துலாக் காவேரி மகாத்மியம்

Related image
(காவேரி துலாக் கட்ட ஸ்நானம் – மயிலாடுதுறை)

ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர். துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம். தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

ஒரு முடவன் துலா மாதத்தில் நீராட மாயவரம் வரும் போது ஐப்பசி மாதம் முடிவடைந்துவிட்டது. ஐப்பசி மாதம் கடைசி நாளன்று காவிரியில் புனிதநீராட முடியவில்லை. எனவே அவர் அந்த தலத்து இறைவனான மயூரநாத ஸ்வாமியிடம் “ஐப்பசி மாதமும் முடிந்து விட்டது. ஆனால் என்னால் காவிரியில் நீராட முடியாமல் போனதே” என்று முறையிட்டார். பிறகு மனக்கவலையுடன் அன்று இரவு அங்கே உள்ள மண்டபத்தில் உறங்கினார்.

அவனது கனவில் தோன்றிய இறைவன் அந்த முடவனுக்குக் காட்சி தந்து, மனம் வருந்தவேண்டாம். கார்த்திகை முதல் தேதியாகிய நாளை காலை நீ காவிரியில் நீராடினால் ஐப்பசி மாதத்தில் நீராடிய புனித பலனை அடையலாம் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டாராம். அதன்படி அந்த முடவன் கார்த்திகை மாதம் முதல் நாளன்று காவிரியில் புனித நீராடி முக்தியடைந்தார் என்றும் இதுவே “முடவன் முழுக்கு‘ பெயர் வரக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

அதுமுதல் ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராட இயலாதவர்கள் கார்த்திகை முதல்தேதி அன்று துலாக்கட்டக்காவிரியில் நீராடினால் அதே பலனைப்பபெறலாம் என்ற ஐதீகம்.

துலா காவேரி புராணம்

சோழ நாட்டைப் பொன்னி நாடு என்றும் , சோழ அரசனைப் பொன்னி நாடன் என்றும் சொல்வதுண்டு. தனது இரு கரைகளிலும் சிவ ஸ்தலங்களையும் விஷ்ணு ஸ்தலங்களையும் கொண்டு ,தெய்வப் பொன்னி இதனை “சோறுடைய” நாடாகச் செய்கிறாள். “சோறு” என்பதற்கு மோக்ஷம் என்றும் பொருள் உண்டு. இப் பிறவிக்கு உணவையும் அடுத்த பிறவியே இல்லாத மோக்ஷத்தையும் அளிக்கும் வள்ளல் இவள். இத் தெய்வ நதியின் பெருமைகளை ஆக்னேய புராணம் முப்பது அத்தியாயங்களால் விரித்துரைக்கிறது. காவேரி ரகசியம் என்றும் வழங்கப்படுகிறது. இதனைத் துலா (ஐப்பசி) மாதத்தில் பாராயணம் செய்வதும் ,உபன்யாசம் செய்வதும் சிறந்த பலன்களைத் தரும். காவேரியைத் தியானித்து, இதனைப் படிப்பவர்கள் காவேரி ஸ்நான பலன்களைப் பெறுவார்கள் என்று சொல்லப் படுகிறது

 

துலா காவேரி மகாத்மியம்

ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை , தேவ வன்மன் என்ற அரசனுக்கு,சுமத்திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி-பரமேச்வரர்கள் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்தபோது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்துவிட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈச்வரன் , மேலும் கூறலானார்: கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும்,தரிசித்தாலும், அதனை பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம்,தர்ப்பணம் செய்தாலும் எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிட்டும். இதன் கரைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமையை இன்னும் சொல்கிறேன் கேள்” என்றார்.அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கிய அரிச்சந்திர மகாராஜாவை , முனிவர்கள் , பிராயச்- சித்தமாக துலா மாதத்தில் காவிரியில் நீராடிவிட்டு வரச்சொன்னார்கள்.

காவிரியின் பெருமையை யாரால் சொல்ல முடியும்?

நாத சன்மா என்பவன் , பரம பதிவ்ரதையான அனவித்யை என்பவளுடன் காவேரி ஸ்நானம் செய்வதற்காகவும் இருவரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற வேண்டியும் , கௌரி மாயூர க்ஷேத்திரத்தை நோக்கி வந்தான். முனிவர்கள்,தங்கள் பத்திநிகளுடனும்,புத்திரர்களுடனும் தங்கி, ஹோமாக்னி செய்து,பலவித தானங்களை செய்துவரும் அந்த மோக்ஷ புரியில் நாமும் தங்கி நற்கதி பெறுவோம் என்றான் நாதசன்மன். அப்படியானால். காவேரி, மற்ற எல்லா தீர்த்தங்களை விட எவ்வாறு உயர்ந்தது என்று, அனவித்யை கேட்க, நாத சந்மனும் கூறத்தொடங்கினான்.

