இரண்டாம் புலிகேசி
பெயருக்குத் தகுந்தபடி வாழ்ந்தவன் அவன்!
அவன் பெயரைச் சொன்னாலே சும்மா அதிருதில்ல..
‘புலி வருது.. புலி வருது’ – என்று சொன்னால் ஒரு நாள் புலி வரும் என்பார்கள்.
ஆமாம். புலி தான் வருகிறது.
இரண்டாம் புலிகேசி! இன்று நமது ஹீரோ!
மகேந்திர பல்லவன், ஹர்ஷன் என்று பல ஜாம்பவான்கள் ஆண்ட காலத்தில்… அவர்களுக்கே ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தவன்..சிம்ம சொப்பனம் என்பது தவறு.. புலி சொப்பனம் என்று தான் சொல்ல வேண்டும்.
முன்னுரை:
கர்நாடகத்தைசேர்ந்த கடம்ப அரசின் சிற்றரர்களாக இருந்தவர்கள் சாளுக்கியர்கள்.
முதலாம் புலிகேசி காலத்தில் கடம்பர்களை அடித்துவிரட்டிவிட்டு ஆட்சியைப்பிடித்தார்கள். கிபி 540ம் ஆண்டு முதலாம் புலிகேசி மன்னர் ஆட்சிக்கு வருகிறார். ஆட்சிக்கு வந்த புலிகேசி செய்த முதல் வேலை அஸ்வமேத யாகம் செய்தது. அஸ்வமேத யாகம் செய்தால் அவர் மாபெரும் சக்ரவர்த்தி எனப்பொருள். அந்த யாகத்தைசெய்து முடித்து சுற்றுவட்ட சிற்றரசுகளை எல்லாம் தன் ஆட்சியில் சேர்த்துவிட்டு நிமிர்ந்தால் வடக்கே வலிமையான ஹர்ஷரின் ராஜ்யமும், தெற்கே பல்லவரின் ராஜ்ஜியமும் தான் இருக்கிறது. இப்படி ஒரு பேரரசை உருவாக்கிவிட்டு அவர் மறைந்தார்.
அவரது மகன் கீர்த்திவர்மன்.
கீர்த்திவர்மனின் மகன்- பெயர் எறெயா (இறையா).
தலைநகரம் வாதாபி.
கிபி 597 ஆம் ஆண்டில் இறையாவின் தந்தை கீர்த்திவர்மன் இறந்தபோது இவனுக்கு 8 வயது. இதனால் இவனது சிற்றப்பனார் மங்களேசன் ஆளுனராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வந்தான். மங்களேசன் திறமையான ஆட்சியாளனாக இருந்தான். அவனது காலத்தில் சாளுக்கிய அரசின் எல்லைகள் விரிவடைந்தன.
பதவி மோகம் – யாரை விட்டது?
ராமாயண காலத்திலிருந்து – இந்நாள் வரை பதவிக்காக மோசம் செய்வது என்பது நடைமுறையில் உள்ளது தானே!
எரேயா (இறையா) வளர்ந்தான்.
வருடம் 610:
இறையா 21 வயதினன்.
போர்க்கலைகளில் பெரும் திறமை அடைந்தான்.
பாகுபலியைப் போல வீரமென்பதை உதிரத்தில் கலந்தான்.
மக்களின் மனத்திலும் இடம் பிடித்தான்.
அரசனானவுடன் தான் வெற்றிகொள்ளப் போகும் அரசுகளை எண்ணி இன்பக்கனவு கண்டான்.
மங்களேசன் யோசித்தான்: ‘இறையாவின் செல்வாக்கு பெருகிக்கொண்டே போகிறது. இப்படியே போனால் அவனே ஆட்சியில் வந்து விடுவானோ’ என்ற பயம் ஏற்பட்டது.
தனது வழியில் அரசுரிமையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு என்ன வழி என்று யோசித்தான்.
