‘கங்கிராஜுலேஷன்ஸ்’ என்று பெருமகிழ்ச்சியோடு வரவேற்றாள் காயத்ரி.
ஆபீஸிலிருந்து அலுப்போடு அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த நான் கேள்விக் குறியோடு அவளை நோக்கினேன். அவளது மகிழ்ச்சி சிறிது சிறிதாக என்னையும் தொற்றிக் கொண்டது.
‘நீங்க ஸென்ட்ரல் மினிஸ்ட்ரி ஆஃப் ஃபாமிலி வெல்ஃபேருக்கு நாடகப் போட்டிக்காக ஒரு நாடகம் அனுப்பியிருந்தீங்கயில்லையா… அதுக்கு ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைச்சிருக்கு. அந்த நாடகத்தை டி.வி. ஸீரியலா எடுக்கப் போறாங்களாம். அதிலே உங்களை நடிக்கவும் கூப்பிட்டிருக்காங்க..’
‘ஓஹோ… அப்படியா…! ‘ என்று ஆனந்தத்தோடு குதித்தேன். காயத்ரியைக் கட்டி அணைத்தேன்.
ஸீரியல் படப் பிடிப்பு வெகு வேகமாக நடந்தது. டி.வி. யிலும் ஒளி பரப்பானது. ஆயிரக் கணக்கான பாராட்டுக்
கடிதங்கள்.
‘ஸூப்பர் ஸ்டாரையும், உலக நாயகனையும் சாப்பிட்டு விட்டார் பாஸ்கர் தத்ரூபமான நடிப்பின் மூலம். அவர் நடிக்கவா செய்தார்.. அந்தப்பாத்திரமாக வாழ்ந்தல்லவா காட்டி விட்டார்…’ என்றெல்லாம் பத்திரிகைகளின் பறைசாற்றல்.
திரைப்பட இயக்குனர் திலகம் வீடு தேடி வந்து தன்படத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டு போனார். தமிழ்த்திரைப் படத்தின் நம்பர் 1 நடிகையுடன் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு… ஆபீஸிலே பெர்மிஷன் வாங்கிக்கொண்டு நடித்துக் கொடுத்தேன்.
என் அதிர்ஷ்டம்… படம் வெள்ளி விழா கொண்டாடியது.
அங்குதான் வம்பும் ஆரம்பம் ஆனது!
ஞாயிற்றுக் கிழமை.
ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். வாசலில் நிழலாட, நிமிர்ந்து பார்த்தேன்.
கழுத்திலே கர்ச்சீப்பைக் கட்டிக் கொண்டு, பெரிய மீசையொடு வாட்டசாட்டமாக நின்றிருந்தான் அவன்.
‘யார் வேணும்..’ என்றேன்.
‘என்ன வாத்யாரே.. அசலை அசலாவே காட்டறியாமே..அசல் அடி எப்படி இருக்கும்னு பார்த்திருக்கியா..? எங்க தலைவர் பிரதாப் சந்தருக்கு போட்டியா வரணும்னு நெனப்பா…? அப்படி ஏதாவது இருந்தா அதை அப்படியே மறந்துடு… உன்னோடு, உன் சம்சாரத்தோடு உயிரும் உங்க உடம்புலே இருக்காது. இனி ஏதாவது சினிமாவுக்கு கான்ட்ராக்ட் போட்டே… அவ்வளவுதான் ஜாக்கிரதை..’
‘அண்ணாச்சி.. அப்படியெல்லாம் எனக்கு ஐடியாவேகிடையாது.. உங்க தலைவரைப் பார்த்து நான் பேச முடியுமா’
ஒரு நிமிடம் யோசித்தவன்..,’ஓகே.. சரி.. வா..’ என்றான்.
நான் உடைகளை மாற்றிக் கொண்டு அவனுடன் புறப்பட்டேன்.
‘ஓ… மிஸ்டர் பாஸ்கர்… எங்கே இப்படி..’ என்றான் பிரதாப்சந்தர், ஒரு கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு.
நாலு அடியாட்கள், வீரப்பன் மீசையோடு பாய ரெடியாகநின்று கொண்டிருந்தார்கள்.
