லண்டன் ‘கண்’ணும், மகாபலிபுரமும்!
டூரிஸம் (Tourism) என்பதற்கு – ஓரிடத்திற்கு விடுமுறைப் பயணம் / சுற்றுலாச் செல்வோருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து தரும் மற்றும் சேவைகள் வழங்கும் வாணிகத் தொழில்; சுற்றுலாத் தொழில் – என்று விளக்கம் தருகிறது கூகிள் சாமி. சமீபத்தில் பதினோரு நாட்கள் லண்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைத் தரிசித்து விட்டு வந்த (சில இடங்களில் வெறும் கோபுர தரிசனம் மட்டும்!) போது, மேலை நாடுகளில் சுற்றுலாவுக்கும், அதற்கு வரும் வேற்று நாட்டவர்களுக்கும் அங்கு செய்து தரப்படும் வசதிகளையும், வாய்ப்புகளையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. இவற்றை விட இன்னும் சிறப்பான, அழகிய சுற்றுலாத் தலங்கள் நம் ஊரில் இருப்பதே பலருக்குத் தெரியாது – இவற்றை நல்ல முறையில் பராமரித்து, வசதிகளையும், வாய்ப்புகளையும் உயர்த்தி, அரசின் வருவாயைப் பல மடங்கு பெருக்கலாம்!
ஆகஸ்ட் 18 காலை ஏழு மணிக்கு லண்டன் வெம்ப்ளேயின் ‘ibis’ ஓட்டலில் காலை உணவு முடித்து – பிரட், பன், கேக், பழங்கள், கார்ன் ஃப்லேக்ஸ், பால், காபி – எங்கள் பிரத்தியேகமான வால்வோ பேருந்தில் கிளம்பினோம். அன்று லண்டன் லோக்கல் டூர். 27 வருடங்களுக்குப் பிறகு நான் பார்க்கும் லண்டன், அதிகம் மாறவில்லை – சாலையோர ‘பப்’களும், புகை பிடிக்கும் தொப்பிக்காரர்களும், போர்டு எழுதி வைத்து, கெளரவமாகப் பிச்சை கேட்பவர்களும் மாற விரும்பவில்லை!
லேசான தூறல்களுடன் நீஸ்டனில் உள்ள மிகப் பெரிய ‘சுவாமிநாராயணா’ கோவிலுக்குச் சென்றோம். சன்னதிகளும், தியான மண்டபங்களும், கலை நயமிக்கத் தூண்களும் இத்தாலியன் மார்பிளில் இழைத்திருக்கிறார்கள் – அங்கிருந்த செக்யூரிடிகளும், போட்டோ, வீடியோ தடைகளும் தேவைதான் என்று நினைத்தேன்.
அங்கிருந்து, உலகப் பிரமுகர்கள் எல்லாம் மெழுகாக நிற்கும் Madame Tussaud – மெழுகு மியூசியம் சென்றோம். உள்ளுக்குள்ளேயே குட்டி கார்கள், ரயில் வண்டி போல் இணைக்கப்பட்ட ஊர்தியில், இங்கிலாந்தின் சரித்திர நிகழ்வுகளைக் கண்டவாறே – பயமுறுத்தும் லைட்டிங் மற்றும் இசை கூடவே வருகிறது! – வந்தோம். மோடிக்கு வணக்கம், மர்லின் மன்றோவுடன் போட்டோ என திரும்பிய இடமெல்லாம் வி ஐ பி க்கள். தெரியாமல் போட்டோ எடுத்துக்கொண்டு நின்ற பெண்ணைக் கடந்து விட, திரும்பி ‘சாரி’ என்றேன் – திரும்பாமல் காமிராவினுள் பார்த்தவாறு நின்றிருந்தது அந்த உடையுடுத்திய மெழுகு பொம்மை!
மதியம் லண்டன் சரவணா பவனில் சாப்பிட்டு, நேர்த்திக் கடன் செலுத்தினோம்! மசால்தோசையுடன் ஸ்பூன் ஃபோர்க் சகிதம் சண்டையிட்டுக்கொண்டிருந்த வெள்ளைக் காரிக்கு நாக்கு நீளம்!
வெஸ்ட்மின்ஸ்டர் சிடியில் பக்கிங்ஹாம் அரண்மனை, தேம்ஸ் நதி மேல் கட்டப்பட்டுள்ள டவர் மற்றும் லண்டன் பிரிட்ஜ் (இந்தப் பாலங்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தி ஒன்று இருக்கிறது – பிறக் ஒரு வியாசத்தில் பார்ப்போம்!), ட்ரஃபால்கர் ஸ்கொயர், பிக்கடில்லி சர்கஸ், செயிண்ட் பால்ஸ் சர்ச், கிரீன் பார்க் எல்லாவற்றையும் ‘கோபுர தரிசனமாய்’க் கண்டோம்.
