
உதிர்ந்து போகும் என்பதனால்
ஒளிர்பூ மலர மறுப்பதுண்டோ?
கதிரும் நாளும் மறைவதனால்
காலை உதிக்க வெறுப்பதுண்டோ?
நதியும் வறண்டு விடுவதனால்
நளிர்நீர் வராமல் இருப்பதுண்டோ?
மதியும் தேய்ந்து குறைவதனால்
வளர மீண்டும் மறப்பதுண்டோ?
உதிர்ந்த பூவும் உரமாகும்
உரத்தால் வித்தும் மரமாகும்
முதிர்தல் இயற்கை நெறியாகும்
முழுதும் புரிந்தால் சரியாகும்.
புதிதாய்ப் பிறந்தோம் இன்றென்று
போகும் நாளை அனுப்பிடுவோம்
எதிலும் பொறுமை, நம்பிக்கை
இருந்தால் சிறக்கும் நம்வாழ்க்கை!