அழகியசிங்கர்
நவீன விருட்சம் என்னும் காலாண்டு இதழை விடாப்பிடியாக 30 ஆண்டுகளுக்கு மேல் கொண்டுவருபவர். கவிதையில் தொடங்கி, கதை, கட்டுரை என்று பங்களிப்பைத் தொடர்ந்து அளித்து வருபவர். எழுத்துலக ஜாம்பவான்கள் பலருடன் நெருங்கிப் பழகியவர். பெரும்பாலான இன்றைய எழுத்தாளர்கள் பலர் இவரது நண்பர்கள்.
சிக்கலில்லாத எளிய மொழி இவரது பலம். பெரும்பாலான கதையின் களங்கள் இவரது அன்றாட வாழ்க்கையிலிருந்தே இருப்பது வாடிக்கை.
கணையாழி குறுநாவல் போட்டிகளில் பரிசு பெற்றவர். எழுத்தாளர், இதழாசிரியர், பதிப்பாளர் , பேச்சாளர் எனப் பல தளங்களில் இயங்கி வருபவர். கடந்த சில ஆண்டுகளாக எனது நெருங்கிய நண்பர்.
இவரது தவறு என்னும் கதை இப்படித் தொடங்குகிறது….
பத்மாவைப் பார்த்த மாத்திரத்திலேயே கல்யாணம் செய்து கொண்டு அவளுடன் குடும்பம் நடத்த வேண்டுமென்று தோன்றியதில் வியப்பேதுமில்லை.
ஒரு சிறுபத்திரிகை நடத்தும் சங்கர், பல பிரிவுகள் கொண்ட தனது அலுவலகத்தில் மற்றொரு பெண்ணைச் சந்தித்த தருணம் அது. அந்தச் சமயம் இவரது கதை ஒன்றையும் குறிப்பிட்டு ‘நன்றாக இருந்தது’ என்று சொல்கிறாள்.
பிறகு ஒருநாள் தனது விடுப்புகோரும் கடிதத்தை சங்கரின் வீட்டுக்கு வந்து கொடுக்கிறாள். கூடவே பணிப்பெண்ணும் வந்தது ஒரு ஜாக்கிரதை உணர்வாக இருக்குமோ? பத்மா அவள் எழுதிய கதையொன்றைக் கொடுத்து சங்கரை அபிப்பிராயம் கேட்கிறாள்.
சில நாட்கள் கழித்து அந்தக் கதையினைப் பற்றி கருத்து தெரிவிக்க ஒரு ஓட்டலுக்கு காப்பி அருந்த அழைக்கிறார் சங்கர். தயக்கத்துடன் பத்மா ஒப்புக்கொள்கிறாள்.
எங்கள் அலுவலகக் கட்டிடத்திற்கு எதிரிலிருந்தது அந்த ஓட்டல். ஓட்டலில் தனி அறையில் நாங்கள் இருவரும் சென்றமர்ந்தோம். அவள் இயல்பாக இல்லை என்பதோடல்லாமல், நானும் இயல்பாக இல்லை என்பதை உணர்ந்தேன்.
கதை சுமாராக இருப்பதாச் சொல்லிவிட்டு அதற்காக வருத்தப்படுகிறார் சங்கர். ஒரு கதையை இன்னும் திறன்பட கணிக்க எனக்கு அனுபவமில்லை என்று சொல்லிச் சமாளிக்கிறார்.
நகரின் ஒரே பகுதியில் வசிக்கிறார்கள். கடைக்குப் போய்வரும்போது பத்மாவின் வீட்டு வாசலில் அவளைப் பார்க்கிறார். இருவரும் ஒன்றாக கணினிப் பயிற்சி மையத்தில் சேருகிறார்கள்.
தினமும் அவள் வகுப்பிற்குச் செல்லும் நேரத்தை அறிந்து அவள் வீடு இருக்கும் தெருமுனையில் சந்திப்பதுபோல் வருவேன். பிறகு இருவரும் ஒன்றாகச் செல்வோம். சில நாட்களில் நான் வருவதை அவள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டாள்.
திடீரென ஒரு திருப்பம். பத்மாவிற்கு கல்யாணம் நிச்சியமாகிறது.
பத்மாவின் தாய் இவரை வீட்டிற்கு அழைக்கிறாள். அவள் அம்மா ஒரு புகைப்பட ஆல்பத்தைக் காட்டுகிறாள். அதில் ஒல்லியாக உயரமாகத் தென்படும் பத்மா ‘பார்க்க சகிக்கவில்லை’ என்று தொடருகிறது இவருக்கு. காப்பி கொண்டு வருகிறாள் பத்மா.
