வெறியாடல்   – வளவ. துரையன்

Image result for வெறியாடல்

Image result for உடுக்கு ஆட்டம்

வெறி என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் பெரும்பாலும் ஆவேசம் என்று பொருள் கூறுகின்றன. லிப்கோ அகராதி வெறி என்ற சொல்லுக்கு முருகன் பூசை என்று கூட இன்னும் ஒரு பொருளையும் காட்டுகிறது. பழங்காலத்தில் வெறி என்பதற்கு மணம் என்னும் பொருளை வழங்கி வந்தனர். ’வெறிகமழ் பொழில்’ ‘வெறிமலர்’ என்றெல்லாம் பழைய செய்யுள்களில் காண முடிகிறது. ஒரு குறியையே  நோக்கிச் செல்லும் உறுதியான மனப்போக்கும் அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் தன் இயல்பு மாறுதலும் வெறி எனப்படும். அது தன்னை மறந்த நிலையாகும். அந்த நிலையில் இருப்பவர்க்குப் அப்போது தான் செய்யும்  செயல்கள் எதுவுமே நினைவில் தங்குவதில்லை. இதையே பித்துப் பிடித்தவர்கள், பைத்தியம் பிடித்தவர்கள், மனநிலைம் பிறழ்ந்தவர்கள் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

பழந்தமிழ் மக்களிடத்தே வெறியாடல் அல்லது வெறியயர்தல் என்ற ஒரு வழிபாட்டு வழக்கம் நிலவி வந்திருக்கிறது. வாழ்வில் தம்மால் புரிந்துகொள்ள முடியாத, தீர்வு காண முடியாத சிக்கல்கள் தோன்றும் போது அதைத் தீர்த்தருளுமாறு தாங்கள் வழிபடும் கடவுளுக்குச் செய்யும் பூசையாக இதனை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

ஐவகை நிலத்தில் வாழ்ந்த மக்களும் அவரவர் நிலத்திற்குரிய தெய்வங்களுக்குப் படையலிட்டுக் குறையைத் தீர்த்தருளுமாறு வெறியாடி வழிபட்டு வந்திருக்கின்றனர். இது பெரும்பாலும் மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தில் அதிகமாக இருப்பதைக் காணலாம்.

குறிஞ்சி நிலத்தெய்வம் முருகனே ஆவான். வெறி என்பதற்கு மணம் என்னும் பொருளும் உண்டன்றோ? முருகனை வழிபடும் இடத்தே மிக்க மணமுள்ள பூக்களும் இலைகளும் புகையும் சூழ்ந்திருப்பதால் அந்த இடத்தை வெறிக்களம் என்னும் சொல்லால் அழைத்தனர். “வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்” என்று நற்றிணையில் [43] பார்க்க முடிகிறது. அக்களத்தின் நடுவே வேலை நட்டு அதைச் சுற்றி மக்கள் வட்டமாக அமர்ந்து கொள்வர்.

அடுத்துத் தம்மால் தீர்க்கமுடியாத மனச்சிக்கல் அல்லது உடற்குறைகளை அதற்குரியோர் முன்மொழிந்து கூறுவர். முருகனை மனத்தில் வரித்து வழிபட்டு வெறியாட்டம் நிகழ்த்திக் ‘குறி’ சொல்வோனுக்கு வேலன் என்று பெயர். அவன் முருகன் பெயரை வாழ்த்தித் தன் மேல் முருகன் வந்து நிற்பதாக ஆடுவான். அவனின் ஆட்டத்திற்கேற்ப பலவகை வாத்தியங்கள் மிகுதியான ஒலியுடன் ஒலிக்கும். அவன் சிக்கலுக்கும் காரணம் சொல்லித் தீர்வு சொல்வான்.

தம் மகளிரின் உடல்நலம் குன்றி உடல் அழகும் வேறுபடும்போது காரணமும் தீர்வும் அறிய அவர்தம் தாயர் இதை நிகழ்த்தும் வழக்கம் பெரும்பாலும் காணப்படுகிறது. அம்மகளிரை நீராட்டி ஒப்பனை செய்து வெறியாடும் களத்தில் நிறுத்துவர். அப்போது வாத்தியங்கள் முழங்க வேலன் ஆடும்போது அம்மகளிரும் உடல்நடுங்கி மருண்டு ஆடுவதும் உண்டு. இதை ‘வெறியுறுநுடக்கம்’ என்று பதிற்றுப்பத்து [51] காட்டும்.

தற்காலத்தில் பேய் பிடித்து விட்டதென்று அதை ஓட்டப் பாட்டுப் பாடி ஆடுவோரிடத்தும், சாமி வந்து ஆடும் மகளிரிடத்தும் பண்டைய வெறியாடலின் கூறுகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இக்காலத்தில் குறி சொல்லும் நிகழ்வுகளும் இப்போக்கிலேயே அமைந்திருக்கின்றன.

இந்த வெறியையே மையமாக வைத்துப் பாட்டுகள் பாடியதால் ஒரு சங்க காலப் புலவர் “வெறி பாடிய காமக்கண்ணியார்” என்று அழைக்கப்படுகின்றார். ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணையைப் பாடிய கபிலர் அதில் ‘வெறிப்பத்து’ என்று பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு பகுதியையே படைத்துள்ளார். அப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் வெறியயர்தல் பற்றிய செய்திகளே வருதலால் அதற்கு வெறிப்பத்து என்று பெயர் வந்தது. தலைவி தலைவனுடன் களவுறவு கொண்டதால் அவள் உடல்நலன் குறைந்து போக, அதை நோய் என்றும், அணங்கு பிடித்து விட்டதென்றும் கருதிய அவளின் தாயர் வெறியாட்டு நிகழ்த்த முற்படுதலும் அது தொடர்பான செய்திகளும் இப்பத்துப் பாடல்களில் விரவி வருவதைக் காணலாம்.

தலைவி ஒருத்தி, தலைவனைச் சந்தித்து களவுறவு கொண்டாள். அதனால் அவள் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஊராரும் அதுபற்றிப் பேச ஆரம்பித்து விட்டனர். எனவே அவளை வீட்டிற்குள் பெற்றோர் சிறைப்படுத்தினர். அவனைச் சந்திக்க முடியாமல் அவள் உடல் மெலிந்தாள். அதனால் அவளது செவிலித்தாய் காரணமும் தீர்வும் அறிய வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். அப்பொழுது தோழி தலைவியிடம் செவிலியும் கேட்குமாறு சொல்கிறாள்.

