விஸ்வகர்மா மும்மூர்த்திகளையும் சந்தித்து ஆசிபெற்று ஸந்த்யாவைக் காப்பாற்ற வரமும் பெற்று அதனால் உண்டான மகிழ்ச்சியுடன் சூரிய மண்டலத்துக்கு வந்தார்.
அவர் திரும்பி வருவதற்கு முன்பே சூரியதேவனுக்கு மும்மூர்த்திகளின் விருப்பம் மனச்செய்தியாக வந்துவிட்டது. தன் கிரணங்கள் சிலவற்றை இழந்தாலாவது மும்மூர்த்திகளுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் அவன் மனம் வாக்கு செயல் அனைத்திலும் நிறைந்து இருந்தது.
அதனால் அவனே விஷ்வர்கமா திரும்ப வந்ததும் அவரை வரவேற்று அவர் காலில் விழுந்து வணங்கினான்.
விவரம் அறிந்ததும் ஸந்த்யா ஈன்ற பொழுதிலும் பெரிதாக மகிழ்ந்தாள். தாயும் தந்தையும் தன்னுடனே இருப்பார்கள் என்ற எண்ணமும் அவளுக்குப் பூரிப்பை அளித்தது.
காலத்தை வீணடிக்காமல் விஷ்வகர்மா இம்முறை காந்த சிகிச்சைக்குப் பதில் மற்றொரு புதிய முயற்சியில் சூரியக்கிரணங்களைக் குறைக்கத் திட்டமிட்டார்.
விஷ்வகர்மா தனது சமீபத்திய ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்த புதிய அறிவாற்றலை இதில் பயன்படுத்தத் திட்டமிட்டார். அதன்படி காந்த சிகிச்சை அதற்குப் பின் சாந்துக்குளியல் இரண்டும் தேவையில்லை. அதனால் சூரியதேவனுக்கு மயக்கத்தைத் தரத் தேவையில்லை. ஸந்த்யா இந்தச் சிகிச்சையைச் செய்ய இயலாது. அதுவும் நன்மைக்கே! போன தடவை நடைபெற்ற தவறுகள் இம்முறை நடக்காது. சூரியதேவனும் ஸந்த்யாவும் காதலில் ஈடுபட மாட்டார்கள். ராகுவும் குறுக்கே வரமாட்டான். தனது புதிய அறிவாற்றலைச் சூரியதேவனுக்கு விளக்கினால் அவனும் இதன் சிறப்பை அறிந்து மிகவும் ஒத்துழைப்பான் என்று உறுதியாக நம்பினார்.
” சூரியதேவரே, நீங்கள் முதன்முதலில் ஸந்த்யாவைத் தங்கப் பொய்கை அருகில் பார்த்தபோது இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்கினீர்கள். நான் உங்களை என் மாளிகைக்கு அழைத்து உங்கள் நிச்சயதார்த்தம் விழாவை நடத்தி பின்னர் சுபயோக சுபதினத்தில் திருமணம் நடத்தத் திட்டமிட்டிருந்தேன். அதற்குள் ஸந்த்யாவின் குறைபாடும் உங்கள் குறைபாடும் திருமணத்திற்குத் தடையாயிருக்கும் என்பதைக் கண்டேன். அதனால் காந்தச் சிகிச்சை மூலம் தங்கள் ஒளிக் கிரணங்களைச் சாணை பிடிக்கலாம் என்று ஸந்த்யா மூலம் தங்களுக்குத் தெரிவித்தேன். தாங்களும் பெருந்தன்மையுடன் அந்தச் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டீர்கள். ஸந்த்யா அந்த சிகித்சையைச் செய்து முடித்த பிறகு உங்கள் காதல் எல்லை மீறியது. அதன் விளைவு சந்த்யா இந்த மூன்று குழந்தைகலையும் கருத்தரித்தாள்.”
