விஷ்வகர்மா திட்டமிட்டப்படி எல்லாம் நடைபெறலாயிற்று.
சூரியதேவனை அவர் தயாரித்த இயந்திரத்தில் அமரவைத்து ஆயுதங்கள் செய்துமுடித்தார். சூரியதேவனின் ஒளியை எட்டுப் பிரிவுகளாகப் பிரித்தார். அவற்றுள் ஒரு பகுதியைமட்டும் தனியே எடுத்தார். மிதமுள்ள ஏழு பகுதிகளை அவனிடமே உள்ளடக்கி அவன் வெள்ளை ஒளிக்குள்ளேயே அற்றைத் திணித்து வைத்தார். அவர் பிரித்த அந்த எட்டாவது பகுதியிலிருந்து முதலில் சிவனுக்குத் திரிசூலத்தைப் படைத்தார். அதன் நீளம் பரிமாணம் கூர்மை மூன்றையும் தன் உடலின் நாடிகளிலிருந்து அமைத்தார்.
விஷ்வகர்மா தனது நரம்பு மண்டலத்தில் மூன்று நாடிகளை உருவகப்படுத்தினார்.
உடலின் இடப்பக்கத்தில் அதாவது இடது பரிவு நரம்பு அமைப்பில் இயங்கும் நாடியை இடா நாடி அல்லது சந்திர நாடி என்று அழைத்தார். வலக்காலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல இடது மூக்கைச் சென்றடையும் படி செய்தார்.
உடலின் வலப்புறத்தில் அதாவது வலது பரிவு நரம்பு அமைப்பில் இயங்கும் நாடியைப் பிங்கலை நாடி அல்லது சூரிய நாடி என்று அழைத்தார். இடத்துக்காலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல வலது மூக்கைச் சென்றடையும் படி செய்தார்.
உடலின் மத்திய பாகத்தில் மூலாதாரத்திலிருந்து அதாவது தண்டுவடத்தின் கீழ்ப்பகுதியான ஆண்குறிக்குச் சற்று கீழே இருக்கும் பகுதியான சுழுமுனை நாடியென்று அழைத்தார்.
மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியின் சக்தியை விழிப்புணர்வு செய்து இடகலை பிங்கலை சுவாசத்தின் மூலமாக நிறுத்தி சுழிமுனை நாடி மூலமாக வெளிக்கொண்டு வந்தார்.
அந்தக் குண்டலினி சக்தி மத்திய தடம் வழியாக நகர்ந்து சென்று தலை உச்சியை அடைந்து குளிர்ந்த காற்றாக வந்தடையச் செய்தார்.
திரிசூலத்தின் மூன்று முனைகளையும் இந்த மூன்று சக்திகளின் வடிவமாக உருவகப்படுத்தினார்.
திவ்விய ஆயுதமான திரிசூலம் சூரிய சக்தியைக் கொண்டு உருவாக்கியதில் விஷ்வகர்மா மிகவும் மன மகிழ்ந்தார். இப்படிப்பட்ட அற்புத ஆயுதத்தை அமைத்ததற்காக தன் அறிவைத் தானெ மெச்சிக் கொண்டார்.
அடுத்து விஷ்ணுவிற்கு வேண்டிய சக்க்ராயுதத்தை வடிக்க முனைந்தார்.
விஷ்ணுவின் மூல மந்திரங்களான ஓம்; ஸ; ஹ; ஸ்ரா; ர; ஹூம்; பட் என்ற ஏழு மந்திரங்களைத் தொடர்ந்து ஓதி சூரிய ஓளியின் மற்றொரு பாகத்தை சுதர்ஷனச் சக்கரமாக வடிவமைத்தார்.
அது சக்கர ஆயுதம் மட்டுமல்ல சக்கரத்தாழ்வார் என்ற பெயரில் தனிச்சிறப்பு கொள்ளப்போகிறது என்பதை முக்காலமும் உணர்ந்த விஷ்வகர்மா அப்போதே அதை உணர்ந்து தான் படைத்த அந்த ஆயுதத்தைத் தொழுது வணங்கினார்.
