நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
- இட்லி மகிமை – ஏப்ரல் 2018
- தோசை ஒரு தொடர்கதை – மே 2018
- அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
- ரசமாயம் – ஜூலை 2018
- போளி புராணம் – ஆகஸ்ட் 2018
- அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
- கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
- கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
- சேவை செய்வோம் – டிசம்பர் 2018
- பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
- பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
- வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
- பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
- ஊறுகாய் உற்சாகம் – மே 2019
- பூரி ப்ரேயர் – ஜூன் 2019
- இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
- வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
- வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
- சுண்டலோ சுண்டல் !
நண்பர்கள் நால்வர் சேர்ந்து விட்டால்
நிறையவே அங்கே இருக்கும் கிண்டல் !
நவராத்திரி கொலு வந்தது என்றால்
நிச்சயம் நமக்கெலாம் கிடைக்கும் சுண்டல் !
ஒன்றா இரண்டா சுண்டலின் வகைகள் !
விதம் விதமாக எத்தனை சுவைகள் !
கொலு வைத்த வீட்டில் மணக்கும் மணக்கும் –
மனதைக் கொள்ளை அடிக்கும் சுண்டல் !
சாமிகள் படியில் கொலு வீற்றிருப்பர் !
மாமிகள் ரெடியாய் சுண்டலை வைப்பர் !
மற்றவர்க்கெல்லாம் ஒற்றைக் குறிக்கோள் –
“ஒரு கை பார்ப்போம் இன்றைய சுண்டல் !”
எத்தனை சுண்டல் வந்து விட்டாலும்
சுண்டலின் ராணி பட்டாணி சுண்டல் !
அலுக்காது சலிக்காது அசை போடுவோம் நாம் –
தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் !
வெள்ளையும் கருப்புமாய் காராமணி சுண்டல் !
அதேபோல் இருவிதம் கொண்டை சுண்டல் !
உப்பும் காரமும் சரியாய் இருந்தால்
சற்றும் சளையாது தின்போம் சுண்டல் !
பழகிய நட்பு போல் பாசமாய் இருக்கும்
கரையும் பாசிப் பருப்பு சுண்டல் !
அளவாய்த் தேங்காய் துருவிச் சேர்த்தால்
அள்ளித் தின்போம் கடலைச் சுண்டல் !
நெஞ்சு நிமிர்த்திடும் நிலக் கடலைச் சுண்டல் !
நிறுத்த முடியாத சுவைதரும் சுண்டல் !
அனைவரும் வந்து அன்புடன் சுவைக்கும்
நம நம நாவிற்கு நல்லதொரு சுண்டல் !
எத்தனை வகைகள் ! எத்தனை சுவைகள் !
அம்மா கைமண அதிசய சுண்டல் !
என்றும் நினைவினில் தங்கிடும் அன்னை
என்னை நினைத்து செய்திட்ட சுண்டல் !