இன்றைய எழுத்தாளர் – பா ராகவன்

அவரது வலைப்பூவில் அவரே தன்னைப்பற்றிக் கூறுகிறார்.

பார்த்தசாரதி ராகவன் என்னும் பாஸ்போர்ட் பெயர் கொண்ட நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வாழ்வது அனைத்தும் சென்னை நகரில்.

சென்னை தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்துகிறது. நான் சென்னையை விரும்புபவன். சென்னைக்காரன்.

என் அப்பா தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். பரம்பரையாகப் பள்ளி ஆசிரியர். தாத்தாவும் பெரியப்பா ஒருவரும் இரண்டு அத்தைகளும் அவர்களது வாரிசுகளில் ஒரு சிலரும் பள்ளி ஆசிரியர்களாகவே உள்ளார்கள். பள்ளி நாள்களில் ஒழுங்காகப் படிக்காததால் நான் பத்திரிகை ஆசிரியர் ஆகிப்போனேன்.

காஞ்சீபுரம் கிருஷ்ணா ஸ்கூல், கோவூர் பஞ்சாயத்துப் பள்ளி, கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளி, தரமணி மத்திய தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய இடங்களில் படித்தேன். மிகவும் சுமாரான மாணவன். ஆனால் பேச்சுப் போட்டிகளில் எழுதிவைத்து மனப்பாடம் செய்து பேசி எப்படியாவது பரிசு வாங்கிவிடும் வழக்கம் இருந்தது. ஓர் ஆண்டு விழாவுக்கு வருகை தந்த கோகுலம் ஆசிரியர் அழ. வள்ளியப்பா கொடுத்த உற்சாகத்தில் என் முதல் எழுத்து முயற்சியாகக் கவிதை மாதிரி ஒன்றை எழுதிப் பார்த்தேன். அதை வள்ளியப்பா கோகுலத்தில் பிரசுரித்தார். தொடர்ச்சியாக, ஒன்பதாம் வகுப்பில் இருந்தவரை நிறையக் கவிதைகள் எழுதித் தள்ளிக்கொண்டிருந்தேன்.

பத்தாம் வகுப்பு விடுமுறையில்தான் முதல் முதலில் தீவிரமாகப் புனைகதைகளை வாசிக்கத் தொடங்கினேன். அதற்குமுன் தொடர்கதைகளாகச் சிலவற்றை மட்டும் படித்திருந்தேன். லா.ச. ராமாமிருதத்தின் உரைநடையைப் படித்ததும் கவிதையைத் தலைமுழுகினேன். அந்நாளில் என்னைப் பைத்தியம் பிடித்து அலையவைத்த எழுத்து அவருடையது. தொடர்ந்து, தமிழின் அனைத்து முக்கியமான படைப்பாளிகளையும் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். குரோம்பேட்டை லீலா லெண்டிங் லைப்ரரியில் பொதுவாக என்னைத் தவிர நவீன இலக்கிய நூல்களை அந்நாளில் வேறு யாரும் தொடுவதில்லை என்பதால் நான் விரும்பிய அனைத்து நூல்களும் எனக்கு எளிதாகக் கிடைத்தன. பல அரிய புத்தகங்களைத் தொலைந்துவிட்டது என்று நூலகரிடம் பொய்சொல்லி நானே வைத்துக்கொண்டது பற்றிய உறுத்தல் இப்போதும் உள்ளது.

என் அப்பாவுக்கு இலக்கிய ஆர்வம் உண்டு.  பாரதி கலைக்கழகம் என்ற பெயரில் இன்றும் இயங்கும் கவிஞர்களின் அமைப்பு ஒன்றை என் பெரியப்பா சுராஜ் நடத்தி வருகிறார். என் அப்பா உள்ளிட்ட சுமார் நூறு மரபுக்கவிஞர்கள் அங்கே பிறந்து வளர்ந்தவர்கள். மாதம்தோறும் அவர்கள் நடத்தும் கவியரங்குகளுக்குச் சென்றுவருவேன். அங்கு அறிமுகமான கவிஞர் நா.சீ. வரதராஜன் [பீஷ்மன் என்ற பெயரில் சிறுகதைகளும் எழுதுவார்.] லா.ச. ராமாமிருதத்தின் நண்பர். அதனாலேயே எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. நான் எழுதித் தள்ளிக்கொண்டிருந்த குப்பைகளைக்கூடப் பொருட்படுத்திப் பாராட்டி, உற்சாகப்படுத்துவது அவருடைய வழக்கம். நான் பிரமாதமான எழுத்தாளனாக வருவேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லி, என்னை நம்பவைத்து அந்த வழியில் திருப்பிவிட்டதில் முக்கியப் பங்கு அவருடையது.

