“பிள்ளையவர்கள் – ஐயரவர்கள் – கி.வா.ஜ” (குரு – சீடர் பரம்பரை)
புத்தக அறிமுகம் : தமிழ் மூவர். ஆசிரியர்: கீழாம்பூர் – கலைமகள் பப்ளிகேஷன்ஸ்).
தமிழுக்கு எப்போதுமே மூன்று ராசியான எண்! முத்தமிழ், முக்கனி, முப்பால், படைத்தல், காத்தல், அழித்தலைச் செய்யும் மூன்று தெய்வங்கள், தமிழ் மூவர் எனப்படும் முத்துத்தாண்டவர், அருணாசலக் கவி, மாரிமுத்தாப் பிள்ளை, தேவாரம் பாடிய மூவர் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞான சம்பந்தர் – இந்த வரிசையில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் எழுதியுள்ள புத்தகம் “தமிழ் மூவர்”!
குரு – சீடர் பரம்பரையை அழகான தமிழில் தந்துள்ளார். மிகச் சுருக்கமாக ஆனால் மிக சுவாரஸ்யமாக மூன்று தமிழ்க் காவலர்களின் – மகாவித்துவான் திரிசிரபுரம் ஶ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மகா மகோபாத்யாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் மற்றும் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் – வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்துள்ளார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் பெருமைக்குரிய மாணவர் உ.வே.சா. உ.வே சா அவர்களின் பெருமைக்குரிய முதல் மாணவர் கி.வா.ஜ. பிள்ளையவர்களின் வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா. எழுதினார். உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரம்’ நூலைத் தொடர்ந்து ‘என் ஆசிரியப் பிரான்’ என்று ஐயர் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதி நிறைவு செய்தவர் கி.வா.ஜ. அவர்கள் – இந்த குரு – சீடர் பரம்பரையை எளிய நடையில் எல்லோரும் படித்து அறியும் வகையில் எழுதியுள்ள கீழாம்பூர் பாராட்டுக்குரியவர்!
மீனாட்சிசுந்தரம் பிள்ளை: (1815 – 1876):
மலைக்கோட்டை மெளன ஸ்வாமிகள் மடத்தில் தங்கியிருந்த வேலாயுத முனிவர் அவர்களைக் காலை மாலைகளில் தவறாமல் சென்று, முயன்று, வழிபட்டுப் புதிய நூல்களைப் பிரதி எடுத்தும், படித்தும், படித்த நூல்களில் உள்ள ஐயங்களை வினாவித் தெளிந்தும் வருவாராம் பிள்ளையவர்கள் (தமிழ் மூவர்களின் எழுத்து நடையைப் பல இடங்களில் அப்படியே கையாண்டுள்ளார் கீழாம்பூர் – அந்த நடை வாசகனைப் பிரமிக்க வைக்கிறது!).
வீடுதோறும் பிச்சை (பிட்சை) எடுக்கும் பரதேசி ஒருவர், தண்டியலங்காரத்தில் நல்ல பயிற்சி உள்ளவராம் – ஆனால் அவர் யாரையும் மதிக்காமலும், பாடம் சொல்லிக்கொடுக்காமலும் இருப்பாராம். அவருடன் தெருதோறும் சென்று, அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து, அவரிடம் இருந்த அந்தப் புத்தகத்தைப் பெற்று, எழுதிக் கொண்டு பாடமும் கேட்டாராம் பிள்ளையவர்கள் – என்னே ஒரு தமிழ்ப் பற்று, மெய்சிலிர்க்க வைக்கிறது.
நூல்களைத் தொகுத்து வைப்பது, முத்துக் கோர்த்தாற்போல் அழகிய எழுத்துக்களில் எழுதி வைப்பது என வருங்கால மாணாக்கர்களுக்காகச் செய்துள்ளார். கம்பராமாயணத்தை மூன்று முறை எழுதியிருக்கிறார். மாணவர்களுக்கு ஏட்டில் எழுதும் பயிற்சியை உண்டாக்கினார்.
பாடவேண்டிய விஷயங்களை ஒரு வகையாக மனதில் ஒழுங்குபடுத்திக்கொண்டு, ஒரே மூச்சில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடுவாராம் பிள்ளையவர்கள்!
தல புராணங்கள், சரித்திரம், மான்மியம், பிற காப்பியங்கள், பதிகம், பதிற்றுப் பத்தந்தாதி, திரிபந்தாதி, யமக அந்தாதி, வெண்பா அந்தாதி, மாலை, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா, தூது, குறவஞ்சி, சிலேடை வெண்பா என இவர் எழுதியவை தமிழுக்குச் சேர்த்து வைத்திருக்கும் பெருஞ்சொத்து ஆகும்!
