அந்தக் காலத்தில் எங்கள் தன்னார்வ நிறுவனம் (NGO) காவல்துறை நிலையத்தில் அமைக்கப் பட்டிருந்தது. பெண்கள் வீட்டில் அனுபவிக்கும் வன்முறைகளுக்கு ஒரு விடிவு காணக் கருதி அமைத்திருந்தார்கள். முதலில் பெண்களுக்கு என்றதை சில வருடங்களுக்குப் பிறகு உறவுகளின் இடையில் நேரும் வன்முறையைக் குறித்து உதவுதற்கு விஸ்தரிக்கப் பட்டது.
ஒரு நாள் எங்களிடம் திலக் என்பவர் வந்தார். அவருடைய நண்பன் ஜோஸ் அவருடன் வந்திருந்தார். அந்த நண்பன், “எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டான்” எனத் தன் ஆதங்கத்தைச் சொன்னார். திலக் ஏற்கனவே வந்தவர், தன் மனைவி தாராவின் காரணமாகத்தான். சில மாதங்களுக்கு முன்பே தாராவையும் அவள் அம்மா ஜமுனாவையும் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் சரோஜஜையும் எங்களிடம் அழைத்து வந்திருந்தாள்.
பல நாட்களாக ஜமுனா சமையற்கட்டில் விசும்பி அழுவதைக் கவனித்து சமாதானம் செய்யப் பார்த்திருந்தாள் சரோஜ். தாராவின் இல்லற வாழ்வின் சிக்கலைப் பற்றி அறிந்தாள். தன்னுடையக் குடியிருப்புப் பகுதியில் வன்முறை சகித்துக் கொண்டு இருக்கும் பெண்கள் பலரை எங்களிடம் அழைத்து வருவதால் சரோஜிற்குத் தெரியும், நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யாமல் சிக்கல்களைச் சரிசெய்பவர்கள் என்று.
எங்களிடம் வந்த சமயத்தில், தாரா ஐந்து மாத கர்ப்பிணி. விவரங்களை ஜமுனா விளக்குகையில் தாரா அவள் பின்னே நின்று, கையிலிருந்த செய்தித் தாளில் சுடோகு போட்டுக் கொண்டு இருந்தாள்.
தாரா இருபத்தி எட்டு வயதுடையவள், ஐடீ நிர்வாகத்தில் வேலை, மாமனார், மாமியார், நாத்தனார், மச்சினர் என எல்லோரும் வசதியாக, கூட்டுக் குடும்பமாகக் கூடி வாழ்ந்து வந்தார்கள். எல்லோரும் வீட்டு வேலைகளில் பங்களிப்பு செய்து வந்தார்கள். திலக்-தாரா மணமான பிறகு தாரா மீண்டும் மீண்டும் சொன்னதில் வீட்டைச் சுத்தம் செய்ய,, துணிகளைத் துவைக்க (வாஷிங் மெஷினில்), பாத்திரங்களைத் துலக்க சரோஜ் நியமிக்கப் பட்டாள்.
தாரா சொல்வதை எல்லோரும் ஏற்றுக்கொள்வதின் காரணம் அவளின் பணக்காரக் குடும்பம், படிப்பு, சம்பளம். நிச்சயம் செய்யும் போதே தன்னுடைய நிலை, படிப்பு இத்யாதிகளுக்கு திலக் குடும்பத்தார் ஈடல்ல என்று அவளுக்கு நன்றாகத் தென்பட்டது. முதலில் சங்கடப் பட்டு, வேண்டாம் என்று சொல்லத் துடித்தாள். இருமுறை திலக்கைச்’ சந்தித்த பிறகு மனதை மாற்றிக் கொண்டாள். தன் தோழிகள், கூட வேலை செய்வோர், உறவினர்கள் யாருக்கும் இதைப் பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மாறாக, திலக் வேலையை உயர்த்தி விவரித்து விட்டாள். தன் வசதி அந்தஸ்து, படிப்பு, வேலை ஒரு படி மேலாக இருப்பதினால் புகுந்த வீட்டில் மரியாதை கூடும் என்று அவளுக்குத் தோன்றியது. இதன் பின்னரே ஒப்புக் கொண்டாள். இதற்கு ஏற்றாற்போல் அவள் கேட்டது, சொன்னது நடந்தது.
