வெறியாடல்   – வளவ. துரையன்

Image result for வெறியாடல்

Image result for உடுக்கு ஆட்டம்

வெறி என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் பெரும்பாலும் ஆவேசம் என்று பொருள் கூறுகின்றன. லிப்கோ அகராதி வெறி என்ற சொல்லுக்கு முருகன் பூசை என்று கூட இன்னும் ஒரு பொருளையும் காட்டுகிறது. பழங்காலத்தில் வெறி என்பதற்கு மணம் என்னும் பொருளை வழங்கி வந்தனர். ’வெறிகமழ் பொழில்’ ‘வெறிமலர்’ என்றெல்லாம் பழைய செய்யுள்களில் காண முடிகிறது. ஒரு குறியையே  நோக்கிச் செல்லும் உறுதியான மனப்போக்கும் அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் தன் இயல்பு மாறுதலும் வெறி எனப்படும். அது தன்னை மறந்த நிலையாகும். அந்த நிலையில் இருப்பவர்க்குப் அப்போது தான் செய்யும்  செயல்கள் எதுவுமே நினைவில் தங்குவதில்லை. இதையே பித்துப் பிடித்தவர்கள், பைத்தியம் பிடித்தவர்கள், மனநிலைம் பிறழ்ந்தவர்கள் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

பழந்தமிழ் மக்களிடத்தே வெறியாடல் அல்லது வெறியயர்தல் என்ற ஒரு வழிபாட்டு வழக்கம் நிலவி வந்திருக்கிறது. வாழ்வில் தம்மால் புரிந்துகொள்ள முடியாத, தீர்வு காண முடியாத சிக்கல்கள் தோன்றும் போது அதைத் தீர்த்தருளுமாறு தாங்கள் வழிபடும் கடவுளுக்குச் செய்யும் பூசையாக இதனை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

ஐவகை நிலத்தில் வாழ்ந்த மக்களும் அவரவர் நிலத்திற்குரிய தெய்வங்களுக்குப் படையலிட்டுக் குறையைத் தீர்த்தருளுமாறு வெறியாடி வழிபட்டு வந்திருக்கின்றனர். இது பெரும்பாலும் மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தில் அதிகமாக இருப்பதைக் காணலாம்.

குறிஞ்சி நிலத்தெய்வம் முருகனே ஆவான். வெறி என்பதற்கு மணம் என்னும் பொருளும் உண்டன்றோ? முருகனை வழிபடும் இடத்தே மிக்க மணமுள்ள பூக்களும் இலைகளும் புகையும் சூழ்ந்திருப்பதால் அந்த இடத்தை வெறிக்களம் என்னும் சொல்லால் அழைத்தனர். “வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்” என்று நற்றிணையில் [43] பார்க்க முடிகிறது. அக்களத்தின் நடுவே வேலை நட்டு அதைச் சுற்றி மக்கள் வட்டமாக அமர்ந்து கொள்வர்.

அடுத்துத் தம்மால் தீர்க்கமுடியாத மனச்சிக்கல் அல்லது உடற்குறைகளை அதற்குரியோர் முன்மொழிந்து கூறுவர். முருகனை மனத்தில் வரித்து வழிபட்டு வெறியாட்டம் நிகழ்த்திக் ‘குறி’ சொல்வோனுக்கு வேலன் என்று பெயர். அவன் முருகன் பெயரை வாழ்த்தித் தன் மேல் முருகன் வந்து நிற்பதாக ஆடுவான். அவனின் ஆட்டத்திற்கேற்ப பலவகை வாத்தியங்கள் மிகுதியான ஒலியுடன் ஒலிக்கும். அவன் சிக்கலுக்கும் காரணம் சொல்லித் தீர்வு சொல்வான்.

