உஷா சுப்ரமணியன்
1976ல் “வடிகால்” என்னும் ஆனந்தவிகடன் முத்திரைக் கதையுடன் அறிமுகமான இவர் இதழியல் படித்தவர். 350க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.
அயோவா பல்கலைக் கழக உலக எழுத்தாளர் மாநாட்டில் பங்கு பெற்றவர். இவரது சிறுகதைகள் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வர்த்தகப் படங்களும் விளம்பரப் படங்களும் தயாரித்தவர். ஓவியம் பரதநாட்டியம் ஆகிய கலைகளிலும் தேர்ந்தவர்.
** ** **
இவரது “போருக்குப் புறப்பட்டவள்” என்னும் கதை இப்படித் தொடங்குகிறது.
“போற்றி, போற்றி… பெண்மை போற்றி..! என் பெயர் பாரதி, அழைக்கின்றேன் நான், என் பெயர் கொண்ட முண்டாசுக் கவிஞரை வக்காலத்திற்கு…” நிமிர்ந்த உடம்பும், நேர்கொண்ட பார்வையும் கட்டுக் கடங்காத தன்னம்பிக்கையும் கொண்டிருந்த அந்தப் பெண்ணை கூட்டம் கைதட்டி வரவேற்றது.
தோற்றத்திலும் பேச்சிலும் செயலிலும் பாரதிகண்ட புதுமைப் பெண்ணாக, பெண்களுக்கான உண்மையான விடுதலை பெற்ற பெண்கள் அடங்கிய பொன்னுலகத்தை கனவுகாணும் வீராங்கனையாக ஆங்கிலத்திலும் தமிழிலும் மடைதிறந்த வெள்ளம்போல் மேடைகளில் பொழிபவள் பாரதி.
கல்லூரியிலும் மேடைகளிலும் எப்போதும் வியந்து பார்க்கப்படும் பாரதிக்கு ஒரே அண்ணன், சம்பத். டாக்டராகவோ என்ஜினீயராகவோ அவனைப் பார்க்க பெற்றோர்கள் ஆசைப்பட்டாலும் அவன் பி.எஸ்.ஸி முடித்துவிட்டு பாங்க் வேலையில் சேர்ந்தவன். பாரதிதான் ஊரையே மேய்க்கும் தலைவியாக வரப்போகிறாள் என்ற எதிர்பார்ப்பு பெற்றோருக்கு.
எல்லா அண்ணன்-தங்கைகளையும் போலவே பாரதிக்கும் சம்பத்திற்கும் இடையே ஒருவர் மற்றவர் காலை வாரும் வேடிக்கை வாக்குவாதங்கள்.
வீட்டிலிருக்கும் பாட்டிக்கும் பாரதிமேல் கொள்ளை ஆசை. பாட்டி அந்தக் காலத்திலேயே திருமணத்திற்கு முன் வரவிருக்கும் கணவனுக்கு கடிதம் எழுதியவள்.
உறவில் திருமணம் நிச்சயத்தபின் பெரியவர்கள் பேச்சுக்கிணங்கி கட்டாயத்தால் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டாம் என்று எழுதியவள். பாட்டியின் தைரியமும் தெளிந்த மனப்போக்கும் தான் பேத்திக்கு வந்துவிட்டது என்று பேசிக்கொண்டார்கள்.
பாரதி எம் ஏ. முடித்து வேலைக்குப்போக பரிட்சைகள் எழுதி வந்தாள். ஓய்வுநேரத்தில் பிரஞ்சு வகுப்பு, டென்னிஸ் பயிற்சி, ஆடைகளில் முழுச் சுதந்திரம் என்று வளைய வந்தாள்.
பாரதியின் திருமணப் பேச்சு எழுந்தது. டெல்லியில் பெரிய கம்பெனி எக்ஸிகூடிவ், நல்ல சம்பளம், அமெரிக்க எம்.டெக், திருமணமாகி வெளிநாட்டில் இருக்கும் தமக்கை, நல்ல குடும்பம், ஜாதகமும் பொருந்தி வந்திருந்திருந்தது.
அம்மா இந்த வரனைப் பார்க்கலாம் என்றாள். அப்பா மகளின் கருத்தை கேட்டார். அவள் பதிலளிக்கவில்லை. அண்ணன் சம்பத்திற்கு வேறு எண்ணம். இருபத்தோரு வயதில் குடும்பப் பெண்ணாக அமிழ்துபோகவேண்டுமா என்று கேட்டான். கொஞ்ச காலம் சுதந்திரமாக இருந்து, நல்ல வேலைக்குப்போய் தனக்குப் பிடித்தவனை மாப்பிள்ளையாக வரிக்கட்டுமே என்பது அவன் அபிப்பிராயம் கூறினான்.
சில வினாடிகள் மௌனமாக இருந்த பாரதி, காதுகள் சிவக்கச் சீறினாள்…
“உனக்கு இருபத்தெட்டு வயசாகிறது. இன்னும் பெண் ஒண்ணும் சரிப்படலை. ஏழு வயது சின்னவளுக்கு நல்ல இடம் வரதுன்னு வயிற்றெரிச்சலா இருந்தா வெளிப்படையாச் சொல்லிவிட்டுப் போறதுதானே…”
எல்லோருக்கும் அதிர்ச்சி. எனினும் வந்துள்ள வரன் பற்றி பாரதியின் அபிப்பிராயம் என்ன என்று தெரிந்துவிட்டது.