‘பிள்ளையவர்கள்’ என்றாலே, வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைதான் என்பது இவரது தமிழ்த் தொண்டுக்குக் கிடைத்துள்ள பெரிய அங்கீகாரம்!
உ.வே. சாமிநாதையர்; (1855 – 1942):
பிள்ளையவர்களின் நிழல் போலத் தொடர்ந்து அவரிடம் கல்வி பயின்று வந்தவர்! ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுதும் அலைந்து சுவடுகளைத் தேடிப் பிடித்து, பதிப்பித்துத் தந்த உ.வே.சா அவர்களைத் ‘தமிழ்த் தாத்தா’ என்று அடைமொழி தந்து அழைத்தவர் எழுத்தாளர் கல்கி !
பாஸ்கர சேதுபதி இவருக்கு, இவரது தமிழ்த் தொண்டுக்கு, ஒரு கிராமத்தையே எழுதி வைக்க முன்வருகிறார்!
ஓவியத்திலும், சங்கீதத்திலும் ஈடுபாடு உண்டு. ஒரு நிலையில், இலக்கியமா, சங்கீதமா என்ற போது, பிள்ளையவர்களின் அறிவுரைப் படி, கோபாலகிருஷ்ண பாரதியிடம் பயின்று வந்த சங்கீதத்தைக் கைவிடுகிறார். ஆனாலும் பின்னாளில் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும்போது, செய்யுட்களைப் பாட்டாகவே பாடுவார்!
“ஐயர் அவர்களுடைய பதிப்புக்களால் தமிழ்மொழியானது எந்த மொழிக்கும் தாழ்ந்தது அல்ல என்பது நிரூபணம் ஆகிறது” – ஜி.யூ.போப் அவர்களின் குறிப்பு!
தனக்கு வேலை வாங்கி கொடுத்த தியாகராச செட்டியாரின் மேசையை தேடிக் கண்டுபிடித்து, தனக்காக வாங்கிக்கொள்ளும் உ.வே.சா. அவர்களின் நன்றி உணர்ச்சி வியக்க வைப்பது.
மகாகவி பாரதியுடனான சந்திப்பு, நீண்ட காலம் வேலை செய்து பதிப்பித்த “பெருங்கதைப் பதிப்’பைத் தன் ஆசிரியருக்கு உரிமையாக்குவது, தாகூருடன் ஆன சந்திப்பு என பல சுவாரஸ்யங்களை சொல்கிறார் கீழாம்பூர்!
பாரதியார், தாகூர் ஆகிய இரு மகா கவிகளும் ஐயரவர்களை அகத்திய முனிவருக்கு ஒப்பானவர் என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டாம் உலகப் போர் காலம் – சென்னையிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்ல வேண்டும் என்றபோது அரை மனதுடன் ஒத்துக்கொள்கிறார். அங்கு சென்றாலும் மனமும் உடலும் சோர்ந்தே இருக்கிறார் – தனது புத்தகங்களைப் பிரிந்து வந்த துயரம். எனவே ஏட்டுச் சுவடிகள், குறிப்புகள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் முதலியவற்றைச் சென்னையிலிருந்து எட்டு வண்டிகளில் ஏற்றித் திருக்கழுக்குன்றத்துக்கு அனுப்புகிறார்கள். மகிழ்ச்சியும், மனத் தைரியமும் அடைகிறார் ஐயர் அவர்கள்!
தன்னால் பல குறிப்புகளைப் பார்வையிடாமல் போன வருத்தமே ஏப்ரல் 10, 1942 அன்று அவர் அமரர் ஆகக் காரணமாயிற்று என்று உ.வே.சா. அவர்களின் மகன் கல்யாண சுந்தரையர் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
‘ஐயர் பதிப்பு’ என்றே வழங்கப்படும் அவரது பதிப்புகளைப் பட்டியல் இட்டிருக்கிறார் கீழாம்பூர் – ஐங்குறு நூறு, கபாலீஸ்வரர் பஞ்சரத்னம், குறுந்தொகை, கோபால கிருஷ்ண பாரதியார் வரலாறு, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, தமிழ் விடு தூது, நல்லிரைக் கோவை (நான்கு பகுதிகள்), பத்துப்பாட்டு மூலம், பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு, பெருங்கதை, மணிமேகலை, மான் விடு தூது, மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் (2 பகுதிகள்), வித்துவான் தியாகராசச் செட்டியார் ஆகியவை அவற்றில் சில!
