ஹர்ஷவர்த்தனன்-2
தானேஸ்வரம் கண்ணீரில் தத்தளித்தது.
கவியரசர் பாணர் ராஜ்யவர்த்தனனுக்கும் செய்தி அனுப்பினார்.
அந்த நேரத்தில் ராஜ்யவர்த்தன் ஹூணர்களைப் போரில் வென்று அவர்களை அடியோடு அழித்திருந்தான்.
இனி இந்திய சரித்திரத்தில் ‘ஹூணர்’ என்ற பெயர் வராதபடி செய்தான்.
தானேஸ்வரம் திரும்புமுன் வெற்றியைக் கொண்டாட படைவீரர்களுடன் விருந்திற்கும், கேளிக்கைக்கும் ஏற்பாடு செய்திருந்தான்.
அந்த கோலாகலத்தில் இடி விழுந்தது.. அது பாணரின் ஓலை வடிவில் வந்தது..தந்தையின் மரணச்செய்தியைச் சுமந்து வந்தது.
தந்தை மீது பாசம், மதிப்பு, நட்பு எல்லாம் கொண்டவன் ராஜ்யவர்த்தன். இடிந்தே போனான். காற்று வேகக் குதிரையில் தானேஸ்வரம் வந்தான்.
ஹர்ஷன் அழுதான்.
சில விஷயங்கள் சொல்லப்படாததால் நன்மை பயக்கிறது.
ஹர்ஷன் – தந்தை தன்னை அரசனாக்க எண்ணியதை அண்ணனிடம் கூறவில்லை.
ராஜ்யவர்த்தனின் மனமோ சோகத்தில் வெறுத்து விட்டது.
“ஹர்ஷா… உனக்கு வயது பதினாறு… ஆயினும் அரசனாகக் கூடிய எல்லாத் தகுதிகளும் உனக்கு உள்ளது. நீயே அரசனாகி விடு. எனக்கு அரசனாவதைவிட இறையருள் நாடி துறவு செல்லவே ஆசைப்படுகிறேன். தந்தையின் மறைவு என்னை மிகவும் பாதித்துவிட்டது”
ஹர்ஷன் அழுதான்.
“அண்ணா! நீயே அரசன். தந்தைக்குப் பின் நீயே என் தந்தை.”
ராஜ்யவர்த்தன் ஒருவாறு தேறினான்.
மறுநாளே முடி சூடினான்.
மகுடம் தலை மேல் ஏறியவுடன்…சேதி வந்தது..
நேரம் சரியில்லை என்றால் …கேட்ட செய்திகள் சேர்ந்தே வரும்..
மாளவ மன்னன் தேவகுப்தன் மௌகாரியைத் தாக்கி கிரகவர்மனைக் கொன்று – ராஜ்யஸ்ரீயை சிறையெடுத்த செய்தி தான் அது.
ராஜ்யவர்த்தன் கொதித்தெழுந்தான்.
ராஜ்யவர்த்தன் :“ஹர்ஷா… நான் படைகளுடன் இன்றே புறப்பட்டு தேவகுப்தனைக் கொன்று அக்காவை சிறை மீட்டு வருகிறேன்”
ஹர்ஷன்: “நானும் வருகிறேன்”
ராஜ்யவர்த்தன்: “கூடாது.. நீ இங்கே இருந்து ஆட்சியைப பார்த்துக்கொள்..”
சில சமயம் ..உள் மனது.. நடக்கப்போவதை .. வாய் வழியாக சொல்லி விடும்
ராஜ்யவர்த்தன் :“மேலும் ..போரில் எனக்கு ஏதாவது ஆகி விட்டால் .. நாட்டுக்கு நீ தான் கதி”
ஹர்ஷன்:“அண்ணா! உனக்கு என்றுமே வெற்றிதான்..அக்காவை உடனடியாக மீட்க வேண்டும். வீரம் என்றுமே வெல்லும். ஆயினும் அது விவேகத்துடன் செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லாது – கூட்டணிகள் என்றும் பலம் சேர்க்கும். யசோதர்மன் –குப்தர் கூட்டணி – அந்நாளில் ஹூணர்களை எப்படி வென்றது – என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள்..”
ஹர்ஷனின் அறிவுக்கூர்மையையும் – அவனது சரித்திர அறிவும் – யுத்த அறிவையும் கண்டு வியந்த
ராஜ்யவர்த்தன் : “ஹர்ஷா … உன் மனதில் உள்ளதைக் கூறு.” – என்றான்.