“லண்டன் ஐ” (LONDON EYE), உண்மையிலேயே லண்டன் முழுவதையும் பார்க்கும் கண்தான்! நம்ம ஊர் ஜயண்ட் வீல் (பொருட்காட்சிகளில் வண்ண வண்ணக் குழல் விளக்குகளுடன் சுற்றுமே) மாதிரி – ஆனால் அதைப்போல் பல மடங்கு உயரமானது! ஐரோப்பாவின் மிக உயரமான ஜயண்ட் வீல் – 135 மீட்டர் உயரம். 1999 ல் கட்டப்பட்டது. 32 கண்ணாடிக் கூண்டுகள் – ஒரு முழு சுற்றுக்கு, ஆகும் நேரம் 30 நிமிடங்கள் – மெதுவாகச் சுற்றிக்கொண்டே இருக்க, அப்படியே ஏறிக் கொள்வதும், இறங்குவதும் எளிது! மேலே செல்லச் செல்ல, தேம்ஸ் நதி, ஓடை போல் இளைக்க, குறுக்கேயுள்ள பாலங்கள், கோடுகளாய்த் தெரிய, வாகனங்கள் சிறு பூச்சிகளாய் ஊர்ந்து செல்ல, மனிதர்கள் புள்ளிகளாய் நகர்ந்து கொண்டிருந்தனர். கூண்டுக்குள் இருந்து, கீழே ‘பென்’ என்னும் மணிக்கூண்டு, சர்ச், வானுயரக் கட்டிடங்கள், பாலங்கள் எல்லாம் மினியேசர் வடிவில் சிறுத்து, நம் வீட்டு கொலுவின் பார்க் போலத் தெரிந்தன! 25 கி மீ சுற்றளவுக்குப் பார்க்கமுடிகிறது. இதன் மறு பெயர் “கொக்ககோலா லண்டன் ஐ”! வருடத்துக்கு 3.75 மில்லியன் உல்லாசப் பயணிகள் இந்தக் கண்ணைக் கண்டு களிப்பதாக ஒரு செய்தி கூறுகிறது!
சரி, ஒரு நாள் லண்டன் டூருக்குப் போதாது. ஆனால் ஒரு நாளில் பார்த்த இடங்களுக்கும், கேட்ட செய்திகளுக்கும் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் – டூரிஸம் டெவலப்மென்ட் – நம்மை வியப்பிலாழ்த்துகிறது. எதிலும் ஓர் ஒழுங்கு, நேர நிர்ணயம், பாதுகாப்பு, சின்ன சின்ன விபரங்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் – நம்மால் ஏன் முடிவதில்லை என்ற ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை!
சமீபத்தில் பிரதமர் மோடியும், சீனாவின் பிரசிடெண்ட் Xi Jinping அவர்களும் மகாபலிபுரம் கடற்கரை குடைவரைக் கோயில்களைப் பார்த்துப் பின் இரு நாடுகள் இடையே நல்லிணக்கம், வணிகம் போன்ற பல விஷயங்களைப் பற்றிப் பேசினர். டெரரிஸம் பற்றிப் பேசியவர்கள், டூரிஸம் பற்றிப் பேசியிருப்பார்களா தெரியவில்லை!
அதுவல்ல இப்போது நான் சொல்ல வந்தது – சாதாரண நாட்களில் நாம் பார்க்கும் மகாபலிபுரத்துக்கும், இந்த வாரம் நாம் பார்த்த மகாபலிபுரத்துக்கும் இருந்த வித்தியாசம் – நம்மாலும் முடியும்தானே? டூரிஸம் செழிக்க, நம் ஊரையும் எல்லோரும் வியக்கும்படி பராமரிக்க முடியும்தானே? ஏன் செய்வதில்லை?
மேலை நாடுகளுக்கு இணையான, அதை விட மேன்மையான சுற்றுலாத் தலங்கள் நம் இந்தியாவிலும் உண்டு – சுற்றுலாப் பயணிகளுக்கேற்றவாறு சுவாரஸ்யமாக மாற்றவோ, பராமரிக்கவோ நமக்குத் தெரிய வில்லை அல்லது மனமில்லை! வருத்தம்தான் மிஞ்சுகிறது.
பல திரைப்படங்கள் எடுத்த, எடுக்கின்ற ‘யூனிவர்சல் ஸ்டூடியோஸ்’ சிறப்பாகச் சுற்றுலாப் பயணிகளுக்காக, சுவாரஸ்யமான இடமாக இருக்கிறது.
நம்ம ஊர் கலை வளர்த்த ஸ்டூடியோக்கள், அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உஷ்ணக் காற்றை உமிழ்ந்த வண்ணம் நாம் கடந்து வந்த கலாச்சாரப் பாரம்பரியங்களை மறந்து விட்டன.