பல பிரச்சினைகளை துணிவோடு சந்தித்து வந்த வாணிக்கு, திடீரென்று ஒரு நாள் தாங்க முடியவில்லை. தலை கனப்பதாக உணர்ந்தாள். அதிகமான பசி எடுத்தது. அவளை உடைகளை மாற்றிக் கொள்வதற்கும் குளிக்கவும் வற்புறுத்தினாலும் கூட பல நாட்கள் செய்யாமல் இருந்தாள். பல நேரங்களில் அவள் அழுகையுடன் கணவர் மதனுடன் நடந்த விவாதத்தை நினைவு கூறி, தான் இருக்கும் இடத்தை புதிதாகப் பார்ப்பது போல் இருப்பாள் என்றார்கள். மூன்று வாரங்களுக்குப் பிறகு அவளுடைய குடும்பத்தினர் எங்களிடம் அவளை அழைத்து வந்தார்கள். பிறந்து ஐந்து நாளே ஆன கைக்குழந்தையுடன். முழுமையாக விசாரித்த பின் அவளுடைய நிலமை, “ரியாக்டிவ் ஸைக்கோஸிஸ், மனச் சோர்வுடன்” (Reactive Psychosis, Depressed Type) என்ற மனநோயின் ஒரு விதம் என்பது ஊர்ஜிதம் ஆயிற்று.
மன உளைச்சல். அதன் பல வண்ணங்கள் அவள் நிலையில் தெரிந்தது. உதாரணத்திற்கு, இதுவரை அவளுக்கு இருந்த மன உறுதி பலவீனமானது, தான் எதற்கும் உபயோகம் இல்லை என்று தோன்றியது. தனக்கு தெரிந்த எவராலும் தனக்கு உதவ இயலாது என்றும், தனக்கு எந்த ஒரு விடிவுகாலமும் இல்லை என்றும் நம்பினாள். தனக்கு வந்த மனநோயை உணராமல், தெரியாத நிலையில் இருந்தாள், இது ஸைக்கோஸிஸ் (Psychosis) என்ற மனச்சிதைவின் ஒர் அடையாளமாகும்.
எதனால் இப்படி நேர வேண்டும்? அதைப் புரிந்து கொள்ள, அவளின் பின்னணியை சற்று பார்ப்போம்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள் வாணி, மூத்த பிள்ளை, அவளுக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. அப்பாவிற்கு ஒரு நிறுவனத்தில் குமாஸ்தா வேலை. முதலில் நன்றாக இருந்தார்கள். கடந்த ஏழு வருடமாக அவருக்கு குடிப்பழக்கம் ஆனதிலிருந்து வேலைக்கு சரியாக போவதில்லை. அம்மா சம்பாதிக்கத் தொடங்கி, வீட்டு நிர்வாகத்தையும் பார்த்துக் கொண்டாள். அவள், பாசத்துடன் கண்டிப்பின் கலவையாக பிள்ளைகளை வளர்த்தாள். கணவரை அனுசரித்துப் போனாள்.
வாணியும் அவள் முதல் தங்கையும் நெருங்கி இருந்தார்கள். இளைய தங்கை வீட்டின் நிலையைப் பற்றி வெட்கப் பட்டு தன்னை தனித்து வைத்துக்கொண்டாள். தம்பி, படிப்பில் கண்ணும் கருத்துமாக இருந்தான், வீட்டு நிலையை பிற்காலத்தில் நன்றாக்க வேண்டும் என்ற குறிக்கோளில்.
வாணி மூத்த குழந்தையாக இருந்ததால் வீட்டு வரவு-செலவு முடிவுகள் எடுக்க அம்மா அவளுடன் கலந்து பேசுவாள். இது வாணிக்கு சுமையாகத் தோன்றியது ஆனால் அம்மாவிடம் இதைச் சொல்லவில்லை. தங்கைகள், தம்பி தங்கள் தேவைகளை இவளிடம் சொல்லி, அது அம்மாவிடம் சொல்லப் படும். பெற்றோரிடம் நேரடியாக கேட்க முடியாததை, மூவரும் வெறுத்தார்கள். அந்த ஆதங்கத்தை வாணி மேல் காண்பிப்பது உண்டு. இதனால், அவர்களுக்குள் உறவு சற்று இப்படி-அப்படி என்று ஆயிற்று.