இந்த மாபெரும் இரண்டு ஆயுதங்களைப் படைத்தபிறகு குபேரனிற்காக ஒரு விமானம் படைப்பது விஸ்வகர்மாவிற்குக் கடினமாகவே தோன்றவில்லை. அதனை ஒரு புஷ்ப வடிவில் அமைத்தார். அதனால் அதனைப் புஷ்பக விமானம் என்றே அழைத்தார். அதன் தனித் தன்மை என்னவெனில் எத்தனை நபர்கள் பயணிக்கின்றார்களோ அந்த அளவிற்கு இருக்கைகள் விரிவடையும்.அப்படி அமைத்தார் விஸ்வகர்மா அத்தோடு , குபேரன் தனக்கு வழங்கிய செல்வத்திற்கு இந்தச் சிறிய புஷ்பக விமானம் மட்டும் போதாது. அவருக்கென்று ‘லங்கா’ என்ற பெயரில் ஒரு அழகிய பட்டணத்தையும் உருவாக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். அந்த இலங்காபுரியில் புஷ்பக விமானத்துடன் குபேரன் அரசாட்சி செய்யப்போகும் நாளை அன்றே மனக்கண்ணில் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
அந்த இலங்காபுரியையும் புஷ்பக விமானத்தையும் பின்னாளில் குபேரனின் தம்பி ராவணன் அபகரித்து அதே புஷ்பக விமானத்தில் சீதையையும் அபகரித்து அதன் விளைவாக ராவணன் ராமரால் கொல்லப்பட்டு ராமர் சீதை மற்றும் அனைவரும் அதே புஷ்பக விமானத்தில் பரதன் இருந்த நந்திக்கிராமத்திற்குப் பறந்து சென்ற கதை விஷ்வகர்மாவின் மனக்கண்ணில் அன்று தோன்றவில்லை. தோன்றியிருந்தால் அந்த விமானத்தை அன்று படைத்திருக்கவே மாட்டார்.
ஆயுதங்கள் படைப்பதில் அவருக்கு இணை அவர்தான். அதனால் இம்மூன்று சக்தி வாய்ந்த கலன்களை அமைப்பதில் அவருக்குக் கொஞ்சமும் சிரமமில்லை. ஆனால் சூரியதேவன் ஸந்த்யாவின் அறைக்குள் நுழையும் கதவைப் படைப்பதில் அவர் கொஞ்சம் தயங்கினார். அதை ஒரு நிரந்தரக் கதவாக இருக்கவேண்டும். கண்ணாடி போன்ற ஒளி புகும் சாதனமாக இருக்கவேண்டும். அதனுள் நுழையும்போது சூரியன் தன் தெய்வ வடிவை விட்டு ஒளி வடிவில் புகவேண்டும். பிறகு உரு மாறவேண்டும். திரும்ப அந்த அறையைவிட்டுச் செல்லும்போது சூரியதேவன் ஒளிவடிவில் கதவைத் தாண்டும் வரையில் செல்லவேண்டும். சூரியதேவன் இதற்கு முழு சம்மதம் தெரிவித்திருந்தான் என்றாலும் இது நடைமுறையில் வருவதற்கு நிறைய சிக்கல்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்தார். இதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதை விஷ்வகர்மா தீவிரமாக யோசித்தார்.
முதல் வழி, தேரோட்டி அருணன் மூலம் செயல்படுத்துவது. அதாவது சூரியதேவன் தேரைவிட்டு இறங்கும்போது அருணன் அவனுக்கு ஞாபகப் படுத்துவது. அருணன் சரியாகச் செய்யக்கூடியவன் என்பதில் சந்தேகம் இல்லை. அருணனுக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளில் இதைத் தவற விட்டுவிட்டான் என்றால் அதனால் விளையும் அனர்த்தங்களுக்கு அளவே இருக்காது.
சூரியதேவன் உள்ளே நுழையும்போது அவனை எச்சரிக்கும் ஒரு மணியைப் பொருத்தலாம். ஆனால் மணியும் இயந்திரம்தானே. அதுவும் பழுது படலாம்.
முடிவில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய அதி புத்திசாலிக் கதவாக மாற்ற முடிவு செய்தார். அதன்படி அந்தக்கதவைச் சூரியதேவன் ஒளிவடிவில் வரும்போது மட்டும் திறக்கும்படி ஒரு விதியை அமைத்தார்.
ஆனால் எந்த விதிக்கும் ஒரு விதிவிலக்கு உண்டு என்றும் மதியால் வெல்ல முடியாத விதி என்று ஒன்று உண்டு என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.
சூரியனை விழுங்கக் காத்திருக்கும் ராகுவின் காலத்தை அவர் கணிக்க மறந்துவிட்டார். அதன் விளைவு மகாவிஷ்ணு ஆணைப்படி ராகு சூரியனை விழுங்கி மயக்கத்தில் ஆழ்த்தும் அந்தக் காலத்தில் அந்தக் கதவு எப்படி வேலை செய்யவேண்டும் என்பதனை இணைக்கத் தவறிவிட்டார்.
ராகுவினால் விழுங்கப்பட்டு சக்தியை இழந்த நிலையில் சூரியன் இருக்கும்போது அவனிடம் தோன்றும் கோபத்தின் அளவு அதீதமாக இருக்கும்.
குறிப்பிட்ட அளவு வரை தாங்கும் சக்தி பெற்ற அந்தக் கதவு இந்த அதீத சக்தியில் செயல் இழந்துவிடும்.