ஹர்ஷன் தொடர்ந்தான்:
“காமருபத்தின் (இந்நாள் அஸ்ஸாம்) மன்னன் பாஸ்கரவர்மனை அறிவீர்களா?”
ராஜ்யவர்த்தன் திகைத்தான்.
“நமது அக்கா ராஜஸ்ரீயின் திருமணத்திற்கு வந்த பாஸ்கரவர்மனை பார்த்திருக்கிறேன்..ஆனால் பரிச்சயம் பெரியதாக ஒன்றுமில்லை”
ஹர்ஷன் : “அண்ணா … அக்காவின் கல்யாண விழாவில் பாஸ்கரவர்மனை நான் சந்தித்தேன்… என்னை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. காமரூபம் வரும்படி என்னை அழைத்தான்..நம் குடும்பம் அனைவரையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தேவகுப்தனுக்கு எதிராக படையுதவி கேட்டு – நாம் பாஸ்கரவர்மனிடம் கூட்டு சேரவேண்டும். அவன் கிழக்கிலிருந்து தாக்க – நீங்கள் வடக்கிலிருந்து தாக்க – தேவகுப்தன் தப்ப முடியாது”
ராஜ்யவர்த்தன் அசந்து போனான்..
“உத்தமம்.. அப்படியே செய்வோம்”
புறா வழி ஓலை பாஸ்கரவர்மனிடம் சென்றது. அவனும் படையுடன் புறப்பட்டான்.
பத்தாயிரம் குதிரை வீரர்கள் கொண்ட படையுடன் ராஜ்யவர்த்தனனும் துரிதமாகச் சென்றான்.
– கன்னோசி நோக்கிப் புறப்பட்டான்.
கன்னோசி:
ராஜ்யஸ்ரீ – அரண்மனை சிறையில் காவலில் இருந்ததாள்.
காவலர்கள் அனைவரும் மாளவத்து வீரர்கள்.
அதில் ஒருவனது மனைவி கன்னோசி நகரத்தவள்..பெயர் ரதி.
ராஜ்யஸ்ரீயின் தோழி அவள் – பணிப்பெண்ணாக இருந்தவள்.
தலைவியின் துயர் கண்டு – ரதி துடித்தாள்..
அவளது கணவன் சிறையில் காவலனானப் பணிபுரிந்தான். கணவன் துணையால் அரசி ராஜ்யஸ்ரீயை இரவோடு இரவாக – சுரங்கப்பாதை வழியாக நகரின் எல்லைக்கு கொண்டு வந்தாள்.
“மகாராணி… உங்கள் நிலை கண்டு என் குலை நடுங்குகிறது..இந்தக் குதிரையில் ஏறி தெற்கு நோக்கி சென்று தங்களைக் காத்துக்கொள்ளுங்கள். நகரம் வழியாகச் செல்லாமல் – காட்டு வழியில் சென்று
விடுங்கள். விந்தியக் காடுகளில் உங்களுக்கு இந்த தேவகுப்தனால் ஆபத்து இருக்காது. விரைவில் உங்களைத் தேடி உங்கள் தம்பியர் வருவர். அவர்களுக்கு நான் சொல்லி அனுப்புவேன் ” – பணிப்பெண் ரதி நடுங்கும் குரலில் கூறினாள்.
“ரதி…உன் உதவி – சீதைக்கு அனுமன் செய்ததை விட குறைந்தது அல்ல” – ராஜ்யஸ்ரீ குதிரையில் ஏறி – விந்தியக்காடு நோக்கி நெடும் பயணம் தொடங்கினாள்.
அரண்மனையில் சிறையிலிருந்து ராஜ்யஸ்ரீ காணாமல் போனதை அறிந்த தேவகுப்தன் திகைத்தான்.
மந்திரி சபையைக் கூட்டினான்.
மந்திரி சொன்னான்:
“மன்னா ! இப்பொழுது நாம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ராஜ்யஸ்ரீ காணாமல் போனதும் ஒரு வகையில் நல்லதுக்குத்தான். நாமே அவளை விடுவித்து விட்டதாக அறிவித்துவிடுவோம். பின்னர் ராஜ்யவர்த்தனன் – நம்மை தாக்குவதற்கு பதில் ராஜ்யஸ்ரீயைத் தேடத் தொடங்குவான். நாம் பொறுத்திருப்போம்”
தேவகுப்தனுக்கு மந்திரியின் யோசனை பிடித்தது.