உள்ளூரிலேயே வாழ்க்கை அமைந்ததால் ஒவ்வொரு வாரமும் அவள் தன் அம்மா ஜமுனா வீட்டிற்குப் போவது பழக்கமானது. சமீபத்தில், பல தடவை தாரா மட்டும் போவாள். சனி-ஞாயிறு மட்டும் என்று நினைப்பார்கள் ஜமுனாவும் அப்பா திவாகரும். பல முறை அது நீடிக்கும். தாராவின் மாமனார்-மாமியார் திங்கட்கிழமை தொலைப்பேசியில் அழைத்து விசாரிப்பார்கள். பெற்றோர் கூச்சம் அடைய, புதன்கிழமை வாக்கில் திரும்புவாள். ஜமுனா-திவாகருக்கு தாரா இந்த மாதிரி செய்வது தம்பிக்குத் தவறான எடுத்துக் காட்டு என்பதால் பிடிக்கவில்லை. இப்படித் தோன்றியும், உடன்பாடு இல்லை என்றாலும் ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டார்கள்.
ஒரு வெள்ளிக்கிழமை வேலையிலிருந்து அம்மா வீட்டிற்கு வந்தாள் தாரா. வேலைப் பளுவைச் சமாளிக்க என்றாள். திலக்கிடம் சொன்னதாகத் தெரிவித்தாள். ஜமுனா-திவாகர் ஒன்றும் கேட்கவில்லை. ஒரு வாரம் சென்றது, அடுத்த வாரமும். மாப்பிள்ளையும் வரவில்லை, தாரா போவதாகவும் தெரியவில்லை. பெற்றோர் பதறிப் போனார்கள்.
அத்துடன், தாரா உணவு சரியாக’ சாப்பிடாததும் ஒரு கவலை. யாரோ சொன்னதால் வயிற்றைக் கட்டிக் கொண்டு இருந்தாள், வளரும் கருவைப் பற்றி யாராவது கேட்டு விட்டால் அன்று சாப்பிட மாட்டாள். உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொண்டாள். தாராவை பார்த்தால் கர்ப்பிணி எனச் சொல்வது கடினம். எவ்வளவோ சாதிக்க வேண்டிய வயதில் குழந்தை சுமக்கிறோமே என்ற ஆதங்கம். அந்தக் கோபத்தில், தன்னுடைய சம்பளத்தைக் கணவர் வீட்டில் கேட்பதாகப் பெற்றோரிடம் புகார் செய்தாள்.
ஜமுனா குழப்பம் அடைந்தாள். உள்மனத்தில் அவளுக்கு திலக்கைப் பற்றி நல்ல அபிப்பிராயம். இருந்தாலும் முதல் மூன்று-நான்கு முறை இவர்களே திலக்குடன் சமாதானம் செய்யக் கலந்துரையாட நேர்ந்தது. தாரா வராமல் இல்லை, வந்தாள். அவர்களை அழைத்த சில நொடிகளில் வேலை வந்ததாகச் சொல்லி வெளியில் சென்று எப்போதும் எடுத்து வரும் மடிக்கணினியில் (laptopல்) மும்முரமாக இருப்பாள். அம்மாவின் முந்தானையில் இப்படி ஒளிய, குழந்தையா என்ன? அம்மாவே செய்யட்டும் என்ற எண்ணம் !
இதுவே அம்மா-பெண் இடையே நடப்பதை நான் எடுத்துக் காட்ட, உதாரணமாக ஆயிற்று. தாராவுக்காக தான் செய்யும் ஒவ்வொன்றையும் ஜமுனாவை விவரிக்கச் சொன்னேன். அவள் சொல்லச் சொல்ல, அவளைச் சிந்தனையின் அடுத்த நிலைக்கு அழைத்துச் சென்றேன். இப்படிச் செய்வதில் உதவி புரிகிறதா என்பதையும், யாருக்கு உதவி, அப்படிச் செய்வதனால் தாரா எதை அடைந்தாள், எவற்றைக் கோட்டை விட்டாள் என்பதை ஆராயும் வகையில் கலந்துரையாடலை வைத்தேன். தாரா தன்னுடைய நிலைமையைப் பற்றிப் புரிந்து கொண்ட போதிலும் வேலைக்கு முன்னுரிமை கொடுப்பது, வீட்டில் தன் நிலைக்குப் பெற்றோரே பொறுப்பு எனச் செய்வது இவற்றைப் பற்றி ஜமுனாவை யோசிக்க வைத்தேன்.
