ஆர் பி ராஜநாயகம்
ராஜநாயஹம் கறுப்பு வெள்ளைக் கால தமிழ் திரையுலகின் ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம். அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள சுவாரஸ்யமான திரைக்குறிப்புகள் தனித்து நூலாக வரவேண்டியவை.’ என எஸ்.ராமகிருஷ்ணன் வெப்சைட்டில் எழுதினார்
வித்தியாசமாக இருக்கிறது இவரது வலைப்பூ. (http://rprajanayahem.blogspot.com)
திரைப்படம், நடிகர்கள், மற்றும் இலக்கியத்தின் பல கோணங்களை இவர் அலசி ஆராய்ந்திருக்கிறார்.
தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களின் ஒருவரான மௌனி பற்றி அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்:
மிகவும் அழகான அர்த்தமுள்ள அதிக விஷயதானம் உள்ள பதிவு.
அதனை இங்கு மீள் பதிவு செய்ய இதன்முலம் அவரது அனுமதியைக் கேட்டுக்கொள்கிறேன்.
————————————————————————————————————————
அழியாச்சுடர் மௌனி
சிறுகதைத்தளத்தில் மட்டுமே சிக்கனமாக இயங்கிய படைப்பாளி.குறைந்த அளவில் 24 சிறுகதைகள்.மௌனி என்ற புனைபெயர் கூட இவராக வைத்துக் கொண்டதல்ல.கதைகளுக்கு தலைப்பு கூட இவர் வைத்ததில்லை.
தமிழில் எழுதியவர் தான் மௌனி,என்றாலும் ’தமிழில் என்ன இருக்கு’ என்று தடாலடியாக பேசுபவர்களுக்கு முன்னோடி.
பாஞ்சாலி சபதம் ஆவேசத்தில் எழுதப்பட்டதால் அது இலக்கியமல்ல என்றார்.புதுமைப்பித்தனையும் உதட்டைப்பிதுக்கி அலட்சியப்படுத்தினார்.லா.ச.ராவை ஒரு பாரா கூட படிக்க முடியவில்லை-தி.ஜானகிராமனிடம் sex பற்றி ஒரு obsession இருக்கிறது.-ஜெயகாந்தன் கதை படித்தது ஒன்று கூட நினைவில் நிற்கவில்லை- சுந்தர ராமசாமியிடம் ஒரு higher order of literary cleverness இருக்கு.ஆனா his cleverness kills the art.
மௌனியின் கதைகள் குறித்தும் எப்போதுமே இரண்டு கட்சிகள் உண்டு.
1.”மிக மேன்மையான படைப்பாளி”
- ”சும்மா பம்மாத்து செய்தவர்”
இப்போது எப்படியோ, விசித்திரமோ,இயல்போ கல்வித்துறைப் பண்டிதர்கள் பலரும் மௌனியை அறியாதிருந்தார்கள்.
தமிழவன் ஒரு கருத்தரங்கத்தில் மௌனி பெயரை குறிப்பிட்டபோது ஒரு பேராசிரியர் தமிழ் இலக்கியத்தில் மௌனி என்ற எழுத்தாளரே கிடையாது என்று சாதித்தாராம்.
எனக்கும் இப்படி ஒரு அனுபவம்.’மௌனியை படித்திருக்கிறீர்களா?”என்று நான் கேட்டபோது ஒரு பேராசிரியர் ரொம்ப யோசித்து,நெற்றியை தடவி குழம்பி சொன்னார்
‘படித்திருப்பேன்…எவ்வளவோ படிக்கிறேன்..மௌனி படிக்காமலா இருந்திருப்பேன்?’
மௌனியை அந்த பேராசிரியர் படிக்கவேயில்லை என்பதில் ஐயமில்லை.
ஆர்.எஸ் மணி என்ற மௌனி நிறையப் பேசுகிற சுபாவம் உள்ளவர்.