காமரூபத்தின் பாஸ்கரவர்மனின் படைகள் – ராஜ்யவர்த்தனின் படைகள் இரண்டும் ஒரே சமயம் தேவகுப்தனைத் தாக்கின. வங்காளத்தின் கெளட ராஜ்யத்தின் மன்னான் சசாங்கன் தேவகுப்தனுடன் கூட்டு சேர்ந்திருந்தான். தேவகுப்தன் போரில் கொல்லப்பட்டான்.மாளவப்படைகள் சிதறி ஓடின. சசாங்கன் ராஜ்யவர்த்தனனை சந்தித்தான்.
சசாங்கன்: ராஜ்யவர்த்தனா! நான் தேவகுப்தனின் நண்பன் தான். ஆனால் ராஜ்யஸ்ரீயை சிறையெடுக்க வேண்டாம் என்று தேவகுப்தனிடம் கூறினேன். அவன் சிறைவைத்ததை அறிந்து – அவனிடம் பேசி அவளை விடுவித்தேன். அவள் சென்ற இடம் தெரியவில்லை. அது தெரிந்த சில பேர்களை நான் இன்று இரவு என் மாளிகைக்கு அழைத்து வருகிறேன். நீ இன்று மாலை எனது விடுதிக்கு வந்தால் அவர்களுடன் பேசலாம்” – என்றான்.
வஞ்சகர்களுக்கு பொய்யும்-சதியும் பெரும் பொழுதுபோக்கோ?
ராஜ்யவர்த்தனுக்கு – அக்காவை கண்டு பிடிக்கும் அவசரம்.
சசாங்கன்:”மேலும் இந்தப்போர் முடிவுக்கு வர நாம் உடன்படிக்கை செய்து கொள்வோம். இன்றிரவு”
வலைகளில் சிங்கமும் சிக்குவதுண்டே!
அன்றிரவு..ராஜ்யவர்த்தன் நயவஞ்சகமாகப் படுகொலை செய்யப்பட்டான்..
பொன்னியின் செல்வன் கதையின் ஆதித்தகரிகாலனின்அகால மரணம் போல.
தானேஸ்வரம் மீண்டும் கண்ணீர்க்கடலில் மூழ்கியது.
ராஜ்யவர்த்தனன் மறைவு ஹர்ஷனை ஆட்டிவிட்டது.
அவனது தலை வேகமாக ஆடியது..
அவன் அணிந்திருந்த ஆபரணங்களிருந்து மாணிக்கப்பரல்கள் சிதறி – நெருப்புத் துண்டுகள் போல் தெறித்தன. உதடுகள் துடிப்பதை நிறுத்தவில்லை. அவை அனைத்து அரசர்களது இரத்தத்தை உறிஞ்சத் துடிப்பது போலத் துடித்தது. சிவந்த கண்கள் எரிமலையை ஒத்தது. உடலெங்கும் வேர்வை மழையானது.
கை கால்கள் வீரத்தில் துடித்தது.
ஹர்ஷன்: “அந்த துரோகி சசாங்கன் அழிய வேண்டும். ஆனால் முதலில் அக்காவைக் காக்க வேண்டும்”.
உடனே புறப்பட முடிவு செய்தான்.
மந்திரிகள் : “ஹர்ஷா! நீ உடனடியாக முடிசூட வேண்டும். பின் படையெடுத்துப் போகலாம்”
ஹர்ஷன் அன்றே மன்னனாக மகுடம் சூடினான். உடனே புறப்பட்டான்.
ஒற்றர்கள் மூலம் ராஜ்யஸ்ரீயின் பணிப்பெண் ரதியின் உதவியால் ராஜ்யஸ்ரீ விந்தியமலைக் காட்டில் இருப்பதை அறிந்தான். மத்திய இந்தியாவின் காட்டில் அவனது படைவீரர்கள் வலை போட்டுத் தேடினர். காட்டில் வசித்த விவசாயிகள் அறுவடை செய்து கொண்டிருந்த காலம் அது. சிலர் மரம் வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் யாருக்கும் இளவரசியின் இருப்பிடம் தெரியவில்லை. ஒரு கிராமத்தில் புத்த பிக்ஷுக்கள் மற்றும் சன்யாசிகள் இருந்தனர். அவர்களிடம் ஹர்ஷன் விசாரித்தான். அவர்கள் கூற்றுப்படி அருகாமையில் சில பெண்கள் சமீபத்தில் அங்கு வந்தனராம் – பரதேசி போல உள்ளனராம் – உடலில் காயங்களுடன் பித்தர்கள் போல அவர்கள் திரிகின்றனராம்.