மேலும் அப்பாவிற்கு குடிப்பழக்கம் ஆனதிலிருந்து, அம்மா தன்னுடைய கோபத்தை, சலிப்பை குழந்தைகள் மேல் காட்டினாள். இதுவரை குழந்தைகளை வாய் நிறைய புகழ்வது குறைந்து வந்தது. இதுவும் அவர்களுக்குத் தாங்க கடினமாயிற்று. மேலும் தாங்கள் செய்வது சரியா தவறா என்ற குழப்பம் ஆரம்பமானது.
இப்படி ஆவதற்கு முன்பு அவர்களது நடுத்தர குடும்ப நிலையைப் பற்றி சிறிதாக நினைத்ததோ வெட்கப் பட்டதோ இல்லை. தங்களது தேவைகளை நன்றாகவே பார்த்து கொள்ள முடிந்தது. அப்பாவின் குடிப்பழக்கம் எல்லாவற்றையும் சுக்கு நூறாக்கியது. அதுவரைக்கும் உறவினர்களை சந்திப்பது எல்லாம் உண்டு. அதுவும் மாறிவிட்டது.
அதே போல், வாணி பிறந்த போது, அவள் முதல் குழந்தை என்பதாலும், பெற்றோர் அவளுக்கு கவனம், நேரம் அதிகம் தந்ததாலும் பல நல்ல குணங்களுடன் வளர்ந்தாள். தைரியமாகப் பேசுவது, தெளிவாக முடிவுகளை எடுப்பது, குழு அமைப்பது எல்லாம் மிக சுலபமாக செய்வாள். படிப்பிலும் கெட்டிக்காரி, பட்டதாரி ஆகி, ஆஃபிஸர் ஆகி, பெற்றோரை நல்ல நிலைக்கு கொண்டு வந்து நன்றாக வாழவேண்டும் என்ற குறிக்கோளுடன் வளர்ந்தவள். தங்கை, தம்பியை ஆசையாக பார்த்துக் கொண்டாள்.
பத்தாவது முடித்த பிறகு வீட்டில் பணம் நெருக்கடி ஆரம்பமானது. அப்பா சம்பாதிப்பது போதவில்லை. வாணி பள்ளிக்கூடம் விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவள், பக்கத்தில் உள்ள துணிக் கடையில் விற்பனை சேவகர் (sales girl) வேலையில் சேர்ந்தாள். வருமானம் போதவில்லை. வீட்டில் டியூஷன் எடுக்கவும் ஆரம்பித்தாள்.
அவளுடைய பதினெட்டு வயது முடிந்ததுமே உறவினர்களுக்குத் தெரிந்த ஒருவருடன் கல்யாணம் ஆனது. அவளுடைய மாமனார் மாமியார் போட்ட சீர்வரிசை பட்டியலைப் பார்த்து வியந்தாள். அவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்று தோன்றியது. தம்பி, தங்கைகளின் படிப்பு, கல்யாணம், பற்றி கவலையாக இருந்தது.
தன் கணவர் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று மிக குறிப்பாக இருந்தாள். துடிப்பாக இருந்தாள் என்று கூடக் கூறலாம். அவர்கள் இல்லற வாழ்க்கையில் எந்த சிதைவும் வரக்கூடாது என்று குறிப்பாக இருந்தாள். இல்லையேல் தன்னுடைய அப்பாவைப் போல் கணவனும் பழக்கங்களுக்கு அடிமையாகி, மறுபடி பண நெருக்கடி, பற்றாக்குறை என்று ஆகும் என்ற கவலை.
கணவர் மதன் அப்போது மதுபானக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மது அருந்தும் பழக்கம் கிடையாது. தன் தந்தையின் பழக்கத்தின் தாக்கம் ஆகாமல் இருக்க அம்மா வீட்டிற்கு செல்வதை குறைத்தாள். அவள் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் மதன் தன் மாமனார்-மாமியார் போய் பார்ப்பது வழக்கம். வாணி கவலைப் படுவதை பார்க்கத் தாளாமல் மதுபான கடை வேலையை ராஜினாமா செய்து வேறு வேலை தேட ஆரம்பித்தார்.
பல மாதங்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. மாமனார்- மாமியார் வருத்தப் பட்டார்கள். மருமகள் சம்பாத்யம் மட்டுமே என்பதை ஏற்றுக்கொள்ளத் தவித்தார்கள். சில வாரங்களுக்குப் பிறகு, மதன் வேலை விட்டது பற்றிய பேச்சு, குடும்பத்தில் விவாதம், மனஸ்தாபத்தை ஏற்படுத்தியது. வாணிக்கு மீண்டும் கவலை, வேலை கிடைக்குமா? அவர்கள் திருமண வாழ்வில் விரிசல் வருமா?