”செறிவான பற்களை உடையவளே! நாம் பிரிவால் வாடித் துன்பப்படுவதைக்கண்டு, நம் செவிலியானவள் வெறியாட்டம் நடத்த வேலனை அழைக்கிறாள். அவன் தலைவனுடன் நாம் கொண்டுள்ள நட்பை அறிந்து கூறிவிடுவானோ?”

வேலனாகிய தெய்வம் வந்து உண்மையைக் கூறிவிட்டால் அதைச் செவிலி  அன்னையிடம் சொல்லி மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்வாள் என்பது அவள் உள் மனத்தில் இருக்கிறது. அதையே இப்படி மறைமுகமாக உணர்த்துகிறாள்.

தலைவன் பிரிவால் ஒருத்தி உடல் மெலிந்தாள். ஆனால் தன் மகளை அணங்கு ஒன்று பிடித்துக் கொண்டு விட்டது என எண்ணிய அவள் தாய் வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். அப்போது தோழி, “நம் தாய் இது காதலன் பிரிவால் வந்த நோய் என அறியாமல் தெய்வக் குற்றம் என் எண்ணி வருந்துகிறாள். ஆதலால் அன்னையிடம் இனியும் உண்மையைக் கூறாமல் இருப்பது கொடுமையாகும்” என்று தலைவிக்கு அறிவுரை சொல்கிறாள்.

தன் மகளுக்காக வெறியாட்டம் நடத்திய தாய் வெறியாடிய வேலன் ”இது தெய்வக் குற்றம்” எனச் சொன்னதை நம்பி விடுகிறாள். அப்பொழுது தலைவியின் தோழி சொல்வதாக இப்பாடல் அமைந்திருக்கிறது.

”கறிவளர் சிலம்பில் கடவுள் பேணி

அறியா வேலன், வெறிஎனக் கூறும்

அதுமனம் கொள்குவை, அனையிவள்

புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே”    [243]

தலைவியின் கண்கள் புதுமலர் போன்று உள்ளனவாம். அது பிரிவுத் துயராலே கலங்கி நீரோடு இருப்பதால் மழைக்கண் என்று காட்டப்படுகிறது. ‘கறிவளர் சிலம்பு என்பது மிளகுக்கொடி வளரும் மலைப்பக்கம் என்று பொருள் தரும். அன்னையிடம், தோழி, “அன்னையே! புத்தம் புது மலர் போன்ற இவள் கண்கள் அழுது புலம்பும் நோய்க்குக் காரணம் சொல்ல வந்த வேலன், மிளகுக்கொடி வளர்கின்ற மலைவாழ் முருகனைப் பாடி, இது தெய்வக் குற்றம் என்று மொழிந்தான். நீயும் அதை உண்மையென மனத்தில் கொள்கிறாயே”

அது உண்மை இல்லையெனில் வேறு காரணம் உள்ளதென உணர்த்த வருகிறாள் தோழி. மேலும் தானே வளர்ந்து படரும் மிளகுக்கொடி வளரும் மலைப்பக்கம் என்றதால் இவளும் தானே தன் தலைவனைப் பற்றிப் படர்ந்து உறவு கொண்டாள் என்பதையும் தோழி மறைமுகமாகக் கூறுகிறாள். இவ்வாறு வெறியாடலிலும் வேலனால் உண்மையை அறிய முடியாது என்பதும் உணர்த்தப்படுகிறது.

வெறியாடும் வேலன் முதலில் மலையை வாழ்த்திப் பாடவேண்டியது மரபாகும். அது தலைவியின் மனம் கவர்ந்த தலைவன் குடிகொண்ட குன்றாகும். அப்படி அவன் அம்மலையைப் பாடினால் அது கேட்டு தலைவி மகிழ்ந்து முகமும் அகமும் மலர்வதைக் கண்ட செவிலித்தாய் உண்மை அறிந்து அவனுடன் மணத்திற்கு ஏற்பாடு செய்வாள் என்றும் தோழி ஒரு பாடலில் கூறுகிறாள். ”ஒருவேளை அவன் மலையைப் பாடாவிட்டால் அந்த வெறியாடல்தான் என்ன பயன் செய்யும்?” என்னும் பொருளில்,

”குன்றம் பாடான் ஆயின்

என்பயன் செய்யுமோ—வேலற்கு அவ்வெறியே?” [244] என்று பாடல் அமைந்துள்ளது.

தலைவன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தினம் வந்து செல்வது தலைவிக்குக் கவலை அளிக்கிறது. தாய் வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். வெறியாடும் வேலனும் கழங்குக் காய்களை நிறுத்தி, கையில் மந்திரத் தகடு வைத்த தாயத்தைத் தலைவி கையில் கட்டினான். இவள் நோய்க்குக் காரணம் முருகனே என்று அவன் கூறிவிட்டான். அடுத்த நாள் தலைவியைச் சந்திக்கத் தலைவன் வந்து மறைவாக நிற்கிறான் அப்பொழுது அவன் கேட்கும் படிக்குத் தோழி சொல்கிறாள். “வெறியாடிய வேலன் உன் நோய்க்கு முருகன்தான்  காரணம் எனச் சொன்னானே; அது நம் தலைவனுக்கும் பொருத்தம்தானே”

வெறியாட்டத்தில் முருகன் என்று சொன்னது தம் தலைவனுக்கும் உரியது எனக் கூறி அவன் விரைவில் வந்து மணம் புரிய வேண்டும் என்று தோழி உணர்த்துகிறாள்.

வெறிப்பத்தின் ஆறாம் பாடலில் ஒரு காட்சியே புனைந்துரைக்கப்பட்டுள்ளது.

மலையில் இருக்கும் புன்செய் நிலத்தில் கானவர்கள் தினைப்பயிர் விளைவிப்பார்கள். அப்பயிர் கதிர் முற்றும்போது அவற்றைப் பறவைகளும் விலங்குகளும் வந்து சேதப்படுத்தாமல் இருக்க உண்மையான புலியைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு பெண்புலிப் பொம்மையை நிலத்தில் வைப்பார்கள். இதைக் காட்டும் ஒரு பாடல் இது.