ராஜ்யஸ்ரீ- அந்த அடர்ந்த காட்டில் – திக்கற்ற பாவையாக – அலைந்து திரிந்தாள்.
பித்துப் பிடித்தவள் போல் ஆனாள்.
இரவுகள் இரக்கமற்றிருந்தது.
சந்திரனை மேகங்கள் கைது செய்த நேரமது.
ராஜ்யஸ்ரீக்கு வாழ்வது தேவையா என்று தோன்றியது.
காட்டில் ஒரு சிறிய கோவிலில் தீபம் எரிந்தது.
புத்தரின் ஆலயம்.
‘ஆஹா… புத்தர் ஆலயத்தில் .. எனக்கு இன்று இவ்வுலகிலிருந்து விடுதலை’ – வாழ்க்கையின் ஓரத்திற்கு வந்துவிட்டாள். காய்ந்த கட்டைகளை அடுக்கி – தீபத்தின் நெருப்பில் பற்றவைத்தாள்.
புத்தரைத் தியானித்தாள்: “தந்தையை இழந்தேன்.. கணவனை இழந்தேன்…தம்பி பிரபாகரனையும் இழந்தேன்… உன் திருவடியில் எனது உயிரையும் இழக்க சித்தமானேன்.என்னை ஏற்றுக்கொள்வீரே”
எரியும் தழல் ..‘வா… அருகில் வா… தா… உயிரைத் தா… “ – என்பது போல் நெளிந்துச் சிவந்தது.
புத்தரின் முகம் புன்முறுவலில் இருந்தது..
அந்நேரம் அருகில் ஆள் நடமாட்டம் அரவம் கேட்டது …
சசாங்கனின் படைவீரர்கள் தன்னைக் கண்டு பிடித்து விட்டனரோ?- என்ற கவலை ஒரு கணம்..
மறுகணமே..சாகத் துணிந்தவள் நான்.. எனக்கு வேறென்ன பயம்?
நெருப்பில் விழப்போனாள்.
படைவீரர்களின் முன்னிலையில் ஹர்ஷன் குதிரையில் வந்தான்.
அக்கா அனலில் விழவிருந்த நிலை பார்த்தான்.
‘அக்கா…’ – என்று கதறினான்.
ராஜ்யஸ்ரீ : ‘ஹர்ஷா! நீயா!’
சில நேரங்களில் சில உண்மைக்காட்சிகள் ‘கதை’களை விஞ்சி நிற்கும்.
விதி தங்கள் குடும்பத்தை எப்படி ஆட்டி விட்டது என்று பேசி இருவரும் கண்ணீரில் குளித்தனர்.
அதே விதி தங்கள் இருவரையும் சேர்த்தது குறித்து ஆனந்தக் கண்ணீரில் பேசிக் கொண்டனர்
அப்பேர்ப்பட்ட செண்டிமெண்ட் தருணம் அது.
ராஜ்யஸ்ரீ: “ஹர்ஷா! நான் காணாத துன்பங்கள் இல்லை. இனி எனக்கு சுகவாழ்வு வேண்டாம்.. கருணை பிரான் புத்தரின் பக்தையாக – ஒரு புத்த பிக்ஷுணியாக என் காலத்தைக் கழிக்க ஆசைப்படுகிறேன்..”
ஹர்ஷன்:” அக்கா அதை நான் அனுமதிக்க முடியாது” – அதை ஒரு தம்பியாகச் சொல்வதை விட ஒரு மன்னனாகச் சொல்வது போல் தோன்றியது. பாசம் இருந்தாலும் அரசியல் அவனது எண்ணங்களைப் பேச வைத்தது.
‘ராஜ்யஸ்ரீயை வைத்துத்தான் கன்னோசியை வெல்ல முடியும்..ஆளவும் முடியும்”- அரசியலை நன்கு அறிந்தவன் ஹர்ஷன்.
ஹர்ஷன் ராஜ்யஸ்ரீயுடன் கன்னோசி அடைந்தான்.
சசாங்கன் கன்னோசியில் இருந்தான்.
