ஐவர் படை – மாலதி சுவாமிநாதன் , மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்

 

Related image

அவளைப் பார்க்க ஆரம்பித்தது  மிக விசித்திரமான வகையில். என்னுடைய ஒரு க்ளையண்ட் தன் மன உளைச்சலுக்கு என்னிடம் மனநல சிகிச்சைக்காக வந்து கொண்டிருந்தாள். அவளுடன் கூட வந்து கொண்டிருந்த பத்து வயது சிறுமி ஒரு நாள் என்னை அணுகி, “என்னையும் பார்க்க முடியுமா?” என்ற கேள்வியை எழுப்பினாள். மகள், உறவு அல்ல, நட்புக்காக வருகிறாள் என்று அறிந்ததும் அசைந்து போனேன்.

இவள் ரஜினி. முட்டிக்குக் கீழே வரும் நீள உடை, காலையில் பின்னிய இரண்டு ஜடை அவிழ்ந்த நிலை.வகுப்பில் கவனம் செலுத்துவது கஷ்டமாக இருப்பதாகக் கூறினாள். அவள் சிறுமி என்பதால் தன் பெற்றோருடன் வரச் சொன்னேன். அம்மாவை அழைத்து வந்தாள்.

அம்மா, உமா, இல்லத்தரசி, ரஜினி அந்தக் க்ளையண்டுடன் வருவது தனக்குத் தெரியாது என்று முகத்தைச் சுளித்துச் சொன்னாள். எனக்கு வியப்பானது. இங்கு வந்து போக ஒன்றரை மணி நேரமாகும். ஆறு ஸெஷன்கள் ஆகிவிட்டன. கவனிக்கவில்லை என்றாள். இப்போது வந்ததே வகுப்பு ஆசிரியை ரஜினியைப் பற்றி அனுப்பிய கடிதத்தால் தான் என்றாள்.

யதேச்சையாக ரஜினிக்குப் போன வருடமும் இந்த வருடமும் அதே வகுப்பு ஆசிரியை. அவர்கள் கவனித்ததில் வகுப்பில் ரஜினி நல்ல மதிப்பெண்கள் எடுப்பாள் ஆனால் சிரித்துப் பார்த்ததில்லை, இது தனக்குக் கவலையாக உள்ளது என்று ஆசிரியை தெரிவித்து இருந்தாள். யாரையாவது திட்டினால், அல்ல யாருக்கேனும் மனச் சஞ்சலங்கள் இருந்தால் ரஜினி உடனே அழுது விடுவாள். தோழி என்கிற அளவிற்கு யாரும் அவளுடன் பேசாமல் இருந்தாலும் அவள் யாரையும் குறை கூறவோ, திட்டவோ மாட்டாளாம்.

கவனம் பாடத்தில் இருக்காது, அவளை அழைத்தால் திடுக்கிட்டுப் பார்ப்பாள், ஏதோ கனவு காணுவது போல் தோன்றுவாளாம். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாது, பொருத்தமே இல்லாமல் கேள்வி கேட்பதாகக் கூறியிருந்தார்.

முத்து முத்தாக இருக்கும் ரஜினியின் கை எழுத்து. எழுதுவதை அவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து எழுதுவாளாம். வகுப்பு போர்ட்டில் எழுதுவது இவள் தான்.

அந்த ஆசிரியையைத் தான் சந்திக்கவில்லை என்றாள் ரஜினியின் அம்மா உமா. வீட்டில் உள்ள வேலைகளைச் செய்யவே நேரம் சரியாக இருப்பதால் போகவில்லை என்றாள். வீட்டில் அவளுடைய மாமனார் மாமியார் இருப்பதால் எல்லாம் சாஸ்திரம் சம்பிரதாயப்படிதான். அவர்கள் இருவருக்கும் மற்ற பேரக்குழந்தைகளிடம் இருக்கும் அளவிற்கு ரஜினி மேல் ஈடுபாடு கிடையாது என்றாள். கருநிறமும் இதற்கு ஒரு காரணம்!

தனக்கும், தன்னுடைய மற்ற இரண்டு பிள்ளைகள் மேல் இருக்கும் பாசம் இவளிடம் சொட்டு கூட இல்லை என்பதை வெளிப்படையாகச் சொன்னாள். இவளைக் கொண்டு கர்ப்பம் எனத் தெரிந்ததுமே அதைக் கலைக்க வழிகளைக் கடைசி வரை தேடினாளாம். ரஜினியைப் பெற்று எடுத்தாள், பாசம் பந்தம் எதுவும் இல்லை என்றாள்.