‘உங்க ஆள் எல்லாத்தையும் விவரமாக சொன்னார்…’
‘அப்படியா.. என்ன முடிவு பண்ணினீங்க..?’
‘மிஸ்டர் பிரதாப் சந்தர்.. நான் ஒரு நல்ல இன்ஸ்டிடியூஷன்லே நல்ல வேலையிலே இருக்கேன்… எனக்கு இந்த நடிப்புத்தொழிலிலே இருக்கணும்னு அவசியம் இல்லே…’
‘பின்னே எதுக்குங்க உங்களுக்கு இந்த வேலை..? எல்லாத்தையும் கடாசிட்டுப் போக வேண்டியதுதானே..”
‘மிஸ்டர் பிரதாப்.. இங்கே பாருங்க.. எனக்கு ஐம்பது லட்சம்ரூபாய் கடனாயிடுத்து.. வேலையிலே கிடைக்கிற சம்பளத்தை வெச்சுட்டு வாழ்க்கை பூரா அடச்சிட்டிருந்தாலும் கடன் தீரும் என்கிற நம்பிக்கை இல்லே… சினிமாவிலே நடிச்சா நல்ல காசு தருவாங்க… ஒரு நாலஞ்சு படத்துலே நடிச்சு வரபணத்துலே கடனை அடச்சிட்டு ரிடயராய் என் வேலையை ஒழுங்கா பார்த்துட்டு இருந்துடறாகத்தான் என் ப்ளான்..’
‘ஓ.. ஐ ஸீ… ஒண்ணு பண்ணுங்க.. நீங்க நாலஞ்சு படத்துலேஆக்ட் பண்ணினீங்கன்னா நான் இருக்கிற இடம் தெரியாம போயிடுவேன்.. அதனாலே அந்த ஐம்பது லட்சத்தை நான்இப்பவே உங்களுக்குக் கொடுத்துட்டேன்னா…”
ஒரு நிமிடம் யோசித்தேன்.. சுற்றி நின்ற கிங்கரர்களையும்பார்த்தேன்.. இவர்களை எதிர்த்துக்கிட்டு குப்பை கொட்டது ரொம்ப கஷ்டம்.. வரதை அள்ளிக்கிட்டு போறதுதான் புத்திசாலித்தனம்..
‘அப்புறம் என்ன..? கான்ட்ராக்ட்லே ஸைன் பண்ணறதா?எனக்குப் பைத்தியமா என்ன..?
‘ஓகே… ‘ என்றவன் உள்ளே போய் ஒரு ப்ரீஃப் கேஸிலேபணத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து என்னிடம் நீட்டினான்.
ஆசையோடு வாங்கினேன்.. வீட்டிற்கு வந்தேன்..
‘காயத்ரி… நமக்கு விடிவு காலம் வந்திடுத்து.. இந்தப் பணத்தை வெச்சு கடனையெல்லாம் அடச்சு நிம்மதியாய் இருக்கலாம்… ஓ… கமான்.. ‘ என்று இரைந்தேன்.
‘என்னாச்சு உங்களுக்கு..? தூக்கத்துலே ஏன் இப்படிக் கத்தறீங்க…?’ என்று காயத்ரி உலுக்கி எழுப்ப, எழுந்து மலங்கமலங்க விழித்தேன்.
கண்ட கனவை அப்படியே கூறினேன்.
‘அடப் பாவமே… வீடு கட்டிய கடனையெல்லாம் எப்படி அடைக்கப் போறோம்னு பேசிட்டிருந்தோமா.. அதை நெனச்சிட்டு அப்படியே படுத்திட்டீங்க போலிருக்கு.. உங்க மனசும் எண்ணங்களும். கற்பனைகளும், கொடி கட்டிப்பறக்க பெரிய நடிகனாயிட்டீங்க… ‘ என்று சொன்னவாறு சிரிக்க ஆரம்பித்தாள்.
‘நிழல் நிஜமாகக் கூடாதா..’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு அசட்டுச் சிரிப்போடு உட்கார்ந்திருந்தேன்.