பக்கத்தில் ஒரு உணவகத்தில் வேலை கிடைத்தது. மதன் வேலைக்கு சேர்ந்தார். தற்காலிகமாக ஓரிரு மாதத்திற்கு
வேலை என்றார் முதலாளி. வேதனை, கோபம் வாட்டியது.
வேலை நிலைக்குமா என்று கவலை கொண்டு இருக்கையில் வாணி கர்ப்பமானாள். பணம் குறைவாக இருந்ததால் கலைக்க யோசித்தார்கள். மாமியார் இதை தற்செயலாக கேட்டதும் தடுத்து விட்டாள். பணம் கொடுத்து உதவினாள். வாணிக்கு வெட்கமாக இருந்தது.
அவளுடைய கர்ப்பம் பற்றி தெரிந்தும் அவளுடைய பெற்றோர் வந்து பார்க்கவோ, தகவல் அனுப்பவோ இல்லை என்ற கவலை. வாணியை உதாசீனப் படுத்துவது போல தோன்றியது. எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று புரிய வில்லை. மதன் இவை எதையும் பொருட்படுத்தாமல் இருந்தது அவளை இன்னும் வாட்டியது. அவர் தன்னை மதிக்காமல் இருப்பது போல் தோன்றியது.
வாணிக்கும் அவள் கணவனுக்கும் வாணி பிரசவத்திற்கு எங்கு போவதென்றுது கடும் விவாதம் எழுந்தது. கலாசாரத்தை மனதில் வைத்து அம்மா வீடு என்றே நினைத்தாள். மதன், இதை நிராகரிக்க, முடிவில்லா விவாவதமாகப் போய் கொண்டு இருந்தது.
முதல் பிரசவம் அம்மா வீட்டில் என்று இருந்தாள் வாணி. ஆவலுடன் காத்திருந்தாள். ஆனால் அம்மாவோ அப்பாவோ வரவில்லை, செய்ய வேண்டிய சடங்குகளான வளைகாப்பு, சீமந்தம் செய்யவும் முன் வரவில்லை. மதன் அவர்களை பார்த்து அவர்கள் பெரும் பொருளாதர கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டு, தன் பெற்றோரிடம் பகிர்ந்தான். அவர்கள் சடங்குகளைத் தாங்களாக எடுத்துச் செய்து முடித்தார்கள். மதன் பிரசவத்திற்கு செலவு, எல்லாம் தன்னுடையது என்று உறுதியாகச் சொன்னார். மகப்பேறு நிலமையில் வாணிக்கு மனச்சுமையை அதிகரிக்க வேண்டாம் என்று பெற்றோர் கஷ்டத்தை அவளிடம் சொல்லவில்லை. வாணிக்கு எதுவும் புரியவில்லை. வருத்தம், கோபம் பீறிட்டு வந்தது.
வாணிக்குத் தன் கர்ப்பம் இவ்வளவு துயரத்தை தருவதால், ஆண் குழந்தை பிறந்தால் இப்படி எல்லாம் அந்தக் குழந்தை, கஷ்டப்பட வேண்டாம் என்று தோன்றியது. கண்டிப்பாக ஆண் பிள்ளை என்று மனதிற்குள் முடிவை செய்து கொண்டாள். மதன், மாமியார்-மாமனார், மூவரும் பெண் பிள்ளை விரும்பினார்கள். அவர்களைப் பொருத்தவரை பெண்கள் பொறுப்பாக இருப்பார்கள். கவலை தர மாட்டார்கள் என்ற எண்ணத்தால்.
பிறந்ததோ பெண் குழந்தை. அணைக் கட்டு நிரம்பி உடைந்தது போல் இருந்தது வாணியின் நிலை. தான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை, தயாராக இல்லாத போது கர்ப்பமானது, பெண் பிள்ளை, தன் பெற்றோர் கர்ப்பம் சேர்ந்த எதையும் பொருட்படுத்தாமல் இருந்தது, எல்லாம் சேர்ந்து வாணிக்கு திடீரென மனச்சிதைவு ஏற்பட்டது.
