செப்டம்பர் மாத நிகழ்வுகள்
குவிகம் இல்லத்தில் நடைபெறும் அளவளாவல் மற்றும் இலக்கிய அமுதம் நிகழ்வுகளையும், ஆழ்வார்பேட்டையில் குவிகம் இலக்கிய வாசல் சார்பில் நடக்கும் நிகழ்வினையும் பற்றிய குறிப்பினை மாதம்தோறும் எழதலாம் என்று தொடங்குகிறோம்.
இது செப்டம்பர் மாத நிகழ்வுகளுக்கான பதிவு
- செப்டம்பர் 8 : அளவளாவல்
“வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் “ என்னும் முகநூல் குழுவின் நிர்வாகி திரு. மந்திரமூர்த்தி அழகு அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு. ஒரு தீவிர வாசகர் ஒரு முகநூல் குழுவின் மூலம் பலரையும் படிக்க வைத்து அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளச் செய்தது இவரது சிறப்பு.
கோவில்பட்டியில் நினைவு தெரிந்த நாள் முதல் அரசியல் மற்றும் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றுவந்த அனுபவங்கள், பங்களூரூவில் இருந்த நாட்களில் தமிழ்ச் சங்கத்துடன் பழக்கம் ஏற்பட்டது, தனது ஊர் மற்றும் அலுவலக நண்பர்கள் பலர் இலக்கியச் சம்பந்தமாகவே இயங்கி வருவது பற்றி பகிர்ந்துகொண்டார்.
வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் தளத்தின் தரத்தைத் தொடர்ந்து உற்சாகத்துடன் தக்கவைப்பது குழுவின் ஒவ்வொருவரின் பொறுப்பு என்றும், இதுவரை பதிவுகள் எழுதாத நண்பர்கள்/எழுத்தாளர்கள் அனைவரையும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தங்கள் வாசிப்பு அனுபவத்தை வாசிப்போம்…குழுவில் பகிர வேண்டும் என்றும் கூறி இதுவரை குழுவில் சேராதவர்களுக்கு அழைப்பும் விடுத்தார்
- செப்டம்பர் – 15
இலக்கிய அமுதம் சார்பில் உவமைக் கவிஞர் சுரதா அவர்களைப்பற்றி திரு. அமுதோன் உரையாற்றினார்.
திரு அமுதோன் கவிஞர் சுரதா மற்றும் கவிஞர் கண்ணதாசன் இருவரிடமும் பழகியவர். இருவரும் மென்மையான உள்ளம் படைத்தவர்கள், மற்றவர்கள் மகிழ்ச்சியை தங்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடியவர்கள் என்பதற்கு உதாரணங்கள் சொன்னார்.
கவிஞர் சுரதாவைப் பற்றிய சில செய்திகள்.
- எந்தக் கவிஞரின் ஊருக்குச் சென்றாலும் அவர்கள் பிறந்த மண்ணை எடுத்துக்கொண்டு வருவாராம். (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஆண்டாள் இப்படி.) அவர் ஒரு நாத்திகராக இருந்தாலும் ஆண்டாள் கிடத்ததாகக் கூறப்படும் இடத்தின் மண்ணையும் கொண்டுவந்தாராம். அந்த மண்ணை தன்னைப் புதைக்கும்போது உபயோகப் படுத்தவேண்டும் என்பது அவர் விருப்பமாம். அது நடக்கவில்லை. ஆனால், அசோக்நகரில் அவரது சிலை அமைக்கப்பட்டபோது அதன் பீடத்துள் அந்த மண்ணை இட்டு அதன்மேல் சிலையை அமைத்தார்களாம்.
- யாரேனும் இளைஞர் நல்ல கவிதை சொன்னால், உடனே அவருக்கு பரிசு கொடுப்பாராம். அவரிடம் காசு இருக்காது. அருகில் உள்ள யாரிடமாவது பத்து ரூபாய் வாங்கி அதைப் பரிசாகக் கொடுப்பாராம்.
- பேசிக்கொண்டு இருந்த ஓரு இளைஞரிடம் அவர் பெயர், தந்தையின் பெயர், ஊர் என்றெல்லாம் கேட்டாராம், சுரதா. பதில் அளித்த அந்த இளைஞர் “ நான் என்ன ஜாதி என்று தெரிந்டுகொள்ளத்தானே இப்படிக் கேட்கிறீர்கள்? நான் மனித ஜாதி.” என்று சொல்லிவிட்டாராம். சற்று நேரம் கழித்து என்று மன்னிப்பு கேட்கும் தொனியில், உங்கள் “மனதைப் புண் படுத்திவிட்டேனோ?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு சுரதாவின் பதில் —
“ஆணி அடிச்ச இடத்தில் அடையாளம் இல்லாமல் போகுமா?’
செப்டம்பர் 22: அளவளாவல்
1955 முதல் சென்னையில் நடந்த ஆன்மீகச் சொற்பொழிவு, இலக்கிய நிகழ்வு எல்லாவற்றிலும் பார்வையாளர் இடையே சங்கரிபுத்திரன் அவர்களை பார்கலாம் என்று சொல்வார்கள்.