கவேரன் என்ற அரசன், தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர், “உனக்குப் புத்திர பாக்கியம் இல்லாவிட்டாலும், ஒரு குழந்தையை அளிக்கிறேன்” என்று கூறி, தன மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண், தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர், அகஸ்த்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது மணாளர் ஆவார் என்று நினைத்து, லோபாமுத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்துகொண்டவுடன், அவள் விரும்பியபடியே, நதி ரூபமாகி, பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு, அகஸ்த்ய ரிஷி அருளினார்.

துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்யும் முறைகளை,நாதசன்மா விளக்கினார்: உதய காலத்தில் நியமத்துடன் எழுந்தும், சிவபூஜை செய்தும் தீய பழக்கங்களை நீக்கியும், விரதத்துடனும் பரமேச்வர தியானத்துடன் இருக்க வேண்டும். மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் துலா மாதத்தில் காவிரியில் வந்து சேருவதால், இதில் ஸ்நானம் செய்வதன் மூலம், அழகு,ஆயுள், ஆரோக்கியம், செல்வம்,கல்வி, வலிமை, மாங்கல்ய பாக்கியம். புத்திர பாக்கியம் முதலியவை சித்திக்கும். இதைக் காட்டிலும் புண்ணியச் செயல் எவ்வுலகிலும் இல்லை. எனவே, ஜன்மத்தில் ஒரு முறையாவது, துலா ஸ்நானம் செய்ய வேண்டும். “

பிறகு இருவரும் துலா ஸ்நானம் செய்து, ஸ்ரீ அபயாம்பிகையையும் ஸ்ரீ கௌரி மாயூர நாதரையும்,தரிசித்து, மோக்ஷம் பெற்றனர்.

நதி தேவதைகளிடம் பிரம்ம தேவர் மேலும் கூறுகின்றார்: “காவேரி மகிமையை கேட்டாலோ நினைத்தாலோ பாவங்கள் அகலும். மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவனும் துலா மாதத்தில் கௌரி மாயூரத்தைஅடைந்து காவிரியில் ஸ்நானம் செய்ய வேண்டும் . ஒரு சமயம் , அத்திரியின் மகனாகப் பிறந்த எனக்கும் ஊர்வசிக்கும் காவேரி மகளாகப் பிறந்தாள்அவளைத்தான் காவேர ராஜனுக்கு மகளாகக் கொடுத்தேன். அவளே இப்பொழுது நதியாக வந்துள்ளாள். நீங்கள் துலா ஸ்நானம் செய்து உங்களிடம் படிந்துள்ள பாவங்களை நீங்கப் பெறுவீர்களாக.” என்று அருளினார்.

காவேரி ஸ்நானம் செய்து விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த இரு வேதியர்களிடம் பாவங்கள் பல செய்த ஒரு பெண் , பேய் வடிவம் கொண்டு எதிரில் வரவே, அவளுக்கு நல்ல கதி கிடைக்க வேண்டும் என்ற கருணையோடு, அவ்வேதியர் இருவரும், அவளை துலா மாதத்தில் கௌரி மாயூரம் சென்று காவேரி ஸ்நானம் செய்யச் சொன்னார்கள். அவளும் அவ்வாறு செய்யவே, பேய் உருவம் நீங்கியது.