”வெறிசெறித் தனனே, வேலன் கறிய

கல்முகை வயப்புலி கழங்குமெய்ப் படூஉம்

புன்புலம் வித்திய புனவர் புணர்ந்த

மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து

மன்றில் பையுள் தீரும்

குன்ற நாடன் உறீஇய நோயே”          [246]

[செறித்தல்=ஏற்பாட்டைச் செய்தல்; கறிய=மிளகுக்கொடியை உடைய; கல்முகை=கல்குகை; வயம்=வலிமை; வித்திய=விதைத்த; புன்புலம்=புன்செய்; புனவர்=குறவர்; உறீய=உற்ற]

தலைவியின் உடல் தலைவனின் பிரிவால் மெலிகிறது. அப்பொழுது அன்னை வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். தலைவியைக் காணவந்து மறைந்து நிற்கும் தலைவனும் கேட்குமாறு தோழி சொல்கிறாள்.

”புன்செய் நிலங்களில் முற்றிய கதிரைப்பறவைகளும் விலங்குகளும் வந்து சேதப்படுத்தாமலிருக்க அவற்றை அச்சுறுத்த பெண்புலிப் பொம்மையை கானவர்கள் வைப்பார்கள். அந்தப் புலிப்பொம்மையை உண்மையென நம்பிய ஆண்புலி அத்துடன் இணைந்துவிட்டுக் களைப்பைப் போக்கிக்கொள்ளக் கிடக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவன் நம் தலைவன். அவனால்தான் நமக்கு இந்த நோய் உண்டாகியது. அதைத் தணிக்க வெறியாடும் வேலன் இதோ ஏற்பாடுகளைச் செய்கிறான்.”

அந்த ஆண்புலிபோல அவனும் கள்ள உறவையே நாடி மகிழ்கிறான். அவன் உடன் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஏனெனில் வெறியாட்டு நிகழ்த்தும் வேலன் உடல் மெலிவுக்கு உண்மையான காரணத்தைச் சொல்லிவிட்டால் தலைவிக்குப் பழிச் சொல் வந்து சேரும் என்பதைத் தோழி குறிப்பாக உணர்த்துகிறாள்.

”வெறியாடற வேலன் தனக்கு வந்திருக்கும் நோய் முருகனால்தான் வந்த்தெனச் சொல்வான். அதுவும் சரிதான்; என் தலைவன் பெயரும் அதுதானே” என்றுஒருத்தி வெறியாடல் பற்றிச் சொல்வதாகவும் ஒரு பாடல் கூறுகிறது.

தோழி ஒரு பாட்டில் வெறியாடும் வேலன் உண்மையைக் கண்டுபிடித்துக் கூறினான் எனில் இவள் கற்பின் மாண்பு வெளிப்படும் என்று மகிழ்கிறாள்.            ”பெய்ம்மணல் முற்றம் கவின்பெற இயற்றி

மலைவான் கொண்ட சினைஇய வேலன்

கழங்கினான் அறிகுவது என்றால்

நன்றால் அம்ம, நின்றஇவள் நலனே!”        [248]

“புதுமணல் பெய்த வீட்டின் முற்றத்தே வெறியாடு களத்தை நிறுவி மலையையும், வானையும் கொண்ட அத்துடன் சினம்  மிகுதியான வேலினையும் கொண்ட முருகனை வேண்டி கழற்சிக்காயைக் கொண்டு வெறியாடி உண்மையை வேலன் கூறினால் அதுவும் உண்மையானால் இவளிடத்து நிலைபெற்ற கற்பின் மாண்புதான் நன்று” என்பது பாட்டின் பொருளாகும்.

வெறியாடிய வேலன் தலைவியின் உடல் மெலிவிற்கு முருகக்கடவுளே காரணம் என்று உரைக்கிறான். அதை அவளின் அன்னையும் உண்மையென்று நம்பினாள். அப்பொழுது தோழி, “அந்த வேலன் அருவிகள் விளங்கும் அச்சம் கொண்ட மலைக்கு உரியோனான உன் காதலனை அறியவில்லை போலும்” என்று கூறி வெறியாடுபவனின் சொல்லையே மறுக்கும் பாடல் அடிகளும் காணப்படுகின்றன.

”——-இலங்கும் அருவிச்

சூர்மலை நாடனை அறியாதோனே” [249]

என்னும் பாடல் அடிகள் அதை உணர்த்துகின்றன.

பத்தாம் பாடல் ஓர் அஃறிணைப் பொருளை முன்னிலைப் படுத்திக் கூறுவது போல் அமைந்துள்ளது. வெறியாடும் வேலன் கழற்சிக்காய்களை களத்தில் இட்டு எடுத்தெண்ணிக் குறி சொல்லுவான். அக்காய்களைக் கழங்கு என்றும் சொல்வர். ஒரு தலைவியின் உடல் தலைவனின் பிரிவால் மெலிகிறது ஆனால் அன்னை இது நோய் என்று எண்ணி வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். அந்த ஆட்டத்தில்  அக்காய்கள் ”இவளுக்கு வந்த நோய் முருகனால் தந்தமை” என்று காட்டின. அப்பொழுது தோழி அக்கழங்கை முன்னிலைப்படுத்தி செவிலித்தாய் கேட்கும்படிச் சொல்வது இப்பாடல்.

”பொய்படுபு அறியாக் கிழங்கே! மெய்யே

மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம்

மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன்;

ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள்

பூண்தாங்கு இளமுலை அணங்கி யோனே.  [250]

[கட்சி=காடு; ஆலும்=ஆடும்; விறல்=வெற்றி; வேள்=முருகன்; பொய்படு அறியா=பொய்யை அறியாத]

”பொய் சொல்லுதலை அறியாத கழங்கே! நீலமணி போல விளங்கும் மலை உள்ள காட்டின் உள்ளே, இளமயில்கள் ஆடிக்கொண்டிருக்கும்; நிறைய வள்ளிக்கொடிகள் இருக்கும்; அக்கானகத்திற்கு உரியோன்தான், அணிபுனைந்த இவள் முலைகளைத் தழுவி நோய் வரும்படிச் செய்தவன். ஆண்தன்மை மிகுந்த வெற்றிவேலை உடைய முருகன் அல்லன்” என்பது பாடலின் பொருளாகும்.