அப்படிப்பட்ட நாள் வந்தது. அதுவும் அந்தக் கதவு அமைக்கப்பட்ட அடுத்த மாதமே நிகழ்ந்தது.
அதன் விளைவு பயங்கரமாக இருந்தது.
தான் காதலித்துக் கைப்பிடித்த கணவன் சூரியதேவனையும் தான் பெற்ற ஆசைக் குழந்தைகள் மூவரையும் ஏன் சூரிய மண்டலத்தையே விட்டுவிட்டு வெகுதூரம் போய்விடவேண்டும் என்ற எண்ணத்தை ஸந்த்யாவின் மனதில் தோற்றுவிக்கும் அளவிற்கு விதி அதி பயங்கரமாக இருந்தது.
இரண்டாம் பகுதி
நான்முகன் நான்கு முகத்தின் வழியாகப் பேசியது பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் 3-டி படம் பார்ப்பது போல் இருந்தது. முதலில் அப்படிப்பார்ப்பது சற்று சிரமமாக இருந்ததால் மக்கள் கொஞ்சம் திணறினார்கள். எந்த முகத்தைப் பார்ப்பது எதை விடுப்பது என்பது புரியாமல் தடுமாறினார்.
அந்தத் தடுமாற்றத்தைப்போக்க என்ன செய்யலாம் என்று நாரதர் யோசிக்கத் தான் பூலோகத்தில் பார்த்த 3-டி கண்ணாடி ஞாபகம் வந்தது.”நாராயணா என்று மனதில் அவர் நினைக்கப் பார்வையாளர் அனைவர் கண்களிலும் தங்கத்தில் செய்த 3 டி கண்ணாடி தானாகவே பொருந்தி அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. திரும்பப் போகும்போது வாசலில் இருக்கும் பெட்டியில் போட்டுவிட்டுப் போகவேண்டுமா அல்லது சத்தியம் திரையரங்கத்தில் சிலர் செய்வது போலச் சுட்டுவிட்டுப் போய்விடலாமா என்று ஒருவர் யோசிக்க ஆரம்பித்தார்.
அந்த டெக்னிக்கைப் பார்த்த மகாவிஷ்ணுவும் பரமசிவனும் அசந்து போய்விட்டார்கள். நாமும் ஏதாவது ஜிம்மிக் செய்யவேண்டும் அன்று தீர்மானித்துக் கொண்டார்கள். நாம் விஸ்வரூபம் எடுக்கலாமா என்று விஷ்ணு யோசிக்க அதை மனக்கண்ணில் உணர்ந்த லக்ஷ்மி தேவி , ‘அது மட்டும் வேண்டாம், ஏற்கனவே கமலஹாசன் விஸ்வரூபம்-2 எடுத்து கையைச் சுட்டுக் கொண்டார் என்று விஷ்ணுவின் காதில் கிசுகிசுத்தார்.
பரமசிவன் கையில் சூலாயுதத்துடன் ஒரு உக்கிர தாண்டவம் ஆடிவிட்டு விஷயத்தைச் சொன்னால் க்ளிக் ஆகுமா என்று யோசித்தார். அதை உணர்ந்த பார்வதி ஒரு கோபப் பார்வையாலேயே அதை அடக்கினார்.
நாரதருக்கும் சரஸ்வதிக்கும் இது அடிக்கடி வீட்டில் நடக்கும் சமாச்சாரம் என்பதால் அவ்வளவு சிரத்தை இல்லை.
நான்முகன் தொடர்ந்து பேசினார்.
சரஸ்வதிதேவி பேசியதில் எந்தவிதத் தவறும் இல்லை. அவர் புள்ளி வைத்துப் பேசினார் என்று நடுவரும் மற்றவரும் நினைக்கலாம். ஆனால் புள்ளி போட்டுக் காட்டிட இது கோலம் அல்ல. முதல் புள்ளியும் முற்றுப்புள்ளியும் சிறியது மற்றப் புள்ளிங்க ..தான் பெரிது என்ற பாணியில் அவர் பேசினார். வாதத்திற்கு அது சரியாகாது தோன்றினாலும் விவாதத்துக்கு அது பொருந்தாது. நான் புள்ளி விவரங்களுடன் சில கருத்துக்களை உங்கள் முன் படைக்கிறேன்.
இந்த படைப்பின் பெருமையைப் பற்றிக் கூறவேண்டியது மிக மிக அவசியம். நான்முகனான நான் பெரியவன் அல்ல. ஆனால் படைப்பு என்ற தொழில் அனைத்திலும் சிறந்தது என்பதை நிரூபிக்க முடியும். அதனால் இதைப் படைப்பாற்றல் என்று சொல்கிறார்கள்.
