குவிகம் நிகழ்வுகள் – நவம்பர் 2019
குவிகம் இல்லத்தில் நவம்பர் 3 ஆம் தேதியன்று நடைபெற்ற அளவளாவல் நிகழ்வில் திரு பாஸ்கர் கலந்துரையாடினார். முதலில் மத்திய பொதுப்பணித்துறை அனுபவங்கள் பற்றிப் பல அறிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். கட்டுமானப்பணியில் திட்டமிடல் முக்கியப் பங்கு அளிக்கிறது. அதில் கட்டுமானச் செலவு குறித்து பட்டியல் தயாரித்து அளிப்பது மிகுந்த பயனுள்ள சேவையாகும். எந்த ஊரில் எந்த வகையான கட்டிடம் கட்டுவதற்கு ஆகக்கூடிய செலவுகளை அனைவரின் உபயோகத்திற்கும் அளிக்கும் தகவல், எந்த கட்டுமானப் பணியின் திட்டமிடலுக்கும் ஒரு அடிப்படை. மேலும் பல சவாலான பணிகளை திறம்பட முடிப்பதில் மத்திய பொதுப்பணித்துறை நிகரில்லாதது என்றும் தெரிவித்தார்.
நாடகத் துறையில் அவரது அனுபவங்கள், திரு ஞாநி அவர்களின் ‘பரிக்ஷா’ குழுவின் செயகல்பாபடுகளுடன் தொடர்ந்து இருந்திருக்கின்றன. மேடை நாடகம் போடுவதற்கு காவல்துறை அனுமதி பெறவேண்டும் என்கிற விதிமுறை செல்லாது என்கிற தீர்ப்பினை வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றது ஞாநியின் சாதனை. அந்த தீர்ப்பு தமிழகம் மட்டுமல்லாது, அகில இந்தியாவிற்கும் பயனளிக்கிறது என்பது ஒரு கூடுதல் தகவல். ஆங்கில நாடகத்தை தமிழாக்கம் செய்வதில் ஞாநி கடைப்பிடித்த வழிமுறை பற்றிக் குறிப்பிட்டார். முதலில் நாடகத்தை வாய்விட்டுப் படித்து தனது குரலிலேயே பதிவு செய்து கொள்வாராம். அந்த ஒலிநாடாவைக் கேட்டுக்கொண்டே, இந்திய களத்திற்குத் தேவையான மாற்றங்களைச் செய்து நாடகமாகத் தமிழில் எழுதிவிடுவாராம்.
நிகழ்விற்கு பாஸ்கர் அவர்களுடன் பயணித்த பல நாடக நண்பர்கள் வந்து நிகழ்வினைச் சிறப்பித்தார்கள்.
10 ஆம் தேதி நிகழ்வு ஒரு நூல் விமர்சனமாக நடைபெற்றது. “விமுக்தா” என்னும் தெலுங்கு நூலின் மொழிபெயர்ப்பான “மீட்சி” என்னும் நூலில் உள்ள ஐந்து கதைகளைப்பற்றி ஐந்து வாசகர்கள் பேசினார்கள். இராமாயண பெண் பாத்திரங்களின் பார்வையில் சொல்லப்பட்ட கதைகள் நான்கும் அரசியல் காரணங்களுக்கான .மனைவியை இன்னலுக்கு உள்ளாக்க வேண்டிய கையறு நிலையயில் இராமன் வருந்துவதாக ஒரு கதையும் கொண்ட தொகுப்பு மீட்சி.