பழங்காலத்தில் இருந்த தெய்வ நம்பிக்கைகளில் இது போன்ற வெறியயர்தலும், குறி காணலும் இருந்து வந்திருக்கின்றன என்பதற்கு ஐங்குறு நூறு இன்றும் சாட்சியாக இருந்து வருகிறது.

 

பிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்

Image result for blockchain

நாணயம் ஒரு உலகப் பொதுப்பணம் என்பது நிறைய பேருக்குத் தெரிஞ்சிருக்கும். (உதாரணம்: பிட்காய்ன்) ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நாணயம் இருப்பது போல நாடுகள் அனைத்துக்கும் பொதுவான ஒரு நாணயத்தைக் கொண்டுவரும் முயற்சி தான் இந்த கிரிப்டோ நாணயம். சரி, இந்தப் பொது நாணயத்தைச் செயல்படுத்த ஒரு வங்கி வேண்டுமல்லவா?அதன் சர்வர்களில் தானே உந்த உலக நாணயத்தின் மையப்படுத்தப்பட்ட தகவல் (டேட்டா பேஸ்) இருக்கமுடியும்? இரண்டும்  தேவையில்லை என்கிறார்கள் இதன் கண்டுபிடிப்பார்கள். யார் வேண்டுமானாலும் தங்கள் சர்வரில் இந்த நாணய மாற்றங்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். பாதுகாப்பு? அங்குதான் வருகிறது பிளாக் செயின் என்ற புதிய தத்துவம். மையப்படுத்துவற்குப் பதிலாக பரவலாக்கப்பட்ட சர்வர்களில் கொடுக்கல் வாங்கள்களைப் பதிவுசெய்யமுடியும் என்கிறார்கள்.

ஒரு புதிரை வெளியிட்டு அதை யாரெல்லாம் விரைவில் சரியான விடை கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் தங்கள் சர்வரில் இந்த நாணயப் பரிமாற்றங்களை வத்துக்கொள்ளலாம். அவர்களுக்குத் தங்கள் சர்வரில் பதிவாகும் நாணயப் பற்றுவரவைப் பொறுத்து கமிஷன் கிடைக்கும். இதுதான் பிளாக் செயின் தத்துவத்தின் ஆணிவேர். 

அதைபற்றி அழகு தமிழில் விசைப்பலகை நண்பர் விளக்குகிறார். புரிகிறதா என்று பார்ப்போம். 

(தற்போது டுவிட்டருக்குப் பதிலாக வர இருக்கின்ற மாஸ்டடோன் என்ற செயலியும் இந்த பிளாக் செயின் தத்துவத்தின் அடிப்படையில் தான்  இயங்கப்போகிறதாம். )

 

இன்னொரு நண்பர் பிட்காய்ன் பற்றி அழகு தமிழில் விளக்குகிறார். பாருங்கள் !! 

 

அமெரிக்கப் போர்க்கப்பல்

அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று சான்பிரான்ஸிஸ்கோ நகரின் எம்பார்க்கடெரோ என்கிற இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மிகவும் பாதுகாப்பான கப்பலை அவர்கள் எப்படி எல்லாம் மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள் தெரியுமா?

வழக்கம்போல  அடையாள அட்டை மற்றும் எக்ஸ் ரே சோதனைகளுக்குப் பிறகு   25 பேர்கள் கொண்ட குழுக்களாகப் பார்வையாளர்களைப் பிரித்து ஒவ்வொரு குழுக்கும் ஒரு அதிகாரியை வழிகாட்டியாக நியமித்து கப்பலை சுற்றிக் காண்பிக்கிறார்கள். பார்வையாளர்களுக்குப் பரிபூரண சுதந்திரம். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எதை வேண்டுமானாலும் போட்டோ வீடியோ எடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் அங்கிருக்கும் ட்ரக் , ஹெலிகாப்டர், ஜீப் மற்றும் படகு எதில் வேண்டுமானாலும் உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்து கப்பல்படை வீரர்கள் போல பவனி வரலாம். அங்கிரிக்கும் துப்பாக்கி, மெஷின் கன், ( குண்டு இல்லை – மற்றபடி அனைத்தும் ஒரிஜினல்) டெலெஸ்கோப் போன்றவற்றை நம்மை உபயோகிக்கச் செய்கிறார்கள். கப்பல் வீரர்கள் அவற்றை செய்து காட்டி நம்மை அவர்களின் ஆயுதங்களுடன் நம் போனிலேயே போட்டோவும் எடுத்து உதவுகிறார்கள்.

நாமும் நமக்குப் பிடித்த இடங்களில் செல்பி எடுத்துக் கொள்ளலாம்.

கப்பல்வீரர்களுக்கு பொதுமக்கள் தரும் மரியாதையையும் அவர்கள் பொதுமக்களுக்குத் தரும் மரியாதையையும் பார்க்கப் பிரம்மிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றன.

நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை நிறைய இருக்கின்றன.

அந்தக் கப்பலில் எடுத்த புகைப்படங்களில் சில இங்கே உங்கள் பார்வைக்கு!

 

 

தூரத்து உறவுகள்! – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

Image result for தூரத்து சொந்தம்

உன் உயர்நிலை கண்டு
உதடுகளால் வாழ்த்தி
உள்ளத்தால் பொறாமை
தீயை மனதில் வளர்க்கும்
உன் தூரத்து உறவானாலும்
என்றும் துரத்தும் உறவுகளே!

உன் துன்பநிலை கண்டு
உள்ளம் உருகி ஆறுதல்கூறி
கண்ணுக்கு தெரியாத
கடவுளிடம் முறையிடும்
கள்ளமில்லா உள்ளங்கள்
தூரத்து உறவானாலும்
நெருங்கிய உறவுகளே!

உறவுக்கு கை கொடுத்து
உரிமைக்கு குரல் கொடுத்து
இன்னா செய்தாருக்கும்
இனியவைகள் செய்
அன்புடன் வேண்டி நிற்கும்
உன் இனிய நட்பு உறவுகள்
தூரத்து உறவானாலும்
நெருங்கிய உறவுகளே!