தம் மகளிரின் உடல்நலம் குன்றி உடல் அழகும் வேறுபடும்போது காரணமும் தீர்வும் அறிய அவர்தம் தாயர் இதை நிகழ்த்தும் வழக்கம் பெரும்பாலும் காணப்படுகிறது. அம்மகளிரை நீராட்டி ஒப்பனை செய்து வெறியாடும் களத்தில் நிறுத்துவர். அப்போது வாத்தியங்கள் முழங்க வேலன் ஆடும்போது அம்மகளிரும் உடல்நடுங்கி மருண்டு ஆடுவதும் உண்டு. இதை ‘வெறியுறுநுடக்கம்’ என்று பதிற்றுப்பத்து [51] காட்டும்.

தற்காலத்தில் பேய் பிடித்து விட்டதென்று அதை ஓட்டப் பாட்டுப் பாடி ஆடுவோரிடத்தும், சாமி வந்து ஆடும் மகளிரிடத்தும் பண்டைய வெறியாடலின் கூறுகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இக்காலத்தில் குறி சொல்லும் நிகழ்வுகளும் இப்போக்கிலேயே அமைந்திருக்கின்றன.

இந்த வெறியையே மையமாக வைத்துப் பாட்டுகள் பாடியதால் ஒரு சங்க காலப் புலவர் “வெறி பாடிய காமக்கண்ணியார்” என்று அழைக்கப்படுகின்றார். ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணையைப் பாடிய கபிலர் அதில் ‘வெறிப்பத்து’ என்று பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு பகுதியையே படைத்துள்ளார். அப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் வெறியயர்தல் பற்றிய செய்திகளே வருதலால் அதற்கு வெறிப்பத்து என்று பெயர் வந்தது. தலைவி தலைவனுடன் களவுறவு கொண்டதால் அவள் உடல்நலன் குறைந்து போக, அதை நோய் என்றும், அணங்கு பிடித்து விட்டதென்றும் கருதிய அவளின் தாயர் வெறியாட்டு நிகழ்த்த முற்படுதலும் அது தொடர்பான செய்திகளும் இப்பத்துப் பாடல்களில் விரவி வருவதைக் காணலாம்.

தலைவி ஒருத்தி, தலைவனைச் சந்தித்து களவுறவு கொண்டாள். அதனால் அவள் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஊராரும் அதுபற்றிப் பேச ஆரம்பித்து விட்டனர். எனவே அவளை வீட்டிற்குள் பெற்றோர் சிறைப்படுத்தினர். அவனைச் சந்திக்க முடியாமல் அவள் உடல் மெலிந்தாள். அதனால் அவளது செவிலித்தாய் காரணமும் தீர்வும் அறிய வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். அப்பொழுது தோழி தலைவியிடம் செவிலியும் கேட்குமாறு சொல்கிறாள்.

”செறிவான பற்களை உடையவளே! நாம் பிரிவால் வாடித் துன்பப்படுவதைக்கண்டு, நம் செவிலியானவள் வெறியாட்டம் நடத்த வேலனை அழைக்கிறாள். அவன் தலைவனுடன் நாம் கொண்டுள்ள நட்பை அறிந்து கூறிவிடுவானோ?”

வேலனாகிய தெய்வம் வந்து உண்மையைக் கூறிவிட்டால் அதைச் செவிலி  அன்னையிடம் சொல்லி மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்வாள் என்பது அவள் உள் மனத்தில் இருக்கிறது. அதையே இப்படி மறைமுகமாக உணர்த்துகிறாள்.

தலைவன் பிரிவால் ஒருத்தி உடல் மெலிந்தாள். ஆனால் தன் மகளை அணங்கு ஒன்று பிடித்துக் கொண்டு விட்டது என எண்ணிய அவள் தாய் வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். அப்போது தோழி, “நம் தாய் இது காதலன் பிரிவால் வந்த நோய் என அறியாமல் தெய்வக் குற்றம் என் எண்ணி வருந்துகிறாள். ஆதலால் அன்னையிடம் இனியும் உண்மையைக் கூறாமல் இருப்பது கொடுமையாகும்” என்று தலைவிக்கு அறிவுரை சொல்கிறாள்.