அதே வேலையை இன்னும் சற்றுப் பிந்திச் செய்தவர் தி.க. சிவசங்கரன். திருமணமான புதிதில் என் மனைவி அலுவலகத்துக்கு போன் செய்து, ‘இன்று தி.க.சியிடமிருந்து கார்ட் வரவில்லை’ என்று சில நாள்களில் வியப்போடு சொல்லுவாள். நெல்லையில் இருந்தபடி சென்னையில் என்னை வளர்த்தவர் அவர்.

கல்லூரிக்குச் சென்ற வயதில் எழுத்தார்வம் அதிகரிக்க, படிப்பில் நாட்டமற்றுப் போனது. எப்போதும் ஊர் சுற்றல், சினிமா, இலக்கியக் கூட்டங்கள், குட்டிச்சுவர் அரட்டைகள் என்று தடம் மாறினேன். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கதைப் பிரசுரம், ஏராளமான அரியர்ஸ் என்று வீடு திரும்பினேன்.

மிகுந்த குழப்பமான, கொந்தளிப்பான காலக்கட்டம். ஒரு பொறுக்கியாகவும் பரம சாதுவாகவும் மாறிமாறி வாழ்ந்த தருணம். எதிர்காலம் எதுவென்று தெரியாமல் மிகவும் குழம்பினேன். திடீர் எழுச்சியும் திடீர் விரக்தியுமாக மாறி மாறி மனத்துக்குள் அலைக்கழிக்கப்பட்டேன். பக்திப் பித்து ஏறியது. மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் மடம், புரவிபாளையம் கோடி சுவாமிகள் என்று கொஞ்சம் அலைந்தேன். ஓயாமல் ரஜனீஷ், ஜே. கிருஷ்ணமூர்த்தி, சித்தர் பாடல்கள் என்று என்னென்னவோ படித்தேன். ராமகிருஷ்ண மடத்தின் அன்றைய தலைவராக இருந்த சுவாமி தபஸ்யானந்தா, உனக்கு இந்த வழி ஒத்துவராது, போய்விடு என்று சொன்னார். நேரே பறங்கிமலை ஜோதி தியேட்டருக்குச் சென்று மூன்று காட்சிகள் தொடர்ச்சியாகப் பார்த்து அவரை மனத்துக்குள் பழிவாங்கினேன்.  என் பொருட்டுக் கவலைப்பட்டுக்கொண்டிருந்த பெற்றோருக்கு எந்த வகையிலாவது ஆறுதல் தர முடியுமா என்று பார்த்தேன். வழி ஏதும் புலப்படவில்லை. தம்பிகள் இருவரும் அமர்க்களமாகப் படித்து, பள்ளி முதல், கல்லூரி முதல் என்று புகழ் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவும் அவமான உணர்வை அதிகரித்தது.

உலகத் தொடர்பிலிருந்து என்னை முற்றிலுமாகக் கத்தரித்துக்கொண்டு, எக்கச்சக்கமாக எழுதினேன். என்மீது பரிதாபப்பட்டு என் பெரியப்பா சுராஜ், தம் நண்பரான விக்கிரமனிடம் சொல்லி எனக்கு அமுதசுரபியில் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். நாநூறு ரூபாய் சம்பளம். லிங்கிச் செட்டித் தெருவில் அலுவலகம். ஒரு மணிநேர ரயில் பயணம்.

