யுவான்சுவாங்
ஹர்ஷர், புலிகேசி, நரசிம்மபல்லவர் என்று பல ஹீரோக்கள் இருக்கும்போது – அதே நேரத்தில் – இன்னொரு சூப்பர் ஸ்டார் இந்தியாவில் உருவானார். அது எந்த நாட்டின் மன்னனும் அல்ல. கத்தி பிடித்தவீரனும் அல்ல. அறிவையும் எழுத்து கோலையும் நம்பி பதினாறு ஆண்டுகள் இந்தியாவில் பயணித்து, சமய நூல்களை ஆய்ந்து, கற்று, மொழிபெயர்த்து, மன்னர்களின் மதிப்பைப் பெற்று. சரித்திரத்தில் இடம் பெற்றது மற்றுமல்லாமல், சரித்திரத்தையே தொகுத்துத் தந்தவர். அன்றைய நாளின் ‘சரித்திரம் பேசுகிறது’ – எழுதியது யாரோ என்ற கேள்விக்கு விடையே அவர் தான்..
அவர் தான்..
யுவான் சுவாங்!
அவரது கதை எழுதி சரித்திரம் பேசலாம்.
முதலில் சீனாவுக்கு செல்வோம்.
அட.. இந்நாள் தமிழ் சினிமாவில் பாடல் காட்சிக்கு வெளிநாடு செல்லும் போது.. நாமும் கொஞ்சம் சீனாவுக்குச் செல்வோமே!
கி பி 602:
சீனாவில்..இந்நாளின் ஹெனான் மாகாணம்:
யுவான் சுவாங் பிறந்தான்.
அவன் குடும்பத்தில் அனைவரும் அறிவாளிகளாகவும் அறிவு ஜீவிகளாகவும் இருந்ததர்.
தந்தையார் மகனுடைய அறிவுக்கூர்மையையையும், கற்கும் ஆர்வத்தையும் அறிந்தார்.
சிறு வயதிலிருந்தே அவன் சமயப்புத்தகங்கள் படிக்க பெரு விருப்பம் கொண்டிருந்தான்.
பதின்மூன்று வயதில் அவன் பயிற்சி புத்தத்துறவியாக (ட்ரெய்னிங்) நியமிக்கப்பட்டான்.
இருபது வயதில் முழுத்துறவியாகினான்.
பின்னர் சீனா முழுதும் பயணித்து புத்தசமய நூல்களைத் தேடி சேகரித்தான்.
நாட்டில் கிடைத்த அந்நூல்கள் பெரும்பாலும் அரைகுறையாகவும், தவறாகவும் இருப்பதை உணர்ந்தான்.
முன்னாளில் பாஹியான் இந்தியா சென்று பல புத்த சமய புத்தகங்களை சீன மொழிக்கு கொண்டு வந்ததை அறிந்தான்.
அன்று பாஹியான் செய்ததைப் போல நாமும் செய்யவேண்டும்?
அதுக்கும் மேலே!
யுவான் சுவாங் – மனம் இந்தியா செல்வதை விரும்பியது.
நன்றி: (Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=247641)
சீன அரசாங்கம் யாரும் வெளிநாட்டு செல்லத் தடை விதித்திருந்தது.
விசா கொடுக்கவில்லை!!
யுவான் சுவாங்கின் வெளிநாட்டுத் திட்டம் பற்றி அறிந்திருந்த அரசாங்கம், அதைத் தடுக்க முயற்சிகளை மேற்கொண்டது.
பயணம் போக குதிரை வேண்டுமே.
யுவான் சுவாங் குதிரை வாங்கினான்.
அது மெலிந்த சிவப்பு நிறக் குதிரை.
பாலைவனப் பயணம் அறிந்த பலான குதிரை.
யுவான் சுவாங் – சீனாவைத் தாண்டியது காட்சிகள் பாகுபலி காட்சிகளை மிஞ்சும்.
சீன எல்லை.
காவலர்கள் கண்விழித்து இரவும் பகலும் எல்லையைக் காத்து நின்றனர்.
அவர்களுக்கு அரசாங்கம் செய்தி அனுப்பியிருந்தது.
யுவான் சுவாங் எல்லை தாண்டி செல்ல முயலுவான் என்று.
அவனைத் தடுத்திட வேண்டும்.
யுவான் சுவாங்கின் நண்பன் வெளிநாட்டவன் ஒருவன்.
கட்டடம் கட்டுவதில் வல்லவன்.
