ஒரு கோப்பை சூரியன்- காலவன் கவிதைகள்-(ஆர்.கே.ராமநாதன்)
நூல் விமர்சனம்
கவிதை என்பது என்ன? எவற்றைக் கவிதை எனச் சொல்லலாம்?விதை என்பது வாழ்விற்கு இன்றியமையாதது.விதை விதைத்து பயிர் வளர்த்து உயிர் ஓம்புவது போல் எண்ணங்களை, சிந்தனைகளை விதைத்து மனித மனங்களைப் பயிரிட்டுப் பதன்படுத்துவதால்,’க’ என்னும் விகுதி சேர்த்து கவிதை எனப் பெயரிட்டார்களோ?
அறிந்த சொற்களின் வழியே அறியாத ஒன்றை கவிதை அறிமுகம் செய்ய வேண்டும்.அறிவின் புரிதல்களைத் தாண்டி புது அனுபவத்தை கவிதைகள் தர வேண்டும்.அவை அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டாலும்,அவரவர் மன நுட்பத்திற்கேற்றவாறே உணரப்படுகின்றன.
கவிதை, கட்டுரை, நாடகம், நடிப்பு, இயக்கம், வங்கி வேலை எனப் பன்முக ஆளுமையான ஆர். கே, ‘காலவன்’ என்ற புனை பெயரில் ‘ஒரு கோப்பை சூரியன்’ என்ற தலைப்பில் ‘குவிகம்’ வெளியீடாக தன் முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். பதிப்பாளர்களின் 50-வது நிகழ்ச்சியில் அவர்களின் 25-வது பதிப்பாக இந்நூல் வெளி வந்துள்ளது சாலச் சிறப்புடையது.
லா ச ராவின் மயக்கும் திகைக்க வைக்கும் எழுத்தின் தாக்கம் இவரது சில கவிதைகளில் காணப்படுகிறது.
‘உண்மையின் சுடரொளியில் ஒளியுறும் சொற்களின் விக்ரகங்கள்’ சொல்லெனப்படுவது என்கிறார்.’குவளையின் தரிசனமும் ஸ்பரிசமும் போதும் அது நிரம்பியிருந்தாலும், காலியாகவே இருந்தாலும்’என்ற வரிகள், நினைவுகள் கிளர்த்தும் எண்ண வண்ணங்களை அழகாகக் காட்டுகின்றன.கோப்பை இவரை மிகவுமே கவர்ந்திருக்கிறது.’குவளை மேல் சதிராடும் நீராவியாக’ என்று எழுதுகிறார்.’தொடர்புச் சங்கிலிகள் துளித்துளியாய் சேதி சொல்ல ஒரு குவளை தேறியது; ஒரு குவளை காதல் மழை மேகம்’
‘நீ வந்த பிறகு தான் கவிதைகள் உணர்வின் தீர்க்க நிலை முகமணிந்து கொண்டது ‘ எனக் காதலியைக் கொண்டாடுகிறார்.அவள் தான் இது நாள் வரையான தன் தேடலின் இலக்கு எனப் புரிந்து கொள்கிறார்.
‘நானும் நீயும் நாமெனும் கலப்பின் வர்ணக் கீற்றுகளெனும் வரையறை வகுத்திணைத்தேன் பிறகுதான் நிறப்பிரிகை மாற்றம் புரிபடல் துவங்கியது-நான் நீ என்பதாய் நீயே நான் என்பதாய்’ இவ்வரிகள் லா ச ராவை நோக்கி என்னை அழைத்துச் சென்றன.அதே போல் மற்றொன்று
‘வெறும் காலடிச் சத்தத்தில்,
மன எதிர்பார்ப்பின் நொடிகளில்,
சிநேகத்தின் வாசனைப் பரவலில்,
தோற்ற நிழலின் சிறு கவிப்பில்,
தரிசனத்தின் ஆதர்சத்தில்,
ஆறுதல் சார்பின் எதிர்பார்ப்பில்,
வெறும் சுண்டு விரல் பலத்தில் கூட
விலக்கமேற்று வரவேற்கும்
திரைச் சீலை வடிவில்தானே
வண்ணம் கொண்டதாய்
வலம் வந்தன
நமக்குள்ளான கதவுகள்..?’
அவள்’ஒவ்வொரு பார்வையிலும் ஒரு கவிதை எழுதி வைக்கிறாளாம்;ஒவ்வொரு கவிதையிலும் பார்வை பதித்து வைக்கிறாளாம்’! கொடுத்து வைத்தவர்.
‘என் அத்தனை கவிதையும் உன் பார்வை பேச்சிற்கு முன்
யாக நெய்த்துளி எனத் தெரியாத நிழல் முனியாக’ என உருகுகிறார்.
‘வார்த்தைகளின் கூடாரம்’ சிறப்பாக இருக்கிறது.
அம்மா, அப்பா, தோழி,வீடு, காகம், துரோகம்,என்று அனைத்துமே பாடு பொருளாகின்றன இவருக்கு.நாமிருக்கும் உடலில் உணர்வு இணைந்திருப்பது போல் இவர் வசிக்கும் வீடு இவருடன் பிணைகிறது.
பிற மொழிச் சொற்களை இவர் தவிர்ப்பது நலம்.’தெய்வச் செயல்’ கவிதைக்கு மனம் இணங்கவில்லை; தூயது, போலிக்கு மயங்குவது என்பது எக்காலத்திலும் உண்மையில்லை.
‘இருப்பேன் என்றென்றும் ஒரு கவிதையாய், கதையாய்,படைப்பாய்,பாட்டாய்’ என்ற இவர் ஆவல் நிறைவேறுவதாக!