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்

Image result for காதல்

‘ஏன்பா… காலிலே விழுந்த அந்த இளம் ஜோடியை
அந்த பெரியவர் வாயார வாழ்த்தினாரே… அதுக்கு
ஏன் அந்தப் பெண் பெரியவரை அப்படிக் கத்தறா..?

‘அதையேன் கேட்கறே..! ஆயுள், ஆரோக்கியம்,
ஐஸ்வர்யத்தோடு பல்லாண்டு வாழணும்னு சொல்-
றதுக்கு பதிலா வாய் குழறி ‘ஆயுள், ஆரோக்கியம்,
ஐஸ்வர்யாவோடு பல்லாண்டு வாழணும்னு சொல்-
லிட்டார்…’

‘ஐஸ்வர்யாவா..?’

‘ஆமா… ஐஸ்வர்யா அந்தப் பையனுடைய செக்ரடரி..!’

 

 

இம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்

Image result for சா கந்தசாமி

திரு சா கந்தசாமி அவர்களை விருட்சம் 100 வது இதழ் வெளியீட்டு விழாவிலும் மற்றும் பல இலக்கியமேடைகளிலும் சந்தித்திருக்கிறோம். நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும் கூட. அழகு தமிழில் அவர் கூறும் ஆணித்தரமான கருத்துக்களைக் கேட்பதற்கென்றே ரசிக உள்ளங்கள் வருவதுண்டு.

அவரைப்பற்றிய தகவல்கள்:

(நன்றி : விக்கிபீடியா)

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 1968ல் எழுதிய சாயாவனம் புதினம் பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. சவகர்லால் நேரு, பெரியார், உ. வே. சாமிநாதையர் மற்றும் வெ. சாமிநாத சர்மா போன்றோரின் படைப்புகளை கந்தசாமி இலக்கிய வாழ்க்கைக்கான தளமாக அமைத்தார்.”இதன் மூலம் எனக்கு கிடைத்த கல்வி உதவித் தொகை எனக்கு வலிமை, நம்பிக்கை மற்றும் தன்மை ஆகியவற்றைக் கொடுத்துள்ளது, இது எனது படைப்புகளை நுட்பமாக பாதித்திருக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.அவர் மேலும் மேலும் கூறுகிறார், “எழுத்துக்கலை கலை அலங்காரமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். சிறந்த இலக்கியம், நேரம், கலாச்சாரம், மொழி மற்றும் அரசியல் சித்தாந்தத்தின் தடைகள் ஆகியவற்றை கடந்து செல்லும் ஒன்றாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பாலினத்துடன் தொடர்புடையது அல்ல. மிக முக்கியமாக, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு வாசகர் ஒரு நாவலை அல்லது சிறுகதையை புரிந்துகொள்ள முடியும்.

தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது. இவரது தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் (terracotta) பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தூர்தர்ஷன் காவல் தெய்வங்கள் என்னும் 20 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது

விருதுகள் – சிறப்புகள் 

சாயாவனம் புதினம் வீடியோ படமாக ஆக்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குட்ப ட்ட கல்லூரிகளில் பாடமாகவும் வைக்கப்பட்டு உள்ளது. தூர்தர்ஷனில்  ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தொலைந்து போனவர்கள் புதினம் தூர்தர்ஷன் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சுடுமண் சிலைகள் பற்றிய டாக்குமெண்டரி சர்வதேச விருது பெற்றது.

தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தூர்தர்ஷன்  தொலைக்காட்சி ‘காவல் தெய்வங்கள்’ என்னும் 20 நிமிட ஆவணப் படத்தைத் தயாரித்து வெளியிட்டது.

 சாயாவனம் ,சூர்யவம்சம்,  விசாரணைக் கமிஷன் என்ற புதினங்கள் ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

 தக்கையின் மீது நான்கு கண்கள் (சிறுகதை), விசாரணைக் கமிஷன், சாயாவனம் போன்ற புதினங்கள் குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

கலை வளர்ச்சிக்கான அவரது பங்களிப்புக்காக, தமிழ்நாடு அரசாங்கத்தின் லலித் கலா அகாடமி, மார்ச் 1995 இல் அவருக்கு ஒரு அங்கீகாரம் வழங்கியது.

1998ல் விசாரணைக் கமிசன் என்ற புதினத்திற்காக இவருக்குத் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய “நிகழ் காலத்திற்கு முன்பு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது

 2009 ஆம் ஆண்டு கலைமாமணி விருது பெற்றார்.

(மோனிக்கா மாறன் எழுதிய விமர்சனக்குறிப்பு – ஜெயமோகன் இணையதளத்திலிருந்து )

1

தமிழின் முக்கியமான சிறிய நாவல்களில் ஒன்று சாயாவனம். சா.கந்தசாமியால் நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்நநாவலை ஒரு குறுநாவல் என்றே சொல்லலாம். சூழியல் கொள்கைகள் பிரபலமாகாதிருந்த காலத்தில் ஒரு காட்டின் அழிவை மட்டும் சுருக்கமான நேரடியான மொழியில் சொன்ன நாவல் இது. அந்த அடர்த்தியினாலேயே குறியீட்டுப்பொருள் கொண்டு பலவகையான அழிவுகளையும் இழப்புகளையும் காட்டுவதாக ஆகியது.

தமிழின் நவீனத்துவ இலக்கியத்தின் உச்சப்படைப்புகளில் ஒன்றாகச் சொல்லப்படவேண்டியது. உணர்ச்சிகரம் அற்றமொழிநடை. புறவயமான சித்தரிப்பு. செறிவான கதைநகர்வு. குறியீட்டுத்தளத்தில் மட்டுமே அனைத்து அர்த்தவிரிவையும் வைத்திருக்கும் அமைதி.

நாற்பதாண்டுகளுக்கு முன் ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே தன் சவால்’ என்று அறிவித்தபடி தமிழிலக்கியத்திற்குள் புகுந்தவர் சா.கந்தசாமி. நவீனத்துவத்தின் உச்சகட்ட அறைகூவல் அது.