துலாகாவேரி மகிமையைக் கேட்டவாறே உயிர் நீத்த சந்திரகாந்தை என்ற மகா பாபிக்கும் விஷ்ணு லோகம் கிடைத்தது. அவளது கணவனான வேத ராசி என்ற அந்தணன் புண்ணியசாலி. துலா ஸ்நானத்தைத் தவறாது செய்து வருபவன். அதன் பலனாகத் தேவலோகத்துக்கு அழைத்துச்செல்லப் பட்டான். வழியில், யம கிங்கரர்கள், பாபிகளைக் கட்டி இழுத்துக்கொண்டு போவதையும் கண்டான். அவர்கள் கொடிய பாவங்களைச் செய்தவர்கள். அருணோதய காலத்தில் நித்திரை செய்தவர்கள். கர்மானுஷ்டானங்களைச் செய்யாதவர்கள். பசியுடன் வந்தோருக்கு அன்னம் அளிக்காதவர்கள். செய்யக்கூடாதவைகளை செய்தவர்கள். பித்ரு தர்ப்பணம் செய்யாதவர்கள். தெய்வ கதைகளைக் காது கொடுத்துக் கேட்காதவர்கள். புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்யாதவர்கள். ஸ்தல யாத்திரையும் தான தர்மங்களும் செய்யாதவர்கள். பகலில் நித்திரை செய்தவர்கள். என்னைவிட மேலானவன் யாரும் இல்லை என்று பெரியவர்களை அவமதித்தவர்கள். சத்தியமே பேசாதவர்கள். சிவ பூஜை,விஷ்ணு பூஜை செய்யாதவர்கள். இவர்கள் நரகத்துக்குச் செல்வதைக் கண்டு ,வேத ராசிக்கு அவர்கள் மீது கருணை மேலிட்டது. ” நரகத்தை அனுபவிக்கும் உங்களுக்கு எனது ஒரு நாள் துலா ஸ்நான பலனை அளிக்கிறேன் ” என்றான். அடுத்த கணமே, நரகம்,சுவர்க்கமாக மாறியது. இதனைக் கண்ட வேத ராசி, பகவன் நாமாக்களைக் கூறிக்கொண்டே ஆனந்தக் கூத்தாடினான். இதனால் கோபத்துடன் வந்த யமனால் வேத ராசியை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், அப்பொழுது அவன் விஷ்ணு கவசத்தைப் பாராயணம் செய்து கொண்டிருந்தான். யமனும்,அவனை வணங்கிவிட்டுத் தனது இருப்பிடத்தை அடைந்தான்.

பாரத்வாஜ மகரிஷியின் அருளால் அவரது ஆசிரமத்தில் இருந்த கிளியும் பூனையும் துலா ஸ்நானம் செய்து,சுவர்க்கத்தை அடைந்தன. அகத்திய முனிவரின் சாபத்தால் பாம்பாகிய நகுஷன் என்பவன், கிருஷ்ணனின் அருளால் துலா காவேரிக்கு சென்று ஸ்நானம் செய்து பழைய உருவம் பெற்றான். வாங்கிய கடனைத் திருப்பித்தராத பாவத்தால் குதிரையாகைப்பிறந்து, வசிஷ்டரின் உரைப்படி, கௌரி மாயூரத்தை அடைந்து, துலா ஸ்நானம் செய்து தேவலோகம் பெற்றது. முற்பிறவியில் கொலை செய்த பாவத்தினால் குள்ள நரியாகவும் , முனிவர்களின் ஆசிரமத்திலிருந்து பழங்களைத் திருடித் தின்றதால் குரங்காகவும் மாறியவர்களைக் கண்டு , காசிப முனிவர் அவர்களைத் துலா காவேரியில் ஸ்நானம் செய்யும்படி அருளினார். அதன்படி செய்ததால், அவை, தேவ உருவம் பெற்றன. சிங்கத்துவஜன் என்ற வேடர் குல அரசன், ஓடி வரும் வழியில், பாரத்வாஜ முனிவர் மீது அவனது கால் படவே, அவனைக் கழுதையாக மாறும் படி அம்முனிவர் சாபமிட்டார். அதன்படி கழுதையாகத் திரிந்த அவனுக்கு எதிரில் பகவான் தோன்றி , காவேரி ஸ்நானம் செய்து சாபம் நீங்கப் பெறுவாய் என்று அருளினார். ஸ்ரீ ராமனிடம், வசிஷ்டர், சுதர்சனன் என்ற அந்தணன் , பாபியாக இருந்தபோதிலும் விதிவசத்தால் துலா காவேரி ஸ்நானம் செய்து, கௌரி மாயூர நாதரையும், அபயாம்பிகையையும் தரிசித்து, இறுதியில் சிவலோகம் பெற்றதையும், தனது தவத்தைக் கெடுத்ததால் விஸ்வாமித்திரர் ரம்பையை கல்லாக்கியதும், பிறகு அக்கல்லை வியாழ பகவான் காவேரியில் இட்டவுடன் பழைய உருவம் பெற்றதையும் விவரமாகச் சொன்னார். அதைகேட்ட ராமனும் , கௌரி மாயூரத்தை அடைந்து, பல தான தர்மங்களைச் செய்து, மாயூரனாதரையும், மயிலம்பிகையையும் வணங்கிவிட்டு, அயோத்திக்குத் திரும்பினார்.