உடனே தனது மகன் கோவிந்தனை முடிக்குரியவனாக அறிவித்து யுவராஜாவாக்கினான்.
இறையா: ‘இது சதி- சித்தப்பன் துரோகி’ – என்றான்.
மங்களேசன் இறையாவை ரகசியமாக கொன்றுவிட ஏற்பாடுகளைச் செய்தான்.
இறையா அதை அறிந்து கொண்டு வாதாபியை விட்டுத் தப்பிச்சென்று பாணா (கோலார்) பகுதியில் மறைந்திருந்தான்.
தனது கூட்டாளிகளின் உதவியுடன் படை திரட்டினான்.
இறையா பயம் என்பதை சற்றும் அறியாதவன்.
மங்களேசன் மீது போர் தொடுத்தான். எலப்பட்டு சிம்பிகே (இளப்பட்டு சிம்பிகை) என்னும் இடத்தில் இடம்பெற்ற போரில் மங்களேசன் தோல்வியடைந்தான். கொல்லப்பட்டான்.
இறையா இரண்டாம் புலிகேசி என்னும் பெயருடன் சாளுக்கிய அரியணையில் அமர்ந்தான்.
தோள்கள் தினவெடுத்தது என்று சொல்வார்கள்.
புலிகேசி அப்படிப்பட்ட மனிதன்.
மங்களேசன் காரணம் உள்நாட்டுக் குழப்பங்கள் இருந்ததால் – அருகிலிருந்த சிற்றரசர்கள் துணிவு பெற்றனர். பாதாமியை வெல்ல இது தருணம் என்று படையெடுத்தனர். புலிகேசி அவர்கள் அனைவரையும் பீமா நதிக்கரையில் போரிட்டான். மங்களேசன் மகன் கோவிந்தன் சரணடைந்தான். இன்னொரு மகன் அப்பாயிகா தப்பிப் பிழைத்து ஓடிப்போனான். ஐஹோலே என்ற இடத்தில ஒரு பெரிய தூணை நிறுவி இந்த வெற்றியைப் பறைசாட்டினான்.
வெற்றி ஒரு போதை மருந்து! வெல்ல வெல்ல மேலும் தினவெடுக்கும் தோள்கள். பாணா, கடம்பர்கள், தலைக்காடு கங்கர்கள், கொங்கண மண்டலத்தை ஆண்ட மயிலர்கள் –அனைவரையும் போரில் வெற்றி கொண்டான். கோசலம், கலிங்கம் எல்லாம் எதிர்ப்பின்றி சரணடைகின்றன. ஆந்திராவில் வெங்கிபகுதியில் தன் தம்பி விஷ்ணுவர்த்தனை ஆட்சியில் அமர்த்த்கிறான். விஷ்ணுவர்த்தன் கீழைசாளுக்கிய ஆட்சியை ஏற்படுத்துகிறான்.
இங்கே தான் ஒரு சிறு காதல் கதை மலர்கிறது.
இந்த ரணகளத்திலும் நமக்கு ஒரு கிளுகிளுப்பு கிடைக்கிறது.
கங்கா நாட்டைப் படையெடுக்கும் பொழுது…
நதிக்கரையில் ஒரு பெண் தாமரை! சுற்றிலும் அல்லி மலர்கள் போல பணிப்பெண்கள்! நிலவைச் சுற்றி நட்சத்திரங்கள்!
ஒரு புலி பூனையாகிறது.
‘யார் அந்த நிலவு…ஏன் இந்தக் கனவு’ – என்று மயங்கினான்.
காதல் எப்பேர்ப்பட்ட வீரனையும் குழைத்து விடுகிறது.
அவள் கங்கா மன்னன் துர்வினிதாவின் இளைய மகள்.
கங்கா மன்னனை போரில் வென்றதும்.. புலிகேசி கங்கா மன்னனிடம்..
“மன்னா! எனக்கு ஒரு பரிசு வேண்டும்.” – உறுமும் குரல் இப்பொழுது கெஞ்சுகிறது.
