நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
- இட்லி மகிமை – ஏப்ரல் 2018
- தோசை ஒரு தொடர்கதை – மே 2018
- அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
- ரசமாயம் – ஜூலை 2018
- போளி புராணம் – ஆகஸ்ட் 2018
- அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
- கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
- கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
- சேவை செய்வோம் – டிசம்பர் 2018
- பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
- பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
- வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
- பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
- ஊறுகாய் உற்சாகம் – மே 2019
- பூரி ப்ரேயர் – ஜூன் 2019
- இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
- வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
- வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
- சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019
- அவியல் அகவல் நவம்பர் 2019
சாம்பார் சக்தி !
வாய் மணக்கும் கை மணக்கும்
சாம்பாரடி சாம்பார் !
வாசல் மணக்கும் கொல்லை மணக்கும் !
சாம்பாரடி சாம்பார் !
எட்டூரு எட்டிப் பார்க்கும் !
சாம்பாரடி சாம்பார் !
எங்கும் பார்க்க முடியாதெங்கள்
சாம்பாரடி சாம்பார் !
சந்தி வந்தனம் நடுவினிலே
காயத்ரி இருக்குது !
வேதங்களின் வித்தாய் மகா
வாக்கியம் இருக்குது !
ஓம் எனும் ஒலி மந்திரத்தின்
உயிராய் இருக்குது !
சாம்பார் பொடியில் இருக்குது
எங்கள் சாம்பார் சக்தியே !
ஒவ்வொரு வீட்டு சாம்பாருக்கும்
தனிச் சுவை உண்டு !
எங்கள் வீட்டு சாம்பாரில்
அன்னை கை மணம் உண்டு !
நாக்கில் ஒரு சொட்டு போதும் –
நரம்பெலாம் பரவும் !
அன்னை சக்தி அன்பாய்ப் பாய்ந்து
நாடியில் ஓடும் !
கத்திரிக்காய், வெங்காயம் என்று
எதனையும் போடு !
சௌ சௌ, காரட், மற்றும்
அவரையும் போடு !
வெண்டை, தக்காளி, ஏன்
கீரையும் சேரு !
கிளறிக்குழம்பு கொதிக்கும் போது
தாளம் போடு !
பெருங்காயத்தில் இருக்குதடா
சாம்பார் பெருமை !
உப்பு, உரப்பு, ஏறிய கை
சப்ப வைக்குமே !
எத்தனை சுவை இருக்குதடி
பதார்த்தங்களிலே !
சாம்பார் போல் சுவை வருமோ !
சிந்தித்திடுவாய் !
சோற்றினிலே சாம்பார் விட்டு
சுழற்றி அடிக்கலாம் !
தோசையோடு சேர்த்தடித்து
தேவலோகம் போகலாம் !
சாம்பாரில்லா இட்லி என்றால்
கேலி பேசுவார் !
சரியான சாம்பார் என்றிடுவார்
அறியாதவரே !
எத்தனைதான் எழுதினாலும்
புரியாதம்மா !
எங்கள் வீட்டு சாம்பார் புகழ்
முடியாதம்மா !
அன்னை நினைவு இருக்கும் வரை
அகிலம் உண்டம்மா !
அனைத்தினிலும் பெரிது அவள்
அன்பே அம்மா !
***********************************************
ஜி.பி. சதுர்புஜன்
E Mail: kvprgirija@gmail.com Ph: 98400 96329