அன்னநடை யென்பார் மின்னலிடை யென்பார்
செந்நுதல் கருங்கூந்தல் கயல்விழி யென்பார்
கன்னமோ தித்திக்கும் மாம்பழக் கதுப்பென்பார்
மனங்கவர் கொவ்வைப் பழமே யதரமென்பார்!
நாவென்பார் இன்சுவை யளிக்கும் என்பார்
கவர்கின்ற பற்களோ முத்துக்கள் என்பார்
பூவொத்த மென்மையுடை மெய்தா னென்பார்
செவ்விய கதுப்புக்கள் பெண்ணழகே யென்பார்!
ஆசையைத் தூண்டிவிடும் வாய்தா னென்பார்
பேச்சின்றி மயக்கிவிடும் மலரிதழ் என்பார்
இச்சைதனை யுருவாக்கும் மென்துடை யென்பார்
அச்சமொடு நடைபயிலும் தளிர்பாத மென்பார்!
தேன்குரலே பெண்குரலாம் நாணமே முகவழகாம்
மன்னருமே ஆடிவிடும் மருள்கின்ற கண்வீச்சாம்
தன்னழகால் வரும்மமதை எழில்தனையே கூட்டிடுமாம்
இன்னெழில் வதனமுமே கெஞ்சலொடு கொஞ்சிடுமாம்!
பண்பாடும் புலவருமே இவையெல்லாம் கூறியபின்
பெண்ணிற்கு கற்புமிக மிகமிகவே வேண்டும்
ஆண்களுமே பிறபெண்ணை சோதரியாய் கொளவேண்டும்
புண்ணாக்கும் வார்த்தைகளை சொல்வதுதான் சரியாமோ!
பருவத்தை ஏன்கொடுத்தான் பெண்ணெழிலை ஏன்படைத்தான்
உருவத்தை படமாக்கும் விழிதனையே ஏனளித்தான்
மருட்டிடும் சலனமுடை மனந்தனையே ஏன்கொடுத்தான்
வெருட்டுகின்ற ஆசைதனை ஏனிறைவன் அளித்திட்டான்!