அது காதல் படுத்தும் பாடு!
“உங்கள் இளைய மகள் எனக்கு மகாராணியாக வேண்டும். அவள் மூலம் பிறக்கும் என் மகன் விக்ரமாதித்யன் உலகை ஆள்வான்.” – இப்படி பிறக்காத மகனுக்குப் பெயருமிட்டான்.
திருமணம் சிறப்பாக நடந்தது.
சுபம்.
சில வருடங்கள் … அமைதிக்காலம்.
பாரசிக மன்னன் குஸ்ரு அரண்மனைக்கு தூதனை அனுப்புகிறான்.
அவர்களும் புலிகேசி மன்னரின் அரண்மனைக்கு தூதனை அனுப்புகிறார்கள்.
அந்த பாரசீக தூதனை புலிகேசியின் அரண்மனையில் வரவேற்கும் காட்சி அஜாந்தாவில் ஆசாகிய சித்திரமாக இன்றும் காட்சியளிக்கிறது.
வாதாபியின் கணபதி பிகப்பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்தது.
அரண்மனையில் ஆஸ்தான கவிஞன் ‘ரவிக்கிருதி’!
சமஸ்கிருதம் மற்றும் கன்னடத்தில் அவன் எழுதிய கவிதைகள் ஒரு மிகச் சிறந்த இலக்கியத் தொகுப்பு.
புகழ் பெற்ற சீன யாத்திரிகர் புலிகேசியின் அரண்மனைக்கு சிறப்பு விருந்தினராக வருகிறார்.
அவரும் புலிகேசியையும் அவனது ஆட்சியையும், பாதாமி (வாதாபி) நகரத்தின் சிறப்பையும் பாராட்டி எழுதுகிறார். புலிகேசியின் தொலைநோக்கு அறிவையும் – அனைவரிடமும் அன்பு செலுத்தும் தன்மையையும் வெகுவாக சிலாகித்துள்ளார்.
தென்னிந்தியாவில் முதல் முறையாக தங்க நாணயத்தை புலிகேசி வெளியிடுகறான்.
அதில் சாளுக்கிய சின்னமான ‘வராஹா’ (காட்டுப்பன்றி) பொறித்தான்.
அந்நாளிலிருந்து தங்க நாணயங்களுக்கு வராஹன் என்ற பெயர் இலக்கியத்தில் நிலைத்தது.
இன்றும் திருமணங்களில் ‘ ஆயிரம் கட்டி வராஹன்’ – என்று சொல்வது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்!
ஐந்து மகன்கள் பிறந்தனர்.
சந்திராதித்யா, ஆதித்யவர்மா, விக்ரமாதித்யா, ஜெயசிம்மா, அம்பேரா!
புலி பசித்தால் புல்லைத் தின்னுமா? சரி! நாம் சண்டைகளைத் தொடர்வோம். சரித்திரம் என்றாலே சண்டை என்று ஆகிவிட்டது!
617–18இல் இரண்டாம் புலிகேசி வேங்கி மீது படையெடுத்து அதனைக் கைப்பறினான்.
பல்லவர்களின் நட்பு நாடாக இருந்த விஷ்ணுகுண்ட இராச்சியத்தை சாளுக்கியப் பேரரசை விரைவாக விரிவாக்கும் நோக்குடன் இரண்டாம் புலிகேசி கவர்ந்தான். இதனால் சினமுற்ற பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் பகையுணர்ச்சி வளர்ந்த்தது .புலிகேசிக்கு பல்லவன் மகேந்திரவர்மன் மீது அப்படி ஒரு கடுப்பு!
கி பி 620:
புலிகேசி முப்பது வயது இளைஞன்!
பல்லவன் மேல் படைஎடுக்கிறான். பல்லவ நாட்டின் மேல் படை எடுத்து வந்து அதன் வடபகுதியாகிய ஆந்திர பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பல்லவத் தலைநகரமான காஞ்சிபுரத்தின் மேல் புலிகேசி படையெடுத்து வந்தான்.