அந்தப் பயணத்தில் ம.வே. சிவகுமாரைச் சந்தித்தேன். முன்னதாக கன்னிமரா நூலகத்தில் அவரது புத்தகப் பின் அட்டையில் போட்டோ பார்த்து அவரை அடையாளம் கண்டுகொண்டிருந்தேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஒரே நாளில் நண்பராகவும் ஆசிரியராகவும் ஆகிப்போன சிவகுமார் எனக்கு எழுத்தின் நுட்பங்களை போதித்தார். பல நல்ல எழுத்தாளர்களை அடையாளம் காட்டினார். நிறைய புத்தகங்களையும் வாசிக்கக் கொடுத்தார். அசோகமித்திரனை மனப்பாடம் செய்யச்சொன்னார். உருண்டை உருண்டையாக, ஒன்றோடொன்று ஒட்டாமல், உதிர்ந்துகிடக்கும் வேப்பம்பழங்கள் போன்ற கையெழுத்தில் அவர் எழுதும் சிறுகதைகளையெல்லாம் எனக்கு முதலில் வாசிக்கக் கொடுப்பார்.

சிவகுமாரின் தொடர்புக்குப் பிறகுதான் என் எழுத்து எனக்கே பிடிக்கத் தொடங்கியது. பத்திரிகை ஆசிரியர்களும் அதன்பிறகுதான் என் கதைகளைப் பொருட்படுத்த ஆரம்பித்தார்கள். கணையாழி ஆசிரியர் கி. கஸ்தூரிரங்கன் என்னுடைய ஒரு கதையைப் படித்துவிட்டு நேரில் வரச்சொல்லிப் பாராட்டி, அடுத்த இதழில் பிரசுரித்தார். கல்கி சீதாரவி கடிதம் எழுதிக் கூப்பிட்டுத் தொடர்ந்து எழுத இடம் கொடுத்தார். கி. ராஜேந்திரன் கல்கிக்கே வந்துவிடும்படி சொன்னார்.

எட்டாண்டுக் காலம் கல்கியில் இதழியல் பயின்றேன். கி. ராஜேந்திரனின் அண்மையும் அரவணைப்பும் ஆசிரியத்துவமும் எனக்கு உலகைப் பார்க்கச் சொல்லிக்கொடுத்தன. சீதாரவி ஆசிரியர் ஆனபிறகு கல்கியில் நிறைய எழுத ஆரம்பித்தேன். அநேகமாக, நான் எழுதி மிச்சமிருக்கும் இடங்களில்தான் மற்றவர்கள் எழுதுவார்கள் என்னுமளவுக்கு எழுதிக்குவித்தேன். அங்கே துணை ஆசிரியராக இருந்த இளங்கோவன் என் பரபரப்பு சுபாவத்தை மட்டுப்படுத்தினார். அவரது ஆளுமையையும் பணி நேர்த்தியையும் பார்த்துப் பார்த்துத்தான் என்னை வடிவமைத்துக்கொண்டேன்.  என் இடம், இருப்பு, வெற்றிகள், ஏற்றங்கள் அனைத்துக்கும் காரணமாக யாரையாவது சுட்டிக்காட்டச் சொன்னால் அவரைத்தான் சொல்வேன்.

2000ம் ஆண்டுத் தொடக்கத்தில் குமுதம் சென்றேன். அதுநாள் வரை சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தவன், குமுதத்தில் அரசியல் எழுதக் காரணமாக இருந்தவர் ஆசிரியர் ராவ். பிறகு ரிப்போர்ட்டர் ஆரம்பிக்கப்பட்டபோது அதையே தொடர்ந்தேன். இடையில் குமுதம் ஜங்ஷன் என்னும் மிடில் மேகசினுக்கு எண்ணமும் வடிவமும் அளித்தேன். ஓராண்டுக்காலம் ஆசிரியராக இருந்து அந்தப் பத்திரிகையைக் கொண்டுவந்தேன். ‘குமுதம் இப்போதுதான் வயசுக்கு வந்திருக்கிறது’ என்று பேட்டி கொடுத்து அந்தப் பத்திரிகையை இழுத்து மூடச்செய்த பெருமை கமலஹாசனைச் சாரும்.