மந்திரன் என்ற பிரம்மச்சாரியின் சாபத்தால் பேய் உருவம் கொண்ட மனோக்யை என்ற பெண் , சுசிதன் என்ற முனிவரின் கட்டளைப்படி, அறுபது கோடி தீர்த்தங்களும் தங்களது பாவத்தைப் போக்கிக்கொள்ளும் காவேரி நதியில் ஸ்நானம் செய்து, பழைய உருவம் பெற்றதோடு, தன விருப்பப்படி, மந்திரனையே மணாளனாகப் பெற்றாள்.

நியமத்தோடு,காவேரி ஸ்நானம் செய்துவந்த ச்வேதவதி என்ற பதிவ்ரதையின் கால் மாண்டவ்ய முனிவரின் மேல் படவே, அவர் கோபப்பட்டு, “சூரியன் உதயமாவதற்குள் உயிர் நீப்பாய்” என்று சாபமிட்டார். கற்புக்கரசியான ச்வேதவதி, “அப்படியானால் சூரியனே உதிக்காமல் போகட்டும்” என்று சபிக்கவே, சூரிய உதயம் ஆகாமல் உலகம் ஸ்தம்பித்தது. பிரம்மாதி தேவர்கள் அவளிடம் சென்று, அவள் கணவன் சாபப்படி உயிர் நீங்காமல் இருக்கவும், இருவரும் துலா காவேரி ஸ்நானத்தைத் தொடர்ந்து செய்யவும் வரம் அளித்தார்கள்.

நியமம் தவறி வாழ்ந்துவந்த பிரம்ம சர்மா என்ற வேதியர் , தனது தர்ம பத்தினியான சுசீலையின் வாக்குப்படி, அவளோடு காவேரி தீரத்தை அடைந்து, அரசமர பிரதிஷ்டை செய்தும்,காவேரி ஸ்நானம் செய்தும் சிவ பூஜை செய்து கொண்டிருந்த காலத்தில், அவரது ஆயுட்காலம் முடிந்ததால் ,அவரது உயிரைக் கொண்டுபோக யமதூதர்கள் வந்தனர். சுசீலையின் கற்பு ஜ்வாலையால் அவர்களால் பிரம்ம சர்மாவை நெருங்க முடியாமல் போகவே, யமனிடமே மீண்டும் திரும்பினர். யமனுடைய கட்டளைப்படி சித்திரகுப்தன் அக்காரியத்தை செய்துவரச் சென்றான். அதை அறிந்த, சுசீலை, தனக்கு மாங்கல்யப் பிச்சை அளிக்குமாறு மன்றாடினாள். அவளது காவேரி ஸ்நானத்தின் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு, அவனது உடலைப் பாதுகாத்து வரும்படி சொல்லிவிட்டு, பிரம்ம சர்மாவின் உயிரை யமனிடம் கொண்டு சென்றான் சித்திர குப்தன்.

யமலோகம் செல்லும் வழியில் இரண்டு சண்டாளர்கள் வழிமறித்து, “எங்களிடம் செருப்பு வாங்கிவிட்டுப் பணம் தராமல் ஏமாற்றிவிட்டாய். இப்போது அதற்குப் பதிலாகத் தோல் தந்துவிட்டுப் போக வேண்டும்”என்றனர். தவித்துக்கொண்டு நிற்கும் பிரம்மசர்மாவின் நிலைக்கு இறங்கி அங்கு வந்த இரு பிரம்மச்சாரிகள்,தங்களது தொடையிலிருந்து தோல் எடுத்துக்கொடுத்தார்கள். சண்டாளர்கள் போனவுடன்,பிரம்ம சர்மாவை வணங்கி , இரு பிரம்மச்சாரிகளும்,”நாங்கள் இருவரும் தங்களால் வளர்க்கப்பட்ட அரச மரங்களே. அதன் பலனாகத்தான் உங்கள் பாவம் நிவர்த்தி ஆனது.நீங்கள் ஊருக்குத் திரும்பியவுடன் அந்த அரச மரங்கள் தோல் இல்லாமல் இருப்பதைப் பார்ப்பீர்கள்.” என்று சொல்லிவிட்டு மறைந்தார்கள்.

யமனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு ஸ்தோத்திரத்தை பிரம்ம சர்மாவுக்கு உபதேசித்தார் சித்திரகுப்தன். அதன்படியே, யமனைக் கண்டவுடன் ,அதனைப் பக்தியோடு சொன்னார் பிரம்ம சர்மா.