சூரியதேவனால் அதற்குமேல் பொறுமையாக இருக்க முடியவில்லை.
” அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது, விஷ்வகர்மா அவர்களே! நான் காதல் மயக்கத்திலிருந்தபோது ராகு என்னை விழுங்கிச் சக்தி பெற்றுக் கொண்டதையும் என் நெருப்பு வலையை மீறி அவன் தப்பிச் சென்றதையும் என்னால் என்றைக்கும் மன்னிக்கவே முடியாது. நானும் ஸந்த்யாவும் காந்தருவ மணம் புரிந்து கொண்டோம், இனிப் பிரிந்திருக்க முடியாது என்றதும் தங்கள் சிற்பி மூளை வித்தியாசமாகச் செயல் படத் துவங்கியது. ஸந்த்யா என் மூலம் கருத்தரித்து விட்டாள் அதுவும் மூன்று குழந்தைகளை என்று அறிந்ததும் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். பெருமைப்பட்டிருக்க வேண்டும். தாத்தா ஆகப் போகிறோம் என்று மகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டும். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட நாளில் நாங்கள் இருவரும் கலந்தால்தான் நீங்கள் எதிர்பார்க்கிற மகாபிரும்மருத்ரன் வருவான் என்ற ஆசையில் நீங்கள் என்னென்னவெல்லாம் நாடகம் ஆடினீர்கள்? என்னை மயக்கத்தில் ஆழ்த்தி என்னிடமே அனுமதி வாங்கி என் குழந்தைகளைக் கொல்லத் துணிந்தீர்கள். அதுமட்டுமல்லாமல் ஸந்த்யாவை உங்கள் இல்லத்திலேயே இருத்தி அவளுக்குப் பதிலாகப் பதுமை ஒன்றையும் அனுப்புவதாகக் கூறி என் விருப்பத்திற்கு மாறாக என்னை அனுப்பியும் வைத்தீர்கள்! என் ஜென்ம விரோதி ராகு குறுக்கிட்டதில் உண்மை வெளிவந்து ஸந்த்யா என்னிடம் ஓடி வந்து உண்மை அனைத்தையும் கூறினாள். எனக்கு அன்றைக்கு வந்த கோபத்தில் தேவசிற்பி என்று கூட பார்க்காமல் உங்களை அன்றே அழித்திருப்பேன். ஸந்த்யாவைப் பெற்ற தந்தை என்பதால் என் கோபத்தை நானே விழுங்கிக் கொண்டேன்” .
விஷ்வகர்மா கண்களிலும் ஸந்த்யாவின் தாயின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது.
ஸந்த்யா தான் நிலைமைப் புரிந்து கொண்டு பேச்சைத் திசை திருப்பினாள்.
” அழகுக் குழந்தைகள் மனு, எமன், எமி பிறந்திருக்கும் குதூகல நாளில் ஏன் பழைய வேண்டாத நிகழ்வுகளைப் பற்றிப் பேசுகிறீர்கள்? தந்தையே ! இப்போது மும்மூர்த்திகள் வேண்டிக் கொண்டபடி இவரிடமிருந்து ஆயுதங்கள் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்! அந்த முயற்சியில் எங்களுக்கும் நன்மை கிடைக்கும்” என்று வேண்டிக்கொண்டாள்.
சூரியதேவனும் நிலைமையைப் புரிந்துகொண்டு ,” சரியாகச் சொன்னாய் ஸந்த்யா! நேற்றைய நாள் முடிந்த நாள். தினமும் நான் புதியதாய் உதிக்கின்றவன்.நடக்கப் போவதைப் பற்றிப் பேசுவோம். விஷ்வகர்மா அவர்களே! எப்பொழுது துவக்கப் போகிறீர்கள் உங்கள் காந்த சிகித்சையை? ” என்று வினவினான்.