ஹர்ஷன் படைகளின் தாக்குதலில் சசாங்கன் தப்பி ஓடினான்.
ஓடிய சசாங்கன் தன் நாடு (வங்காளம்) – செல்லுமுன் புத்தகயாவை அடைந்தான்.
தன் மதத்தில் – வெறி கொண்ட – அவன் உன்மத்தம் கொண்டிருந்தான்.
சரித்திரத்தில் இடம் பெறுமாறு ஒரு பாதகச் செயல் செய்தான்.
புத்தரின் மகாபோதி கோவிலிலிருந்த போதிமரம் வானுயுர்ந்து அமைதி காத்தது.
புத்தருக்கு அமைதியையும் ஞானத்தையும் தந்த அதே போதிமரம் … சசாங்கனுக்கு வெறியை ஊட்டியதோ?
அதை முழுதுமாக வெட்டிச் சாய்த்தான்..
வங்காளத்திலிருந்த புத்த ஸ்தூபிகளை உடைத்துத் தீர்த்தான்.
சமயவெறி!
ஹர்ஷன் உடனே கன்னோசியைத் தன் தலைநகராக்கினான்.
அடுத்து, வாலாபியைச் சேர்ந்த இரண்டாம் துருவசேனருக்கு எதிராகப் போரிட்டு அவரைத் தோற்கடித்தான். இரண்டாம் துருவசேனர் கப்பம்கட்டும் சிற்றரசரானான்.
சசாங்கனைத் துரத்தியடித்தாலும் – அவனை முழுவதுமாக வெல்ல முடியவில்லை.
சசாங்கன் வங்காளத்தில் ஆட்சி தொடர்ந்தது.
ஹர்ஷன் வட இந்தியாவின் வலிமைமிக்க தலைவரானான்!
தனக்கு பலம் உள்ளது என்று அறிந்தால் தோள்கள் தானாகவே தினவெடுக்கும்…
ஹர்ஷனுக்கும் தினவெடுத்தது.
நர்மதா ஆற்றுக்குத் தெற்கே மேலைச்சாளுக்கியநாட்டில் வாதாபி நகரம் செல்வக் களஞ்சியமாக இருந்தது.
அதன் மன்னன் இரண்டாம் புலிகேசி.
வருடம் கி பி 618:
ஹர்ஷன் – புலிகேசிக்கு ஓலை அனுப்பினான்:
‘இந்தியாவின் மாபெரும் சக்கரவர்த்தியான ஹர்ஷனுக்குக் கப்பம் கட்டும் மன்னனாகி அடங்கினால் உனது நாடு பிழைக்கும் –இல்லையேல் எங்கள் யானைகள் புலி(கேசி)யை நசிக்கிவிடும்’
புலிகேசி பதில் ஓலை அனுப்பினான்:
“புலிகளும் உண்டு – யானைகளும் உண்டு இங்கே! நர்மதையைத் தாண்டினால் உனது யானைகள் எமது யானைக்கு பலியாகும்”
ஹர்ஷன் தனது படையெடுப்பை நடத்தினான்.
இருவரும் சொன்னபடி யானைப்படைகளே இருபுறத்திலும் பிரதானமாக இருந்தது.
நர்மதை ஆற்றங்கரையில் நடந்தது கோர யுத்தம்.
யானைகள் – யானைகளைத் தாக்க – ஆறு சிவந்தது..
புலிகேசி நர்மதா நதியின் தென் பகுதியில் தனது யானைப்படைகளைத் திறமையாகப் பிரித்து வைத்திருந்தான். திடீரென்று பலத் திசைகளில் புலிகேசியின் யானைகள் தாக்கவே – ஹர்ஷனின் யானைகள் நிலை குலைந்தன. ஒரே நாளில் ஹர்ஷனது யானைகளில் பெரும்பகுதி அழிந்தது.
தோல்வியே கண்டிராத ஹர்ஷன் இதை எதிர்பார்க்கவில்லை.
அரசியல் விவேகம் நிறைந்த ஹர்ஷன் – புலிகேசியை சந்தித்து – உடன்படிக்கைக்கு வந்தான்.
‘இந்த நர்மதா நதி நமக்கு எல்லைக்கோடு.. இதைத் தாண்டி நானும் வரமாட்டேன்… நீயும் வரக்கூடாது’- அது ‘வின்னர் வடிவேல்’ ஸ்டைலில் சொல்லப்பட்டதோ என்னவோ? – யாரறிவர்?
