சில வருடங்களுக்கு முன்னால் ‘மாதொருபாகன்’ என்னும் நாவல் பற்றிய சர்ச்சை அரசியல், நீதிமன்றம் என்று பலவித குழப்பங்ககளுக்குப் பிறகு ஓரளவிற்கு அடங்கியது. மனிதர்களைப் பற்றி எழுதாமல் ஒரு ஆட்டுக் குட்டியைப் பற்றி எழுதுகிறேன் என்று இவர் எழுதிய “பூனாச்சி- ஓரு வெள்ளாட்டின் கதை” மிகவும் பிரபலமானது.
இவரது பல நாவல்கள் கொங்குநாட்டு மணத்துடன் , அந்த மண்ணின் மற்றும் மக்களின் பிரச்சினைகளை எதார்த்தமாக எடுத்துரைக்கும். உதாரணம் ‘கங்கணம்’ என்னும் புதினம்.
———–
இவரது ஒரம்பரை என்னும் கதை
“வா கண்ணு”
சீராயியின் முகத்தில். மகிழ்ச்சி கொப்பளித்தது. வெற்றிலைச் சாற்றை நீட்டித் துப்பிவிட்டுச் சிரித்தாள். அவன் ‘டிவிஎஸ் 50’யை வாதனாராம் மர நிழலில் நிறுத்திவிட்டு வந்தான். என்று தொடங்குகிறது.
அவன் என்று சொல்லப்பட்ட சிங்கான் கொட்டகையை அண்ணாந்து செலவு எவ்வளவு ஆகியிருக்கும் என்று கணிக்கிறான். ‘வராதவன்’ வந்திருக்கின்றான் என்று சீராயி தன் மருமகளை அழைக்கிறாள். வீட்டில் எல்லோரும் நலமா என்று விசாரிக்கிறாள் சீராயி.
மகனுக்கு உடல் நலம் இன்றி ஆஸ்பத்திரியில் சேர்த்து அதிகமாகச் செலவானது பற்றிச் சொல்கிறான் சிங்கான். பார்க்க வரவேண்டும் என எண்ணம் இருந்தாலும் ஒழியவில்லை என்கிறாள் சீராயி. (மருமகள் வந்தும் நேரம் கிட்டுவதில்லை என்று ஒரு இடைச் செருகல்)
“எங்கீங்க அத்தெ.. ஆரோ ஒரம்பர வந்திருக்குன்னீங்க?”
என்று கேட்டபடியே மருமகள் ரோசா சாணிக்கையோடு வருகிறாள்.
சிங்கான் ரோசாவை குசலம் விசாரிக்கிறான், வளையல் புதுசு போல என்றும் கேட்கிறான். “சித்தப்பன் புள்ளைக்கு நீங்கதான் செஞ்சுபோடறீங்களா?” என்று கேலி பேசுகிறாள் ரோசா.
சிங்கானுக்கு ‘ஒப்பிட்டு’ என்கிற பதார்த்தம் கொண்டுவந்து கொடுக்கிறாள் ரோசா. இரண்டு போதும் என்று சொல்லும் சிங்கானை உரிமையோடு உபசரிக்கிறாள் சீராயி.
“எடுத்துக்க கண்ணு… எங்கூட்டுக்கு ஆடிக்கு ஒருநா அம்மாவசைக்கு ஒருநா வர.. நல்லது பொல்லாதது எதும் செஞ்சாலும் ஆவும்…”
பேச்சு சீராயியின் மகன் பற்றித் திரும்புகிறது. ஒழுங்காக லாரி வேலைக்குப் போகிறானா என்று விசாரிக்கிறான் சிங்கான். போகிறான் ஒரு கிறுக்கு வந்தா படுத்துக்குவான் என்கிறாள் சீராயி.
சிங்கான் சிகரெட் பத்தவைக்க, அந்தக் கருமாந்திரத்தை எதுக்கு குடிக்கிரே என்று உரிமையோடு கடிந்து கொள்கிறாள் . வண்டி வாங்கினப்புறம் இந்தப் பழக்கம் வந்துவிட்டது என்று சிங்கான் பதில் சொல்கிறான். (வண்டி என்று சொல்லப்படுவது உழவுக்குப் பயன்படும் பவர் டில்லரோ டிராக்ட்டரோ என்று புரிந்துகொள்கிறோம்.)