(யம சுலோகம்;

தர்ம ராஜ நமஸ்தேஸ்து சாக்ஷாத் தர்ம ச்வரூபினே;

தர்மிஷ்ட சாந்த ரூபாய சத்திய ரூப நமோ நம்:

யமாய ம்ருத்யவே துப்யம் காலாய ச நமோ நம்:

சூர்யபுத்திர நமஸ்தேஸ்து சர்வ பூத க்ஷயாயதே…. )

இதைக் கேட்ட யம தர்மனும் மிகவும் மகிழ்ந்து, நீண்ட ஆயுளைக் கொடுத்தான். அதற்குக் காரணம் , சுசீலையின் காவேரி ஸ்நான பலனும் ,யம ஸ்தோத்திர பலனும் ஆகும்.

மீண்டும் தனது சரீரத்தில் புகுந்து, உறக்கத்திலிருந்து எழுந்திருப்பவனைப் போல எழுந்த பிரம்ம சர்மாவைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யப் பட்டார்கள். சில காலத்திற்குப்பின், சுசீலை,தனது கணவனிடமும், குழந்தைகளிடமும், தான் பகவானிடம் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது என்று சொல்லி,எல்லோரையும் தன்னுடன் பகவன் நாமாக்களைச் சொல்லச் சொன்னாள். அவளின் காவேரி ஸ்நான பலனானது ,அவளுக்கு சுமங்கலியாக, திவ்ய லோகம் கிடைக்கும்படி செய்தது.

விதி வசத்தால் மீண்டும் பாவங்களையே செய்ததால் பிரம்ம சர்மா, எல்லோராலும் விரட்டப்பட்டு ஊர் ஊராகத்திரிந்து வந்தார். ஒரு வீட்டில் சிவ பூஜை செய்பவருக்குத் தீட்டு வந்து விடவே, அப் பூஜையை பிரம்ம சர்மா செய்து வந்தார். ஒரு நாள்,சாப்பிட்டு விட்டுப் பூஜை செய்த பாவத்தால், பன்றியாகப் பிறந்தார். அப்பொழுது, காவேரி ஸ்நானம் செய்யப் போய்க்கொண்டு இருந்த பத்மகர்பன் என்ற அந்தணனை காவேரி நதிக் கரை வரையில் அப்பன்றி துரத்தியது. அங்கு ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் தலையில் இருந்து தெறித்த காவேரி ஜல்த்துளிகள் அப் பன்றி மேல் படவே, அப் பன்றி உருவம் நீங்கி, பழைய உருவம் பெற்றது. பாவம் நீங்கப்பெற்ற பிரம்ம சர்மனும் விமானம் ஏறி தேவலோகத்தை அடைந்தார்.

திலீபனின் மகன் ரகு அயோத்தியை ஆண்டு வந்த காலத்தில் ஒரு நாள் நகர சோதனைக்காகப் போய்க்கொண்டு இருந்தபோது, வழியில் ஒரு ராக்ஷசனால் துரத்தப்பட்ட வேதியன் அடைக்கலம் வேண்டி, அவனது காலில் வந்து விழுந்தான். சிறிது நேரத்தில், பசியுடன் வந்த ராக்ஷசன், அவனை விட்டுவிடும்படி கேட்கவே, ” செய்த பாவங்கள் துலா ஸ்நானம் செய்தால் நீங்கும். ஆனால் அடைக்கலம் புகுந்தவனைக் கைவிட்ட பாவத்திற்குப் பிராயச்சித்தமே இல்லை. ” என்று சொல்லிய அரசன், ஸ்ரீ பரமேச்வரனை பிரார்த்திக்க, அவரும் ஒரு வழிப்போக்கனைப்போல் எதிரில் வந்து, “அரக்கனே, நீ இதற்குமுன் சதத்துய்மன் என்ற பெயருடன் வாழ்ந்திருந்தாய்.வசிஷ்ட முனிவரை ஏளனம் செய்ததால் அரக்கனாக மாறினாய். ஒரு அரசனைக் கண்டவுடன் பழைய உருவம் பெறுவாய்” என்று வசிஷ்டர் கூறியபடி, இப்போது அரசனைக் கண்டாய். உனது பழைய உருவம் வந்துவிடும்.” என்று கூறி மறைந்தார். பழைய வடிவம் பெற்ற அரக்கனும், துலா காவேரி ஸ்நானம் செய்து நற்கதி பெற்றான்.

