திரு சா கந்தசாமி அவர்களை விருட்சம் 100 வது இதழ் வெளியீட்டு விழாவிலும் மற்றும் பல இலக்கியமேடைகளிலும் சந்தித்திருக்கிறோம். நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும் கூட. அழகு தமிழில் அவர் கூறும் ஆணித்தரமான கருத்துக்களைக் கேட்பதற்கென்றே ரசிக உள்ளங்கள் வருவதுண்டு.
அவரைப்பற்றிய தகவல்கள்:
(நன்றி : விக்கிபீடியா)
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 1968ல் எழுதிய சாயாவனம் புதினம் பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. சவகர்லால் நேரு, பெரியார், உ. வே. சாமிநாதையர் மற்றும் வெ. சாமிநாத சர்மா போன்றோரின் படைப்புகளை கந்தசாமி இலக்கிய வாழ்க்கைக்கான தளமாக அமைத்தார்.”இதன் மூலம் எனக்கு கிடைத்த கல்வி உதவித் தொகை எனக்கு வலிமை, நம்பிக்கை மற்றும் தன்மை ஆகியவற்றைக் கொடுத்துள்ளது, இது எனது படைப்புகளை நுட்பமாக பாதித்திருக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.அவர் மேலும் மேலும் கூறுகிறார், “எழுத்துக்கலை கலை அலங்காரமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். சிறந்த இலக்கியம், நேரம், கலாச்சாரம், மொழி மற்றும் அரசியல் சித்தாந்தத்தின் தடைகள் ஆகியவற்றை கடந்து செல்லும் ஒன்றாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பாலினத்துடன் தொடர்புடையது அல்ல. மிக முக்கியமாக, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு வாசகர் ஒரு நாவலை அல்லது சிறுகதையை புரிந்துகொள்ள முடியும்.
தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது. இவரது தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் (terracotta) பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தூர்தர்ஷன் காவல் தெய்வங்கள் என்னும் 20 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது
விருதுகள் – சிறப்புகள்
சாயாவனம் புதினம் வீடியோ படமாக ஆக்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குட்ப ட்ட கல்லூரிகளில் பாடமாகவும் வைக்கப்பட்டு உள்ளது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தொலைந்து போனவர்கள் புதினம் தூர்தர்ஷன் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சுடுமண் சிலைகள் பற்றிய டாக்குமெண்டரி சர்வதேச விருது பெற்றது.
தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி ‘காவல் தெய்வங்கள்’ என்னும் 20 நிமிட ஆவணப் படத்தைத் தயாரித்து வெளியிட்டது.
சாயாவனம் ,சூர்யவம்சம், விசாரணைக் கமிஷன் என்ற புதினங்கள் ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
தக்கையின் மீது நான்கு கண்கள் (சிறுகதை), விசாரணைக் கமிஷன், சாயாவனம் போன்ற புதினங்கள் குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.
கலை வளர்ச்சிக்கான அவரது பங்களிப்புக்காக, தமிழ்நாடு அரசாங்கத்தின் லலித் கலா அகாடமி, மார்ச் 1995 இல் அவருக்கு ஒரு அங்கீகாரம் வழங்கியது.
1998ல் விசாரணைக் கமிசன் என்ற புதினத்திற்காக இவருக்குத் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
இவர் எழுதிய “நிகழ் காலத்திற்கு முன்பு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது
2009 ஆம் ஆண்டு கலைமாமணி விருது பெற்றார்.
(மோனிக்கா மாறன் எழுதிய விமர்சனக்குறிப்பு – ஜெயமோகன் இணையதளத்திலிருந்து )
தமிழின் முக்கியமான சிறிய நாவல்களில் ஒன்று சாயாவனம். சா.கந்தசாமியால் நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்நநாவலை ஒரு குறுநாவல் என்றே சொல்லலாம். சூழியல் கொள்கைகள் பிரபலமாகாதிருந்த காலத்தில் ஒரு காட்டின் அழிவை மட்டும் சுருக்கமான நேரடியான மொழியில் சொன்ன நாவல் இது. அந்த அடர்த்தியினாலேயே குறியீட்டுப்பொருள் கொண்டு பலவகையான அழிவுகளையும் இழப்புகளையும் காட்டுவதாக ஆகியது.