ஊரிலும் உறவினர்களும் கேட்டதனால் தாராவிற்கு தாங்கள் கல்யாணம் செய்து வைத்ததை ஜமுனா பகிர்ந்தாள். கல்யாணம் நிச்சயம் ஆன அதே நேரத்தில் தாராவிற்கு வெளிநாட்டு வாய்ப்பு வந்திருந்தது. கல்யாணம் முடிவானதில் அதை விட்டு விட நேர்ந்தது. இன்று வரைக்கும் அந்த வாய்ப்பையும் தன் இல்லற வாழ்வையும் தாரா ஒப்பிட்டுக் கல்யாண வாழ்வை இழிவாகப் பேசுவது வழக்கம்.
இதற்கெல்லாம் ஜமுனா தன்னையே பொறுப்பாகக் கருதினாள். குற்ற மனப்பான்மை மனதைக் குடைந்தது. மேலும் தாரா இதைக் காரணியாகச் சொல்லி வீட்டில் இருக்க, ஜமுனா குற்ற உணர்வுடன் வாழ்ந்தாள். அதனால் தான் இங்கு வரும் பொழுது கூட தாரா வேலை பார்ப்பதை ஏற்றுக்கொண்டாள்.
இதை மையமாக வைத்துக்கொண்டு அம்மா என்றவளின் பொறுப்பையும், தாரா என்றவளின் பொறுப்புகளையும் பிரித்துப் பார்க்கப் பல உரையாடல்கள். ஜமுனா இதில் தன்னை மறந்து விட்ட நிலையில் பல துன்பங்களைச் சுமந்து, பிள்ளையுடைய பொறுப்புகளை தன்னுடைய என்று செய்வதினால், பிள்ளையுடைய பொறுப்பு மங்கலாகி, அவள் அம்மாவையே எல்லாவற்றுக்கும் பொறுப்பாளி என ஆக்கி விட்டாள். இதனால் பிள்ளை தன் தாம்பத்திய வாழ்வின் பல விதிகள், பொறுப்புகளைத் தவிர்த்ததை ஜமுனா உணர, தன்னுடைய கையாளும் விதங்களை மாற்றி அமைக்க யோசிக்க ஆரம்பித்தாள்.
அந்த நிலையில் தான் திலக் எங்களிடம் வந்தான். அப்படி வருவதற்கான தேவையைக் குறிக்கவே அவனை அவனுடைய இன்றைய நிலையை முதலில் விவரித்தேன். அவன் நண்பன் ஜோஸ் கடந்த ஒரு வருடமாக திலக்கின் தன்நம்பிக்கை சரிந்திருப்பது, முகவாட்டம் முன் போல் இல்லாதது, அதிக சலிப்பு என்று தகவல்கள் பலவற்றைப் பகிர்ந்தார். திலக்கிற்கு தான் படித்த எம். பி. ஏ படிப்பு இப்போதைய நிலையில் போதவில்லை என்று தோன்றியது. வேலையில் அடுத்த நிலைக்குப் போகப் பரிட்சை எழுத வேண்டிய சமயத்தில் கல்யாணம் நிச்சயமாக, அடுத்த தடவை அதை எழுத முடிவானது. இதை அறிந்த தாரா முதலில் இதை கலாட்டாவாகச் சொல்ல ஆரம்பித்து, நாட்கள் நகர அதில் நக்கல் அதிகரித்தது. நாளடைவில் திலக் தன்னம்பிக்கை ஆடிப் போவதை உணர்ந்தான்.
இல்லற வாழ்வை நன்றாக இருக்க தங்கள் அறையில் பல மாற்றங்களைச் செய்து, மனைவிக்குப் பல வசதிகளைச் செய்து, ஆசையாக காத்துக்கொண்டதிருந்ததாகச் சொன்னான். தாரா இவற்றைத் தன் வீட்டுடன் ஒப்பிட்டுச் சிரித்து நிராகரித்து விடுவதை முதலில் அவன் ஏற்றுக்கொள்ள, அத்துடன் துச்சமான சொற்கள் சேர, திலக் தன் உணர்வுகள் புண்பட்டு அழுகையும் வந்ததாகச் சொன்னான்.
