காலையில் தூவும் மழைபிடிக்கும்
காரிருள் மேவும் மதிபிடிக்கும்
மாலையில் மயங்கும் ஒளிபிடிக்கும்
மார்கழி வழங்கும் பனிபிடிக்கும்
சோலையில் சிரிக்கும் மலர்பிடிக்கும்
தோகையை விரிக்கும் மயில்பிடிக்கும்
வேலையில் வீசும் அலைபிடிக்கும்
வீணையில் பேசும் கலைபிடிக்கும்.
( வேலை — கடல்)
கோட்டையில் பறக்கும் கொடிபிடிக்கும்
கோடையில் மரத்தின் அடிபிடிக்கும்
ஈட்டிய பொருளில் கொடைபிடிக்கும்
ஏட்டினில் கம்பன் நடைபிடிக்கும்
கேட்டிலும் சிறக்கும் மனம்பிடிக்கும்
கீழ்மையை வெறுக்கும் குணம்பிடிக்கும்
பாட்டினில் எழுந்த பண்பிடிக்கும்
பாரினில் பிறந்த மண்பிடிக்கும்.
முகத்தினில் மகிழும் நகைபிடிக்கும்
மொய்மலை முகிலின் புகைபிடிக்கும்
அகத்தினில் அன்பின் ஒளிபிடிக்கும்
ஆற்றலில் அடங்கும் நிலைபிடிக்கும்
தொகுத்ததில் என்றும் புறம்பிடிக்கும்
தொலைந்திடும் கதிரின் நிறம்பிடிக்கும்
வகுத்ததில் குறளின் அறம்பிடிக்கும்
வாழ்வெனும் தெய்வ வரம்பிடிக்கும்