தன் மகளுக்காக வெறியாட்டம் நடத்திய தாய் வெறியாடிய வேலன் ”இது தெய்வக் குற்றம்” எனச் சொன்னதை நம்பி விடுகிறாள். அப்பொழுது தலைவியின் தோழி சொல்வதாக இப்பாடல் அமைந்திருக்கிறது.

”கறிவளர் சிலம்பில் கடவுள் பேணி

அறியா வேலன், வெறிஎனக் கூறும்

அதுமனம் கொள்குவை, அனையிவள்

புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே”    [243]

தலைவியின் கண்கள் புதுமலர் போன்று உள்ளனவாம். அது பிரிவுத் துயராலே கலங்கி நீரோடு இருப்பதால் மழைக்கண் என்று காட்டப்படுகிறது. ‘கறிவளர் சிலம்பு என்பது மிளகுக்கொடி வளரும் மலைப்பக்கம் என்று பொருள் தரும். அன்னையிடம், தோழி, “அன்னையே! புத்தம் புது மலர் போன்ற இவள் கண்கள் அழுது புலம்பும் நோய்க்குக் காரணம் சொல்ல வந்த வேலன், மிளகுக்கொடி வளர்கின்ற மலைவாழ் முருகனைப் பாடி, இது தெய்வக் குற்றம் என்று மொழிந்தான். நீயும் அதை உண்மையென மனத்தில் கொள்கிறாயே”

அது உண்மை இல்லையெனில் வேறு காரணம் உள்ளதென உணர்த்த வருகிறாள் தோழி. மேலும் தானே வளர்ந்து படரும் மிளகுக்கொடி வளரும் மலைப்பக்கம் என்றதால் இவளும் தானே தன் தலைவனைப் பற்றிப் படர்ந்து உறவு கொண்டாள் என்பதையும் தோழி மறைமுகமாகக் கூறுகிறாள். இவ்வாறு வெறியாடலிலும் வேலனால் உண்மையை அறிய முடியாது என்பதும் உணர்த்தப்படுகிறது.

வெறியாடும் வேலன் முதலில் மலையை வாழ்த்திப் பாடவேண்டியது மரபாகும். அது தலைவியின் மனம் கவர்ந்த தலைவன் குடிகொண்ட குன்றாகும். அப்படி அவன் அம்மலையைப் பாடினால் அது கேட்டு தலைவி மகிழ்ந்து முகமும் அகமும் மலர்வதைக் கண்ட செவிலித்தாய் உண்மை அறிந்து அவனுடன் மணத்திற்கு ஏற்பாடு செய்வாள் என்றும் தோழி ஒரு பாடலில் கூறுகிறாள். ”ஒருவேளை அவன் மலையைப் பாடாவிட்டால் அந்த வெறியாடல்தான் என்ன பயன் செய்யும்?” என்னும் பொருளில்,

”குன்றம் பாடான் ஆயின்

என்பயன் செய்யுமோ—வேலற்கு அவ்வெறியே?” [244] என்று பாடல் அமைந்துள்ளது.

தலைவன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தினம் வந்து செல்வது தலைவிக்குக் கவலை அளிக்கிறது. தாய் வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். வெறியாடும் வேலனும் கழங்குக் காய்களை நிறுத்தி, கையில் மந்திரத் தகடு வைத்த தாயத்தைத் தலைவி கையில் கட்டினான். இவள் நோய்க்குக் காரணம் முருகனே என்று அவன் கூறிவிட்டான். அடுத்த நாள் தலைவியைச் சந்திக்கத் தலைவன் வந்து மறைவாக நிற்கிறான் அப்பொழுது அவன் கேட்கும் படிக்குத் தோழி சொல்கிறாள். “வெறியாடிய வேலன் உன் நோய்க்கு முருகன்தான்  காரணம் எனச் சொன்னானே; அது நம் தலைவனுக்கும் பொருத்தம்தானே”

வெறியாட்டத்தில் முருகன் என்று சொன்னது தம் தலைவனுக்கும் உரியது எனக் கூறி அவன் விரைவில் வந்து மணம் புரிய வேண்டும் என்று தோழி உணர்த்துகிறாள்.