சித்திர வர்மன் என்ற கொடுங்கோல் மன்னன், அகஸ்திய முனிவரின் சொற்படி உதய காலத்தில் துலா ஸ்நானம் செய்து வந்தான். அதைக் கண்டு மகிழ்ந்த முனிவர், ” எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அனைத்துப் பாவங்களும் துலா ஸ்நானம் செய்வதால் நீங்கிவிடுகின்றன.எத்தனையோ தர்மங்கள் செய்வதால் அடையும் பலன்களை ஒரு முறை காவரி ஸ்நானம் செய்தவன் பெறுவான் என்பது நிச்சயம். ” என்றார். சோம பூஷணன் என்ற வேதியன் மிகவும் வறுமை நிலையிலும் காவேரி ஸ்நானம் செய்து வந்தான். இதனால் மகிழ்ந்த பிரம்ம தேவன் , அவன் முன் தோன்றி, “காவேரி ஸ்நான விசேஷத்தால், செல்வந்தன் ஆவாய். ஆனால் , அதைக்கொண்டு தான தர்மங்கள் செய்து வர வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஏழை ஆகிவிடுவாய்.” என்று அருளினார். சோம பூஷணன் அதன்படி நடந்துவந்த போதிலும் அவன் மனைவி அதற்கு மாறாக நடந்ததோடு, கணவனையும் தான – தர்மங்கள் செய்யாமலும் ,காவேரி ஸ்நானம் செய்யாமலும் இருக்கும்படி மாற்றவே, அவர்கள் வீட்டில் திருடர்கள் புகுந்து, செல்வத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர். அதன் பிறகு, இருவரும் நல்ல புத்தி வந்தவர்களாய், காவேரி ஸ்நானமும் பூஜையும் செய்து, மீண்டும் ஐச்வர்யங்கள் அனைத்தும் பெற்று, நீண்ட நாட்கள் தான -தர்மங்கள் செய்து வாழ்ந்தனர். இக் கதையை அகஸ்தியரிடம் கேட்ட சித்திரவர்மனும் அதன்படியே நடந்து, இறுதியில் மோக்ஷம் பெற்றான்.

துலா மாதக் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியன்று காலையில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்து, அதன் பிறகே, காவேரி ஸ்நானம் செய்ய வேண்டும். தீராத தலைவலி முதலிய உபாதைகளும் இதனால் நீங்கும் என்று பரமசிவனே சொல்லியிருக்கிறார். நரகாசுரனை சம்ஹரித்தவுடன் வீர ஹத்தி தோஷம் ஏற்ப்பட்டதால், சிவபெருமான் அருளியபடி, மகாவிஷ்ணு காவேரி ஸ்நானம் செய்து, அப்பாவத்தைப் போக்கிக் கொண்டார்.

ப்ருகு முனிவரின் புத்திரியாகத் தோன்றிய மகா லக்ஷ்மி , காவேரி ஸ்நானம் செய்து, தன சுய வடிவம் பெற்று, மகாவிஷ்ணுவை அடைந்தாள் . காவேரி ஸ்நானம் செய்த பூமா தேவி, யம தர்மனிடம், ” தான தர்மங்கள் செய்யாமலும், பித்ரு கார்யங்களைச் செய்யாமலும் பாவங்களைச் சுமப்பவர்களை உன் உலகத்திற்கு அழைத்துக்கொள். காவேரி ஸ்நானம் செய்தவர்களையும் அதன் மகிமையைக் கேட்டவர்களையும் என்னிடம் விட்டுவிடு.” என்று சொன்னவுடன் எமனும் அதன் படியே செய்வதாக வாக்களித்தான்.

தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று கங்கைக்கும் காவேரிக்கும் வாக்கு வாதம் வந்தபோது, காவிரியே சிறந்தவள் என்று பிரம்ம தேவர் தீர்ப்புக் கூறினார்.

இப்படிப்பட்ட காவேரி மகாத்மியத்தை பக்தியுடன் படிப்பவரும்,கேட்பவரும் எல்லாப் பாவங்களும் நீங்கப் பெற்று,மோக்ஷத்தை அடைவார்கள். புத்திர பாக்கியம் , நீண்ட ஆயுள், வியாதி நிவாரணம் , அஷ்ட ஐஸ்வர்யங்கள் எல்லாம் சித்திக்கும் .

” கவேரகன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே

தேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி “

 

துலா காவேரி மகாத்மிய சுருக்கம் நிறைவுற்றது.


நன்றி – சிவபாதசேகரன் சென்னை.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.