சூரியதேவரே உங்கள் கோபம் நியாயமானது தான். என் தவற்றை மன்னிக்கும்படி பலமுறை வேண்டியும் நீங்கள் செவி சாய்க்கவில்லை. இன்று பிரும்மர் அருளினால் உங்கள் மன்னிப்பைப் பெறுவதற்குத் தகுதி உடையவனாகி விட்டேன். அது மட்டுமல்ல. சற்று முன்வரை நான் காந்த சிகித்சை அளிப்பதைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் தற்போது அதைவிடச் சிறந்த முறை ஒன்று என் சிந்தனையில் உருவாகியிருக்கிறது. அதைப் பற்றி உங்களுக்கு விளக்கிய பிறகு தங்கள் அனுமதியுடன் அதனைப் பயன்படுத்த விழைகிறேன்” என்ற பீடிகையில் ஆரம்பித்தார் விஷ்வகர்மா.
“சொல்லுங்கள்! அனைவரும் கேட்கட்டும்” என்று கூறினான் சூரியதேவன்.
” சூரியதேவரே! கொஞம் விளக்கமாகச் சொல்ல அனுமதியை மீண்டும் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் ஒளி வெப்பம் எல்லாமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. அதே சமயத்தில் உங்கள் ஒளி துகள்களாலும் ஆனது. அதுமட்டுமல்லாமல் அதற்கு அலைபோல பரவும் குணமும் உண்டு. அதை அலை நீளம் என்ற அளவையால் அளக்க முடியும்.
உங்கள் வெள்ளை ஒளி உண்மையில் ஏழு நிறங்களால் ஆனது. அதை உங்கள் தேர்ச்சக்கரத்தில் உள்ள ஏழு குதிரைகளும் நிர்ணயிக்கின்றன. உங்கள் ஒளி, மழைக்காலங்களில் நீர்த்திவலைகளில் புகுந்து வரும் பொழுது அந்த ஏழு வண்ணங்களும் வானவில் வண்ணங்களாக உரு மாறுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும்.
அந்த வெள்ளை நிற ஒளி பல நிறங்களாகப் பிரிவதை நிறமாலை என்கின்றோம். ஒளி ஒரு சிறிய துளை வழியாகச் செல்லும்போது ஒளி விலகுதல் நடைபெறும். அதாவது ஒளியின் கற்றை விரிகின்றது.
முப்பட்டகத்தின் வழியாக வெண் கதிர் செல்லும் போது ஏழு நிறங்களாகப் பிரியும்
ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது.
இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.
படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை வரி. இதில் ஆற்றல் இழப்பு இல்லை.
முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள வரிகள். இதில் ஆற்றல் இழப்பு உண்டு.
முதன்மை வரியைவிடக் குறைவான அலைநீளமுள்ள எதிர் வரிகள் இதில் ஆற்றல் அதிகரிக்கும்.
சீரொளி என்ற ஒரு ஒளிவடிவமும் உண்டு. அதன் ஒளிக்கற்றையில் உள்ள ஒளியலைகள் யாவும் ஒரே அலைநீளம் கொண்டதாகவும், அவற்றின் அலைமுகங்கள் யாவும் ஒருசேர ஒத்தியங்கும் ஒரே அலைமுகம் கொண்டவையாகவும் இருக்கும்.
சீரொளி சில குறிப்பிட்ட சிறப்பான பண்புகள் கொண்ட ஒளி. பொதுவாக அகல்விளக்கு , கதிரவன் முதலானவற்றிலிருந்து வரும் ஒளியானது பல அலைநீளங்கள் கொண்ட ஒளிக்கதிர்களைக் கொண்டிருக்கும். அவற்றுள் ஒரே அலைநீளம் கொண்ட ஒளிக்கதிர்களும்கூட ஒன்றுக்கொன்று அலைமுகங்கள் மாறுபட்டும் முரண்பட்டும் காணப்படும். அதாவது ஓர் ஒளியலையின் அலைமுகம் ஏறுமுகமாக இருக்கும் போது, அதே அலைநீளம் கொண்டிருக்கும் வேறு ஒளியலைகள் இருந்தாலும் அவற்றின் அலைமுகம் இறங்குமுகமாக இருக்கக்கூடும். ஆனால் சீரொளி உள்ள ஒளியலைகள் யாவும் ஒரே அலைநீளம் கொண்டதாகவும், அவற்றின் அலைமுகங்கள் யாவும் ஒருசேர ஒத்தியங்கும் ஒரே அலைமுகம் கொண்டவையாகவும் இருக்கும். சீரொளியின் பயன்பாடுகள் பலவும் இப்பண்புகளை அடிப்படையாகக் கொண்டவை.
