இது வெறும் ‘பிரமை’ அல்ல!
வைர மூக்குத்தி பளிச்சிட, சிரித்தபடி வந்தமர்ந்த பாட்டிக்கு வயது 72.ஏற்கனவே, இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, உப்பு, கொழுப்பு என எல்லாவற்றுக்கும் மாத்திரைகள் – தூக்கம் சரியாக இல்லையென என்னிடம் வந்தார். ஏதோ மன அழுத்தம், சிறிது நேரம் பேசிவிட்டு, மருந்துகளுடன் சென்று விட்டார். சென்றவர், மீண்டும் வந்து, ‘முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன், இப்போது நேரமிருக்கிறதா?’ என்றார்.
‘ம்.., இருக்கிறது, சொல்லுங்கள்’ என்றேன். மூளையின் ஓரத்தில் மினுக் என்று ஒரு பல்ப் ஒளிர்ந்தது!
“கொஞ்ச நாள் முன்னாடி, நடுராத்திரி முழிப்பு வந்தாப்பல இருந்தது. அறையில் மூலையிலிருந்த பீரோவைத் திறந்து இவர் ஏதோ அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்துல என்ன பண்றார் என்று புரியாமல் பக்கத்தில் கை வைத்தால், அங்கே அவர் தூங்கிக் கொண்டிருந்தார் – தூக்கிவாரிப் போட்டது. அப்போது அங்கே நிற்பது யாரு? மெதுவாக அவரைத் தட்டி எழுப்பினேன். அருகில் சென்று ‘பீரோகிட்ட யாரோ நிக்கறா’ என்று ரகசியமாய்ச் சொன்னேன். ‘டக்’ கென்று அவர் சுவிட்சைப் போட, அறை முழுவதும் வெளிச்சம். பீரோ மட்டும் தனியாக நின்றுகொண்டிருந்தது. ‘யாருமில்லையே, கனவு ஏதானா கண்டயான்ன? பிரமையா இருக்கும். தூங்கு’ . திரும்பிப் படுத்துக்கொண்டேன், பீரோ பக்கம் பார்க்கத் துணிவில்லை”
“தெளிவாகப் பார்த்தீர்களா?”
“ஆமாம், சந்தேகமே இல்லை. இவரைப் போலவே ஒரு மனிதர் நிற்பதைப் பார்த்தேன்”
“ம்… அப்புறம்?”
“திரும்பவும் இரண்டு வாரம் முன்னாலெ, எனக்குப் பக்கத்துல குழந்தை ஒண்ணு, புல்லாங்குழல் வெச்சுண்டு சிரிச்சிண்டு இருந்தது. கண்ணை மூடித் திறந்தாலும் சிரிச்சிண்டே அங்க நின்னுண்டு இருக்கு. விளக்கைப் போட்டதும் அங்கே யாருமில்லை. ‘அன்று மாலை கேட்ட கிருஷ்ண லீலா தரங்கிணி பாட்டு இப்படி பிரமையா இருக்கும்’ என்று தேற்றிக்கொண்டு தூங்கினேன்”.
பாட்டி சொல்வதைக் கேட்டுக்கொண்டே, அவரது மருந்துகள் லிஸ்டைப் பார்த்தேன் – எல்லோரும் உபயோகிக்கும் யூஷுவல் மருந்துகள்தான்.
“சமீப காலமாக உங்களுக்கு மறதி அதிகமாகிவிட்டதா?” என்றேன்.
“இல்லே சார். எனக்கு வேற ஒரு ப்ராப்ளம் கிடையாது – BP, சுகர் எல்லம் கூட கன்ட்ரோல்லதான் இருக்கு” என்றவரின் முகத்தில் கலவரம் இல்லை – வியப்பு தெரிந்தது.
“போன வாரம் என் தலைமாட்டுல லண்டன் போலீஸ் – கருப்பு,சிவப்பு டிரஸ், கூடை மாதிரி கருப்பு தொப்பி, கையில் துப்பாக்கி – ஒர்த்தன் நிக்கறான். இவன் ஏண்டா இங்க வந்தான்னு பார்த்தா, விளக்கு வெளிச்சத்துலே மறைஞ்சு போய்ட்டான்!”
“விளக்க வெளிச்சத்துலேயே தூங்கிப் பாருங்களேன்” என்றேன் நான்.
“தூக்கம் வராதுன்னு, சின்ன நைட் லாம்ப் போட்டுத் தூங்கினேன் – நேத்திக்கு, ரூம் மூலைல போட்டிருந்த ஸ்டூல் மேல உட்கார்ந்து, அழகா ஒரு பொண்ணு வீணை வாசிச்சிண்டிருக்கா! எங்கே என்னைப் பார்த்துடுவாளோன்னு, தலைய தலைகாணிக்குள்ள பொதச்சிண்டு, தூங்கிப் போனேன். எனக்குப் பைத்தியம் புடிச்சிடுமா டாக்டர்?” என்றார் பரிதாபமாக.