சீன எல்லையில் இருந்தது நதி.
அதில் ஒதுக்குப்புறத்தில்.. ஒரு சிறு பாலத்தைக் கட்டினான்.
யுவான் சுவாங் அந்தப்பாலத்தில் தப்பிச்செல்ல குதிரையில் வந்தான். அவனுடன் 12 தோழர்களும் உடன் வந்தனர். சீனத்தின் எல்லைப்பாதுகாவல் படையினர்- தப்பிச் செல்லும் யுவான் சுவாங்கை துரத்தினர்.
அம்பு மழை பெய்தனர்.
பயணிகள் தப்பித்தனர்.
வழியில் கோபி பாலைவனம்.
அங்கும் ஆபத்து.
உயரத்தில் ஒரு காவல் மணிக்கூண்டு.
அதன் தாழ்வாரத்தில் ஒரு தொட்டியில் தண்ணீர்.
பாலைவனத்தில் தண்ணீர் தங்கம் போன்றது… விலைமதிப்பில்லாதது.
யுவான் சுவாங் கூட்டம் தாகத்தால் வரண்டது.
இரவின் போர்வையில் மெல்ல நீர்த்தொட்டியை அணுகினர்.
மணிக்கூண்டிலிருந்த வீரர்கள் அம்பு எய்தினர்.
இறையருள் இல்லாதிருந்தால் அந்தத் தாக்குதலில் யுவான் சுவாங் மாண்டிருக்க வேண்டும்.
தப்பித்த யுவான் சுவாங் – பாலைவனத்தில் ஐந்து நாட்கள் வழி தவறி.. தண்ணீர் இல்லாமல்..தடுமாறினான்.
மரணத்தின் விளிம்பு கண்டான்..
பாலைவனம் தாண்டிய பின்…
க்லேஸியர் என்னும் பனிப்பாறைகள் கொண்ட நிலம்..
யுவான் சுவாங் தனது பத்து நண்பர்கள் பனியில் உறைந்து மரித்ததைக் கண்டான்.
மனம் தொய்ந்தான்.
‘புத்தர்’ நம்மை ஏன் இறக்க விடவில்லை – என்று யோசித்தான்.
அதுவும் கடந்து போனது.
சில மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது இது. எந்த இடத்திலும் அவர்கள் செல்லு முன்னரே அங்கு அவர்களது புகழ் அடைந்து விடும். முன்பு அலெக்சாண்டரிடம் இதைத் நாம் பார்த்தோம். யுவான் சுவாங் அப்படிப்பட்ட புகழ் கொண்டிருந்தான்.
துருக்க மன்னர் (இந்நாளின் துருகேசஸ்டான்) ‘கான்’ – ஒரு குறுநில மன்னன்!
அவன் யுவான் சுவாங்கை வரவேற்க தடபுடல் அலங்காரங்கள் செய்தான்.
தங்கத்தால் இழைத்த பெரும் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டது.
அதில் அவனது மந்திரிகள் இருபுறமும் பாய் போட்டு அமர்ந்திருந்தனர்.
மற்ற முக்கியப் பிரமுகர்கள் பின்னர் நின்றிருந்தனர்.
மன்னன் ‘கான்’ கூடார மண்டபத்தை விட்டு வெளியே வந்து முப்பது அடிகள் நடந்து வந்து யுவான் சுவாங்கை வரவேற்று..முகமன் கூறி ..உள்ளே அழைத்துச் சென்றான். பிறகு இசை நிகழ்ச்சி ஒன்றை துவங்கி வைத்தான். தனது மந்திரிகளுக்கும் – முக்கிய விருந்தினர்களுக்கும் மதுவும் – புலாலும் வழங்கினான். யுவான் சுவாங் மற்றும் அவன் குழுவுக்கு திராட்சை சிரப் அளித்தான்.
அதைத்தான் தமிழர்கள் சொன்னாரோ: ‘கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு’!
யுவான் சுவாங் சிறப்புரை ஆற்றினான்: ‘தான் என்ற என்னமிலாது செய்யும் கர்மா’, ‘முக்தி’, மற்றும் ‘மிருக வதை தடுப்பு’ –என்று பல கொள்கைகளை விவரித்தான்.
அட என்னடா இது.. எமபுரிப்பட்டணம் போல – காதுல பூ –என்றோ நினைக்கவேண்டாம்…
சரித்திரத்தை – சற்றே சாயம் பூசிப் பேசுகிறோம்..
தொடரும்…