தடிப்பான இரும்பை வெட்டி அறுப்பது ஒட்டவைப்பது வரை பற்பல பயன்பாடுகளுக்குச் சீரொளி பயன்படுகின்றது.ம் செய்கின்றன.
மேலும் சொல்லப்போனவரை ஸந்த்யா தடுத்து நிறுத்தினாள். “தந்தையே, தங்கள் சிற்ப மாணாக்கர்களுக்குப் போதிப்பதை இங்கே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் எப்படி இவருடைய கதிர் வெப்பத்தைக் குறைக்கப்போகிறீர்கள் , மும்மூர்த்திகளுக்கு எப்படி ஆயுதம் செய்யப்போகிறீர்கள் என்பதை மட்டும் சொல்லுங்களேன்” என்றாள்.
சரி, சுருக்கமாகவே சொல்கிறேன். சூரியனை நான் தயாரித்திருக்கும் ஓர் ஊடகத்தின் வழியே செல்லும்படி வேண்டிக்கொள்ளப்போகிறேன். அவர் அப்படி வரும் போது ஆற்றல் அதிகரிக்கும் எதிர் வரிகளைக் கொண்டு ஆயுதங்கள் செய்யப்போகிறேன். அந்த ஆயுதங்களின் இணைப்புகளை இணைக்க இவரது ஒளியில் வரும் சீரொளியைப் பயன்படுத்தப்போகிறேன்.
அந்த ஆற்றல் மிக்க ஓளி விலகியதும் சூரியதேவனின் ஒளியும் வெப்பமும் மங்கும். அதன் பிறகு அவருடைய கிரணங்களால் ஸந்த்யாவிற்கு எந்தவித பாதகமும் இருக்காது”
” மிகவும் மகிழ்ச்சி தந்தையே! இந்தப் பாதுகாப்பு நிரந்தரமாக இருக்குமா அல்லது காந்த சிகிச்சை மாதிரி சில காலம் மட்டும் இருக்குமா? ” என்று வினவினாள் ஸந்த்யா.
” மகளே! தான் இருக்கின்ற பொருட்களைக் கொண்டு அவற்றில் என் அறிவைப் பயன்படுத்திச் சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டிருக்கிறேன். நான் தொழிலாளி தான். மும்மூர்த்திகள் மாதிரி படைப்பாளி அல்ல. இந்த ஊடகத்தை உங்கள் அரண்மனை வாயிலில் வைக்கப்போகிறேன். அதனால் சூரியதேவன் எப்பொழுதெல்லாம் அரண்மனைக்குள் வருகிறாரோ அப்போது அவர் மங்கிய வெப்பத்துடன் கூடியவராகத் தான் உள்ளே வருவார். ஆனால் இந்த ஊடகத்திற்கு எதாவது பாதகம் விளையாதவாறு காக்கவேண்டும். ஊடகத்தில் விரிசல் எதாவது ஏற்பட்டால் பின்னர் அது முழுவதுமாகச் செயல் இழந்துவிடும்”
” ஊடகத்தில் விரிசல் வந்தால் குடும்பத்தில் விரிசல் வருமே? ஊடகத்தை எப்படிப் பாதுகாப்பது?” என்று கவலையுடன் வினவினாள் சந்த்யாவின் தாய்.