நான் சிறிது நேரம் பாட்டியைப் பார்த்தவாறு இருந்தேன். “இல்லைம்மா, இது ஒரு பிரமை – இல்லாத ஒன்றை இருப்பதாக மூளை நினைத்து, கண்கள் பார்க்கின்றன. சிலருக்கு வெளிச்சம் இருந்தாலும் இப்படி உருவங்கள் தெரியும். உங்களுக்குப் பரவாயில்லை, கிருஷ்ணன், சரஸ்வதி என்று வருகிறார்கள். வேறு சிலருக்கு, பாம்பு, புலி, கணவன், மனைவி, உருவமில்லாத நிழல்கள், இறந்து போன உறவினர்கள் என வந்து பயமுறுத்துவார்கள்! இது ஒரு வகை ‘ஹாலூசினேஷன்’ – (visual hallucination) என்றேன்!
இந்த வார்த்தையைக் கேட்டு, இரவில் வந்த ‘பிரமை’யே பரவாயில்லை என்ற முக பாவத்துடன் என்னைப் பார்த்தார். சில, பரிசோதனைகள், ஸ்கான் எல்லாம் எழுதிக் கொடுத்து, மருந்தினையும் சொல்லி, ‘சரியாகிவிடும், பயப்படத் தேவையில்லை’ என்று அனுப்பி வைத்தேன்.
ஹாலூசினேஷன் – இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் மூளையின் தந்திரம் -சில மருந்துகளினால் (போதை மருந்துகள், ஆல்கஹால்) வரக்கூடும். டிமென்ஷியா, பார்க்கின்ஸன் நோயின் பகுதியாகவோ அல்லது அதற்கு கொடுக்கப்படும் மருந்துகளாலோ வரலாம்! பொதுவாக இம்மாதிரியான விசுவல் ஹாலூசினேஷன் மூளையின் பின் பகுதியாகிய ‘ஆக்ஸிபிடல்’ லோப் (பார்வை, உருவங்களை அனலைஸ் செய்து, நம்மைப் பார்க்க வைக்கும் பகுதி) பாதிக்கப் படும்போதும் (ஸ்ட்ரோக், வலிப்புகள்) வரலாம். சில மனநோய்களிலும் – முக்கியமாக ஸ்கீசோஃப்ரீனியா மற்றும் பைபோலார் மன வியாதிகள் – இவ்வகை பிரமைகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
இதுபோலவே சிலருக்கு குரல்கள், சப்தங்கள் கேட்கும் – ஆடிடரி ஹாலூசினேஷன் – எம் வி வெங்கட்ராமின் காதுகள், இதனை மையப் படுத்தி எழுதப் பட்ட நாவல்! காதுகளில் பிரச்சனை, செவிடு போன்றவைகளுக்குக் காதில் இரைச்சல் இருக்கும். சிலருக்கு சுசீலா, எஸ் பி பி போன்றவர்கள், பாடிய நல்ல பாடல்கள் கேட்கும்! (அன்பே வா வில். நாகேஷ் சொல்வது போல், ‘வியாதி வரக் கூட மனுஷனுக்குக் கொடுத்து வெச்சிருக்கணும்பா’).
மனநிலை பிறழ்வு உள்ளவர்களுக்கு ஆடிட்டரி ஹாலூசினேஷன் அதிக அளவில் வரும்.எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் காதில் எப்போதும் கேட்ட குரலின் தொந்திரவினால், மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதை மையமாகக் கொண்டு, மோஹன்லால் நடித்த மலையாளப் படம் ஒன்று – பெயர் நினைவில் இல்லை – மனைவியின் குரல் சொல்கிறது என்று கொலைகள் செய்வார், சர்ச் மணியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு விடுவார். ஸ்கீசோஃப்ரீனியா மனோ வியாதியைப் பற்றிய நல்ல படம் அது. நம் சுஜாதா கூட ஒரு சிறுகதையில் இது பற்றி எழுதியிருப்பார்!
தோல் மேல் பூச்சிகள் ஊர்வதைப் போல (தொடு உணர்ச்சி (tactile) ஹாலூசினேஷன், மூக்கில் வித்தியாசமான வாசனை அல்லது துர்நாற்றம் (olfactory) ,(முக்கியமாக டெம்பொரல் லோப் வலிப்புகளுக்கு முன், ஒரு முன்னெச்சரிக்கையாக ‘ஆரா’ இது ஏற்படலாம்!) வருவதைப் போல ஹாலூசினேஷன் எனப் பலவகை பிரமைகள் மனம் மற்றும் மூளையின் தந்திரத்தால் ஏற்படும்!
பிரமைகள் குறித்த அச்சம் தேவையில்லை – அநேகமாக எல்லா ஹாலூசினேஷன் களுக்கும் மருந்துகள், தீர்வுகள் உண்டு. தற்கொலைக்கு வாய்ப்புகள் இருப்பதால், மருத்துவ கவனிப்பு அவசியமாகிறது!
நல்ல அழகுடன் ஒரு யுவதியோ, பிடித்த பாடலோ ஹாலூசினேஷனாக வந்தால், உயிருக்கு ஆபத்தில்லாத பட்சத்தில் வரவேற்கலாம்தானே!
- Rep