(அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மட்டுமல்ல – உலக காபி தினமாமே?)
கொஞ்சம் காபி குடிக்கலாம், வாங்க!
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எத்தியோப்பியாவில் ஆடு மேய்க்கும் சிறுவன் அதிசயிக்கும்படி அவனது ஆடுகள் துள்ளிக் குதித்து, மகிழ்வுடன் ஆடிக்கொண்டிருந்தன! அருகே இருந்த புதரில் நல்ல சிவப்பு நிறத்தில் காய்த்திருந்த ‘பெர்ரி’ பழங்களைத் தின்றதினால்தான் இந்தப் பரவசம் என்பதை அறிந்தான் ‘கால்டி’ என்ற அந்தச் சிறுவன்! தானும் சிறிது தின்றபோது, ஏற்பட்ட புத்துணர்ச்சி வித்தியாசமாக இருக்கவே, தன் மதகுருமார்களிடம் அவற்றைக் கொண்டு கொடுத்தான். இது ஏதோ சைத்தான் வேலை என்று அஞ்சிய குருமார்கள், அந்தக் காய்களை அருகிலிருந்த நெருப்புக் குண்டத்தில் வீசினர். அதிலிருந்து எழுந்த வாசனை அவர்களை மீண்டும் ஆட்கொண்டன! தீயில் வறுத்து, தண்ணீரில் பாதுகாத்தனர். சைன, ஜப்பானியத் துறவிகளின் தேனீர் பானம் போல, தங்கள் பிரார்த்தனைகளின் போது விழிப்புடன் இருக்க இப்பானத்தை அருந்தத் தொடங்கினர் – பின்னர் படிப்படியாக, காபிக்கொட்டைகளை வறுத்து, கொதிக்கும் நீரில் ஊற வைத்து மணமான டிகாக்ஷன் தயாரிப்பது வந்தது –
கிழக்கிந்தியக் கம்பெனியுடன் வந்த ‘ப்ளாக்’ காபி, இன்று பால், சர்க்கரையுடன் சேர்ந்து, வீதிக்கு வீதி ‘கும்மோணம்’ பில்டர் காபியாகி, வாழ்க்கையின் முக்கியமானதொரு அங்கமாகி விட்டது வரலாறு!
காலையில் டைனிங் டேபிளிலோ, பால்கனியில் தொங்கும் மூங்கில் கூடையிலோ, ஹாலில் ஆடும் ஊஞ்சலிலோ, சினிமாக்களில் வருவதைப்போல் வீட்டுக்கு முன்னிருக்கும் புல்தரையிலோ காபி அருந்துவது சுகம் – உடன் அன்றைய சூடான செய்திகளுடன் பேப்பரும் இருந்து விட்டால் இரட்டிப்பு சுகம்! (எதிரில் மனைவியும் இருப்பது காபி தயாரித்தது யார் என்பதைப் பொருத்தது!).
சின்ன வயதில், காபி வாசனையோ, தண்ணீர் கொதிக்கும் சத்தமோ கேட்டால்தான் காலையில் படுக்கையிலிருந்து எழும்பத் தோன்றும்! அம்மா எப்போதும் ப்ளாண்டேஷன் ஏ, பீபெரி (தட்டைக் கொட்டை, குண்டுக்கொட்டை) இரண்டையும் கலந்துதான் உபயோகிப்பாள் – சிக்கிரி எப்போதும் கிடையாது. நல்ல நிறம், மணம், சுவை இவற்றுக்கு இந்த காம்பினேஷனே சரி என்பது அவள் அனுபவம்!
பாண்டிபசாரில் நரசுஸ் காபி, பாண்டியன் காபி அப்போதெல்லாம் பிரசித்தம். முதல் நாள் மறந்து விட்ட சில நாட்களில், மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் சென்று, பாண்டியன் காபிப்பொடி வாங்கியிருக்கிறேன்! ஊதுவத்தி மணத்துடன் மதுரை மீனாட்சி சிரித்திருக்க, எவர்சில்வர் சம்புடத்திலிருந்து கரண்டியால் ஏ மற்றும் பீ பொடிகளைக் கலந்து, பாண்டியன் காபி என்று ப்ரிண்ட் செய்த திஸ்யூ பேப்பர் கவரை வாயால் ஊதித் திறந்து, பொடியைக் கரண்டியால் லாவகமாக உள்ளே இட்டு, மேஜையின் மேல் இரண்டு தட்டு தட்டி, அந்தக் கால வெக்டர் வேயிங் மெஷினில் நிறுத்து, பையின் வாயினை இரண்டு மடி மடித்து, பசையுள்ள பிரவுன் கலர் காகித நாடாவால் ஒட்டி, சூடாகக் கொடுக்கும் காபிப்பொடிக்கு வீட்டில் வரவேற்பு அதிகம்!
நாக்கு நீளமான சில பெரிசுகளுக்கு, வீட்டிலேயே அரைக் கைப்பிடி (‘ஸ்ராங்கா’ என்பது தோராயமாக ஒரு கைப்பிடியில் பாதி அளவு!) பச்சைக் காபிக் கொட்டையை வறுத்து – அதிகம் கருக்க விடாமல், சிறிது பொன்னிறத்தில் – கை மெஷினில் (மினியேச்சர் காபி அறவை மெஷின்), கைப் பிடியைக் கரகரவென்று சுற்றி, அதன் மூக்கின் வழியே விழும் புத்தம்புது வாசனையுடன் காபிப் பொடியில் பில்டரில் டிகாக்ஷன் இறக்கி, புதுப் பசும்பாலில் கலந்து, நுரையுடன் சூடாகக் குடிக்கும் காபியைத் தவிர வேறு எதையும் காபி என்று ஒத்துக்கொள்ள மனம் வராது!