சிதம்பரம் கோவிலை திருநீறுப்பட்டையுடன் வலம் வந்தவர்,சங்கராச்சாரியாரை தாண்டி ரமணரையும் ஜேகேயையும் வள்ளலாரையும் மதிக்கமுடியாதவர் என்ற தகவலை பிரமிள் தருகிறார்.
பிரமிளை வீட்டுக்குள் அழைத்துச் செல்லாமல் திண்ணையில் வைத்து மௌனி சாப்பாடு போட்டார்.பிரமிளோ மௌனியுடைய சனாதனத்துக்கு தத்துவ முலாம் பூசினார்.
அக்ரஹாரத்து அதிசயமனிதர் வ.ரா.வை சந்திக்க கு.ப.ராவுடன் மௌனி செல்கிறார்.
”பூணூலை கழட்டி அந்த ஆணியில் மாட்டு” என்கிறார் வ.ரா
.உடனடியாக மௌனியின் பதில்” I would rather cut my cocks and put it there!”
இந்த ’பதில்’ பிரமிளுக்கு ஜாதீய நோக்கத்தை மீறிய கவித்துவமாக தெரிகிறது.
சொந்த வாழ்க்கையில் சந்தித்த புத்திர சோகங்கள் உள்ளிட்ட சொல்லொணா துயரங்கள் மௌனியை சநாதனியை மாற்றிவிட்டது என்பது ஒரு IRONY. சில ஞானிகள் சொந்த வாழ்க்கை சோகங்களினால் பகுத்தறிவு வாதிகளாக மாறியிருக்கிறார்கள்.
இளமையில் வைதீக சூழ்நிலையில் பிறந்து அடக்குமுறைகளுக்கு எதிராக மௌனி நிகழ்த்திய மீறல்- தேவிடியா வீட்டுக்கு சென்றது-சினிமா பிரபல சகோதரிகள் வரலட்சுமி,பானுமதியோடு ஏற்படுத்திக்கொண்ட தொடர்பு.
இந்த மீறலை ஏன் பூணூல் விஷயத்தில் செய்ய முடியவில்லை என்று கேட்பவர்கள் கேட்பார்கள்.
எழுத்தாளன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் உபதேசம் செய்ய எவ்வளவு பேர் புறப்பட்டாலும் மௌனி என்ற கலைஞன் உருவாகவே செய்கிறான். டி.ஹெச்.லாரன்ஸ்’படைப்பை நம்பு.படைப்பாளியைப் பாராதே’என்று ஏன் சொல்லவேண்டும்.
புதுமைப்பித்தன் ‘மௌனி சிறுகதையின் திருமூலர்’என்றார்.க.நா.சு எப்போதும் மௌனி பற்றி பிரமாதமாக எழுதியவர, தி.ஜா,கரிச்சான்குஞ்சு இருவரும் மௌனியின் ரசிகர்கள்.சுந்தர ராமசாமி’மௌனி சாதித்து விட்டார்.நாங்களெல்லாம் முயற்சி செய்கிறோம்’ என்றார்.
மௌனியை glamourize செய்த பெருமை ஜெயகாந்தனுக்குத் தான் உண்டு. தான் எப்போதும் எழுதுவதற்காக உட்காரும்போது மௌனியின் ‘மாறுதல்’ என்ற கதையைப் படித்து விட்டுத்தான் எழுதுவதாக சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.ஒரு பிரபல பத்திரிக்கை பல எழுத்தாளர்களிடம் தங்களை மிகவும் பாதித்த கதைகளைப் பற்றிக் கேட்டு வெளியிட்ட போது தி.ஜானகிராமன் அவர்கள் ந.பிச்சமூர்த்தியின் “அடகு” கதையைக் குறிப்பிட்டு அதை வெளியிடச் செய்தார்.அப்போது ஜெயகாந்தன் தன்னை மிகவும் பாதித்த கதையென்று சொல்லி மௌனியின் “மாறுதல்” அந்தப்பத்திரிக்கையில் பிரசுரமாகியிருந்தது.