இந்த ஊடகத்தை வேறு எந்தப் பொருளும் பாதிக்கமுடியாது. ஆனால் நான் தயாரிக்கப்போகும் இரு ஆயுதங்கள் இதன் மீது பட்டால் ஊடகம் ஓட்டையாகவிடும். “
“அப்படி என்ன ஆயுதங்களை நீங்கள் படைக்கப்போகிறீர்கள்? ” என்று சூரியதேவன் வினவினான்.
” சிவபெருமானுக்குத் திரிசூலமும், விஷ்ணுவிற்குச் சுதர்சனச் சக்கரமும்” என்று பதில் உரைத்தார் விஷ்வகர்மா.
” மும்மூர்த்திகளால் எனக்கு என்றென்றும் துயரம் வராது. இதுபோதும் எங்களுக்கு” என்று சூரியதேவன் மகிழ்ச்சியுடன் கூறினான்.
ஸந்த்யாவின் அன்னை கொண்ட கவலை நியாயமானது என்பதைக் காலம் சொல்லியது.
(தொடரும்)
சாலமன் பாப்பையா தன் தீர்ப்பில் என்ன சொல்லப்போகிறாரோ என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது யாரும் எதிர்பார்க்காத ஒன்றை அவர் கூறினார்.
மூன்று அணியினரும் சிறப்பாகவே பேசினாங்க!
முதலில் சொன்ன மாதிரி எனக்கு இங்கே தீர்ப்பு சொல்லக் கொஞ்சம் தயக்கம். காரணம் இது எமபுரிப்பட்டணம் என்பதால் அல்ல . எமன் எதிரே அமர்ந்திருக்கிறார் என்பதனால் அல்ல.
எல்லாவிதமான பேச்சுக்களையும் இடம் பொருள் ஏவல் பார்த்துப் பேசவேண்டும் என்பது தமிழ் மூதுரை. அது என்ன இடம் பொருள் ஏவல்? எந்த இடத்தில் எதைப்பேச வேண்டும் என்று தெரிந்து பேசவேண்டும். நாம் பேசுவது எந்த அர்த்தத்தில் புரிந்து கொள்வார்கள் என்று புரிந்துகொண்டு பேசவேண்டும். ஏவல் -அதாவது எந்த அளவிற்குக் குரலை உயர்த்திப் பேசவேண்டும் என்பதை உணர்ந்து பேசவேண்டும். எதை எந்தப் பொருளில் எந்த அளவில் தெரிந்து புரிந்து உணர்ந்து பேசவேண்டும் என்பது இடம் பொருள் ஏவல் என்றாகிவிட்டது. . மனிதனாகப் பிறந்த அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய கட்டாயப் பாடம் இந்த இடம் பொருள் ஏவல்.
நானும் மனிதன் தான். தமிழும் தெரியாமல் படித்துவிட்டவன். அதனால் இந்த இடம் பொருள் ஏவல் என்ற பொது மறையை மதிக்கின்றவன். அதனை முக்காலே மூணு வீசம் பயன்படுத்துகிறேன். ஏதோ சொச்சம் வைக்கிறேனே ஏன் என்று கேட்கிறீர்களா? பட்டி மன்றத்திற்கோ வழக்காடு மன்றத்திற்கோ விவாதமேடைக்கோ தலைமை தாங்கும்போது இந்த இடம் பொருள் ஏவலை நான் பொருட்படுத்துவதில்லை. இந்தப் புனிதமான தலைமைப் பீடம் பொதுமறையிலிருந்து விலக்கு அளிக்கிறது. இதை சிறப்பு முறை என்றும் நான் சொல்வதுண்டு.பொதுத்தமிழ் சிறப்புத்தமிழ் என்று தமிழ்ப்பாடத்தில் வருவதுபோல.