பில்டரில் டிகாக்ஷன் இறக்குவது ஒரு கலை! தேவைக்கேற்ப காபிப்பொடியைப் போட்டு சிறிது இதமாக அமுக்கி அதன் மேல் சிலர் சிறிய ஜாலி மூடி ஒன்றை வைப்பார்கள் – என் அம்மா, தினசரி காலண்டரிலிருந்து ஒரு தேதி ஷீட்டைக் கிழித்து, பில்டரில் காபிப் பொடி மேல் போட்டு அதன் மேல் கொதிக்கும் நிரை விடுவாள் – அதையும் நேராக வேகமாக விடாமல், மெதுவாகச் சுற்றியபடியோ அல்லது முன்னும் பின்னுமாகவோ விடுவது ‘ஸ்ட்ராங்’ டிகாக்ஷனுக்கு உத்தரவாதம்! கோபத்துடன் வேகமாக சுடுநீரை விடுவது, பில்டரின் தலையில் தட்டுவது இவையெல்லாம் ‘கொட கொட’வென தண்ணீராய் இறங்கும் டிகாக்ஷனுக்கு வழி வகுக்கும் – நல்ல காபிக்கு உதவாது!! இந்தத் தொல்லைகளிலிருந்து ஓரளவுக்கு விடுதலை கொடுப்பவை இப்போது புழக்கத்திலுள்ள ‘காஃபி மேக்கர்’ என்னும் பில்டர்!
பசும்பாலோ, எருமைப்பாலோ, கறந்த பாலோ, கவர்ப் பாலோ – காபியின் சுவையை மாற்றும் வல்லமை கொண்டவை இவை – நன்கு காய்ச்சி, பொன்னிறம் வரும் அளவுக்கு காபி டிகாக்ஷனைச் சேர்த்து, சர்க்கரையும் (கொஞ்சம் குறைவாக இருந்தால் நல்லது – அடிநாக்கில் காபியின் கசப்பு சிறிது நேரத்துக்கு இருப்பது காபி ரசிகர்களின் எதிர்பார்ப்பு!) சேர்த்து, இரண்டு முறை நுரை வர ஆற்றி, டபரா தம்ப்ளரில் கொடுக்கப் படும் காபிக்கே என் ஓட்டு!
டீத்தண்ணீர் போல நீர்த்திருக்கும் டிகாக்ஷன், ப்ளாஸ்டிக் வாடையடிக்கும் கவர் பால், டயபெடீஸ் என்று சர்க்கரைக்குப் பதிலாய் சேர்க்கப்படும் ஈக்வல் – இவை நல்ல காபிக்கு விரோதிகள்!
இடம், நேரத்திற்கேற்றார்போல் வித விதமாக அவதாரம் எடுக்கும் காபி! – கல்யாண காபி, ஓட்டல் காபி, டீ ஸ்டால் காபி, சினிமா தியேட்டர் எஸ்பிரஸோ காபி, அவசரத்துக்கு வரும் இன்ஸ்டண்ட் காபி, பாலில்லா பிளாக் காபி, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மற்றும் விமானங்களில் தரப்படும் பிரவுன் கலர் காபி என்ற வஸ்து , நிறம், மணம் இல்லா சுடுநீருக்கிணையான ரயில்வே காபி, கிலோமீட்டருக்கு ஒன்றென முளைத்திருக்கும் ‘கும்பகோணம் டிகிரி காபி’ கடைக் காபிகள் – (‘இதுதான் முதலில் வந்த ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி காபி ஷாப்’ என்றவரின் கடையில் காபி குடித்து வெளியே வந்து, போர்டில் பார்த்தால், உரிமையாளர் உம்மர் பாய் என்றிருந்தது!)
உலகில் பெட்ரோலுக்கு அடுத்து அதிக டிமாண்டில் இருப்பது காபிதான்!
காலை ஐந்தரை மணிக்கே திநகர் கீதா கபேயில் நல்ல காபி கிடைக்கும் – முக்தா ஶ்ரீனிவாசன், தமிழ்வாணன், உபால்டு, ஆரூர்தாஸ் போன்றவர்களைக் காலை வேலையில் கையில் அன்றைய பேப்பருடன் – காலைக் காபிக்கு இங்கு வருவதைக் காணலாம்!
“தமிழ்நாட்டில் மக்கள் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட காப்பியைப் பற்றி ஒரு புராணமே எழுதலாம்” – ஏ.கே.செட்டியார், குடகு, சென்னை, 1967.
இரண்டு நண்பர்கள் சந்தித்தாலும், சிநேகிதியுடன் கடலை போடும்போதும், நடைப் பயிற்சி முடிந்த பிறகும், பெரிசுகள் பழங்கதை பேசும்போதும் காபியும் ஒரு பாத்திரமாக மாறி வாழ்க்கையுடன் இணைந்துவிட்டது என்பதே உண்மை!
வாழ்க காபி ரசிகர்கள்!