பின்னாளில் ஜெயகாந்தன் கதைகள் பற்றி மௌனி அலட்சியமாக பதிலளித்த பிறகு ஒரு வேடிக்கை நடந்தது. மௌனியின் ‘மாறுதல்’கதையைத் தான் எப்போதும் எழுத ஆரம்பிக்கும் முன் படித்த விஷயமானது பல் விளக்குவது போல,குளிப்பது போல ஒரு சாதாரண habitual action மட்டும் தான்.மற்றபடி மௌனியின் கதையில் inspiration எல்லாம் தனக்கு இல்லை.மௌனி கதை பற்றி உயர்வான அபிப்ராயமும் கிடையாது என்று தடாலடியாக ஜெயகாந்தன் பதிலடி கொடுத்து விட்டார்.
கு.அழகிரிசாமி “மௌனி செய்வது பம்மாத்து தான்” என்று க.நா.சு விடம் சண்டை பிடிப்பார்.மௌனி கதைகளுக்கான முன்னுரையில் க.நா.சு மறைமுகமாக அழகிரிசாமியை மூக்கறையன் என்றும் இவர் போன்றவர்களுக்கு கண்ணும் காதும் இருக்கிறதா என்றும் கூட சந்தேகம் தெரிவித்திருந்தார்.
எம்.வி.வெங்கட்ராமிடம் மௌனி “ ஒரு கதை எழுதினேன்.விகடனுக்கும் குமுதத்துக்கும் அனுப்பினேன்,திருப்பி அனுப்பி விட்டார்கள்’ என்று வருத்தப்பட்டாராம்.’விகடனுக்கும் குமுதத்துக்கும் ஏன் சார் அனுப்பினீர்கள்?’ என்று வியப்புடன் கேட்டதற்கு’அவை தானே பிரபலமாக இருக்கின்றன.அதிகப்பணமும் தருவார்களே!” என்று மௌனி வெகுளியாக பதிலளித்தாராம்.
மௌனிக்கு அபின் பழக்கம் இருந்தது போல பொய் பேசும் பழக்கமும் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எம்.வி,வியின் “என் இலக்கிய நண்பர்கள்” நூலைப் படிக்கும்போது ஏற்படவே செய்கிறது.
மௌனியின் கதைகள் சில வெங்கட்ராமால் பல தடவை திருத்தம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.இலக்கண அமைதியோ தெளிவோ மௌனியிடம் இருக்காதாம். ’மனக்கோலம்’ கதையை திருத்தம் செய்து ’தேனீ’’யில் படித்த போது அக்கதையின் படைப்பாளி தானே என்பது போன்ற பெருமிதம் வெங்கட்ராமிற்கு ஏற்பட்டிருக்கிறது.மணிக்கொடியில் அவர் எழுதிய கதைகளின் தமிழும் இப்படித்தானா? என்று பி.எஸ்.ராமையாவிடம் கேட்டதற்கு ’ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்,நாங்கள் திருத்தி வெளியிட்டோம்’என்று சொன்னாராம்.
ஆல்பர்ட் ஃப்ராங்க்ளீன் என்ற அமெரிக்கன் மௌனியை’கருமேகங்களுக்கிடையில் ஒரு மின்னல்’ என்று பாராட்டி நியூயார்க்கர் பத்திரிக்கையில் இரண்டு சிறுகதைகளை மொழிபெயர்த்து பிரசுரமானது.
பெங்குவின் பதிப்பகம் சிறந்த உலகச்சிறுகதைகளில் ஒன்றாக ,மௌனியின் ‘ சாவில் பிறந்த சிருஷ்டி’ கதையை வெளியிட்டது.
