குவிகம் அக்டோபர் மாத நிகழ்வுகள்
அக்டோபர் 6 அன்று குவிகம் இல்லத்தில் இலக்கிய அமுதம் சார்பில் கோமல் ஸ்வாமிநாதன் பற்றி திரு இந்திரன் அவர்கள் பேசினார்கள்.
இந்திரன் அவர்களுக்கும் கோமல் அவர்களுக்கும் தொடர்பு சுபமங்களா இதழ் காரணமாகவே இருந்தது. ஒரு மாத இதழை ஒரு இலக்கிய இதழாக மாற்றியதோடு கலை இலக்கியம் சார்ந்த வேறுபட்ட கருத்துக்கள் கொண்ட பலரை ஒரே பத்திரிகையில் எழுதவைத்து சாதனை படைத்த கோமல் ஒரு ‘டெமோக்ராட்’ என்றார் இந்திரன்.
எந்த கடுமையான விமர்சனத்தையும் (கண்ணியம் குறையாதிருந்தால்) வெளியிட கோமல் தயங்கியதே இல்லை என்றார். கோமல் மறைவிற்குப்பின் இதழைத் தொடர அதன் பதிப்பாளர்களுக்கு எண்ணம் இல்லை. எனவே சுபமங்களா கோமலுடன் உடன்கட்டை ஏறிவிட்டது என்று சொல்லப்பட்டது என்றார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அக்டோபர் 13 அன்று ஊடகவியலாளர் மற்றும் சினிமா விமர்சகர் செந்தூரம் ஜகதீஷ் அவர்கள் கலந்துகொண்டார்.
ஒரு சிற்றிதழ் மிகக்குறைந்த சந்தாதாரர்களுக்காகவே வெளிவரும். மற்ற வார மாதப் பத்திரிகைகள் போல் கடைகளில் காசுகொடுத்து வாங்கப்படுவது மிக அரிது. இவர் ‘செந்தூரம்’ தொடங்கியபோது திரு பெரியார்தாசன் இவருக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். சிற்றிதழ் எத்தனை பிரதிகள் அடிக்கலாம் என யோசித்துக்கொண்டு இருந்தபோது 500 பிரதிகள் அடிக்க வைத்திருக்கிறார் பெரியார்தாசன். அவர் பங்குபெறும் கூட்டங்கள் தோறும் ‘செந்தூரம்’ இதழ் விற்க வைத்திருக்கிறார். அந்த அளவிற்கு சிறுபத்திரிகை விற்கப்பட்டது பெரிய ஆச்சரியம், செந்தூரம் சினிமா சிறப்பிதழ் கமலஹாசன், கலைஞர் உட்பட பல பிரமுகர்களின் நூலகத்தில் இருந்தது என்பது அந்த இதழுக்கு ஒரு பெருமைதான்.
ஜகதீஷ் அவர்களின் இன்னொரு ஆர்வம் ஓஷோ பற்றியது. பல விஷயங்களுக்கு ஓஷோ அளிக்கும் விளக்கங்களும் வழிகாட்டுதலும் தன்னை முற்றிலும் கவர்ந்தது என்றார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அக்டோபர் 20 அன்று நடந்த அளவளாவல் நிகழ்வில் கல்யாணமாலை நிறுவனர்கள் திரு மோகன், திருமதி மீரா நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்,
தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சிகள் செய்து வருகையில் “கல்யாணமாலை” நிகழ்வுக்கான எண்ணம் உருவாகியது. அதை நடத்திவைக்க அப்போது பிரபலமாக இருந்த சிலரை அணுகியிருக்கிறார்கள். நிகழ்வினை வடிவமைக்கும் அடிப்படை கருத்துகள் இவர்களுக்கு சரிப்பட்டு வரவில்லை. சில வாரங்கள் கழித்து மோகன் அவர்களே உரையாடல் நிகழ்த்துபவராக பணி செய்ய “கல்யாணமாலை” பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரே தொலைக்காட்சியில் இருபது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் ஒரே நிகழ்வு என்னும் பெருமையைப் பெற்றது.
அனுபவத்திலிருந்து குறிப்பிட்ட செய்திகளில் ஒன்று ..
மிக அதிகமான நிபந்தனைகளுடன் வரன் பார்க்கத் தொடங்குபவர்கள் பல சம்பந்தங்களை தட்டிக் கழித்து பல வருடங்கள் செலவழித்துவிடுகிறார்கள். கடைசியில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத்துணை முதலில் உறுதியாக இருந்த பல நிபந்தனைகளுக்கு மாறாகவே இருப்பதுதான் முரண்.
=======================================================================================
|
வழக்கமாக கடைசி சனிக்கிழமை நடைபெறும் இலக்கியச் சிந்தனை- குவிகம் இலக்கியவாசல் மாத நிகழ்வு அக்டோபர் 29 அன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்றது. ஆழ்வார்ப்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்திற்குப் பதிலாக குவிகம் இல்லத்தில் நடைபெற்றது.
இலக்கியச் சிந்தனை நிகழ்வாக திரு தேவராஜ சுவாமிகள் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பற்றி உரையாற்றினார். விப்ரநாராயணா வாழ்க்கையின் நடுவில் இறைவன் சேவையை விட்டு சிலகாலம் விலகி இருந்திருக்கிறார். பின்னாளில் தொண்டர் அடிப்பொடியாழ்வாராக மலர்ந்தார். அவரது பங்களிப்பான திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருமாலையின் சிறப்புகளை தேவராஜ சுவாமிகள் எடுத்துரைத்தார்.
குவிகம் இலக்கிய வாசல் சார்பில் எழுத்தாளர் உஷா சுப்பிரமணியன் தன்னை எழுத்தாளர் என்பதே பலருக்கு மறந்துபோயிருக்கும் என்று தொடங்கினார். எப்போதாவது தான் எழுதிவருகிறேன் என்று சொன்னார்.. பெண்ணியக் கதைகள் பல எழுதியிருந்தாலும் தங்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை தவறாகப் பயன்படுத்தும் பெண்களை கண்டித்தும் எழுதியிருக்கிறேன் என்று சொன்னார்.
எழுபதுகளில் எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதிவந்த அவர் நிறுவனங்களுக்காகவும் விளம்பரங்களுக்காகவும் படங்கள் எடுக்கும் தொழிலில் முழுமையாக ஈடுபட்டதால் எப்போதாவது எழுதும் எழுத்தாளர் என்று ஆகிவிட்டதாகத் தெரிவித்தார்.