நேபாளம் ஹர்ஷனின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டது. காஷ்மீர் ஆட்சியாளர் கப்பம் செலுத்தி வந்தார். அஸ்ஸாம் ஆட்சியாளரான பாஸ்கரரவிவர்மனுடன் ஹர்ஷன் இணக்கமான உறவைக் கொண்டிருந்தான். கலிங்கத்தின்மீது படையெடுத்து வெற்றி கொண்டதே ஹர்ஷனது இறுதியான போர் நடவடிக்கையாகும்.
தொடக்கத்தில் சிறந்த சிவபக்தராக இருந்த ஹர்ஷன்-பின்னர் ராஜ்யஸ்ரீயின் அறிவுரையால் ஹீனயான புத்த சமயத்தை பின்பற்றத் தொடங்கினான். யுவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகர் அவனை மகாயான புத்த சமயத்திற்கு மாற்றினார். ஹர்ஷர் தனது ஆட்சிக் காலத்தின் முடிவில் சீனப் பயணி யுவான் சுவாங்கை கௌரவிப்பதற்காக கன்னோசி நகரில் ஒரு சமயப் பேரவையைக் கூட்டினார். அதற்கு, அனைத்து சமயப் பிரிவுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தார். இருபது அரசர்களும், நாளந்தா பல்கலைக்கழகத்திலிருந்து ஆயிரம் அறிஞர்களும், மூன்றாயிரம் ஹீனயான, மகாயான பிரிவினரும், மூன்றாயிரம் சமண மற்றும் பிராமண சமயத்தவரும் பேரவைக்கு வந்திருந்தனர். தொடர்ந்து இருபத்திமூன்று நாட்கள் பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாயான கோட்பாட்டின் மதிப்புகளையும், மற்ற கோட்பாடுகளைவிட அது உயர்ந்தது என்பதையும் யுவான்சுவாங் விளக்கிக் கூறினார். இருப்பினும் வன்முறைகளும் பந்தலுக்கு தீவைத்த நிகழ்ச்சிகளும் பேரவை நடவடிக்கைகளை மாசுபடுத்தின.
சமயமும் வன்முறையும் என்றும் சேர்ந்தே இருப்பது – என்ன ஒரு சாபக்கேடோ?
ஹர்ஷரது உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட்டது. ஆனால், விரைவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். பேரவையின் இறுதி நாளன்று யுவான் சுவாங்கிற்கு விலை மதிப்புமிக்க பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பிரயாகை என்றழைக்கப்படும் அலகாபாத்தில் நடைபெற்ற மாநாடு – ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஹர்ஷர் கூட்டும் மாநாடு ஆகும். அனைத்து சமயப் பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கும் ஹர்ஷர் தனது ஏராளமான செல்வத்தை ஹர்ஷர் வாரி வழங்கினார். கருவூலம் காலியான நிலையில் தனது உடைகள், அணிகலன்கள் அனைத்தையும்கூட ஹர்ஷர் தானமாக வழங்கினார் என்று யுவான் சுவாங் சொல்கிறார்.
நாற்பத்தொரு வருடம் ஆட்சி!
இங்கு சுபம் என்று போட்டு இந்தக் கதையை முடித்து விடலாம் தான்.. இருப்பினும் காலம் ஒவ்வொரு சரித்திர ஏட்டிலும் முடிவில் திருப்பங்களை எழுதி வைக்கிறது.
ஹர்ஷன் துர்காவதியை மணந்திருந்தான். இருவருக்கும் வாக்கியவர்த்தனன், கல்யாணவர்த்தனன்- என்று இரு மகன்கள். இருவரையும் ஒரே நாள் – ஹர்ஷனின் முதல் மந்திரி அருணாஷ்வா – கொலை செய்தான்..
ஹர்ஷன் மனமொடிந்தான். கி பி 647ல் – அவன் இறந்தபோது ..அந்த பெரும் ராஜ்யத்தை ஆள – ஒரு வாரிசும் இல்லை.. ராஜ்ஜியம் சிதைந்து போனது..
சரித்திரம் சற்றே கண்ணிர் சிந்தி விட்டு .. அடுத்த கதை சொல்ல வருகிறது…
சரித்திரம் நதி போல … யாருக்கும் அது காத்திருப்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்கும்…
அடுத்த நாயகன் யாரோ?
பார்ப்போம் விரைவில்.