தமிழின் நவீனத்துவ இலக்கியத்தின் உச்சப்படைப்புகளில் ஒன்றாகச் சொல்லப்படவேண்டியது. உணர்ச்சிகரம் அற்றமொழிநடை. புறவயமான சித்தரிப்பு. செறிவான கதைநகர்வு. குறியீட்டுத்தளத்தில் மட்டுமே அனைத்து அர்த்தவிரிவையும் வைத்திருக்கும் அமைதி.
நாற்பதாண்டுகளுக்கு முன் ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே தன் சவால்’ என்று அறிவித்தபடி தமிழிலக்கியத்திற்குள் புகுந்தவர் சா.கந்தசாமி. நவீனத்துவத்தின் உச்சகட்ட அறைகூவல் அது.
வெறும் நிகழ்வுகளே இலக்கியத்திற்குப் போதுமானது, கட்டுக்கோப்பான கதை என்பது ஒரு அறிவுசார்ந்த உருவாக்கம், அதில் வாழ்கைக்கு அர்த்தத்தையும் மையத்தையும் கண்டுபிடிக்கும் முயற்சி உள்ளது. வாழ்க்கைக்கு அப்படி ஓர் அர்த்தமும் மையமும் இல்லை என்று கந்தசாமி சொன்னார்
அவரது புனைவுலகம் அந்த தரிசனத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. மிக எளிய நேரடியான மொழியில் எழுதப்பட்ட அவரது கதைகள் பெருவாரியான வாசகர்களுக்குரியவை அல்ல. அவை பெரும்பாலும் மேல்தளத்தில் மிகத்தட்டையானவை. வாசகன் வாழ்க்கையைப்போலவே அந்நிகழ்வுத்தொகுதியையும் தன் சொந்த கற்பனையால் அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பவை
பிரபல எழுத்தாளர் இமையம் அவர்கள் கருத்து:
சா.கந்தசாமியின் 172 சிறுகதைகளை ஆரம்பகால, பிற்கால கதைகள் என்று பிரிக்கலாம். இந்த பிரிவுகளிலிருந்து கிராமத்தை பின்புலமாகக் கொண்ட சமூக நிகழ்வுகளை, பொருளாதாரப் பிரச்சனைகளை, தனிமனிதப் பிரச்சனைகளை, சிறுவர்களை, அரசியலை மையமாகக் கொண்ட கதைகள் என்றும் பிரிக்கலாம். ஒவ்வொரு கதையும் சமூகத்தின் ஒவ்வொரு முகத்தையும் ஒவ்வொரு காலக்கட்டத்தையும் மட்டும் காட்டவில்லை. சமூகத்தின் சகலவிதமான மனிதர்களையும் காட்டுகிறது. இந்தக் கதைகளின் வழியே நாம் அந்தந்த கால சமூகத்தின் உயிர்நாடியை அறிந்துகொள்ள முடியும்.
தினமணி கொண்டாட்டம் வாரப் பத்திரிகையில் ” என்றும் இருப்பவர்கள்” என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர்கள் – ஆளுமைகள் பற்றி ஒரு தொடர் எழுதி வருகிறார். நகுலன், சுத்தானந்த பாரதியார், சுந்தர ராமசாமி, கல்கி, சிலோன் விஜேந்திரன், லா சா ரா மற்றும் பலரைப் பற்றி சுருக்கமாக ஆனால் மனதைத் தொடும்வரையில் எழுதியிருக்கிறார்.
சா கந்தசாமியைப் பற்றிய ஆவணப்படத்தைப் பாருங்கள்!!