்றுக் கீழ்விலங்குச் சுழி – சூ, பூ
மேல்விலங்குச் சுழி – கீ, தீ, ரீ
கீழ்விலங்குச் சுழி – மூ ரூ
பிறைச்சுழி – ஆ
ஒருநாள், ஒருவேளை, ஒருமுறை, ஒருவிதம், ஒருவகை, ஒருதலை போன்றவை பிரியாமல் பொருளுணர்த்தும் தொடர்கள் ஆகிவிட்டன. அவற்றைச் சேர்த்தே எழுத வேண்டும். அரிதாக எங்கேனும் எண்ணுப் பொருளில், இன்றியமையாமையை உணர்த்தும் பொருளில் வந்தால் மட்டும் பிரித்தெழுத வேண்டும்.
நேயம் நேசம் ஆன பிறகு நேசித்தான் என்று எழுதினார்கள். ‘நேசி’ என்று கவிதையில் கெஞ்சினார்கள். நேசித்தான் என்ற சொல்லை அதன் தூய வடிவத்திற்கு மாற்றினால் ஞேயித்தான் என்று வருகிறது. நேசி என்ற ஏவல் வினையை ஆக்க முடிந்தமையால் அதனை ‘நேசிப்பு’ என்று தொழிற்பெயராக்க முனைந்தார்கள். நேசித்தான், வாசித்தான், பூஜித்தான், பிரகாசித்தது, ஜொலித்தது, தீர்மானித்தான் என எழுதுகிறீர்கள் என்றால் நீங்கள் பிற்காலத்தில் தோன்றிய பிழை வழக்குகளை அடியொற்றுகிறீர்கள் என்று பொருள். ஏனென்றால் ஒரு சொல்லின் வேர் வேறாக இருக்கையில் அதன் பிழை வழக்குகளை அறியாமல் எடுத்தாள்கிறோம். ஞேயம் என்பதனை நேயம் என்று பயன்படுத்துவதுதான் வரம்பு. அதனை நேசம், நேசித்தான், நேசிப்பு, நேசன் எனல் பிழை வழக்குகள் ஆகும்.
ஆண்பாற்கும் பெண்பாற்கும் தனித்தனி விகுதிகள் இருக்கின்றன. விகுதி என்பது ஒரு சொல்லின் பின்னொட்டு. இறுதிப்பகுதி. ஒருவன் என்பதில் ஒரு என்பது ஒருமையை, ஒற்றைத்தன்மையைக் குறிக்கிறது. அன் என்பது பின்னொட்டாகச் சேர்ந்த விகுதி. இங்கே அன் என்பது ஆண்பால் விகுதி. ஒருவன் என்னும்போது ஓர் ஆணைக் குறிக்கிறது. ஒருவன் என்பதற்குப் பெண்பால் ஒருத்தி. ஒருவள் என்று சிலர் பிழையாக எழுதுகின்றனர். அள் என்பதும் பெண்பால் விகுதிதான். ஆனால், எல்லாவிடங்களிலும் அள் விகுதி வருவதில்லை. குறவன் குறத்தி, உழவன் உழத்தி, ஒருவன் ஒருத்தி… இப்படித்தான் வரவேண்டும்.
அன், ஆன் ஆண்பால் விகுதிகள் என்றால் அள், ஆள் பெண்பால் விகுதிகள்.
மணமகன் மணமகள், வெறுங்கையன் வெறுங்கையள், பிறன் பிறள், அவன் அவள் என்னுமிடங்களில் அன், அள் விகுதிகள் இருபாற்கும் முறையே வருகின்றன. அடியான் அடியாள், ஆண்டான் ஆண்டாள் ஆகிய இடங்களில் ஆன் ஆள் விகுதிகள் இருபாற்கும் வருகின்றன.
தோழன் தோழி, அரசன் அரசி, கூனன் கூனி, குமரன் குமரி, கிழவன் கிழவி, காதலன் காதலி ஆகிய இடங்களில் இ என்ற விகுதி பெண்பாற்கு வந்தது. காதலி, காதலள், காதலாள் என்று பலவாறும் சொல்லத் தகுந்த இடங்களும் இருக்கின்றன. ஐகார விகுதி பெறும் பெண்பாற்பெயர்களும் இருக்கின்றன. ஆசிரியன் ஆசிரியை, ஐயன் ஐயை.
ஆண்பால் பெண்பால் சொற்கள் இவ்வாறு இணையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. தொடர்பே இல்லாமலும் இருக்கலாம். ஆண் என்பதற்குப் பெண் என்பதே தொடர்பில்லாத சொல்தானே ? அடூஉ மகடூஉ என்பன முறையே ஆண் பெண்ணைக் குறிக்கும் தூய தமிழ் வழக்காகும். தந்தை தாய், பாணன் பாடினி. கன்னிக்குக் காளை என்பது ஆண்பால்.
ஆன்றோன், சான்றோன், அண்ணல், செம்மல், அமைச்சன் போன்ற சொற்களுக்குப் பெண்பால் இல்லை. பேதை பெதும்பை அரிவை தெரிவை போன்ற சொற்களுக்கு ஆண்பால் இல்லை.
கல் + வி = கல்வி, கேள் + வி = கேள்வி என்றாகின்றன. அவ்வாறே தோல் + வி = தோல்வி என்று ஆகியிருக்கிறது. இங்கே தோல் என்பது வினைவேர். தோற்பாயாக என்று ஏவுகிறது. கட்டளையிடுகிறது.
வெல் என்பதை அடிக்கடி பயன்படுத்தியதைப்போல தோல் என்பதனை எங்கேனும் ஏவற்பொருளில் பயன்படுத்தியிருக்கிறோமா ? இல்லை. தோல் என்னும் வினைவேரின் வழியாகத்தான் தோற்றான், தோற்கிறான், தோற்பான் போன்ற வினைமுற்றுகள் தோன்றுகின்றன. தோல் என்று சொல்லுவது கெடுசொல் என்று நம் பண்பாடு விலக்கியிருக்கலாம்