தனக்கு அந்த குழந்தையைத் தொடக் கூட பிடிக்கவில்லை, பிறந்ததிலிருந்தே ரஜினியை உமாவுடைய அம்மா, சரசா தான் ஆசை ஆசையாக வளர்த்தாள் என்றாள். கருநிறத்தினால் அவளை ஷ்யாமளி என்று தான் அழைப்பாளாம், இன்றும் அப்படித்தான். ரஜினியின் அப்பா, சேகர், கணக்கு பேராசிரியர், வீட்டிற்கு மூத்த மகன். இவரும் மாமனாரும் எல்லா முடிவுகளை எடுப்பார்கள். இவர்களுடன் ரஜினியின் மூன்று சித்தப்பா, அவர்களின் மனைவி, மக்கள்.

ரஜினியைச் சொல்ல நினைத்ததைச் சொல்லச் சொன்னேன். தான் பெரும்பாலும் தானாகவே, தனியாகவே இருப்பது, விளையாடுவதாகச் சொன்னாள். அம்மா கிட்டப் போனாலே தள்ளி விடுவாளாம்.

பெரும்பாலும் சரசா பாட்டியின் வீட்டிற்குப் போய் விடுவாள். இவர்கள் வீட்டிலிருந்து ஐந்தாவது தெரு. பாட்டிக்கு இவள் தங்களுடன் இருப்பது பிடித்தது தான். ஆனால் தன் பெண் உமாவும் இவளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று விரும்பியதால் சிறிது நேரம் ஆனதும் திரும்பிப் போகச் சொல்வாளாம்.

அவர்கள் வீட்டில் ரஜினி நிறத்தைப் பார்க்காமல் அவளை ஏற்றுக் கொண்டார்கள். இரண்டு மாமிகளும் அவளுக்கு வயதுக்கு ஏற்ற வேலை தருவார்கள், அவர்கள் கூடவே செய்வாள். இரண்டாவது மாமியும் பல முறை ரஜினியைத் தத்து எடுத்துக் கொள்ள யோசனை செய்ததுண்டு. ஒரு பொழுதும் அவளைத் திட்டியோ, எளக்கனமாகப் பேசியதோ இல்லை. மாமாக்களும்.

அவளுடன் புதிர்கள் கேட்டு விளையாடுவார்கள். மாமா மாமிகள், நால்வரும் பாடம் விளக்கிட கற்றுத் தருவதும் செய்தார்கள்.

ரஜினிக்கு இவர்கள் தன்னிடம் காட்டும் பாசத்தினால் விருப்பம் இல்லாமலேயே தன் வீட்டிற்குத் திரும்புவாளாம். அவள் எங்கே இருக்கிறாள் என்று வீட்டில் யாரும் தேட மாட்டார்கள். பொழுதைக் கழிக்க, ஆறரை மணி வரை தனக்குத் தானாக விளையாடிக் கொண்டிருப்பாளாம். என்றும் யாரும் தேடியோ அழைத்ததோ இல்லை என்றாள். வீடு திரும்பியதும் வீட்டுப் பாடம் முடித்து, படிப்பது அவள் வழக்கம். எட்டரை மணி அளவில் அண்ணன், தம்பி, தங்கைகளுக்குப் பாடங்களை எழுதித் தருவதற்கு நேரம். அந்த நேரம் மட்டும் ரஜினியிடம் அவர்கள் பேசுவார்களாம்.

தன்னை மேம்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை என்னிடம் எழுப்பினாள். என்ன ஒரு மனப்பக்குவம், எல்லோரும் நிராகரிப்பதைத் தெரிந்தும் இவள் தன்னை மேம்படுத்திக் கொள்ள யோசித்தாள்! பெரும்பாலும் நிராகரிப்பு மனக்கசப்பை உண்டாக்கும். வெறுப்புத் தட்டும். ரஜினி கொஞ்சம் வேறு பட்டவளாகவே இருந்தாள்.

அவளுடைய பெற்றோருடன் இதற்கான பதிலைத் தேட ஆரம்பிக்கப் போவதாக அவளிடம் சொன்னேன். அதுவரையில் அவளைத் தினமும் ஏதோ ஒரு சிறுகதை எழுதி அதற்கு பொருத்தமான படத்தையும் வரையப் பரிந்துரைத்தேன்.

ரஜினியின் பெற்றோருடன் ஸெஷன்களை ஆரம்பித்தேன், இருவருடன் சேர்ந்தும், தனித்தனியாகவும். சேகர் பிரமித்துப் போனார். தன் பெண் குழந்தை இந்த அளவிற்கு மனத் தவிப்புடன் இருப்பதை இப்போது தான் உணர்ந்தார். ஆசிரியை மடலை இங்கே தான் படித்தார். யாரும் காட்டவில்லை என்றார். வேலைப் பளு, வீட்டுப் பொறுப்பில்  ரஜினிக்காக நேரம் கிட்டவில்லை. உமா சமையல் அறை, மற்ற வேலையில் கிடைக்கிற சுகம் ரஜினியுடன் இருப்பதில் இல்லை என்றாள்.