சூர்பனகையை சீதை சந்திப்பதாகக் கற்பனை செய்யப்பட்டுள்ள “இணைதல்” என்னும் கதையினைப் பற்றி திருமது கிரிஜா பாஸ்கரும், இந்திரனால் வஞ்சிக்கப்பட்டு, கணவனால் சபிக்கப்பட்டு கல்லான அகலிகையின் கதையான “மண்ணின் ஓசை” குறித்து திருமதி சாய் சுந்தரி நாராயணனும், ஒரு நொடி கவனக் குறைவினால் “மணல் குடம்” பிடிக்க இயலாமல் போனதால் கணவனாலும் மகனாலும் அநீதி இழைக்கப்பட்ட ரேணுகாவின் கதையினைப் பற்றி திருமதி பானுமதியும். பதினான்கு ஆண்டுகள் தனிமையில் ஆத்மபரிசீலனை செய்துகொண்டு பெண்கள் நிலை, அவர்கள் அதிகாரம், பெண்கள் பிறர்மேல் செலுத்தும் அதிகாரம் என்று பல கோணங்களில் சிந்தனை செய்து தெளிவு பெற்ற ஊர்மிளையின் கதியான “மீட்சி” குறித்து திருமதி லதா ரகுநாதனும் பேசினார்கள். இறுதியாக சந்தர்ப்ப மற்றும் அரசியல் கட்டாயங்களால் மனைவிக்கு இன்னல்களைத் தர நேர்ந்தமைக்காக வருந்தும் இராமனின் கதையான “சிறைப்பட்டவன்” கதை குறித்து திரு சங்கர் இராமசாமி அவர்கள் பேசினார்கள்.
17.11.19 அன்று இலக்கிய அமுதம் சார்பில் திருமதி தேவி நாச்சியப்பன் உரையாற்றினார். குழந்தை இலக்கியத்தில் அவரது பங்களிப்பிற்காக இந்த ஆண்டு பால சாகித்ய அகாதமி விருது பெற்ற அவர், குழந்தை இலக்கியத்த்தில் தன்னை ஈடுபடுத்தியதே அவது தந்தையான அழ.வள்ளியப்பா தான் என்று குறிப்பிட்டார். தன்னிகரற்ற குழந்தைக் கவிஞரான அழ வள்ளியப்பாவின் நினைவினைப் போற்றும் வகையில் தனது குடும்பத்தினர் செய்துவரும் பணிகளைக் குறிப்பிட்டார். குழந்தைகளின் மேம்பாடு, பொது அறிவு, இலக்கிய ஆர்வம் ஆகியவை குறித்த உரையாடலாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.
திரு திருமலை அவர்கள் பங்குகொண்ட 24.11.19 அளவளாவல் நிகழ்வு ஒரு வாசகனின் அனுபவமாகத் திகழ்ந்ததது. பள்ளிப் பருவம் முதல் கல்கி, தேவன், ஜானகிராமன் அசோகமித்திரன் மற்றும் பலரின் படைப்புகளை அனுபவித்த மகிழ்வினைப் பகிர்ந்து கொண்டார். சிறந்த நினவாற்றல் என்னும் துணை மட்டுமின்றி, படித்த புத்தகங்களையுயே கொண்டுவந்து, குறிப்பிட்ட பகுதிகளில் அடையாள அட்டைகள் வைத்துப் பேசியது மிகச் சிறப்பாக அமைந்தது. கலந்துகொண்டவர்களும் குறிப்பிடப்பட்ட கதைகளில் தாங்கள் ரசித்த இடங்களை நினைவு கூர்ந்தனர்
30.11.2019 இலக்கியச் சிந்தனை நிகழ்வாக “பாவை நோன்பு” என்ற தலைப்பில் திரு கிடம்பி நாராயணன் அவர்கள் உரையாற்றினார்கள். ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை போலவே சமண இஸ்லாமிய மதங்களிலும் பாவை நோன்பு என்கிற கருத்தாக்கம் இருக்கிறது என்பதை பல அகச் சான்றுகளுடன் விளக்கினார். மேலும் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றிலிருந்தும் பல மேற்கோள்கள் காட்டப்பட்டதால் ஒரு ஆய்வுரையாகவே அந்த உரை திகழ்ந்தது
குவிகம் இலக்கிய வாசல் சார்பில் உரையாற்றிய இளம் எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி எடுத்துக்கொண்ட தலைப்பு தஞ்சை பிரகாஷின் “மிஷன் தெரு”. ஈஸ்தராக மதம் மாறிய பெண் தஞ்சையை விட்டு மன்னர்குடி மிஷன் தெரு சென்று வாழும் கதை. அக்கதையில் மதம் மாறியும் ஜாதிமறையாத விசித்திரத்தையும், அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு , நாளடைவில் அந்த அதிகாரத்தையே விரும்பி வரவேற்கும் உளவியல் கூறு குறித்தும் பேசினார்.