வெறும் நிகழ்வுகளே இலக்கியத்திற்குப் போதுமானது, கட்டுக்கோப்பான கதை என்பது ஒரு அறிவுசார்ந்த உருவாக்கம், அதில் வாழ்கைக்கு அர்த்தத்தையும் மையத்தையும் கண்டுபிடிக்கும் முயற்சி உள்ளது. வாழ்க்கைக்கு அப்படி ஓர் அர்த்தமும் மையமும் இல்லை என்று கந்தசாமி சொன்னார்

அவரது புனைவுலகம் அந்த தரிசனத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. மிக எளிய நேரடியான மொழியில் எழுதப்பட்ட அவரது கதைகள் பெருவாரியான வாசகர்களுக்குரியவை அல்ல. அவை பெரும்பாலும் மேல்தளத்தில் மிகத்தட்டையானவை. வாசகன் வாழ்க்கையைப்போலவே அந்நிகழ்வுத்தொகுதியையும் தன் சொந்த கற்பனையால் அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பவை

பிரபல எழுத்தாளர் இமையம் அவர்கள் கருத்து:

சா.கந்தசாமியின் 172 சிறுகதைகளை ஆரம்பகால, பிற்கால கதைகள் என்று பிரிக்கலாம். இந்த பிரிவுகளிலிருந்து கிராமத்தை பின்புலமாகக் கொண்ட சமூக நிகழ்வுகளை, பொருளாதாரப் பிரச்சனைகளை, தனிமனிதப் பிரச்சனைகளை, சிறுவர்களை, அரசியலை மையமாகக் கொண்ட கதைகள் என்றும் பிரிக்கலாம். ஒவ்வொரு கதையும் சமூகத்தின் ஒவ்வொரு முகத்தையும் ஒவ்வொரு காலக்கட்டத்தையும் மட்டும் காட்டவில்லை. சமூகத்தின் சகலவிதமான மனிதர்களையும் காட்டுகிறது. இந்தக் கதைகளின் வழியே நாம் அந்தந்த கால சமூகத்தின் உயிர்நாடியை அறிந்துகொள்ள முடியும்.

தினமணி கொண்டாட்டம் வாரப் பத்திரிகையில் ” என்றும் இருப்பவர்கள்” என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர்கள் – ஆளுமைகள் பற்றி ஒரு தொடர் எழுதி வருகிறார். நகுலன், சுத்தானந்த பாரதியார், சுந்தர ராமசாமி, கல்கி, சிலோன் விஜேந்திரன், லா சா ரா மற்றும் பலரைப் பற்றி சுருக்கமாக ஆனால் மனதைத் தொடும்வரையில் எழுதியிருக்கிறார்.

சா கந்தசாமியைப் பற்றிய ஆவணப்படத்தைப் பாருங்கள்!!

 

 

திரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்

மனதை உருக்கும் பாடல் 
பெண் குழந்தையைப்  பெற்ற ஒவ்வொரு தகப்பனும் கண்ணில் நீர் ததும்ப ரசிக்கும் பாடல் வரிகள்! 
படம்: விஸ்வாசம்
பாடல்: தாமரை 
இசை : இமான் 
பாடியவர்: சித் ஶ்ரீராம் 
நடிப்பு: அஜித்
பாடலைப் படித்துக்கொண்டே பாடலைக் கேளுங்கள் ! 
Image result for கண்ணான கண்ணே விஸ்வாசம் mp3 download
கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா
தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமாஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே
புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னைவிண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மனதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
எனை ஏதோ பயம் கூடும்

மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி

கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே

 

சிறக்கும் வாழ்க்கை! – தில்லை வேந்தன்

Image result for வாழ்க்கை
உதிர்ந்து போகும் என்பதனால்
     ஒளிர்பூ மலர  மறுப்பதுண்டோ?
கதிரும் நாளும் மறைவதனால்
     காலை  உதிக்க வெறுப்பதுண்டோ?
நதியும்  வறண்டு விடுவதனால்
     நளிர்நீர்  வராமல் இருப்பதுண்டோ?
மதியும் தேய்ந்து குறைவதனால்
      வளர மீண்டும் மறப்பதுண்டோ?
உதிர்ந்த  பூவும்  உரமாகும்
     உரத்தால் வித்தும் மரமாகும்
முதிர்தல்  இயற்கை நெறியாகும்
     முழுதும்  புரிந்தால் சரியாகும்.
புதிதாய்ப் பிறந்தோம் இன்றென்று
     போகும் நாளை அனுப்பிடுவோம்
எதிலும் பொறுமை, நம்பிக்கை
     இருந்தால் சிறக்கும் நம்வாழ்க்கை!

குவிகம் குரல் – கண்ணதாசன் உரை

இனி மாதாமாதம் ஒரு பிரமுகரின் உரையை ஆடியோ வடிவில் கேட்கலாம் ! 

இம்மாதக்குரல் கண்ணதாசன் !

 

தவத்துக்கு ஒருவரடி ; தமிழுக்கு இருவரடி; சவத்துக்கு நால்வரடி!!

கண்ணதாசனின் நகைச்சுவை ததும்பும் உரையைக் கேளுங்கள்! 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

“பிள்ளையவர்கள் – ஐயரவர்கள் – கி.வா.ஜ” (குரு – சீடர் பரம்பரை)

புத்தக அறிமுகம் : தமிழ் மூவர். ஆசிரியர்: கீழாம்பூர் – கலைமகள் பப்ளிகேஷன்ஸ்).