பிறகு பெற்றோரைத் தனியாகச் சந்தித்தேன். உமா தான் மேற்கொண்டு படிக்க ஆசைப் பட்டாளம். கணவர், மாமனார், மாமியார் ஒப்புதல் தர, அப்போது தான் கர்ப்பிணியானாள். தன் வாய்ப்பு போனதே இந்த கர்ப்பத்தினால் என்பதால் சிசுவை வெறுத்தாள். அத்தோடு இதுவரை இரண்டும் ஆண் பிள்ளைகள். இவளைக் கர்ப்பமாக இருக்கையில் பார்த்த எல்லோரும் இந்த முறைப் பெண் என்றார்கள், இதுவும் அவளுக்குப் பிடிக்க வில்லை. மொத்தத்தில் இந்தப் பிரசவம், குழந்தை தன் வாழ்வில் தடை என்று எடுத்துக் கொண்டாள். மாமனார் மாமியாரும் அப்படியே நினைக்கையில், அவளுக்கு ஆதரவு.

அதன் விளைவு? உமா தன்னுள் வளர்ந்த த்வேஷத்தை பற்றி விளாவரியாக விவரித்தாள். இந்த பகிர்தலில் அவளுடைய பலகாலமாக உள்ளே வைத்திருந்த நஞ்சை வெளியே உமிழ்ந்து, உமிழ்ந்து தன்னுடைய பல கசப்பான அனுபவங்களைப் பற்றிச் சொன்னாள். படிப்பது பிடித்தது என்பதால் பல கட்டுரைகள் படித்து வந்து, அதில் உள்ளக் கருத்துக்களை தன்னுடைய வாழ்வின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் மெல்ல மெல்லப் புரிந்து கொண்டு தெளிவு அடைந்தாள். இந்த தருணத்தில் சேகருடன் ஸெஷன்கள் தொடங்கின.

சேகர், இதுவரை தன் பிள்ளைகளுக்கான பொறுப்பே மதிப்பெண் கையெழுத்துப் போடுவது ஒன்றுதான் என்பதிலிருந்து மாற்றி அமைக்கத் தேவை என்பதை உணர்ந்தார். ரஜியுடன் சேர்ந்து செய்யக் காலையில் தினம் வீட்டிற்கு வேண்டிய பால் வாங்குவது, மற்றும் அவளுடனும், வீட்டில் உள்ள  குழந்தைகளுடனும் கேரம், செஸ், ரிங் டெனிகாய்ட் எனப் பலவகை விளையாட்டைப் பட்டியலிட்டோம். வீட்டில் பெரியவர்கள் எவ்வாறு மற்றவர்களை நடத்துகிறார்கள் என்பதைப் பார்த்து குழந்தைகளும் செய்கிறார்கள் என்பதனால் இப்படிச் செய்யப் பரிந்துரைத்தேன். விளையாடும்போது ஒருவருக்கு ஒருவர் பழக்கம் ஏற்பட நல்ல சந்தர்ப்பமாகிறது.

வீட்டினர் ஏற்றுக் கொள்வதிலும், நடத்தும் விதத்திலும் குறைகள் இருந்தால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு ரஜினி உதாரணமானாள்.

ரஜினி தான் எழுதி வைத்திருந்த ஒவ்வொரு கதையையும் அவளுடன் படித்தேன். இது பல ஸெஷன்களுக்குத் தொடர்ந்தது. அதில் பல நிலைமைகள் வெளிப்படையாகத் தெரிய வர, என் புரிதலுக்கு அவற்றைக் கொத்துக் கொத்தாகச் சேர்த்து வைத்தேன். ஒவ்வொன்றையும் பார்த்து அவை நினைவூட்டியவற்றைப் பற்றிப் பேசி நிவர்த்தி செய்யப் பல மாதங்கள் ஓடின இதில் பல வடுக்கள் வெளி வந்தன. கதைகள், வரைபடங்கள், பப்பெட்டுகள் அந்த காயங்கள் ஆறுவதற்கு உதவின.

சுபாவத்தில் உதவி செய்யும், மற்றவர் துன்பத்தை விலக்க ஏதாவது செய்ய முயலும் மனப்பான்மை உள்ளவள். கடந்த காலங்களை எடுத்துப் பார்த்தால் அன்பு, பாசம் என்பது அவள் பெற்றோர், கூடபிறந்தவர்களிடமிருந்து அவ்வளவாக்க இனிமேலும் கிடைக்கும் என்பது போல் எனக்குத் தோன்றவில்லை.