பல முறை இருவரின் சம்பள வித்தியாசத்தைப் பற்றி தாரா நாசுக்காக “பாவம் உங்கள் சம்பாத்தியத்தில் இது தான் முடியும், எனக்கு இத்தோட நன்றாக இருக்கிறது” என்று சொல்வதைக் கூறும்போதே அவன் கண்கள் கலங்கி விட்டது. தன்னுடைய ஆண்மையைச் சோதிக்கும் பலவற்றைச் சொல்லி, அவர்கள் தாம்பத்திய உறவை வைக்கும் தருணத்தை அவள் தான் முடிவு செய்வாளாம். அந்த நேரங்களில் மிக அவமானமாக இருப்பதை உணர்ந்தாக பகிர்ந்தான்.
தனக்கு நேருவது உணர்வு சம்பந்தப்பட்ட டோமெஸ்டிக் வையலன்ஸ் அதாவது வன்முறை (Emotional Abuse, Domestic Violence) என்பதைப் புரிந்து கொள்ள திலக்கிற்குப் பல ஸெஷன்கள் ஆயின. அதைப் புரிந்து கொண்டதுமே தன்மேல் குவித்து வைத்திருந்த அத்தனை பழியும் தன்னுடையதுதான் என்பதிலிருந்து விலகிப் பார்க்க ஆரம்பித்தான். மனத்திடத்தின் முதல் கட்டத்திற்குள் திலக் நுழைந்தான்!
இங்கு துவங்கி, ஒவ்வொன்றாய் எடுத்து ஆராய்ந்ததில் திலக்கிற்கு மிக மெல்லப் புரிந்து வர, முதல் முறையாக தாரா அவனைக் கொச்சையாக பேசம் பொழுது, அவளை பாதி வாக்கியத்தில் நிறுத்தி, அவள் தன் உணர்வுகளைக் காயப்படுத்துவதாகச் சொன்னான். அவள் அந்த தோரணையில் பேசுவதை நிறுத்தியதை அடுத்த நாளே என்னிடம் சொன்னதுடன், தனக்குள்ளே “என்னால் தன்னைப் பாதுகாக்க முடியும்” என்ற எண்ணம் அவனுக்குள் உதயமானது. எடுத்த எடுப்பிலேயே செய்து விட்டதால், மனதிடம் வலுவாவதற்கு உதவியது.
இவ்வகை சூழ்நிலைகளில் என்னுடைய அணுகுமுறை, முதலில் தனியான ஸெஷன்கள், பிறகு அத்துடன் இதே நிலையில் உள்ள மற்றுவருடன் குழுவாகக் கலந்துரையாடல் (group therapy). அந்த நேரத்தில் எங்களிடம் வந்தவர்கள் ஏழெட்டு பேர்களுடன் குழு தெராபி நடந்து கொண்டிருந்தது. இந்த குழு செஷன்களில் திலக் பங்கேற்றார். அதற்குப் பிறகு பல க்ளையண்ட்களுக்கு ஊக்குவிக்க, உதவத் தனது நேரத்தை ஒதுக்கினார்.
திலக்கின் பல மாற்றங்களைப் பார்த்ததும், ஜமுனாவும் முன் போல் எல்லாவற்றையும் செய்யாததும் தாராவை வியக்க வைத்தது. ஜமுனா, தன் மகள் தாராவிற்காக ஒன்றைச் செய்தால் அதன் விளைவுகளையும், அதனால் தன்னுடைய இரட்டை குழந்தைகளான அதுல்-அணில் இருவருக்கும் என்ன பாதிப்பு ஏற்படும், தாராவிடம் பாரபட்சமா எனப் பல கோணங்களில் ஆராய, அவளால் தான் செய்யும் விதங்களை மாற்ற முடிந்தது. மொத்தத்தில் தாரா இருவரின் மாற்றங்களையும் பார்த்து, அனுபவித்து தானும் ஸெஷன்களுக்கு வருவதாக முடிவு எடுத்தாள். அவளுடன் துவங்கினேன்.
அவள் முதல் குழந்தை, ரோசாப்பூ நிறம். சலுகைகள் குவிந்தது. படிப்பில் கெட்டிக்காரி. எப்படிச் சிங்காரித்தால் எடுப்பாக இருக்கும் என்பதைத் தெரிந்தவள்.இவை எல்லாவற்றினாலும் தாரா முழு சுதந்திரத்துடன் உலாவினாள்.