வெறிப்பத்தின் ஆறாம் பாடலில் ஒரு காட்சியே புனைந்துரைக்கப்பட்டுள்ளது.

மலையில் இருக்கும் புன்செய் நிலத்தில் கானவர்கள் தினைப்பயிர் விளைவிப்பார்கள். அப்பயிர் கதிர் முற்றும்போது அவற்றைப் பறவைகளும் விலங்குகளும் வந்து சேதப்படுத்தாமல் இருக்க உண்மையான புலியைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு பெண்புலிப் பொம்மையை நிலத்தில் வைப்பார்கள். இதைக் காட்டும் ஒரு பாடல் இது.

”வெறிசெறித் தனனே, வேலன் கறிய

கல்முகை வயப்புலி கழங்குமெய்ப் படூஉம்

புன்புலம் வித்திய புனவர் புணர்ந்த

மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து

மன்றில் பையுள் தீரும்

குன்ற நாடன் உறீஇய நோயே”          [246]

[செறித்தல்=ஏற்பாட்டைச் செய்தல்; கறிய=மிளகுக்கொடியை உடைய; கல்முகை=கல்குகை; வயம்=வலிமை; வித்திய=விதைத்த; புன்புலம்=புன்செய்; புனவர்=குறவர்; உறீய=உற்ற]

தலைவியின் உடல் தலைவனின் பிரிவால் மெலிகிறது. அப்பொழுது அன்னை வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். தலைவியைக் காணவந்து மறைந்து நிற்கும் தலைவனும் கேட்குமாறு தோழி சொல்கிறாள்.

”புன்செய் நிலங்களில் முற்றிய கதிரைப்பறவைகளும் விலங்குகளும் வந்து சேதப்படுத்தாமலிருக்க அவற்றை அச்சுறுத்த பெண்புலிப் பொம்மையை கானவர்கள் வைப்பார்கள். அந்தப் புலிப்பொம்மையை உண்மையென நம்பிய ஆண்புலி அத்துடன் இணைந்துவிட்டுக் களைப்பைப் போக்கிக்கொள்ளக் கிடக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவன் நம் தலைவன். அவனால்தான் நமக்கு இந்த நோய் உண்டாகியது. அதைத் தணிக்க வெறியாடும் வேலன் இதோ ஏற்பாடுகளைச் செய்கிறான்.”

அந்த ஆண்புலிபோல அவனும் கள்ள உறவையே நாடி மகிழ்கிறான். அவன் உடன் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஏனெனில் வெறியாட்டு நிகழ்த்தும் வேலன் உடல் மெலிவுக்கு உண்மையான காரணத்தைச் சொல்லிவிட்டால் தலைவிக்குப் பழிச் சொல் வந்து சேரும் என்பதைத் தோழி குறிப்பாக உணர்த்துகிறாள்.

”வெறியாடற வேலன் தனக்கு வந்திருக்கும் நோய் முருகனால்தான் வந்த்தெனச் சொல்வான். அதுவும் சரிதான்; என் தலைவன் பெயரும் அதுதானே” என்றுஒருத்தி வெறியாடல் பற்றிச் சொல்வதாகவும் ஒரு பாடல் கூறுகிறது.