சற்று மாறாக, வேறு வழி ஒன்றை யோசித்தேன். வீட்டிற்கு அக்கம்பக்கத்தினரிடம் இவள் குழந்தைகள் வீட்டுப் பாடங்களுக்கு சனி-ஞாயிற்றுக்கிழமைகளில் உதவத் தயார் என்று சொல்லச் சொன்னேன். மெதுவாகக் குழந்தைகள் வரத் தொடங்கின. இவள் மற்றவர்களுக்கு அன்பு காட்டி, அக்கறையோடு கற்றுத் தருவதை தாத்தா பாட்டி பார்க்கப் பார்க்க மனம் கரைய ஆரம்பித்தது. என் யுக்தி பலித்தது.

பள்ளிக்கூடத்தில் அவளை மற்றவர்கள் சேர்த்துக் கொள்ள அவளுடைய வகுப்பு ஆசிரியையை அழைத்து உரையாடினேன். அவர்கள் விவரங்கள் புரிந்தவர். இருவரும் சேர்ந்து இவ்வாறு நாங்கள் நிகழ்த்தினோம். மதிய உணவு இடைவேளையின் போது ரஜினியை ஒதுக்கி வைப்பது  பளிச்சென்று தெரிந்தது அதற்கு, படிப்பில் சற்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஐந்து பிள்ளைகளை தேர்வு சேய்தோம். அவர்களுக்கு ரஜினியை “ஸ்டடி பட்டீ” (study buddy) ஆக நியமித்தோம். ஐவரை இடைவேளை நேரத்தில் சந்தித்து கூடப் படிப்பாள், விளக்கங்கள் அளிப்பாள். நேரம் இருக்கும் பொழுது நர்ஸரீ குழந்தைகளுக்கும் எழுத, வரையக் கற்பிப்பாள். ஒரு மாதம் கடந்தது. அந்த ஐவரின் படிப்பிலும் மாற்றங்கள் தெரிந்தது. ஐவர் படை பலம் ஆனது.

ரஜினியின் சமூகத் திறன், உரையாடல் மேம்படுத்த அவளை என் ஸோஷியல் ஸ்கில் குழுவில் சேர்த்துக் கொண்டேன். இது அவளுடைய திறன்கள் மலர உதவியது. ஆசிரியை கடிதத்தில் எழுதியிருந்த குறைகளை ஒவ்வொன்றாகச் சரி செய்து வந்தோம். இதன் பிரதிபலிப்பு, ஐவர் படையில் எதிரொலித்தது. நாளாக நாளாக அவள் வகுப்பு தோழிகள் மாற்றத்தைக் கவனித்து, கேட்க ஆரம்பித்தனர்.

உமாவும் சேகரும், ரஜினி செய்துவரும் முயற்சிகளைப் பார்த்து வந்தார்கள். இப்போது அவர்கள் தன் பங்கைச் செய்ய வேண்டியதாயிற்று. உமா, சேகர் தான் செய்த புறக்கணிப்பைப் புரிந்து கொள்ள அத்தாட்சியாக உதவ,  ஆசிரியின் ரிபோர்ட்டை எடுத்துக் கொண்டேன். அதன் ஒவ்வொரு வரியில் சொல்லப்பட்டது ஏன் உண்டாயிற்று என்றும், சீர் செய்ய என்ன செய்யலாம் என்றும் கலந்து ஆலோசிக்கப் பல வாரங்களுக்கு ஸெஷன்கள் தேவையானது.

பிறப்பிலிருந்தே அம்மாவால் நிராகரிக்கப் பட்டவள் ரஜினி. இந்த மாதிரி நிகழ்ந்தால் கருவிலிருந்தே வேண்டாதவர்கள் என்பதைக் குழந்தைகள் உணர்வார்கள். ரஜினிக்கு அவளின் சரசா பாட்டியும், இரண்டு மாமா மாமியும் அரவணைத்துப் பார்த்துக் கொண்டது பெரிய தெம்பானது. செஷங்களுக்குப் பின்னர் இந்தக் கூட்டத்தில் அவள் அப்பாவும் சேர்ந்தார். அம்மா சேர இன்னும் நேரமாகும், உமாவுடன் ஸெஷன்களும் அவளின் மாற்றங்களும் இன்னும் போய்க்கொண்டுதான்  இருக்கிறது. பள்ளியில் அவளுடைய வகுப்புத் தோழிகள், ஐவர் படை என்று ஆரம்பித்து, எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது!

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.