ஒரு பேட்டியில் கர்நாடக சங்கீத உலகின் பீஷ்மர் செம்மங்குடி சீனிவாசய்யர் “ மௌனி என்ற பெயரில் கதை எழுதிண்டிருந்தானே மணி! அவன் என்னோட கஸின் தான்!” என்று சந்தோஷமாக சொல்லியிருந்தார்.
இது கூட மௌனியை கௌரவப்படுத்துகிற விஷயம் தான்!
——————————————————————————————————————
இடைவெளி சம்பத்
இடைவெளி நாவல் எழுதிய எஸ்.சம்பத் நாராயணன் 42வயதில் மூளை ரத்தநாளச்சேதத்துக்கு ஆளாகி 1984 ல் மறைந்து விட்டார் . தன் எழுத்துக்களில் முதன் முதலாக புத்தகவடிவம் பெற்ற ‘ இடைவெளி ‘ நாவலை முழு புத்தகமாய்ப் பார்ப்பதற்கு முன்னர் மறைந்து விட்டார்.தன் திறமைகளுக்குரிய கவனிப்பு தனக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இவருக்கும் இருந்தது . ‘அம்மாவுக்கு ‘ நாவல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
ஆதவனும் சம்பத்தும் கல்லூரியில் இந்திராபார்த்தசாரதியின் மாணவர்கள். இந்திரா பார்த்தசாரதி பள்ளியில் படிக்கும்போது தி.ஜானகிராமனின் மாணவர.
சம்பத் மறைந்து மூன்றே வருடத்தில் 45வயதில் 1987ல் ஆதவன் மறைந்தார். தி.ஜாவுக்கும் 1982 ல் 62வயது தான். சாகிற வயசா ?
இடைவெளி – சாவு பற்றிய சம்பத்தின் ஆழ்ந்த தவம். ‘ சாவு என்னை ஈர்த்தவிதம் -‘ கடைசியாக எல்லாம் போய்விடுகிறது . இதற்கு என்ன செய்வது? தற்கொலைத்தனமான இந்த எண்ணம் எனக்கு ஒரு மகத்தான உண்மையை உணர்த்தி விட்டது. இடைவெளி நாவல் – ஒரு ஆன்மாவின் கைதேர்ந்த அறிவின் சத்திய சோதனை. விவரிக்கமுடியாத சிக்கல்களைக் கொண்ட பிரபஞ்சம், ஏதோ ஒரு கனிவில், மனிதனிடம் காட்டும் ஞானப் பிச்சை. ‘
சம்பத் அவரே சொல்வது போல அடிப்படை விஷயங்களில் உழல்பவர்.
சாவு என்பது இடைவெளி . வெற்றி எல்லை தெரியாமல் ஓடும் குதிரை.
எதிராளி தோற்றுப்போனால் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால் சாவிடம் மட்டும் ஏன் இந்த வெறி போகவே இல்லை . இது நாள் வரை தன்னுடைய தன்மையை மரணம் உணர்த்திக்கொள்ளாமலே இருந்திருக்கிறது. குறைந்த பட்சம் அதற்கு ‘ போர் ‘ அடிக்கவில்லை. எப்போதுமே ஜெயிப்பது விடலைத்தனமான காரியம் இல்லையா?
காந்தி முழத்துண்டுடன் நின்று குண்டுகளை வெறும் மார்பில் வாங்கிக் கொண்டார் . காந்தி வெறும் உடம்புடன் நின்றது தான் அவருடைய அத்தனை கால தற்காப்புக்கும் காரணம். வெறும் உடம்பில் சுடுவது என்பது அவ்வளவு ஈசியான காரியமா ? வெறும் உடம்போடு எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன் என்ற மனிதனை !
கம்யுனிஸ்ட் கடவுளை நம்பினா அவன் சமுதாயத்துக்கே பயங்கரமானவன் .
இப்படி இடைவெளி நாவலில் படித்த விஷயங்கள் இன்றும்
மறக்கமுடியவில்லை .
