எஸ் ராமகிருஷ்ணன்
2018ஆம் ஆண்டிற்கான சாஹித்ய அகடமி விருதினைப் பெற்றுள்ள திரு எஸ் ராமகிருஷ்ணன், மிகச் சிறந்த பேச்சளாரும்கூட. படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் எப்போதும் இலக்கியத்துடனே வாழ்ந்துவரும் இவர், பல இடங்களைச் சுற்றிப் பார்த்து அனுபவித்தும் அனுபவம்பெற்றும் வருபவர்.
இவர் ஆரம்பித்துள்ள பதிப்பகம் “தேசாந்திரி” என்று பெயரிடப்பட்டுள்ளது மிகவும் பொருத்தம்.
ரசித்த படைப்புகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் போதும், மேடைகளில் உரையாற்றும்போதும் நாமும் அவருடன் அந்தப் புத்தகத்தைப் படிப்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்துபவர்.
எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என எழுதியுள்ளார். இருபதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் பணியாற்றி உள்ளார்.
இவரது “எம்பாவாய்” என்கிற கதை இப்படித் தொடங்குகிறது…
1976இல் வாகினி சுப்பிரமணியம் தொகுத்த “காலத்தின் குரல்”’ என்கிற ஆங்கிலத் தொகுப்பில் என் அம்மா எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி இருக்கிறது என்ற செய்தியை அமெரிக்காவிலிருந்து வேணி எழுதியிருந்தாள். என்னால் நம்ப முடியவில்லை.
கதைசொல்லியின் மகள் அமெரிக்கப் பொது நூலகத்தில் படித்த அந்தப் பகுதியினை ஸ்கேன் செய்து அனுப்புகிறாள். அந்தக் கடிதம் 26, ஜூலை 1974 என்று தேதியிடப்பட்டிருந்தது. இந்தக் கதை சொல்லப்படுவதற்கு நாற்பது ஆண்டுகள் முன்னால். கடிதம் எழுதியவர் இறந்து சில ஆண்டுகள் கழிந்துவிட்டன.
நன்மதி என்ற பெயருடைய, ஆறாவது வகுப்பு வரை மட்டுமே படிக்க அனுமதிக்கப்பட்ட, பதினைந்து வயதில் திருமணமாகி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு புகுந்தவீடு வந்து பதினேழு வயதில் முதல்குழந்தை பெற்ற அம்மாவிற்கு நாவல்கள் படிப்பதில் மிகுந்த ஆசை.
காப்பிப்பொடி அரைத்து வியாபாரம் செய்யும் சகோதரர்களில் மூத்தவரான கணவருக்கு கதை, சங்கீதம் எதிலும் ஈடுபாடு கிடையாது. வாரப் பத்திரிகைகள் படிக்கும் மைத்துனர் மதுரை சென்று வரும்போது புது நாவல்கள் வாங்கிவருபவர். மகனும் நூலகத்திலிருந்து அவ்வப்போது புத்தகங்கள் எடுத்துக் கொடுப்பதுண்டு. வாகினியின் நாவல்கள் அறிமுகமாகி அவரது கதைகளை விடாமல் படித்து வருகிறாள் நன்மதி.
அச்சமயம் வருடம் ஒருமுறை மட்டுமே நடக்கும் இலக்கியக் கூட்டத்திற்கு வாஹினி வரப் போகிறாள் என்ற செய்தி ஒரு தட்டியில் நோட்டீஸ் ஒட்டியிருப்பதாகத் தெரிகிறது. அதைப் பார்க்கப் போகலாமென்றால், பெண் ஒருத்தி தனியாக வெளியில் போகக்கூடாது என்கிற குடும்ப விதிமுறை தடுக்கிறது. மகனைப் பள்ளிக்கு கூட்டிச் செல்வதுபோல் சென்று பார்க்கிறாள் நன்மதி.
வாஹினி எப்படி ஊருக்கு வருகிறாள், அவளைப்பார்க்க முடியுமா என்றெல்லாம் யோசிக்கிறாள் . கூட்டத்திற்கும் செல்ல ஆசை. ஆனால் கூட்டம் நடக்கும் நேரம், மாலை உணவு தயாரிக்க வேண்டிய நேரம். என்றாலும் பக்கத்து வீட்டில் சாதம் வைக்கச் சொல்லிவிட்டு, கூட்டத்திலிருந்து வந்து சாம்பார், ரசம் தயாரித்து விடலாம் என ஏற்பாடு செய்துகொள்கிறாள்.
பட்டுப்புடவை கட்டிக்கொண்டு போனால் தெரிந்துவிடும் என்று தனக்குப் பிடித்த வேறு ஒரு புடவை கட்டிக்கொண்டு தன் மகனை (கதைசொல்லி) அழைத்துக் கொண்டு கோயிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறாள். கூட்டம் தொடங்கும்வரை தெரிந்த ஜோசியர் வீட்டில் இருந்துகொள்கிறாள்.
கிராப் தலை, பேன்ட் சட்டை அணிந்து மென்மையாகப் பேசுகிறாள் வாகினி. ஒரு பெண்மணி கூட பார்வையாளராக வரவில்லை. நன்மதி ஏதோ வேளையாக வந்தவள் தற்செயலாக வந்ததுபோல் பாவனையுடன் இருக்கிறாள். வாஹினி இவளைப்ப்பார்த்து ஒரு புன்முறுவல் பூக்கிறாள்.
பேகல் நிறைய எழுதவேண்டும், வர்ஜீனியா உல்ப், வில்லா கேதார், ஔவையார் போன்ற படைப்பாளிகளைப் பற்றி பேசுகிறாள். ஆண்டாள் பிறந்த ஊர் என்பதற்காகவே ஸ்ரீவில்லிபுத்தூர் வந்ததாகக் கூறுகிறாள்.
வீட்டிற்கு வந்ததும் நன்மதி கூட்டத்திற்குப் போய்வந்தது தெரிந்து அவர் கணவரும் மாமனாரும் கோபித்துக் கொள்கிறார்கள். கூடத்திற்குப் போய்வந்த மைத்துனர், வாஹினியை மறுநாள் காலை உணவிற்கு வீட்டிற்கு அழைத்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.
( மீதி அடுத்த இதழில் )