கீழடி

Image

தஞ்சாவூரில் சிந்தனை மேடை என்ற அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்று ‘கீழடி – தமிழர் வாழ்வும் வரலாறும்’ என்ற தலைப்பில் பேசினார் அமர்நாத் ராமகிருஷ்ணா.

அமர்நாத் ராமகிருஷ்ணா பேசுகையில், “கடந்த செப்டம்பர் மாதம் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியப் பழங்குடிகள் என்றும், கீழடியின் வயது கி.மு 600 என்றும் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளிவந்தன. கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை. இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும். அவை இன்னும் பின்னோக்கிச் செல்லும். அதற்குக் கீழடியில் முழுமையான அகழாய்வு செய்யப்பட வேண்டும். கீழடி இன்னும் பல பொக்கிஷங்களை கொண்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்கள் உள்ளன. அவற்றையும் அகழாய்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விரிந்த அகழாய்வு இதுவரை நடைபெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், ஆதிச்சநல்லூர் போன்ற மூன்று இடங்களில் தான் ஓரளவுக்குப் பெரிய அளவில் அகழாய்வுகள் செய்யப்பட்டன. மதுரை ஒரு பழைமையான நகரம். சங்க காலத்தில் தலைநகரமாக இருந்துள்ளது. வைகை நதிக்கரையின் இரண்டு புறமும் எட்டு கிலோ மீட்டர் பரப்பளவில் முழுமையாகச் செய்யப்பட்ட ஆய்வில் 293 இடங்களில் பழைமையான தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன. தமிழ்நாட்டில் மக்கள் வாழ்ந்த பகுதியே இல்லை எனக் கூறப்பட்டு வந்தது. அதைக் கண்டுபிடிக்கும் நோக்கத்திலேயே இந்த ஆய்வைச் செய்தோம். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை கண்டுபிடித்தோம்.

அந்த நூறு இடங்களில் ஒரு இடம்தான் கீழடி. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தென்னை மரங்கள்தான் கீழடி மேட்டுப் பகுதியைக் காப்பாற்றியுள்ளன. இல்லை என்றால் அந்த இடம் பிளாட்டாக மாறியிருக்கும். 110 ஏக்கர் கொண்ட பரப்பளவில் 5 கிலோ மீட்டர் அளவிற்கே அகழாய்வு செய்யப்படுகிறது.

இதையும் படிக்கலாம்.. கீழடி ஸ்பெஷல்: கீழடி-முசிறிப்பட்டிணம் தொடர்புகள்!

இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால்தான் முழுமையான வரலாறு தெரியவரும். போதிய கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு செய்யவேண்டும். குறைந்தது பத்து ஆண்டுகளாவது அகழாய்வு செய்யவேண்டும். ஹரப்பா, மொகஞ்சதாரோ பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அங்கெல்லாம் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் அகழாய்வு நடைபெற்றன. அதுபோல் கீழடியிலும் ஆய்வுசெய்யவேண்டும்.

கீழடியில்தான் அதிக அளவில் செங்கல் கட்டடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இதை நகர நாகரிகம் இல்லை எனக் கூற முடியாது. இந்தக் கூற்றை மாற்றியது இரண்டாம் கட்ட அகழாய்வுதான். நகர மக்கள்தான் அதிநவீன வாழ்க்கையை விரும்புவர். கீழடியில் எங்களுடைய ஆய்வில் ஏறக்குறைய 15 உறை கிணறுகள் கண்டறியப்பட்டன. அங்குள்ள உறை கிணறுகள், வடிகால் முறை போன்றவற்றை காணும்போது, அது நகர வாழ்க்கைதான் என்பது உறுதியாகிறது.

மேலும், 1,800 தொல்பொருள்கள் கிடைத்தன. ஆனால், அங்கு பொருள்கள் உற்பத்தி செய்யப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வருகிறது. பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், அதற்கான மூலப்பொருள்களின் தடயம் இருந்திருக்கும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அப்படி எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. மேலும், அரைகுறைப் பொருள்களாக அல்லாமல், முழுமையான பொருள்களாகவே கிடைத்துள்ளன. எனவே, வெளியிலிருந்துதான் பொருள்களை வாங்கியிருக்க வேண்டும். நகர நாகரிகத்தில்தான் பொருள்களை வெளியில் வாங்கும் பழக்கம் இருக்கும்.

யானை தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, தாயக்கட்டை, அணிகலன்கள் போன்றவையும் கிடைத்தன. இதன் மூலம், கீழடியில் நகர நாகரிகம் என்பது மட்டுமல்லாமல், முழுமையான நாகரிக வாழ்க்கை இருந்தது உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அகழாய்வில்தான் பானை ஓடுகளில் கிறுக்கல்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் இதுபோல வேறு எங்கும் இல்லை. சிந்துவெளியில் கூட வரைபட எழுத்துகள்தான் கிடைத்தன. வரைபடம் மூலம் தகவலை வெளிப்படுத்தும் முறை இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் பானை ஓடுகளில் காணப்படும் கிறுக்கல்கள் தமிழ் பிராமி எழுத்து என்பதை அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த எழுத்து வடிவங்கள்தான் பின்னர் அசோகர் காலத்துக்குச் சென்றிருக்கும்.

பானையில் எழுதும் பழக்கம் சாமானிய மக்களிடம்தான் இருந்திருக்கிறது. அவர்கள்தான் எழுதியுள்ளனர். பானையில் அரசன் எழுத வாய்ப்பில்லை. எனவே, அக்காலத்திலேயே தமிழர் நாகரிகத்தில் சாமானிய மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பது அறிய முடிகிறது. இப்போதும் கூட எவர்சில்வர் பாத்திரத்தில் பெயர் எழுதும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. இந்தப் பழக்கம் இந்தியாவில் வேறும் எங்கும் கிடையாது. எனவே, கீழடி வளமைமிக்க நாகரிகமாகத்தான் இருந்திருக்கும்.

இன்னும் அங்கு நிறைய பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன. வெறும் 3 அல்லது 4 மாதங்களுக்கு மட்டும் செய்யப்படும் அகழாய்வு மூலம் முழுமையான தகவல்கள் கிடைக்காது. பத்து வருடங்களாவது அகழாய்வு செய்ய வேண்டும். மேலும் இன்னும் ஆழமாக அகழாய்வு செய்ய வேண்டும்.

அப்படிச் செய்தால் தமிழர்களின் நாகரிக வரலாற்றுக் காலம் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. அதற்குத் தொடர்ச்சியாக 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு மேலாக அகழாய்வு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் தமிழர் வரலாற்றை மறுகட்டமைப்பு செய்ய முடியும். மேலும் காவிரி, தாமிரபரணி போன்ற நதிகளின் ஓரங்களிலும் அகழாய்வு செய்யப்பட வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.