வாணி இதுவரைக்கும் எவ்வளவோ தாங்கினாள். சமீப காலமாக திடீராக, வாழ்க்கையில் பெருமளவில் தவிப்பு தரக்கூடிய நிகழ்வுகள் இருந்தன. பலமுறை மனச் சிதைவு ஏற்படுவது இப்படித்தான். வெகு நாட்களாக மனச் சுமைகள் கூடிக் கொண்டிருக்கும், ஆனால் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு மன உறுதியுடன் வாழ்க்கை நடத்தி வருவார்கள், ஒரு நாள் இன்னும் ஒரு பெரிய நிகழ்வு இடி போல மனதைத் தாக்கும், திடீரென்று மனச் சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.
இப்படி, குறிப்பிட்ட காரணிகளால் அது நேர்ந்தால் அந்த மனநோயிலிருந்து வெளிவருவது ஓரளவிற்குச் சுலபம். இப்படி நேரும் மனச்சிதைவிற்கு மருந்துகள் மிக முக்கியமான ஒரு அம்சம். அதில் தெளிவு பெற்ற பின்னரே, குடும்பத்துடன் அவர்களை உளவியல் ரீதியாக அணுகினால், அது மனநலத்தை நன்றாக்க உதவும்.
அவ்வாறே வாணி சிகிச்சை ஆஸ்பத்திரியில் இரண்டு வாரம் இருந்தாள். பிறந்த குழந்தையை பார்த்துக் கொள்ள மறுத்தாள். குழந்தை நலத்திற்கும் தாய்-சேய் இணைந்து வருவதற்கும் உதவுவதில் மருந்துகளுக்கு பெரிய பங்கு உண்டு. நிலை சரிவர, மருத்துவர் அதைக் குறைத்து விடுவார். அதுவரையில் மருந்துகள் சரியாக எடுத்துக் கொள்வது மிக அவசியம்.
மதன் மருந்துகளைத் தருவதின் பொறுப்பை எடுத்து கொண்டார். அவர் வேலைக்கு போகும் நேரங்களில் மாமியார் வாணியை பார்த்து கொண்டு, மருந்துகள் தருவாள். பிறந்த குழந்தை அவள் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று எங்கள் சிகிச்சைக் குழு முடிவெடுத்தது, குழந்தைக்குத் தாய்ப் பால், ஸ்பரிசம் அவசியம் என்பதாலும்.
வாணி மருந்துகள் அருந்தி வந்த நிலையில் அவளுடைய இரு குடும்பத்தினரிடமும் அவளுக்கு நேர்ந்தது என்ன, ஏன், அதற்கு சிகிச்சை எவ்வாறு செய்யப் படும் என்பதெல்லாம் பற்றி மனநல-அறிவுரை (psycho – education) செய்யப் பட்டது. இப்போதிருக்கும் நிலை, சிகிச்சை, பிற்காலத்தில் பார்த்துக் கொள்ள வேண்டியது எப்படி என்பதற்கெல்லாம் இந்த ஸைகோ எடுகேஷன் விளக்கம் அளிக்கும்.
அதிலிருந்து இரு குடும்பத்தினரும் தெளிவு பெற்றார்கள். அது அவளுடைய நலன்களுக்கு உதவியது. வாணியின் பெற்றோரின் பொருளாதார நிலமை மிக கவலைக்கு இடமான நிலையில் இருந்ததை மதன் அறிந்து இருந்தார், அவள் கர்ப்பத்தை மனதில் வைத்து, முதல் பிரசவம் என்பதாலும் வாணியுடன் பகிரவில்லை. அவளுக்கு தெரியாமல் மறைத்து விட்டார்கள். அவள் கோபப் பட்டாலும் சொல்லவில்லை. அதனால் தான் அவளை பெற்றோரின் வீட்டுக்கு பிரசவத்திற்கு அனுப்பி வைத்தால் அதைச் சமாளிக்க அவர்களால் முடியாது என்பதைப் புரிந்து கொண்டும் மதன் தானும் தன் பெற்றோருடன் பார்த்துக் கொள்ள முடிவு எடுத்தார்கள்.
இந்த சிந்தனையார்ந்த எண்ணத்தை வாணியிடம் சொல்லாததால் மனைவிக்கு நேர்ந்ததை உணர்ந்து மதன் வியந்தார். இதை எல்லாம் பகிர்ந்த பிறகு வாணியுடன் பல வாரங்களுக்கு செஷன்கள் நடந்தன. மூன்று மாதங்களில் வாணியின் உடல்-மனம்-சமூக நலன்களில் பலவிதமான மாற்றங்கள் ஆகின. கண்டிப்பாக முழுமையாக குணமடைவாள் வாணி என்று தெரிந்தது.