பள்ளித் தலைமை ஆசிரியையான சுகுணாவுக்கு எங்கள் டாக்டரின் அணுகுமுறை பரிச்சயமானது, பிடித்தமானது. அதனால்தான் தன் பள்ளிக்கூடத்தில் சமீபத்தில் சேர்ந்திருந்த ஆசிரியையான முத்துலட்சுமியை எங்களிடம் அழைத்து வந்தாள். கடந்த ஒரு மாதமாக முத்துலட்சுமி சோகமான முக வாட்டத்துடன் இருப்பதைக் கவனித்திருந்தாள். . வாராவாரம் குழுவாக ஆசிரியர்களைச் சந்திக்கும் போதும் அவளுடைய சிதறிய கவனத்தையும், பதட்டத்தையும் கவனித்தாள். முத்துலட்சுமி அடிக்கடி லீவு, தலைவலி என்றாள்.
பக்கவாட்டில் டாக்டரைப் பார்த்தாள். அவர் எல்லா பரிசோதனையும் செய்து உடல் நோய் ஒன்றும் இல்லை என்றார். மன உளைச்சல் என்று மூன்று மாதத்திற்கு மருந்து கொடுத்திருந்தார். முத்துலட்சுமியின் நிலைமையைப் பார்த்து, சுகுணா டீச்சர் எங்கள் டாக்டரிடம் அவளை அழைத்து வந்தாள். டாக்டர் அவளை தன் வலியை வர்ணிக்கச் சொல்லி, அவள் பதில்களைக் கேட்ட பிறகு ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர்ரான என்னை ஆலோசிக்கப் பரிந்துரைத்தார்.
முத்துலட்சுமி இந்தப் பள்ளிக்கூடம் சேர்ந்த இரண்டாம் வாரத்திலிருந்தே தான் சோகமாக இருப்பதை உணர்ந்தாகச் சொன்னாள். முப்பத்து ஐந்து வயது, ஆசிரியர் படிப்பு படித்தவள். கணவருக்கு வெளிநாட்டில் வேலை. மகள்கள் நிலா, கலா இருவரின் பள்ளி ஆண்டு போய்க்கொண்டு இருந்ததால் தந்தையுடன் இருக்க வேண்டியதாயிற்று. அவளுடைய இளைய மகள் நிலா, அம்மா முத்துலட்சுமியுடன் வீடியோவில் பேசும்போது “அம்மா அதே புடவையா? மாத்திருக்கவில்லை? இங்கு இருந்தது போல ஏன் அம்மா சிரிப்பதில்லை?” என்று கூறியதைப் பகிர்ந்தாள்.
நான்கு மாதத்திற்கு முன்பு முத்துலட்சுமியும் அவளுடைய கணவரும் சென்னை வந்திருந்த போது இவர்களுக்கு பிடித்தமான இடத்தில் நிலத்தை வாங்கினார்கள். சொந்த வீடு கட்ட ஆசை, கட்ட ஆரம்பித்தார்கள். இதைப் பார்வையிட முத்துலட்சுமி இந்தியாவில் தங்கிவிட்டாள். கணவர், பிள்ளைகளிடமிருந்து, இதுவே முதல் பிரிவு. தவித்தாள்.
இன்னொரு காரணி, முத்துலட்சுமி எதிர் வகுப்பில் ஒரு பையன் அடி வாங்குவதைப் பார்த்தாள். பள்ளியில் புது ஆசிரியையான இவளால் அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவனுக்காகப் பரிதாபப் பட்டாள். தன் வகுப்பு ரமேஷ், தாமஸ் இருவரும் தினமும் அடி வாங்குவதும் (நான் சொல்வது முப்பது வருடத்திற்கு முன்பு, அடிக்கக் கூடாது என்ற சட்டம் முழுதாக அமல்படுத்துவதற்கு முன்னால்) தெரிய வந்தது. இவர்களைக் காப்பாற்ற இயலவில்லையே என்று மனம் வருந்தியது. பள்ளிக்கூடம் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. சோர்வாக இருப்பது போல் இருந்தது. “என்ன செய்வது” என்று தெரியவில்லை. அந்த தவிப்பே தலைவலி ரூபமானது. மனம் மொழியில் தவிப்பு, அதுவே உடல் மொழியில் தலைவலியாக ஆனது.
மற்றவரிடம் நக்கலாக, அவதூறாகப் பேசமாட்டாள், யாரையும் உதாசீனம் செய்யமாட்டாள், கண் பார்த்து உதவி செய்வாள். விரும்பிக் கற்றுத்தருவாள். மாணவர்கள் அடி வாங்குவதைப் பார்த்து அதை ஜீரணிக்க முடியவில்லை. புதுசாக சேர்ந்ததால் அந்த பள்ளியின் நிர்வாக முறைகள் தெரியவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் தத்தளித்தாள்.
இந்த ஒரு மாத காலமாக தனக்கு மட்டும் சமைப்பதைக் குறைத்ததாகச் சொன்னாள். பசி இல்லையாம். தூக்கமும் தான். இதை முதலில் சரிவரச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அவளுடைய ஆழ் மனதில் மாணவர்கள் நிலை வாட்டியது. அதற்குப் பிரதானம் கொடுத்தேன். அதைப் பற்றி ஸெஷனில் பேச ஆரம்பித்தோம்.