புள்ளலூர்ப் போர் (Battle of Pullalur) 618-19 ஆண்டுகளில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுக்கும் இரண்டாம் புலிகேசிக்கும் இடையில் காஞ்சிபுரத்தில் இருந்து பத்துக்கல் (15 கி.மீ.) தொலைவில், அரக்கோணம் சாலையில் திருமால்பூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள புள்ளலூர் அல்லது பொள்ளிலூர் என்னும் இடத்தில் நடந்தது. கங்க மன்னன் புலிகேசிக்கு உதவி செய்தான். இந்தப் போரில் பல்லவ இளவரசனாகிய நரசிம்மவர்மனும் போர் செய்திருந்தான். புலிகேசியின் ஆறுமடங்கு படைகளுடன், பாரம்பரியப் படைகளும் மற்றவர்களுமாக, நூறு கொடிகளுடனும் குடைகளுடனும் இருட்டில் அப்பழுக்கற்ற யானைகளுடன் வீரத்துடனும் ஆற்றலுடனும் எதிரிகளின் படைகளைக் கடைந்தனர்; அவனது மேலெழும் அதிகாரத்தை எதிர்த்த பல்லவ மன்னனின் சிறப்பு, அவனது அழிபட்ட படைகளின் தூசியால், காஞ்சிபுரத்தின் சுவர்களுக்குப் பின்னால் மறைந்தது.
(வரலாற்றில் ..புள்ளலூர், பின்னர் பொள்ளிலூர், என்ற இந்தச் சிற்றூரில் மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் நடைபெற்றுள்ளன: 611-12இல் பல்லவர்களும் சாளுக்கியர்களும் மோதிய இதே இடத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஐதர் அலிக்கும் ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போரின் 1780, 1781 பொள்ளிலூர் போர்கள் நடந்தேறின.)
புள்ளலூர் வெற்றியைத் தொடர்ந்து புலிக்கேசி காஞ்சியைத் தாக்கினான். ஆனால் பல்லவத் தலைநகரின் கோட்டையைத் தகர்க்க இயலவில்லை. பின்னர் தெற்கு நோக்கிச் சென்று தமிழ்நாட்டின் வடக்கு, நடுப் பகுதிகளில் காவிரி ஆறு வரை சென்றான். சேர, சோழ,பாண்டிய மன்னர்களின் அடிபணிதலைத் தொடர்ந்து வாதாபி திரும்பினான்.
இங்கு ஒரு சிறுகதை:
வாதாபி திரும்பும் புலிகேசியின் படைகள் – புள்ளலூர் வழியாக செல்லும்போது மகேந்திரவர்மனது படைகள் தாக்கி பெரும் சேதம் விளைவித்தது. எஞ்சியோர் வாதாபி தப்பியோடினர் – அன்று இப்படி ஒரு கதையும் உள்ளது.
இன்னொரு மாற்றுக் கிளைக்கதை கதை இங்கு விரிகிறது..
காஞ்சிக்கு அருகே 15 மைல் தூரத்தில் உள்ள புள்லலூரில் போர் நடந்தது. மகேந்திரவர்மன் தோற்றுப்போய் காஞ்சிகோட்டைக்குள் பதுங்கிகொள்கிறான்.கோட்டையை முற்றுகையிட்டு அது வீழும் சமயம்.
மகேந்திரவர்மன் அவமானத்தில் துடிக்கிறான். சேனாபதியின் மகன் பரஞ்சோதி! இறையருள் பெற்ற பாலகன். பின்னாளில் சிறுத்தொண்ட நாயனார் என்று பிரசித்தி பெற்றவன். இளவரசன் நரசிம்மனுடைய தோழன். போர்ப்பயிற்சிகளை நரசிம்மனுடன் சேர்ந்து பயின்றவன். மகேந்திரனைச் சந்தித்து…’அரசே…இன்று நிலைமை கடினம் தான். எனினும் ஆண்டவன் அருளிருக்கும் போது நமக்கு எந்த ஆபத்தும் வராது. சிவபெருமான் நம்மைக் காப்பார்” .
