அம்மா கை உணவு (20)
நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
- இட்லி மகிமை – ஏப்ரல் 2018
- தோசை ஒரு தொடர்கதை – மே 2018
- அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
- ரசமாயம் – ஜூலை 2018
- போளி புராணம் – ஆகஸ்ட் 2018
- அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
- கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
- கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
- சேவை செய்வோம் – டிசம்பர் 2018
- பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
- பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
- வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
- பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
- ஊறுகாய் உற்சாகம் – மே 2019
- பூரி ப்ரேயர் – ஜூன் 2019
- இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
- வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
- வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
- சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019
அவியல் அகவல் !
அவியல் ! அவியல் ! அவியல் !
அவியலைப் போல ஒரு சுவையொன்று இல்லை – இதனை
தெளிவீர் ! தெளிவீர் ! தெளிவீர் !
ருசிகளில் உயர்ந்தது அவியல் – இதனை
உலகம் முழுவதும் உரைப்பேன் !
உரைப்பு, தித்திப்பு என்று சுவை
சொல்லமுடியாமல் தவிப்பேன் !
கையில் எடுத்தது தெரியும் – அது
வாயினில் விழுவது அறியேன் !
வாயில் உணரும் முன்னே – என்
உடலே புல்லரிக்குமென்பேன் !
அவியல் நாக்கினில் படரும் – அப்போது
அறுசுவையும் நான் உணர்வேன் !
காயினைக் கடிக்கும்போது – அது
கரையும் ; நானும் கரைவேன் !
குழைந்த பருப்பு சோறும் – அவியல்
கலந்து வாயில் மோதும் !
கரையில் மோதும் கடல் போல் – என்
கற்பனை சிறகடித்து ஆடும் !
கத்திரிக்காய் பிஞ்சுகள் நான்கு – கூட
அவரைக்காய் கைப்பிடி ஒன்று !
பூசணிக்காய் சிறு துண்டு – ஒற்றை
முருங்கையும் சேர்ந்தால் நன்று !
உருளை நிச்சயம் வேண்டும் – கூடவே
மொச்சையும் சேர்ந்தது இன்று !
தேங்காயும் நல்தயிரும் தேவைக்கேற்ற உப்பும்
மிளகாயும் சேர்ந்திடும் உடனே !
அத்தனையும் சேர்ந்து ஓர் அருமைப் பதத்திலே
அன்னையும் தருவாள் அவியல் !
அவியலின் பெருமையை அளந்திட முயன்றேன் –
தோற்றது கவிதையே அன்றோ !
அன்னையின் கை மணம் அளவிட முயன்றேன் –
தோல்வி கவிஞனுக்கன்றோ !