முத்துலட்சுமி டீச்சர் ட்ரெயினிங்களில் விவரிக்கும் வெவ்வேறு கற்றுத் தரும் விதங்களைப் பற்றியும், ஆராய்ச்சிகளின் முறைகளையும் சக ஆசிரியைகளுடன் உற்சாகத்துடன் பகிர்வாள். அவைகளை அமலுக்குக் கொண்டு வர முயன்று, கூடப் பணிபுரிவோரை இதில் சேர்த்துக் கொள்வாள். இதனால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்தது அவளை மேலும் ஊக்கவைத்தது..
இந்தப் “பகிர்தலை” சுகுணா டீசரின் உதவியுடன் சற்று மாற்றி அமைத்தேன். முத்துலட்சுமியைத் தகவல்களைத் தேடிச் சேகரிக்க ஊக்க வைத்தேன். சேகரிப்பதில் மும்முரமாக ஈடுபட, தலைவலி தானாக விலகியது. தன் முயற்சி பலருக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக அந்த தகவல்களை எளிதாக அவளை எழுதச் சொல்லி, படங்களுடன் ஆசிரியைகள் அமரும் அறையில் வைக்க முடிவெடுத்தோம். அதற்கென்று ஒரு இடம், இதை யார் வேண்டுமானாலும் படிக்க உபயோகிக்க, அது சந்தேகங்களைத் தெளிவு செய்யும் “கற்றல்-பகிருதல்” இடமாகியது, மெதுவாக இதில் ஆர்வம் கூட தங்களுக்கு நேரம் இருக்கும் போதெல்லாம் இரண்டோ மூன்றோ ஆசிரியர்கள் இங்குக் கூடிப் பகிர்வது என்றிருந்தது. முத்துலட்சுமி உபயோகமாகத் தான் செய்ததைப் பார்க்கப் பார்க்க சந்தோஷம் அடைந்தாள்.
இந்த யுக்தியை வைத்து, மாணவர்கள் நிலை தன்னை வாட்டியதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி அவளை யோசிக்கச் செய்தேன். இதில் அவள் தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாததும் வெளிப்படையாகப் புரிய வந்தது. இதற்கு விடை காணலாம் என்று ஸெஷன்கள் போனது.
அதே நேரத்தில் முத்துலட்சுமியின் பக்கத்து நிலம் காலியாக, இவர்களே அதை வாங்கினார்கள். அங்கு ஒரு சின்ன குடிசை போட்டாள். இதைப் பற்றிப் பேசினாள். இந்த சமயத்தில், அங்குக் கட்டிடம் கட்ட வந்தவர்களின் பிள்ளைகள் படிக்காமல் இருப்பதைப் பார்க்கச் சங்கடமாக இருப்பதாகச் சொன்னாள். அதைப் பற்றி இன்னும் யோசிக்கவும் செய்தேன், பேச வைத்தேன். பிடிக்காத நிலைமைகளைச் சங்கடமாகக் காண்பது மன உளைச்சல் உண்டாவதற்கு சந்தர்ப்பம் ஆகும். அதே சங்கடங்களை அவை என்ன, எப்படித் தீர்வு செய்வது என்ற பதில்களைத் தேடலே மன உளைச்சலுக்கு இடம் இல்லாமல் செய்து விடும். முத்துலட்சுமி, இந்தப் படிக்காத ஏழு பிள்ளைகளுக்கு, அந்த குடிசையில் மாலை நேரத்தில் வகுப்பு நடத்துவது என்று தீர்மானம் ஆனது. ஆரம்பித்தாள்.
சுறுசுறுப்பானது முத்துலட்சுமியின் நாட்கள். செய்யச் சக்தி தேவைப் பட்டது, தானாக உணவு வகைகளைச் சேர்த்துச் சாப்பிடத் தொடங்கினாள். இத்துடன் உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்தேன். அந்த ஏழு பிள்ளைகளையும் தன்னுடைய உடற்பயிற்சியில் சேர்த்துக்கொண்டு, தினம் ஒரு விதமான உடற்பயிற்சி என்று அமைந்தது.
அதே போல வாரம் ஏழு நாட்களுக்கும் எழுதுவது, படிப்பது என்று மட்டுமே அல்லாமல் அவர்களுக்குப் பாட்டு, வரைவது, நாடகம், நாட்டியம் எனப் பாடங்களை பல்வேறு முறையில் பயின்றாள்.
இதைச் செய்த போதிலும் அந்த தண்டிக்கப் படும் மாணவர்களைப் பற்றிய சிந்தனை வந்தது. அவள் முன்னால் பல கேள்விகள் நின்றன. அந்த மூன்று மாணவர்கள் போல் இருப்பவர்கள் ஏன் இப்படித் தண்டிக்கப் படுகிறார்கள், அதற்கு என்ன செய்யலாம்? தன் ஆசிரியர்களுடன் இந்த கேள்வியை எழுப்பத் துணிவு வந்தது. “கற்றல்-பகிருதல்” இடத்தில் விடைகளைப் பகிர ஆரம்பித்தாள். அவற்றைச் செயல் படுத்திக் காட்டினாள். அந்த காலத்திலேயே ஸாஃப்ட் ஸ்கில்ஸை (Social-Emotional Learning Skills) படிப்பில் சேர்த்து விட்டாள்.
தன்னால் முடிந்ததைச் செய்ததும், தான் செய்வதில் குதுகலம் அடைய மனநலம் மேலோங்கியது. நிலா கலா, கணவனுடன் வீடு கட்டுவதை, எப்படி அமைக்க என்ற யோசனைகளைக் கூட்டாகப் பேசி முடிவு செய்வதை ரசித்து, சந்தோஷமானாள். தான் செய்வதைப் பற்றிப் பகிர்ந்தாள். நாட்கள் திருப்தியாக நகர்ந்தது!