சில அரசியல் காரணங்களால் குமுதத்தில் என்னால் வெகுநாள் நீடிக்க முடியவில்லை. வெளியே வந்த என்னை ஆசிரியராக வைத்துத் தொடங்கப்பட்ட சபரி பப்ளிகேஷன்ஸை, அந்நிறுவனத்தாரால் தொடரமுடியவில்லை. பதிப்புத்துறைதான் இனி என்ற முடிவில் மட்டும் மாற்றமின்றி இருந்தேன்.

2003ம் ஆண்டு ராயர் காப்பி க்ளப் என்னும் இணைய மடல் குழுவில் அறிமுகமான பத்ரி சேஷாத்ரி, 2004 பிப்ரவரி முதல் தேதி கிழக்கு பதிப்பகத்தைத் தொடங்கினார். எனக்கு அது மிக முக்கியமான ஆண்டு. கிழக்கின் ஆசிரியராகப் பொறுப்பேற்றது, நீண்டநாள் காத்திருந்து குழந்தை பிறந்தது, பாரதீய பாஷா விருது கிடைத்தது, கெட்டிமேளம் தொடரின் கதை வசனகர்த்தாவாக முதல் முதலில் மீடியாவுக்குள் உத்தியோகபூர்வமாகக் காலெடுத்து வைத்தது என்று பல சம்பவங்கள். ஆகஸ்ட் 31, 2011 வரை நியூ ஹொரைசன் மீடியாவின் கிழக்கு உள்ளிட்ட அனைத்து தமிழ் பதிப்புகளுக்கும் ஆசிரியராக இருந்தேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கிழக்கு இக்காலக்கட்டத்தில் கொண்டுவந்தது. பல புதிய எழுத்தாளர்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தது. எட்டாண்டுக் காலம் கிழக்கில் பணியாற்றி,  செப்டெம்பர் 1, 2011 முதல் பணி விலகினேன்.

கிழக்கில் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே சில தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுத ஆரம்பித்தேன். கெட்டி மேளம் தொடரின்மூலம் இயக்குநர் விக்கிரமாதித்தன் அதனைத் தொடங்கிவைத்தார். கிழக்கிலிருந்து வெளியே வந்தபோது அதுவே முழுநேரப் பணியாகிப் போனது.

1997ல் எனக்குத் திருமணம் நடந்தது. என் மனைவி அதற்குமுன் நியூஸ் டுடே என்னும் நாளிதழில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் என்பதால் என் பணியின் கஷ்ட நஷ்டங்கள் அவருக்குப் புரிந்தது. எழுத்து, வாசிப்பு சார்ந்த அவரது ரசனை வேறு என்பதால் வீட்டில் இலக்கிய சர்ச்சைகளுக்கோ, வாத விவாதங்களுக்கோ இடமில்லை. பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பொழுதுகளில் படித்துக்கொண்டோ, எழுதிக்கொண்டோ, படம் பார்த்துக்கொண்டோ இருப்பேன். இது பற்றிய விமரிசனங்கள் இருந்தாலும் என் மனைவியும் குழந்தையும் என்னை முற்றிலும் புரிந்துகொண்டவர்கள். என் பெற்றோரைப் போலவே குடும்பப் பணிகளை என் தலையில் சுமத்தாதிருக்கிறார்கள்.

எனக்கு இளையராஜா பிடிக்கும். வீணை பிடிக்கும். வத்தக்குழம்பு பிடிக்கும். நீச்சல் பிடிக்கும். மதிய உறக்கம் பிடிக்கும். கடவுள் பிடிக்கும். ஜென் பிடிக்கும். மசாலா படங்களையும் கலைப்படங்களையும் அடுத்தடுத்துப் பார்க்கப் பிடிக்கும். ட்விட்டர் பிடிக்கும். மாவா பிடிக்கும். மரபுக்கவிதை பிடிக்கும். யோசித்தால் இன்னும் சில அகப்படக்கூடும். ஆர்வங்கள் அதிகம் என்றாலும் அக்கறை ஒன்றுதான். எழுத்து. தீர்ந்தது விஷயம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.