டெல்லியிலேயே வளர்ந்த சம்பத் சென்னைக்கு வந்த பின் மவுண்ட் ரோடு குறித்து சில வார்த்தை சொல்கிறார் :’ மவுண்ட் ரோடு – மதராசின் கனாட் ப்ளேஸ்.இதுவும் இதனுடைய மூஞ்சிகளும் ! எப்படி ,எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம் . வளர்ந்த நிலையில் இங்கு இருக்கக்கூடாது .
இந்த நாவல் பற்றி சொல்ல சம்பத் நாவலில் ஒரு இடத்தில் எழுதும் வார்த்தைகளையே சுட்ட வேண்டியுள்ளது .” எண்ண ஓட்டங்களுக்கு, பெரிய எண்ண ஓட்டங்களுக்கு ஒரு பூ மணப்பின் குணம் உண்டு . அதை யாருமே அசட்டை செய்து விட முடியாது .”
பூமியில் விளைவது எல்லாமே மனிதனுக்கு சொந்தம், எல்லாமே எல்லோருக்கும் சொந்தம் என்ற காலம் வராதா என பகல் கனவு கண்ட சம்பத்.
சம்பத் தின் இடைவெளி நாவல் நூறு பக்கங்கள் தான் . நாவலில் வாமன அவதாரம்! க்ரியா வெளியிட்ட இந்த நாவல் (August,1984) அதன் பிறகு இன்னும் மறுபிரசுரம் செய்யப்படவே இல்லை.
அந்த காலத்தில் டெல்லியில் சம்பத் ஆயிரம் பக்கங்களுக்கு ஒரு நாவல் எழுதி கையெழுத்துப் பிரதியாக இ . பா.விடம் படிக்க கொடுத்திருக்கிறார் . சில நாளில் இ .பா படித்தவுடன் அவர் வீட்டிற்கு போகிறார் . இ .பா நாவல் பற்றி ” Rambling ஆ இருக்குடா . நல்லா எடிட் பண்ணனும் .” என்று வெராண்டாவில் சொல்லிவிட்டு வீட்டினுள்ளே போயிருக்கிறார் . சம்பத் ஆயிரம் பக்க நாவலின் கையெழுத்துப் பிரதியை நெருப்பு வைத்துக்கொளுத்தி விட்டார்!” டே டே .. ஏண்டா ” இபா பதறிப் போய்க்கேட்டிருக்கிறார். ” குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனி எதற்கு ?” என்று சாவகாசமாக சம்பத் சொன்னாராம்.
இன்று சம்பத் எழுதி வாசகர்களுக்கு இந்த இடைவெளி நாவல் தான் மிஞ்சியிருக்கிறது. கணையாழியில் அருமையான இரண்டு குறுநாவல்கள் எழுதினார். ” சாமியார் ஜூவிற்கு போகிறார் ” அடுத்து ” பணம் பத்தும் செய்யும் ” என்ற குறுநாவல் .
கசடதபற வில் ‘கோடுகள் ‘ என்ற சிறுகதை . ‘ இடைவெளி ‘ என்ற தலைப்பிலேயே கூட ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் . அவர் சிறுகதையொன்றில் திஜாவின் மூத்த மகன் சாகேத ராமன் ஒரு பாத்திரமாக வந்திருக்கிறார் .
ஜி . நாகராஜனின் படைப்புக்கள் தொகுக்கப்பட்டது போல சம்பத்தின் படைப்புகளும் தொகுக்கப்பட்டால் நல்லது .ரொம்ப சொற்பமாகத்தான் எழுதினார் . அவர் மொத்தப்படைப்புகளும் கூட ஒரு சிறு நூல் அளவுக்குத்தான் வ
Read more at http://rprajanayahem.blogspot.com/2009/10/blog-post_21.html#YgMskso81w6w5Ql0.99
Read more at http://rprajanayahem.blogspot.com/2012/10/blog-post_7.html#CxrLCMxUoOU5Xfdf.99