உழவிற்கு ஓட்டியதற்கு வாடகை வாங்கத்தான் சிங்கான் வந்திருக்கிறான். பதினைந்து நாட்களாக கொண்டுவந்து கொடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தாலும் பணம் சேராமல் போய்விட்டதாம். யாரிடமோ கேட்டிருப்பதாகச் சொல்லி வெளியே போகிறாள் சீராயி.
பணம் வருகிறது. எண்ணிக்கொண்டே எவ்வளவு ஆயிற்று என்று கேட்கிறாள் சீராயி. ஐந்து மணிநேரம் முன்னூற்றி எழுபத்தி ஐந்து ரூபாய் என்கிறான் சிங்கான்.
அப்போதுதான் பிரச்சினை உருவாகிறது.
ஐந்து மணிநேரம் என்றால் வேறு யாருடைய கணக்காக இருக்கும். தங்களுக்கு எப்போதும் நாலு மணி நேரம்தான் தான் ஆகும் என்கிறாள் சீராயி.
அதெப்படி ஒட்டிய டிரைவர் நோட்டுல எழதி பதிவு செய்திருக்கிறானே என்கிறான் சிங்கான். எப்பவும் மூன்றே முக்கால் அவர் தான் ஆகும் என்று சீராயி சொல்ல, எழுதியதுதான் கணக்கு என்று சிங்கான் சொல்ல, அதெப்படி ஒன்னேகால் மணி ‘எச்சா’ ஆவும் என்று சீராயி வாதம் செய்ய..
முன்னூற்று எழுபத்தி ஐந்து கொடுக்கத்தான் வேண்டும் என்று சிங்கான் கண்டிப்பாகச் சொல்கிறான். நாலு மணிநேரம்தான் டிரைவர் சொன்னான் என்கிறாள் ரோசா. அறுபது ரூபாய்க்கு ஓட்ட சிலர் தயாராக இருப்பதாகவும் எழுபத்தி ஐந்து ரூபாய் வாங்குவதோடு நேரக்கணக்கு வேறே கூடுதலாகச் சொல்கிறாயே என்று சீராயி கேட்கிறாள்.
“ஒரு மணி நேரம் எச்சா சொல்லிப் பணம் வாங்கிட்டுப் போயித்தான் கோட்ட கட்டுற நான்”
“உங்க வண்டவாளம் எங்களுக்குத் தெரியாததான் கிடக்குதா? நாலு மூட்டை கொட்டமுத்து கொண்டோயிட்டுப் போய் பக்கத்தல இருந்தவனது ஒன்னையும் இழுத்துப்போட்டு அஞ்சுன்னு சொல்லி அடி வாங்கிக்கிட்டு வந்ததப்பதான் எழூருஞ் சிரிச்சுதே..” என்றாள்.
“போதும் போதும். உம் பையன் மணக்கிறானா.. தண்ணியைப் போட்டுகிட்டு என்னென்ன கூத்தடிக்கிறான்னு என் வாயல சொல்லோணுமா கருமத்த..
அதான் ஊரே சொல்லுதே.. மொதொ பணத்தை எடு..”
“போனப்போகுது குடுத்துடு அத்த. எடுபட்ட நாயி ஏமாத்தி சம்பாரிக்கங்காட்டியும்தான் இழப்பு நோவுக்கு கொண்டோயிக் கொட்டறான்…”
“நா நாலு மணி நேரத்துக்குத் தாண்டி குடுப்பன்..”
“அஞ்சு மணி நேரத்துக்குன்னா குடு. இல்லீன்னாப் பணமே வேண்டாம். வாங்குற வழியில வாங்கிக்கிறேன்”
ஐந்து மணி நேரப் பணத்தையும் கட்டிலில் வீச சிங்கான் எடுத்து டிராயரில் திணித்துக் கொள்கிறான்.
அவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான். மண்ணள்ளித்தூற்றி நெஞ்சில் அடித்துக்கொண்டாள்.
“அவனே கேக்கட்டும்..”
“ஆரக் கேக்கறான்னு பாப்பம்.”
“அடப்போடா நாயே”
என்று முடிகிறது கதை.
ஒரு சிறுதொகைத் தகராற்றில் உறவுமுறை என்னபாடு படுகிறது என்பதுதான் கதை. கரிசனம் கோபமாகி, சாபமாக மாறுகின்ற ரசவாதம் தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இவரது படைப்புகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.
இவர் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு 2016 காலச்சுவடு வெளியிட்டிருந்தது. ஒட்டு மொத்தமாகப் படிக்கும்போது ஒரு வித்தயாசமான அனுபவம் கிடைக்கிறது.