இறையருள் விசித்திரமாக வேலை செய்யும் போலும்..
அந்நேரம் புலிகேசி பல்லவனைத் தாக்கச் சென்றிருப்பதை அறிந்த ஹர்ஷன் – சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்தான். புலிகேசி ‘காஞ்சிக் கோட்டை எப்பொழுது விழும்’ என்று காத்திருக்கும் நேரம் ..புறா ஒன்று ஓலை கொண்டு வந்தது.. வடக்கே நர்மதை ஆற்றைக் கடந்து ஹர்ஷரின் படைகள் வருவதாக செய்தி.
புலிகேசி காஞ்சி முற்றுகையை முடித்துகொண்டு வடக்கே விரைகிறான். பெரும்போருக்குபின் வடக்கே நர்மதை நதிக்கரையில் ஹர்ஷரை தோற்கடிக்கிறான். அதன்பின் குஜராத், மராட்டியம்,கோவா எல்லாம் அவன் ஆட்சியின்கீழ் வருகிறது.
இங்கு மகேந்திரவர்மன் தப்பித்தான்.
இந்த மாற்றுக் கிளைக்கதை முடிந்தது.
மகேந்திரவர்மன் தப்பிப்பிழைத்த போதும், அது பல்லவர்களுக்கு தீராத அவமானமாக மாறுகிறது.
ஹர்ஷன்- புலிகேசி போர் பற்றி சற்று கோடி காட்டினோம். சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஹர்ஷன் தனது பெரும் படையுடன் தானே படைகளின் முன்பு வந்து தென் திசையில் தாக்கத் துவங்கினான்.
இந்தியாவில் பெரும் யானைப்படை அன்று ஹர்ஷனிடம் இருந்தது. நர்மதா ஆற்றங்கரையில் புலிகேசியின் படைகள் அவனை எதிர்கொண்டனர். நதிக்கரையில் ஒட்டியிருந்த தோப்புகளில் புலிகேசியின் படை பல பிரிவாகப் பிரிந்து மறைந்து தாக்கியது. ஹர்ஷனுடைய யானைகள் இந்த திடீர் தாக்குதலில் நிலை குலைந்தது. பெரும்பாலான யானைகள் இறந்து போக – ஹர்ஷன் பின் வாங்கினான்.
வெற்றி பெற்றாலும் புலிகேசி ஹர்ஷனுடைய படை வலிமையை நன்கு அறிந்திருந்தான். ஹர்ஷனுடன் எப்பொழுதும் பகைமை கொண்டிருந்தால்- பிறகு தெற்கில் இருக்கும் பல்லவர்களை வெல்வது எப்படி? ஆகவே- ஹர்ஷனிடம் உடன்படிக்கை செய்து கொள்ள முன் வந்தான். ஹர்ஷனுக்கு இதில் சந்தோஷமே. தோற்று ஓடினோம் என்ற பேச்சுக்கு பதில் – சமாதான உடன்படிக்கை செய்தோமே என்ற பெயர் சிறந்தது தானே.
அந்த உடன் படிக்கையின் படி- நர்மதா நதி இரு நாடுகளுக்கும் இடையே எல்லையாகிறது.
அத்துடன் சமாதானமும் ஏற்படுகிறது. ஹர்ஷன் உத்தரபாதேஷ்வரன் என்ற பட்டம் கொண்டிருந்தான்.
இந்த வெற்றிக்குப் பிறகு புலிகேசி தக்ஷிணபாதேஷ்வரன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டான்!
புலவன் ரவிக்கிருதி எழுதுகிறான்:
ஹர்ஷாவின் ஹர்ஷா(ஹர்ஷா என்றால் மகிழ்ச்சி என்று பொருள்) பயத்தினால் உருகியது!