படைப்பாற்றல் என்பது காலம் காலமாக நாம் நமது எண்ணத்தில் தியானத்தில் சேர்த்து வைத்திருந்த நுண்ணறிவு, உணர்வு, தகவல், ஆகியவற்றோடு உத்வேகம் , புதுமை என்ற கோட்பாட்டோடு சேர்த்து முற்றிலும் புதிய வகையில் தருவதாகும் .
இருப்பதை நன்றாக உணர்ந்து இல்லாத ஒன்றைக் கண்டுபிடித்து அதை புதியதாக அறிமுகப்படுத்துவதே படைப்பின் தத்துவம்.
மகாவிஷ்ணு , பரமசிவன் இவர்கள் இருவரைத் தவிர ஈறேழு பதினான்கு லோகத்தில் இருக்கும் அனைத்து உயிர்களும் மற்ற உயிரற்ற ஜடப் பொருட்களும் படைக்கப் பட்டவை என்பது மிகமிக முக்கியம். யார் படைத்தார்கள் என்ற கேள்வி தேவையற்றது. ஆனால் படைப்பு என்பது மிகவும் போற்றப்படவேண்டிய ஒன்று.
வெளிப்படுத்தப்பட்டுள்ள படைப்பு ப்ரக்ருதி என்றும், அதற்குக் காரணமான வெளிப்படாத – சூட்சுமமான நிலையின் இருப்பு பிரதானம் என்றும் அழைக்கப்படுகிறது.
மொத்த மூலப்பொருளான பிரதானம் இருபத்து நான்கு மூலப்பொருட்களைச் சூட்சும நிலையில் கொண்டுள்ளது, அவையாவன: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள். மணம், சுவை, உருவம், தொடுவுணர்ச்சி, சப்தம் என்னும் புலனுகர்ச்சிப் பொருட்கள்) மூக்கு, நாக்கு, கண், தோல், காது என்ற ஐந்து ஞான இந்திரியங்கள்). கை, கால், வாய், ஆசனவாய், பாலுறுப்பு என்ற ஐந்து கர்ம இந்திரியங்கள்). இத்துடன் மனம், புத்தி, அகங்காரம், மற்றும் மாசடைந்த உணர்வு ஆகிய இருபத்து நான்கு முளுக்குஉறுகளும் சேர்ந்ததே பிரதானம்.
காலம் என்பது இதன் இருபத்தைந்தாம் மூலக்கூறாகும்.
இயற்கை படைப்பைத் தொடங்குகிறது. எவ்வாறு தெரியுமா?
பல்லுயிர் வாழ உலகு படைக்கப்படுகிறது. .
மயக்கம் ஆசை கோபம், பயம் அகங்காரம் என்ற ஐங்குணங்கள் சேர்த்து புல், செடி, கொடி, பறவை, விலங்கு, மனிதர், தேவர் போன்றவையும் படைக்கப்படுகின்றன. .
இன்னொரு முக்கிய செய்தி என்னவென்றால் ஒரு படைப்பைப் படைக்கும் போதே அதன் ஆயுளை நான் நிர்ணயிக்கிறேன். மனிதனின் ஆயுளை அவன் தலையில் எழுதுகிறேன். அதற்குமேல் அவனால் வாழவும் முடியாது. அதற்கு முன் அவனால் சாகவும் முடியாது.அது வரை அவன் காக்கவும் படுகிறான்.
ஒரு மருந்தைத் தயாரிக்கும்போதே அதன் முடிவு நாளைக்குக் குறிப்பிடுவது போல.
காலம் என்ற ஒன்றைப் படைத்தேன். மறதி என்ற ஒன்றைப் படைத்தேன். மரணம் என்ற ஒன்றைப் படைத்தேன். இவை பல படைப்புக்களுக்கு முடிவாக இருக்கும் என்ற காரணத்தையும் படைத்தேன்.
ஏன் காத்தல் என்ற ஒன்றையும் அழித்தல் என்ற ஒன்றையும் நானே படைத்தேன்.
படைப்பதனால் என் பேர் இறைவன் என்று உங்கள் கண்ணதாசனும் கூறினார் அல்லவா?
இறுதியாக ஒரேவரியில் உங்களுக்குப் புரிந்த பாஷையில் சொல்கிறேன் . ஒரு திரைத்துறையிற்குத் தயாரிப்பாளர் இருக்கலாம் ரஜினி விஜய் அஜித் மாதிரி நடிகர்கள் இருக்கலாம். கதை பாடல் கேமரா என்ற காரணம் ஆயிரம் இருக்கலாம். ஆனால் இயக்குநர் என்ற ஒருவர் முக்கியமாக இருக்கவேண்டும். அவர்தான் படைப்பாளி. அவர்தான் முன்னவர்.
இதற்கு மேல் விளக்கம் தேவையா நடுவர் அவர்களே ? என்று கேட்டுப் பலத்த கரகோஷத்துடன் பிரும்மா தனது கருத்தைக் கூறி முடித்தார்.