முதல் பகுதியைப் படிக்க விரும்புவர்களுக்கு இதோ இணைப்பு:
“எம்பாவாய்” சிறுகதைபற்றி ….. (தொடர்ச்சி)
அபிமான எழுத்தாளர் வாஹினி காலை உணவருந்த வீட்டிற்கு வருகிறாள் என்பதை நன்மதியால் நம்பமுடியவில்லை. மைத்துனர் விநாயகம் சொல்லியபடி கேசரி, வடை, இட்லி, பொங்கல் என்று செய்துவிடலாம். ஆனால் வாஹினியுடன் என்ன பேசுவது?
விருந்து தயார். கணவர் (நல்லவேளையாக) கடை திறக்கச் சென்றுவிட்டார். தனக்குப் பிடித்த புடவையை அணிந்துகொள்கிறாள். இருவருக்கும் சேர்த்தே மல்லிகை தொடுத்து வைக்கிறாள்.
வாஹினியை வாசலிலேயே வரவேற்கிறார்கள். நேற்றையக் கூட்டத்துக்கு வந்த ஒரே பெண்மணி என நன்மதியை அடையாளம் காண்கிறாள் வாஹினி. சற்று நேரம் கழித்துச் சாப்பிடலாம் என்கிறாள் வாஹினி. உரையாடல் நடக்கிறது.
“எவ்வளவு நாவல் படிச்சிருப்பீங்க?”
“நூறு இருநூறு இருக்கும். கையில் கிடைக்கிறது எல்லாம் படிச்சிடுவேன். லைப்ரரியில் இருந்து கண்ணன் எடுத்துக்கிட்டு வந்து கொடுப்பான் என்றாள் அம்மா.
“நீங்கள் லைப்ரரிக்குப் போக மாட்டீங்களா?”
“இந்த ஊர்ல எந்தப் பொண்ணும் லைப்ரரிக்குப் போக மாட்டாங்க”
“ஏன் போன பூதம் பிடிசிக்கிடுமா?”
“போகணும்னு ஆசைதான். ஆனா விடமாட்டாங்க.”
மாதவிடாய் தினங்களில் இருக்க வேண்டிய இருட்டு அறை, கழிப்பறையில்லாத வீட்டில் ஒதுங்குவதற்கான குட்டிச்சுவர், எதற்கும் தேவைப்படும் கணவரின் அனுமதி போன்றவை வாஹினிக்கு ஆச்சரியத்தையும் கோபத்தையும் கொடுக்கின்றன..
வெளிநாட்டுக் கணவர், அவரைப் பேரிட்டு அழைக்கும் வாஹினி, கல்கத்தாவில் தனித்துவாழும் வாழ்க்கை … இவை நன்மதிக்கு வியப்பைக் கொடுக்கின்றன..
வாஹினியின் கட்டாயத்தின்பேரில் சேர்ந்தே உணவருந்துகிறார்கள்.
“நல்ல சாப்பாடு. இப்படி சாப்பிட்டா தூக்கம்தான் வரும். அப்புறம் வைட் போட்டிடும்.”
அம்மா சிரித்தபடியே சொன்னாள்
“கோவில் வரைக்கு ஒரு நடை போயிட்டு வந்தா பசிச்சிடும்”
“போகலாமா? எனக்கு யானை பாக்கணும்” எனக்கேட்டாள் வாஹினி.
கோவில் அருகே டீக்கடையில் டீ குடிக்கிறார்கள். பால்கோவா வாங்கிச் சாப்பிடுகிறார்கள். ஆண்டாள் பாசுரத்தை நன்மதியைப் பாடச்சொல்லி கைதட்டி ரசிக்கிறாள் வாஹினி.
எல்லோராலும் எழுத முடியுமா என்று நன்மதி கேட்கிறாள். நீகூட எழுதலாம் என்கிறாள் வாஹினி. நன்றாகப் பாடுகிறாய்.. பெரிய குடும்பம்… நிறைய அனுபவங்கள்.. கட்டாயம் எழுதமுடியும் என்கிறாள். “உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.” என்று கூறி கையசைத்து விடை பெறுகிறாள் வாஹினி.
அந்தச் ‘சட்டைக்காரி’யை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டதற்காக சீறுகிறார் நன்மதியின் கணவர். புத்தகம் படிப்பது நிறுத்தப்படுகிறது. புதிய புத்தகங்கள் வாங்கிவரமட்டேன் என்று மைத்துனரும், நூலகத்திலிருந்து கொண்டு வரமாட்டேன் என்று மகனும் உறுதி அளித்த பிறகு கோபம் குறைகிறது. இரண்டு மாதங்கள் கழித்து புத்தகங்கள் வீட்டிற்கு வர்த்தொடங்குகின்றன..