தமிழுக்கு எப்போதுமே மூன்று ராசியான எண்! முத்தமிழ், முக்கனி, முப்பால், படைத்தல், காத்தல், அழித்தலைச் செய்யும் மூன்று தெய்வங்கள், தமிழ் மூவர் எனப்படும் முத்துத்தாண்டவர், அருணாசலக் கவி, மாரிமுத்தாப் பிள்ளை, தேவாரம் பாடிய மூவர் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞான சம்பந்தர் – இந்த வரிசையில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் எழுதியுள்ள புத்தகம் “தமிழ் மூவர்”!
குரு – சீடர் பரம்பரையை அழகான தமிழில் தந்துள்ளார். மிகச் சுருக்கமாக ஆனால் மிக சுவாரஸ்யமாக மூன்று தமிழ்க் காவலர்களின் – மகாவித்துவான் திரிசிரபுரம் ஶ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மகா மகோபாத்யாய தாக்‌ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் மற்றும் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் – வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்துள்ளார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் பெருமைக்குரிய மாணவர் உ.வே.சா. உ.வே சா அவர்களின் பெருமைக்குரிய முதல் மாணவர் கி.வா.ஜ. பிள்ளையவர்களின் வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா. எழுதினார். உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரம்’ நூலைத் தொடர்ந்து ‘என் ஆசிரியப் பிரான்’ என்று ஐயர் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதி நிறைவு செய்தவர் கி.வா.ஜ. அவர்கள் – இந்த குரு – சீடர் பரம்பரையை எளிய நடையில் எல்லோரும் படித்து அறியும் வகையில் எழுதியுள்ள கீழாம்பூர் பாராட்டுக்குரியவர்!
மீனாட்சிசுந்தரம் பிள்ளை: (1815 – 1876):
மலைக்கோட்டை மெளன ஸ்வாமிகள் மடத்தில் தங்கியிருந்த வேலாயுத முனிவர் அவர்களைக் காலை மாலைகளில் தவறாமல் சென்று, முயன்று, வழிபட்டுப் புதிய நூல்களைப் பிரதி எடுத்தும், படித்தும், படித்த நூல்களில் உள்ள ஐயங்களை வினாவித் தெளிந்தும் வருவாராம் பிள்ளையவர்கள் (தமிழ் மூவர்களின் எழுத்து நடையைப் பல இடங்களில் அப்படியே கையாண்டுள்ளார் கீழாம்பூர் – அந்த நடை வாசகனைப் பிரமிக்க வைக்கிறது!).
வீடுதோறும் பிச்சை (பிட்சை) எடுக்கும் பரதேசி ஒருவர், தண்டியலங்காரத்தில் நல்ல பயிற்சி உள்ளவராம் – ஆனால் அவர் யாரையும் மதிக்காமலும், பாடம் சொல்லிக்கொடுக்காமலும் இருப்பாராம். அவருடன் தெருதோறும் சென்று, அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து, அவரிடம் இருந்த அந்தப் புத்தகத்தைப் பெற்று, எழுதிக் கொண்டு பாடமும் கேட்டாராம் பிள்ளையவர்கள் – என்னே ஒரு தமிழ்ப் பற்று, மெய்சிலிர்க்க வைக்கிறது.
நூல்களைத் தொகுத்து வைப்பது, முத்துக் கோர்த்தாற்போல் அழகிய எழுத்துக்களில் எழுதி வைப்பது என வருங்கால மாணாக்கர்களுக்காகச் செய்துள்ளார். கம்பராமாயணத்தை மூன்று முறை எழுதியிருக்கிறார். மாணவர்களுக்கு ஏட்டில் எழுதும் பயிற்சியை உண்டாக்கினார்.
பாடவேண்டிய விஷயங்களை ஒரு வகையாக மனதில் ஒழுங்குபடுத்திக்கொண்டு, ஒரே மூச்சில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடுவாராம் பிள்ளையவர்கள்!
தல புராணங்கள், சரித்திரம், மான்மியம், பிற காப்பியங்கள், பதிகம், பதிற்றுப் பத்தந்தாதி, திரிபந்தாதி, யமக அந்தாதி, வெண்பா அந்தாதி, மாலை, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா, தூது, குறவஞ்சி, சிலேடை வெண்பா என இவர் எழுதியவை தமிழுக்குச் சேர்த்து வைத்திருக்கும் பெருஞ்சொத்து ஆகும்!
‘பிள்ளையவர்கள்’ என்றாலே, வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைதான் என்பது இவரது தமிழ்த் தொண்டுக்குக் கிடைத்துள்ள பெரிய அங்கீகாரம்!
உ.வே. சாமிநாதையர்; (1855 – 1942):
பிள்ளையவர்களின் நிழல் போலத் தொடர்ந்து அவரிடம் கல்வி பயின்று வந்தவர்! ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுதும் அலைந்து சுவடுகளைத் தேடிப் பிடித்து, பதிப்பித்துத் தந்த உ.வே.சா அவர்களைத் ‘தமிழ்த் தாத்தா’ என்று அடைமொழி தந்து அழைத்தவர் எழுத்தாளர் கல்கி !
பாஸ்கர சேதுபதி இவருக்கு, இவரது தமிழ்த் தொண்டுக்கு, ஒரு கிராமத்தையே எழுதி வைக்க முன்வருகிறார்!
ஓவியத்திலும், சங்கீதத்திலும் ஈடுபாடு உண்டு. ஒரு நிலையில், இலக்கியமா, சங்கீதமா என்ற போது, பிள்ளையவர்களின் அறிவுரைப் படி, கோபாலகிருஷ்ண பாரதியிடம் பயின்று வந்த சங்கீதத்தைக் கைவிடுகிறார். ஆனாலும் பின்னாளில் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும்போது, செய்யுட்களைப் பாட்டாகவே பாடுவார்!
“ஐயர் அவர்களுடைய பதிப்புக்களால் தமிழ்மொழியானது எந்த மொழிக்கும் தாழ்ந்தது அல்ல என்பது நிரூபணம் ஆகிறது” – ஜி.யூ.போப் அவர்களின் குறிப்பு!
தனக்கு வேலை வாங்கி கொடுத்த தியாகராச செட்டியாரின் மேசையை தேடிக் கண்டுபிடித்து, தனக்காக வாங்கிக்கொள்ளும் உ.வே.சா. அவர்களின் நன்றி உணர்ச்சி வியக்க வைப்பது.
மகாகவி பாரதியுடனான சந்திப்பு, நீண்ட காலம் வேலை செய்து பதிப்பித்த “பெருங்கதைப் பதிப்’பைத் தன் ஆசிரியருக்கு உரிமையாக்குவது, தாகூருடன் ஆன சந்திப்பு என பல சுவாரஸ்யங்களை சொல்கிறார் கீழாம்பூர்!