பிள்ளை டெல்லியிலிருந்து வந்தான். பாரதி சூரிதார் அணிந்து அவனுடன் சோபாவில் அமர்ந்து நுனி நாக்கு ஆங்கிலம் பேசினாள். பைப் பிடிக்கும் தந்தையும் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளும் தாயும் டின்னருக்கு வந்தார்கள். கல்யாணம் நிச்சியமாயிற்று.
ஐ.ஏ.எஸ். நுழைவுத் தேர்வுக்கு நாட்கள் நெருங்குகிறது என்று சம்பத் நினவுபடுத்திக்கொண்டே இருந்தான். ஆனால் பாரதியோ புடவை, ஆடைகள், நகைகள் வாங்கக் கடைக்குபோவதில் ஆர்வமாக இருந்தாள்.
பத்திரிகை கூட அடித்தபிறகு ஒரு சிக்கல். அலுவலகத்திலிருந்து அப்பா சுரத்திலாமல் வந்தார்.
“இன்று காலை பையனின் அப்பா போன் செய்தார். அவர் பிள்ளை கார் வாங்கினால் கம்பெனியில் மாசம் ஆயிரம் ரூபாய் அலவென்ஸ் கிடக்குமாம்…. புதிசா இல்லாவிட்டாலும் ஒரு பழைய மாடல் கார் ஐம்பதாயிரத்துக்கு வாங்கிடுங்கோ என்றார்”
பாட்டிக்கு மாக கோபம். அவ்வளவு ஸ்டைலாகப் பழகிய அந்த குடும்பத்தார் சொல்வது ஒத்துவராது என்றாள். புத்திசாலிப் பேத்திக்கு இந்த சாமர்த்தியக்கார சம்பந்தம் வேண்டாம் என்றாள்.
ஏற்பாடெல்லாம் ஆனபிறகு நிறுத்துவதற்கு அப்பாவிற்கு சங்கடமாக இருந்தது. தன் வளையல்களை வேண்டுமானாலும் விற்கத்தயார் என்றாள் அம்மா.
தனது பிராவிடண்ட் நிதி லோன் எடுத்தால் அடைப்பதற்கு சர்வீஸ் இல்லை. வேறு வழியில்லாததால், முழுவதையும் எடுத்துவிடுவதுதான் என்று தீர்வு என்கிறார் அப்பா.
அடுத்த அறையிலிருந்து சீறிக்கொண்டு வந்தாள் பாரதி.
“அப்பா லோன் எடுத்தால் திருப்பமுடியாது. சரி ஒத்துக்கிறேன் … எட்டு வருஷமா சம்பாதிக்கிறானே அண்ணா, அவனுக்குத் தங்கை கல்யாணத்தில பொறுப்பில்லையா? பி.எஃப்பிலும் பாங்கிலும் யாருக்குச் சேர்த்து வைக்கிறான்? ஒவ்வொரு குடும்பத்தில் அஞ்சு தங்கைகளுக்கு ஒரு அண்ணன் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். இவனால் ஒருத்தி கல்யாணத்துக்கு உதவ முடியாதா? கேட்கிறபடி கேட்டாள் தன்னால் தர்ரான், உங்க பெண்ணின் வாழ்க்கையில் உங்களுக்கு இவ்வளவுதான் அக்கறை..”
என்று அழ ஆரம்பிக்கிறாள்.
மேடையேறி முழக்கும் புதுமைப் பெண்ணை தலைமுடி முழுவதுமாக வெளுத்த பாட்டி இரக்கத்துடன் பார்த்தாள்.
ஏதாவது சொன்னால், “கார் என்ன அவருக்கு மட்டும் ஏறிப் போகவா, என்னையும் ஆசையுடன் ஏற்றிப் போகத்தானே..” என்று பதில் வரும் என்று புரிந்து பெருமூச்சு விட்டாள்.
என்று முடிகிறது.
** ** **
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அந்தக்கால இளைஞர்கள் எண்ண ஓட்டங்களுக்கும் சவால்களுக்கும் இடையே போராடி வந்ததை மையமாகக் கொண்ட கதைகளை, உஷா சுப்பிரமணியன் உட்பட, பலர் எழுதினார்கள். முரண்பாடுகளும் ‘hypocrisy’களும், சமரசங்களும் விரவிக்கிடக்கும் கதைகள் இவை.
மேடையில் முழங்கும் கருத்துகள் சொந்த வாழ்க்கையில் பொருளற்றுப் போகும் அவலத்தை கதையில் வடித்திருக்கிறார். போகிறபோக்கில் ஒரு பத்தி வேறு ஒரு பரிமாணத்தைக் காட்டுகிறது.
இதே தகுதியும், வயதும் உள்ள ஆண்மகன் இடைப்பட்ட காலத்தில் உணரும் பாதுகாப்பின்மை அவளிடம் இல்லை. ‘இன்னும் ஒரு கரண்டி தயிர்விடு’ என்று அம்மாவிடம் கேட்க அவள் தயங்கவேண்டாம்… வேலை வெட்டி இல்லாமல் ஷோக்கைப் பாரு என்று அப்பா முணுமுணுக்கவில்லை. வேறு வீட்டுக்குப் போகப் போகும் பெண் என்ற சலுகை நிறையக் கிடைத்தது”
இணையத்தில் கிடைக்கும் இவரது கதைகள்