கலந்துகொள்வதோடு ஒரு சிறு குறிப்பு, ரசமான செய்திகள் என்று பத்திரிகைகளில் பகிர்ந்துகொண்டவர் அவர். 88 வயதான சுப்பிரமணியம் அவர்களுக்கு ‘சங்கரிபுத்திரன் புனைப்பெயரைச் சூட்டியவர் தோழர். பாலதண்டாயுதம்.
கோவைச் சிறைச்சாலையில் எழுத்தராகப் பணிபுரிந்த இவர் அந்தச் சமயத்தில் ஒரு தூக்குத் தண்டனைக் கைதிக்கு அவர் அராசங்க அனுமதியுடன் உதவியதை இன்றும் நினைவு கொள்கிறார்.
- செப்டம்பர் 29
இலக்கியச் சிந்தனை மற்றும் குவிகம் இலக்கியவாசல் சார்பில் சனிக்கிழமை 28-9-19 அன்று “திரு ஏ.என்.சிவராமன் – ஒரு பன்முகப் பார்வை” என்ற தலைப்பில் கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் பேருரை ஆற்றினார்.
அது பற்றி நண்பர் ஆர்கே ராமநாதனின் முகநூல் பதிவு
மாதாந்திர கூட்டத்தில் தினமணி ஆசிரியராக அரை நூற்றாண்டுக்கு மேல் திறம்பட பணி புரிந்த ஏ என் எஸ் என்றழைக்கப்படுகிற ஏ என் சிவராமன் அவர்களின் பன்முகத் திறமை பற்றி நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ள அவரின் பேரன் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் (கலைமகள் ஆசிரியர்) அவர்களைவிட பொருத்தமான நபர் வேறு யாரும் இருக்கமுடியுமா என்ன?
ஏ என் எஸ்ஸின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்கள், பத்திரிகை ஆசிரிய அனுபவப் பகிர்வுகள் என இரண்டையும் சரிவரப்பின்னி அவற்றை காலக் கிரம வரிசைப்படுத்தாமல் சுவாரஸ்யத்திற்கும் கோர்வைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேசிய முறை கவனக்குவிப்பாய் கேட்க வைத்தது. பிழைதிருத்தி மணி சம்பவக்கதையை முத்தாய்ப்பாய் சொன்னதும் நல்ல ஃபினிஷிங் டச் .!
காந்தியவழிக் கொள்கை ஈடுபாடு, வன்முறைக்கு வாய்ப்பளிக்காத நேர்பட்ட எழுத்து வெளிப்பாடு,கட்டுரை, தலையங்கம்,பல்துறைத்தொடர் (விவசாயம் குறித்த 40 கட்டுரைகள் பல்கலைக்கழக பாடத்திட்டமாய் வைக்கப்பெற்றது அதன் வீரியத்தைப் பறைசாற்றும்) இவைதாண்டி சிறுகதையிலும் முத்திரை பதித்த எழுத்துத்திறன் (எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறந்த நூறு தமிழ்சிறுகதைகள் தேர்ச்சி பட்டியலில் ஏ என் எஸ் எழுதிய நாலாணாவும் நாலு அவுன்ஸ் பிராந்தியும் இடம் பெறும் என சிலாகித்ததை குறிப்பிட்டார்) எழுதிய பகுதிகள் ஒரு வாசகனாய் தனக்கு திருப்தி ஏற்படுத்தினால் மட்டுமே அது பிரசுரமாகும் என்னும் மனக்கொள்கை கொண்டிருந்தவர்.
எமர்ஜென்ஸி காலத்தில் தமிழில் அதிகம் கண்காணிக்கப்பட்டதும் அரசாங்க தணிக்கைக்கும் அதிகமாக உள்ளானது தினமணியும் துக்ளக்கும் என்பது பத்திரிகை தர்மநிலை நேர்மை பேசுவதின் ருசு.
தினமணி அப்போது தலையங்கத்தில் வெறுமே வெள்ளைப் பக்கம் பிரசுரித்தது ஏ.என்.எஸ்ஸின் தனித்துவ எமர்ஜென்ஸி எதிர்ப்பு நிலை பிரகடன முழக்கம்.( துக்ளக்கில் கறுப்பு மைக்கோடுகளும் அட்டையில் ஒருமுறை முழுக்க முழுக்க கறுப்பு பக்கம் அச்சானதாகவும் ஞாபகம்). தான் மேற்கொண்ட எழுத்துப்பணிக்கு கண்ணியம் சேர்த்ததும் பரந்துபட்ட வாசிப்பை எழுத்திலும் பரவிவரச் செய்ததும் ஏ.என்.எஸ்ஸின் தனிச்சிறப்பு என்றால் அதுதான் அவரின் படைப்புப்பணிக்கான அங்கீகாரம் என்பதுதானே சரியாக இருக்கும்?!