அதன்படி, எந்த இடமாக இருந்தாலும் எனது தீர்ப்பை ஐயம் திரிபர எடுத்துச் சொல்வதே என் வழக்கம். எந்தப் பொருள் சரியானது என்று எனது துலாக்கோல் கருதுகிறதோ அதைத் தெளிவாகச் சொல்வது என் மரபு. குரலை ஏற்றி இறக்கிப் பேசவேண்டிய வசியமில்லை. ஆனால் கணீரென்று ஆணித்தருணமாகச் சொல்லவேண்டியது என் கடமை.
வழக்கம் மரபு கடமை என்ற மூன்று சிறப்புக்களையும் ஒதுக்கிவிட்டு பொதுமறையின் அடைப்படையில் சற்று வித்தியாசமாகத் தீர்ப்புச் சொல்ல விழைகிறேன்.
அதற்குக் காரணம் நான் இந்த விவாதமேடை ஆரம்பத்தில் சொன்ன நிகழ்வுதான். மதுரையில் நடைபெற்ற விவாதம். தமிழ்த் திரைப்படங்களில் சிறந்து விளங்குவது “சண்டையா? சோகமா? காதலா? ” என்ற விவாதம். அந்த விவாதமேடைக்கு எம் ஜி ஆர் சிவாஜி ஜெமினி மூன்றுபேரும் வந்திருந்தார்கள் என்று கூறினேன். இவர்கள் மூன்று பேரையும் வைத்துக்கொண்டு நாம் எதாவது தீப்புக் கூறினால் ஏதாவது ஏடாகூடம் நடைபெறுமோ என்ற பயம். அந்த பயம் எனக்கு என்ன ஆகுமோ என்ற பயம் அல்ல. அதனால் கூட்டத்தில்குழப்பம் வந்தால் அதனைக் கட்டுப்படுத்த முடியவேண்டுமே என்கிற கவலையினால் ஏற்பட்ட பயம். நாம தான் இடம் பொருள் ஏவல் பார்க்கிற ஆசாமி இல்லையே ! தைரியமாக தமிழ்த் திரைப்படங்களில் சிறந்து விளங்குவது காதல்தான் என்று முடித்தேன். அந்த இடத்தில் அப்படியே ஒரு நில நடுக்கம் எற்பட்டதுபோலத் குலுங்கியது. எம் ஜி ஆர் சிவாஜி இருவர் ரசிகர்களும் கொலைவெறியுடன் மேடைக்கு வந்தார்கள்.
அப்போ அங்கே ஒரு அதிசயம் நடந்ததுனால நாங்க எல்லோரும் தெய்வாதீனமா தப்பிச்சோமுன்னு சொன்னேனில்ல? அது என்ன தெரியுமா? அந்தக்கூட்டத்துக்குக் கவிஞர் கண்ணதாசனும் வந்திருக்கிறார். யாருக்கும் தெரியாம ஒருமூலையில உட்கார்ந்துகொண்டு நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். தகறாறு வருவதைப் பார்த்தவுடன் அவர் உடனே மேடைக்குத் தாவி வந்தார். மைக்கைக் கையில் எடுத்தார். பேச ஆரம்பித்தார்.
” மதுரை மகா ஜனங்களே ! இந்த ஊர்ல ஒரு பாண்டியன் தப்பா தீர்ப்பு சொன்னதுக்காக ஊரையே எரிச்சா ஒரு கண்ணகி. அப்படிப்பட்ட ஊர்ல இவர் தப்பா தீர்ப்பு சொன்னா நாம சும்மா விடுவோமா?
என்ன இது, கவிஞர் எரியிற கொள்ளியில எண்ணையை ஊத்துறாரேன்னு பயந்தேன்.