விளைவு, மிடுக்கு. அதைத் தன் அடையாளமாகக் கொண்டாள். அப்படி இல்லாதவர்களைத் துச்சமாக நினைத்தாள். இதனால் அவர்களுக்குக் காயங்கள், அதனால் தழும்புகள் என்பதை ஸெஷன்களில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்தோம். சில வாரங்களுக்குப் பிறகு திலக்கையும் இவ்வாறு அணுகியதை எடுத்துக் கொண்டோம்.
இதில் தாராவுடன் பல ஸெஷன்கள், அத்தோடு தம்பதியாகவும் பல. இப்போது இருவரும் ஒரே வீட்டில் வாழவில்லை. தாரா அவர்கள் வீட்டின் பல வழக்கங்கள் தன் சுதந்திரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதை விவரித்தாள், காலையில் வாசலில் கோலம் போடுவது, குளித்து சமையலறைக்குப் போவது, ஆறரை மணிக்கு எழுந்து கொள்வது. இப்படி எந்த பழக்கமும் அம்மா வீட்டில் செய்யாததால் திணறினாள், அதிகம் முயலவும் இல்லை. திலக் குழந்தைக்காக ஒன்றாகத் திரும்ப வாழ வேண்டும் என விரும்பியதால், அவ்வாறு முடியுமா என்று ஆலோசிப்பதற்காக, ஒப்புக் கொண்டு இருவரும் வந்தார்கள்.
தாரா முந்தைய நாட்களில் கர்ப்பமாவது பற்றி நினைத்து வியந்து இருக்கிறாள். ஒரு அனுபவம் என்ற அலட்சியத்தில் கர்ப்பமானாள். தன்னுடைய கர்ப்ப நிலை தெரிந்தும், அவள் அதைக் கையாளும் விதத்தைப் பார்த்து ஜமுனா ஆச்சரியம் கலந்த வெறுப்புடன் இருந்தாள். கருவை இப்படி எல்லாம் பார்த்துக் கொள்ளாமல் இருந்தால் வளருவதில் பாதிப்பு ஏற்படும் எனப் பலமுறை எடுத்துச் சொன்னாள். ஆனால் தாரா ஏற்றுக்க மறுத்தாள். டாக்டர் கருவை ஆசையோடு கவனிக்கச் சொன்னதைக் காற்றோடு விட்டாள்.
அதன் பிரதிபலனும் சிசு ஒன்றை கிலோ மட்டுமே. தான் சாப்பிட மறுத்தது, கருவைத் திட்டுவது, தன் வயிற்றை அடித்துக் கொள்வது இவற்றின் விளைவு என்பதைத் தாரா உணர்ந்தாள். அந்தப் பிஞ்சு பல நாட்களுக்கு சிசுக்களுக்கு என்ற பிரத்தியேக அவசர சிகிச்சை அறையில் இருக்கும் போது அங்கு உள்ள மூத்த செவிலியர், ஜமுனா, அவள் மாமியார் ஒவ்வொருவரும் பாப்பாவைக் கண்ணும் கருத்துமாக அரவணைப்பதைப் பார்த்தாள். செவிலியர் எவ்வாறு, ஏன் என்று தாராவிற்கு விவரித்தது, குழந்தையைப் பூ போல் பார்த்துக் கொண்டது தாராவை என்னமோ செய்தது. நெஞ்சு துடித்தது.
தாராவிற்கு தான் மிகவும் புத்திசாலி என்ற கர்வம் எப்போதும். அந்தத் திறனை மையமாக வைத்து இந்த நேரம் வரை நடந்ததைப் பட்டியல் போடப் பரிந்துரைத்தேன். அவள் “மைன்ட் மேப்” செய்வதில் கெட்டிக்காரி என்பதால் ஒன்றை விடாமல் சித்திரித்தாள். அவற்றின் ஒவ்வொரு பாகங்களையும் சிறிது சிறுத்தாக எடுத்து ஆராய ஸெஷன்கள் ஆரம்பம் ஆனது. அதற்கு நேரக்காலத்தையும் குறிக்கப்பட்டுள்ளது. ஆம், பல மாதங்கள் ஆகும் எனத் தாரா புரிந்து கொண்டாள். தயாராகினாள், தொடங்கினோம்.
தான் செய்வது தவறு, திருந்த வேண்டும் என்று ஒப்புக் கொள்வதே மாற்றத்தின் முதல் படி.