கி.வா.ஜகந்நாதன்: (1906 – 1988)
பல தமிழ்ப்பாக்களுக்கு விளக்க உரை எழுதியவர் கி.வா.ஜ. அதனால்தானோ என்னவோ அவருக்குச் சின்ன வயதிலேயே பிடித்த இனிப்பு, பொருள்விளங்கா (பொரிவிளங்காய்) உருண்டை என்கிறார் கீழாம்பூர்!
குளித்தலைப் பள்ளிக்கூடத்தில் இவரது முதல் பாடலைப் பாராட்டிய தமிழாசிரியர் கொங்கணாம்பட்டி நரசிம்மையர் – தன் ஆற்றலைப் பாராட்டிய அந்தத் தமிழ்ப் பண்டிதரை கி.வா.ஜ. அவர்கள் மறந்ததேயில்லை!
காந்தமலை முருகன் சந்நிதியில் அருணகிரிநாதர் ஜெயந்திக்கு “அன்பு” என்ற தலைப்பில் பேசியதே இவரது கன்னிப் பேச்சு!
பெரும்பாலும் சட்டை போடாமல் இருந்த காலத்தில், ‘பூஜ்யர் த்ரோவர் துரை’க்கும் அவர் மனைவிக்கும் தமிழ் சொல்லிக்கொடுக்கப் போகும்போதுதான் முதன் முதலாகக் கதர் ஜிப்பா ஒன்று தைத்துக்கொள்கிறார். பின்னர், வாழ்நாள் முழுவதும் கதராடையையே அணிந்து வந்தார் கி.வா.ஜ.!
சிறந்த முருகனடியாரான கி.வா.ஜ. தனது இருபத்தி இரண்டாம் வயதில், தேவாரம் பாராயணம் செய்யும் சிறந்த சிவனடியாரான ஶ்ரீமத் ஐயருடன் (வயது எழுபத்திரண்டு) இணைந்தது தமிழர் செய்த நல்வினைப் பயனே என்றுதான் சொல்ல வேண்டும்!
கலைமகள் ஆசிரியர் குழுவில் கி.வா.ஜ. வை இஅணைத்து விட்டதும் ஐயர் அவர்களே – இவரது கலைமகள் வாழ்த்து, முதல் இதழில் முதல் பக்கத்தையே அலங்கரித்தது!
கி.வா.ஜ. அலமேலுவைப் பெண்பார்க்கும் வைபவத்தையும், அதற்குக் காரணமான நிகழ்வுகளையும், ஐயர் அவர்கள் வீட்டில் நடக்கும் நிச்சயதார்த்தத்தையும் மிக சுவாரஸ்யமாக, ஒரு சிறுகதை போல எழுதியுள்ளார் கீழாம்பூர்!
1934 ல் கலைமகள் ஆசிரியர் திரு டி எஸ் ராமச்சந்திரையர் காலமாகி விட, ஆர்.வி சாஸ்திரி பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர், பதிப்பாசிரியர் நாராயணசாமி ஐயர், உ.வே.சா. அவர்களுடன் கலந்து பேசி, ஆரம்பத்திலிருந்து உதவி ஆசிரியராகப் பணி புரியும் கி.வா.ஜ. வே இந்தப் பொறுப்புக்கு ஏற்றவர் என முடிவுசெய்கிறார். அன்று கலைமகள் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர், தன் காலம் முடியும் வரை கலைமகள் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டார் கி.வா.ஜ.
காஞ்சி காமகோடி பீடாதிபதி பெரியவர்களால் ‘வாகீச கலாநிதி’, ‘திருமுருகாற்றுப்படை அரசு’ என்று கெளரவிக்கப் பட்டவர் கி.வா.ஜ.
சிறுகதைப் புதினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, இலக்கியத்தை வளர்த்தவர். அகிலன், மாயாவி, அநுத்தமா, ராஜம்கிருஷ்ணன், ஆர்.சூடாமணி, பி.வி.ஆர்., எல் ஆர் வி. போன்றவர்களின் சிறுகதைகளை வெளியிட்டு, இவர்களை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தவர் கி.வா.ஜ.!
சிலேடைக்கும், நகைச்சுவைக்கும் பெயர் பெற்ற கி.வா.ஜ. 250 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இப்புத்தகத்தை வாசித்து முடித்தபோது, ஒரு நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சியை உடனிருந்து அனுபவிக்கும் உணர்ச்சி ஏற்பட்டது.
சின்ன ‘கேப்ஸ்யூல்’ என்று சொல்லக்கூடிய அளவில், தமிழ் இலக்கியத்தில் முக்கியமான மூன்று ஆளுமைகளைப் பற்றி கீழாம்பூர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது – அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் இது!
டாக்டர் ஜெ.பாஸ்கரன்.