நன்மதியின் பெயரில் சிறிய பார்சல் வருகிறது. வாழ்க்கையிகேயே அவள் பெயருக்கு வந்த ஒரே தபால் அதுதான். நட்பைப் பாராட்டி வாஹினி எழுதியிருந்தாள். கூடவே ஒரு கைக்கடிகாரம். கடிதத்தை கண்ணீர் பொங்கப் படிக்கிறாள் நன்மதி.
அன்றிரவு அப்பா அம்மாவோடு மறுபடி சண்டை போட்டார். “உனக்கு எதுக்குடி அவள் வாட்ச் அனுப்பிவைக்குறா? ஏதாவது பணம் கிணம் குடுத்தியா” என்று திட்டினார். அம்மாவிற்கு வாஹினி எழுதிய கடிதத்தை கிழித்துப் போட்டுவிட்டு கடிகாரத்தை தூக்கி வேலைக்காரப் பெண்ணிடம் கொடுத்துவிட்டார். அம்மா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
தாத்தாவின் மறைவிற்குப் பிறகு குடும்பம் இடம் பெயர்ந்து தென்காசி போய்விடுகிறது. வாஹினியும் ஸ்ரீவில்லிபுத்தூரும் நினைவுகளில் இருந்து மறையத் தொடங்குகின்றன.
ஆனால் இன்று அம்மாவின் கடிதத்தைப் படித்தபோதுதான் அவள் வாஹினிக்கு நன்றி தெரிவிக்க பதில் கடிதம் எழுதியிருந்தாள் என்பது புரிந்தது. இதை எப்படி எழுதினாள், எப்படி அனுப்பிவைத்தாள் எதுவும் எனக்குத் தெரியவில்லை.
ஆனால் அம்மாவின் கடித வரிகளைப் படிக்கப் படிக்க அது என் மனதை வதைப்பதாக இருந்தது.
கடிதத்திலிருந்து சில வரிகள் …
உன் நாவல்களைப் படிக்கும்போது நீ எப்படிப் பேசுவாய் என நானாக உன் குரல் ஓன்றைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆச்சரியம், அதே குரலில்தான் நேரிலும் நீ பேசினாய்……
நீ மேடையில் பேசும்போதுகூட எவ்வளவு அறிவாளி நீ என்று நினைத்திருந்தேன். ஆனால் உன்னோடு பழகியபோதுதான் நீயும் என்னைப் போலவே பிரிவை, தீராத தனிமையை அனுபவிக்கிறாய் என்பதைப் புரிந்துகொண்டேன். நீயும் நிராகரிக்கப் பட்டிருக்கிறாய். பரிகசிக்கப்பட்டிருக்கிறாய்.. உனக்குள் பீறிடும் அன்பிற்கான ஏக்கத்தை என்னால் உணரமுடிகிறது…..
நீ எழுதப் போராடுபவள். நான் படிக்கப் போராடுபவள். என்னைப் போலுள்ள பெண்கள் எழுத வருவதற்கு இன்னும் நூறு வருஷமாகிவிடும்.
இனி எனக்கு கடிகங்கள் எழுதாதே. முடிந்தால் உன் கதையில் என்னை கதாபாத்திரமாக்கிவிடு.
எனக்கு இனி நீ தேவையில்லை. உன் நாவல்களே போதும்…
நன்மதியின் மகனான கதைசொல்லிக்குத் துக்கமும் வேதனையும் ஏற்படுகிறது. வாஹினி மறைந்துவிட்டதாகவும் தெரிய வருகிறது. அம்மாவின் பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்களுக்கான நூலகத்தை உருவாக்கவும் வாஹினியின் எல்லாக் கதைகளையும் படித்து, அம்மாவை கதாபாத்திரமாக ஆகியிருக்கிறாளா என்று தெரிந்துகொள்ளவும் தோன்றுகிறது.
அம்மா புத்தகம் படித்துக்கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் கூட என்னிடமில்லை என்பது அந்த நிமிடம் தாங்க முடியாத குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.
என்று கதை முடிகிறது.
இந்தக் கதைக்கு வைக்கப்பட்டுள்ள பொருத்தமான கவித்துவமான தலைப்பு கதைக்கு அழகூட்டுகிறது. மகனின் வார்த்தைகளில் கதை சொல்லப்படுவது தாக்கத்தை இன்னும் அதிகரிக்கிறது.