தோழி ஒரு பாட்டில் வெறியாடும் வேலன் உண்மையைக் கண்டுபிடித்துக் கூறினான் எனில் இவள் கற்பின் மாண்பு வெளிப்படும் என்று மகிழ்கிறாள்.            ”பெய்ம்மணல் முற்றம் கவின்பெற இயற்றி

மலைவான் கொண்ட சினைஇய வேலன்

கழங்கினான் அறிகுவது என்றால்

நன்றால் அம்ம, நின்றஇவள் நலனே!”        [248]

“புதுமணல் பெய்த வீட்டின் முற்றத்தே வெறியாடு களத்தை நிறுவி மலையையும், வானையும் கொண்ட அத்துடன் சினம்  மிகுதியான வேலினையும் கொண்ட முருகனை வேண்டி கழற்சிக்காயைக் கொண்டு வெறியாடி உண்மையை வேலன் கூறினால் அதுவும் உண்மையானால் இவளிடத்து நிலைபெற்ற கற்பின் மாண்புதான் நன்று” என்பது பாட்டின் பொருளாகும்.

வெறியாடிய வேலன் தலைவியின் உடல் மெலிவிற்கு முருகக்கடவுளே காரணம் என்று உரைக்கிறான். அதை அவளின் அன்னையும் உண்மையென்று நம்பினாள். அப்பொழுது தோழி, “அந்த வேலன் அருவிகள் விளங்கும் அச்சம் கொண்ட மலைக்கு உரியோனான உன் காதலனை அறியவில்லை போலும்” என்று கூறி வெறியாடுபவனின் சொல்லையே மறுக்கும் பாடல் அடிகளும் காணப்படுகின்றன.

”——-இலங்கும் அருவிச்

சூர்மலை நாடனை அறியாதோனே” [249]

என்னும் பாடல் அடிகள் அதை உணர்த்துகின்றன.

பத்தாம் பாடல் ஓர் அஃறிணைப் பொருளை முன்னிலைப் படுத்திக் கூறுவது போல் அமைந்துள்ளது. வெறியாடும் வேலன் கழற்சிக்காய்களை களத்தில் இட்டு எடுத்தெண்ணிக் குறி சொல்லுவான். அக்காய்களைக் கழங்கு என்றும் சொல்வர். ஒரு தலைவியின் உடல் தலைவனின் பிரிவால் மெலிகிறது ஆனால் அன்னை இது நோய் என்று எண்ணி வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். அந்த ஆட்டத்தில்  அக்காய்கள் ”இவளுக்கு வந்த நோய் முருகனால் தந்தமை” என்று காட்டின. அப்பொழுது தோழி அக்கழங்கை முன்னிலைப்படுத்தி செவிலித்தாய் கேட்கும்படிச் சொல்வது இப்பாடல்.

”பொய்படுபு அறியாக் கிழங்கே! மெய்யே

மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம்

மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன்;

ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள்

பூண்தாங்கு இளமுலை அணங்கி யோனே.  [250]

[கட்சி=காடு; ஆலும்=ஆடும்; விறல்=வெற்றி; வேள்=முருகன்; பொய்படு அறியா=பொய்யை அறியாத]

”பொய் சொல்லுதலை அறியாத கழங்கே! நீலமணி போல விளங்கும் மலை உள்ள காட்டின் உள்ளே, இளமயில்கள் ஆடிக்கொண்டிருக்கும்; நிறைய வள்ளிக்கொடிகள் இருக்கும்; அக்கானகத்திற்கு உரியோன்தான், அணிபுனைந்த இவள் முலைகளைத் தழுவி நோய் வரும்படிச் செய்தவன். ஆண்தன்மை மிகுந்த வெற்றிவேலை உடைய முருகன் அல்லன்” என்பது பாடலின் பொருளாகும்.

பழங்காலத்தில் இருந்த தெய்வ நம்பிக்கைகளில் இது போன்ற வெறியயர்தலும், குறி காணலும் இருந்து வந்திருக்கின்றன என்பதற்கு ஐங்குறு நூறு இன்றும் சாட்சியாக இருந்து வருகிறது.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.