மேலும் தக்ஷிணபாதேஷ்வரன் – உத்தரபாதேஷ்வரனை வென்றான்!
புலிகேசி இப்படி ஹர்ஷர் முதல் பல்லவர் வரை இந்தியாவில் அனைத்து மன்னர்களையும் வென்று ஈடியணையற்ற மன்னராக விளங்குகிறான்.
இங்கே சுபம் என்று போட்டு கதையை முடித்திருக்கலாம்.
ஆனால் துவக்கம் ஒன்றிருந்தால் முடிவு என்று ஒன்று இருக்குமே!
பத்து வருடங்கள் கழிகின்றன.
கிபி 630:
பலப்பல போர்களில்..சாளுக்கிய கஜானா காலியானது.
இப்ப பிரச்சினை என்னவென்றால் – மீண்டும் போர் செய்ய பணமில்லை.
ஆனால் பணம் வேணுமென்றால் போர் செய்து வென்ற நாடுகளிடமிருந்து கறப்பது தான்.
பல்லவ காஞ்சி செல்வக் கொழிப்பில் இருந்தது.
‘என்ன செய்யலாம்’ – புலிகேசி காத்திருந்தான்.
பல்லவ நாட்டில் ..மகேந்திர வர்மன் காலமானார்.
நரசிம்மவர்மன் ஆட்சிக்கு வருகிறான்.
பன்னிரண்டு ஆண்டுகள் உருண்டோடியது.
கி பி 642:
நரசிம்மன் படைகளைத் திரட்டி சக்தி உள்ளதாகச் செய்திருந்தான்.
புலிகேசிக்கு கஜானா காலியான கஷ்டம்.
இனியும் பொறுப்பதில்லை.
காஞ்சி தான் நமது பணப்பொக்கிஷம்- புலிகேசி படையோடு கிளம்பினான்.
பல்லவர்களுடைய நண்பர்களான பாணர்களை வென்றான்.
பின்னர் காஞ்சியை நோக்கி நகர்ந்தான். முன்பு போலவே – காஞ்சியை நெருங்கினான். வயோதிகனானாலும் – புலிகேசியின் வீரம் குறைய வில்லை. ஆனால் நரசிம்ம பல்லவன் – சக்தியைப் பெருக்கியிருந்தான்.
பரியாலா, சுரமான, மணிமங்கலம் என்று மூன்று இடங்களில் நடந்த போர்களில் நரசிம்மன் படை புலிகேசி படையை வெல்கிறது. தோல்வியை கண்டறியாத புலிகேசியின் படைகள் வாதாபி நோக்கி ஓடத் துவங்குகிறது. விடாத நரசிம்மவர்மர் பற்றும் அவனது படைத்தலைவன் பரஞ்சோதி -அவர்களை வாதாபி வரை துரத்திச்செல்கிறார்கள். கோர யுத்தத்தில் வாதாபி வீழ்கிறது. நரசிம்மனும் புலிகேசியும் நேராகப் பொருதுகின்றனர். புலிகேசி மன்னர் போரில் மரணக் காயமடைகிறான். நரசிம்மன் அவன் அருகில் செல்கிறான்.
‘நரசிம்மா! இந்த யுத்தம் முடிந்ததென்று எண்ணாதே. எனக்குப்பிறகு என் ஐந்து மகன்களில் ஒருவன் காஞ்சியைப் படையெடுத்து வெல்வான். காஞ்சியைக் கைப்பற்றுவான். இது சத்தியம். நான் செல்கிறேன் வீர சுவர்க்கம்’
புலிகேசி மாண்டான்.
பிறப்பிலிருந்து இறப்பு வரை வீரத்தையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவன் இந்த மாவீரன்.
அவனது பராக்கிரமங்கள் சரித்திரத்தால் என்றும் பேசப்படும்.
(இன்னும் பேசுவோம்)