நாடகத் துறை இப்பொது மறுமலர்ச்சி அடைந்துகொண்டிருக்கின்றது என்றால் இவரைப்போன்றவர்கள் மீண்டும் மேடைக்கு வந்திருக்கிறார்கள் என்பதால்தான்.
யார் அவர்?
கோமல் தாரிணி – கோமல் சுவாமினாதன் என்ற புலிக்குப் பிறந்த புலி.
“இளைய தலைமுறையினரை மேடை நாடகங்கள் பக்கம் திருப்பறதுதான் என் லட்சியம். கலைஞர்களுக்கு தியேட்டர்தான் முதல் பாடசாலை. வசன உச்சரிப்பு, உடல்மொழின்னு எல்லா நுணுக்கங்களையும் மேடை நாடகங்கள் மூலமாதான் மெருகேற்றிக்க முடியும். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுன்னு சொல்லிக்கிட்டா அதுக்குத் தனி மரியாதை இருக்கு. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத எத்தனையோ கலைஞர்களுக்கு மேடையில் வாய்ப்புகள் காத்திட்டிருக்கு…’’ நம்பிக்கையளிக்கிறார் கோமல் தாரிணி.
தண்ணீர் தண்ணீர் நாடகத்தைப்பார்த்த சில பிரபலங்களின் கருத்துக்கள்:
திருமதி வித்யா சுப்பிரமணியம் :
தண்ணீர் தண்ணீருக்கு எண்பதுகளில் ஏற்பட்ட சிக்கல் தெரியும். அப்போது நாடகமாகப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் பாலச்சந்தர் மூலம் அதைத் திரைப்படமாகப் பார்த்து வியந்திருக்கிறேன்.
இத்தனை காலம் கழித்து நேற்று மேடையில் மீண்டும் அதை நடகாமாகப் பார்த்தது நல்லதொரு அனுபவம். இதை விமர்சிப்பதென்பது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போல. மூன்றே மூன்று குடிசைகள் கொண்ட செட்டிங்கும் சரி, ஒலி, ஒளி அமைப்புகளும் சரி, அற்புதம். சுவர்க்கோழியின் ரீங்காரத்திலிருந்து, மரம் அறுத்து மாட்டுவண்டி செய்யும் சப்தம் வரை ஒலிவடிவிலேயே பல விஷயங்களைக் காட்சி படுத்தியிருந்தது பிரமாதம். நடித்தவர்கள் அத்திப்பட்டு கிராம மக்களாக வாழ்ந்திருந்தார்கள்.
ஆர் டி முத்து :
ஒன்றரை மணிநேர நாடகத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாதபடியால் இடியாகவும் கிண்டலாகவும் வந்திறங்குகின்றன. வாத்தியார் ராமன்,வீராசாமி போன்ற பழைய கலைஞர்கள் இறந்து போனாலும், போத்திலிங்கம் மீண்டும் வாத்தியார் ராமனாக வந்து இயல்பான நடிப்பில் அசத்துகிறார்.
சாய் சுந்தரி நாராயணன்:
வானம் பொய்த்த ஈரம் காய்ந்த மண்ணில் வாழும் மனிதர்களின் தினம்தினம் தண்ணீருக்கான தீர்க்க இயலாத போராட்டமும், அதன் பின்னணியில் அரசியலும் தான் கதை.
பங்கேற்ற ஒவ்வொருவரும் வாழ்ந்திருந்தார்கள்.
கௌரி கிருபானந்தன்:
வாணி மகாலில் அக்டோபர் 11, அன்று நடந்த “தண்ணீர் தண்ணீர்” நாடகம் மிகஅருமை. எங்கேயும் தோய்வு இல்லாமல் விரைவு ரயில் வண்டி போல் நாடகம் மேடை ஏற்ப்பட்டதோடு பார்வையாளர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டது. இயக்குனர் தாரிணி அவர்களின் முனைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்தது. அரங்க அமைப்பு கூடுதல் சிறப்பு பெற்றுவிட்டது.
விகடன் பாராட்டுகிறது:
தண்ணீர் தண்ணீர் நாடகத்திற்கு முன் பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் ஐந்து சிறுகதைகளை நாடகமாக்கி வெற்றிகரமாக மேடை ஏற்றினார்.
அதற்கு முன் பிரபல தமிழ் எழுத்தாளர்கள் ஐந்து பேரின் கதைகளை நாடகமாக்கி நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார்.
இதுபோல இன்னும் நிறைய நல்ல நாடகங்களை மேடைக்குக் கொண்டுவரத் திட்டம் தீட்டிவரும் தாரிணி அவர்களுக்குப் பாராட்டுதல்கள்!
தொடருட்டும் அவரது நாடகப் பயணம்!