பாரதியார், தாகூர் ஆகிய இரு மகா கவிகளும் ஐயரவர்களை அகத்திய முனிவருக்கு ஒப்பானவர் என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டாம் உலகப் போர் காலம் – சென்னையிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்ல வேண்டும் என்றபோது அரை மனதுடன் ஒத்துக்கொள்கிறார். அங்கு சென்றாலும் மனமும் உடலும் சோர்ந்தே இருக்கிறார் – தனது புத்தகங்களைப் பிரிந்து வந்த துயரம். எனவே ஏட்டுச் சுவடிகள், குறிப்புகள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் முதலியவற்றைச் சென்னையிலிருந்து எட்டு வண்டிகளில் ஏற்றித் திருக்கழுக்குன்றத்துக்கு அனுப்புகிறார்கள். மகிழ்ச்சியும், மனத் தைரியமும் அடைகிறார் ஐயர் அவர்கள்!
தன்னால் பல குறிப்புகளைப் பார்வையிடாமல் போன வருத்தமே ஏப்ரல் 10, 1942 அன்று அவர் அமரர் ஆகக் காரணமாயிற்று என்று உ.வே.சா. அவர்களின் மகன் கல்யாண சுந்தரையர் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
‘ஐயர் பதிப்பு’ என்றே வழங்கப்படும் அவரது பதிப்புகளைப் பட்டியல் இட்டிருக்கிறார் கீழாம்பூர் – ஐங்குறு நூறு, கபாலீஸ்வரர் பஞ்சரத்னம், குறுந்தொகை, கோபால கிருஷ்ண பாரதியார் வரலாறு, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, தமிழ் விடு தூது, நல்லிரைக் கோவை (நான்கு பகுதிகள்), பத்துப்பாட்டு மூலம், பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு, பெருங்கதை, மணிமேகலை, மான் விடு தூது, மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் (2 பகுதிகள்), வித்துவான் தியாகராசச் செட்டியார் ஆகியவை அவற்றில் சில!
கி.வா.ஜகந்நாதன்: (1906 – 1988)
பல தமிழ்ப்பாக்களுக்கு விளக்க உரை எழுதியவர் கி.வா.ஜ. அதனால்தானோ என்னவோ அவருக்குச் சின்ன வயதிலேயே பிடித்த இனிப்பு, பொருள்விளங்கா (பொரிவிளங்காய்) உருண்டை என்கிறார் கீழாம்பூர்!
குளித்தலைப் பள்ளிக்கூடத்தில் இவரது முதல் பாடலைப் பாராட்டிய தமிழாசிரியர் கொங்கணாம்பட்டி நரசிம்மையர் – தன் ஆற்றலைப் பாராட்டிய அந்தத் தமிழ்ப் பண்டிதரை கி.வா.ஜ. அவர்கள் மறந்ததேயில்லை!
காந்தமலை முருகன் சந்நிதியில் அருணகிரிநாதர் ஜெயந்திக்கு “அன்பு” என்ற தலைப்பில் பேசியதே இவரது கன்னிப் பேச்சு!
பெரும்பாலும் சட்டை போடாமல் இருந்த காலத்தில், ‘பூஜ்யர் த்ரோவர் துரை’க்கும் அவர் மனைவிக்கும் தமிழ் சொல்லிக்கொடுக்கப் போகும்போதுதான் முதன் முதலாகக் கதர் ஜிப்பா ஒன்று தைத்துக்கொள்கிறார். பின்னர், வாழ்நாள் முழுவதும் கதராடையையே அணிந்து வந்தார் கி.வா.ஜ.!
சிறந்த முருகனடியாரான கி.வா.ஜ. தனது இருபத்தி இரண்டாம் வயதில், தேவாரம் பாராயணம் செய்யும் சிறந்த சிவனடியாரான ஶ்ரீமத் ஐயருடன் (வயது எழுபத்திரண்டு) இணைந்தது தமிழர் செய்த நல்வினைப் பயனே என்றுதான் சொல்ல வேண்டும்!
கலைமகள் ஆசிரியர் குழுவில் கி.வா.ஜ. வை இஅணைத்து விட்டதும் ஐயர் அவர்களே – இவரது கலைமகள் வாழ்த்து, முதல் இதழில் முதல் பக்கத்தையே அலங்கரித்தது!
கி.வா.ஜ. அலமேலுவைப் பெண்பார்க்கும் வைபவத்தையும், அதற்குக் காரணமான நிகழ்வுகளையும், ஐயர் அவர்கள் வீட்டில் நடக்கும் நிச்சயதார்த்தத்தையும் மிக சுவாரஸ்யமாக, ஒரு சிறுகதை போல எழுதியுள்ளார் கீழாம்பூர்!
1934 ல் கலைமகள் ஆசிரியர் திரு டி எஸ் ராமச்சந்திரையர் காலமாகி விட, ஆர்.வி சாஸ்திரி பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர், பதிப்பாசிரியர் நாராயணசாமி ஐயர், உ.வே.சா. அவர்களுடன் கலந்து பேசி, ஆரம்பத்திலிருந்து உதவி ஆசிரியராகப் பணி புரியும் கி.வா.ஜ. வே இந்தப் பொறுப்புக்கு ஏற்றவர் என முடிவுசெய்கிறார். அன்று கலைமகள் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர், தன் காலம் முடியும் வரை கலைமகள் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டார் கி.வா.ஜ.
காஞ்சி காமகோடி பீடாதிபதி பெரியவர்களால் ‘வாகீச கலாநிதி’, ‘திருமுருகாற்றுப்படை அரசு’ என்று கெளரவிக்கப் பட்டவர் கி.வா.ஜ.
சிறுகதைப் புதினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, இலக்கியத்தை வளர்த்தவர். அகிலன், மாயாவி, அநுத்தமா, ராஜம்கிருஷ்ணன், ஆர்.சூடாமணி, பி.வி.ஆர்., எல் ஆர் வி. போன்றவர்களின் சிறுகதைகளை வெளியிட்டு, இவர்களை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தவர் கி.வா.ஜ.!
சிலேடைக்கும், நகைச்சுவைக்கும் பெயர் பெற்ற கி.வா.ஜ. 250 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இப்புத்தகத்தை வாசித்து முடித்தபோது, ஒரு நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சியை உடனிருந்து அனுபவிக்கும் உணர்ச்சி ஏற்பட்டது.
சின்ன ‘கேப்ஸ்யூல்’ என்று சொல்லக்கூடிய அளவில், தமிழ் இலக்கியத்தில் முக்கியமான மூன்று ஆளுமைகளைப் பற்றி கீழாம்பூர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது – அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் இது!
டாக்டர் ஜெ.பாஸ்கரன்.