” ஆனா பாண்டியன் மாதிரி நாமளும் அவசரமா தீர்ப்பு சொல்லலாமா? கொஞ்சம் பேசிப்பார்ப்போம். எனக்கு மதுரை ஜனங்களைப் பத்தி நல்லாவே தெரியும். இந்தத் தலைப்பைப் பத்தியும் தெரியும். தமிழும் கொஞ்சம் தெரியும். அதனால அமைதியா உட்காருங்க! நாம் இந்தத் தீர்ப்பு சரியா தவறா அப்படீன்னு ஒரு அப்பீலுக்குப் போவோம். அப்பிலுக்கு யார் தீர்ப்பு சொல்வது?
கூட்டம் “கண்ணதாசன் கண்ணதாசன்” அப்படின்னு கத்தியது. மேடைக்கு ஆத்திரத்தோடு வந்தவுங்க அமைதியா அவங்க இடத்தில் உட்காருவதும் தெரிந்தது.
“நானா? மன்னிக்கணும் . இதுக்குத் தீர்ப்புக் கூறத் தகுதியானவர்கள் இவர்கள் மூவரும்தான். திரையுலக ஜாம்பவான்கள் இந்த மூன்று பேரையும் மேடைக்கு அழைக்கிறேன். எம் ஜி ஆர் அவர்களே, சிவாஜி அவர்களே, பிரதர் ஜெமினி சற்று மேடைக்கு வந்து இந்தத் தீர்ப்பைப்பற்றி உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டுப் போங்கள்” என்று அழைத்தார்.
மூன்று பேரும் சிரித்துக்கொண்டே மேடைக்கு வந்தார்கள்.
இந்த அப்பிலுக்கு நீங்க தான் தீர்ப்பு சொல்லணும் . பேசினவங்க பேச்சை வைச்சு இந்த நீதிபதி தமிழ்த் திரைப்படங்களில் சிறந்து விளங்குவது சண்டையில்லை, சோகமுமில்லை காதல்தான் அப்படின்னு தீர்ப்பு சொல்லிட்டார்.
மக்கள் எல்லாரும் கோபத்தில் இருக்காங்க! நீங்க சொல்லுங்க ? நம்ம படங்களில எது சிறந்து விளங்குது ? சண்டையா? சோகமா? காதலா? பிரதர் நீங்க சொல்லுங்க? என்று ஜெமினியைக் கேட்டார்.
“காதல்தான் . நான் வேற என்ன சொல்வேன்” என்றார்
சிவாஜி, நீங்கள்?
காதல் தான்
ஆண்டவனே ! ( எம் ஜி ஆரும் கண்ணதாசனும் ஒருத்தரை ஒருத்தர் ஆண்டவனேன்னுதான் கூப்பிடுவாங்களாம்) நீங்க என்ன சொல்ரீங்க?
“காதல்தான் “
“அப்பறம் என்ன? என் ஓட்டும் அதுக்குத்தான். எல்லரும் வீட்டுக்குப் போய் காதல் செய்யுங்கள்” என்று சொல்லி நிகழ்ச்சியை முடிக்க மக்கள் அனைவரும் இவர்கள் நால்வரையும் மேடையில் பார்த்த மகிழ்ச்சியோடு கலைந்து போனார்கள்.
இதை ஏன் இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் என்றால் இப்போது நான் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால் இங்கு வந்திருக்கும் மும்மூர்த்திகளான பிரும்மா, விஷ்ணு , சிவன் ஆகிய மூவரையும் மேடைக்கு அழைத்த அவர்களுடைய கருத்தினைக் கேட்க விரும்புகிறேன். அவர்கள் மூவரையும் நன்கு அறிந்த நாரதர் அவர்கள் கண்ணதாசன் போல நெறியாளராக இருந்து மும்மூர்த்திகளின் கருத்தை அறியும்படி வேண்டிக்கொள்கிறேன்” என்றார் சாலமன் பாப்பையா.
இதைக் கேட்டுவிட்டுத்தான் ” இது நடக்க முடியாத செயல்” என்று நாரதர் சத்தமாகக் கூறினார்.
(தொடரும்)