இழந்தது இழந்ததுதான். அவளிடம் எனக்கிருந்த ஈடுபாட்டைக் குறிப்பால் கூட உணர்த்தாமல் போய்விட்டேன். இத்தனை நாட்கள் பழக்கத்தில் அவளாவது உணர்த்தியிருக்கலாம் என வருந்துகிறார் சங்கர்.
அழைக்கப்பட்ட நோக்கம் தெரிய வருகிறது
“ரெண்டு பேரும் சேர்ந்து சொசைட்டியில் மெம்பர் ஆனா, ஒருத்தருக்கொருத்தர் சொசைட்டி மூலம் கிடைக்கிற பணத்துக்குப் பொறுப்பேத்துக்கலாம்…. இரண்டு பேரும் ஒரே ஆபீஸிலே இருக்கிறதனாலே இது செளகரியம்”
பின்னால் தெரிவிப்பதாகக்கூறி விடைபெறுகிறார்.
வீட்டில் உள்ளவர்கள் இதுபோன்ற ஏற்பாட்டுக்கு இசையவில்லை. இதனை பத்மா தன் திருமண அழைப்பினை கொடுக்கும்போது தெரிவித்துவிடுகிறார்.
திருமணம் இவர்கள் வசிக்கும் பகுதியில்தான். வீட்டைவிட்டு சற்று முன்னதாகவே கிளம்பி, திருமணத்திற்குச் சென்றுவிட்டு அலுவலகம் போகத் தீர்மானிக்கிறார். அலுவலகத்திற்கு சற்று தாமதமாக வர ‘பெர்மிஷன்’ பெற்றுக்கொள்கிறார்.
திருமண மண்டபத்தில் கூட்டமில்லை. ஒருவர் இவரை டிபன் சாப்பிட மாடிக்கு அழைத்துச் செல்கிறார்.
இந்த கல்யாணத்தின்போது எனக்குள் ஏற்பட்ட மனநிலையின் போக்கை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. எனக்கும் பத்மாவிற்கும் ஏற்பட வேண்டிய திருமணம், அப்படி நடக்காமல் போனதால், ஏமாற்றம் தரக்கூடிய ஒன்றாக மாறிவிட்டதாக எனக்குத் தோன்றியது. அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தாலும், சாதாரணமாக திருமணம் எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனால் நான் எதையோ எதிர்பார்த்து பழகக்கூடிய பத்மாவாக அவள் எப்படி மாற முடியும்….. ? நான் கடன் தர இயலாது என்று கூறியதிலிருந்து, அவள் போக்கில் தென்பட்ட மாறுதல்கள், என்னைச் சங்கடத்திற்கு உள்ளாக்கிவிட்டன. அவளுக்காக, அவள் எனக்கில்லை என்று ஆனபிறகு, என்னிடமிருந்து இயல்பாக கழன்று கொண்டாள்.
கீழே வந்ததும்தான் ஒரு விஷயம் தெரிகிறது. இது பத்மாவின் திருமணம் நடக்கும் மண்டபம் அல்ல. அந்தத் தெருவில் மற்றுமொரு புதிய மண்டபம் வந்திருப்பதும் அதில்தான் பத்மாவின் திருமணம் என்பது சங்கருக்குத் தெரியாது போய்விட்டது.
ஒருவழியாக சரியான மண்டபத்திற்கு போகிறான் சங்கர்.
கூட்டத்தை விலக்கிக்கொண்டு, பத்மாவின் முன் போய் நின்றேன். அவள் கணவரை எனக்கு அறிமுகப் படுத்தினாள். நானும் சிரித்தபடியே, அவர் கையைப் பிடித்துக் குலுக்கினேன். இந்த உயரமான தோற்றத்தில் பத்மாவிற்குப் பட்டுப் புடவை கச்சிதமாக இருப்பதுபோல் உணர்ந்தேன். என் பின்னாலிருந்து யாரோ என்னைத் தள்ளாதகுறையாக, பத்மாவை வாழ்த்திச் சிரிப்பது என் காதில் விழுந்தது. பத்மாவின் கவனத்திலிருந்து, நான் அப்புறப்படுத்தப் பட்டேன். யாரிடமும் சொல்லாமல், நான் அங்கிருந்து நகர ஆரம்பித்தேன். யாரும் என்னை சாப்பிட உபசரிக்கவில்லை. பத்மாவின் அம்மா யாருடனோ பேசிக்கொண்டே இருந்தாள். அவள் பார்வையில் தென்படும்படியாக, நான் இருந்தாலும், அவளுக்கு என் ஞாபகம் வராது. மண்டப வாசலுக்கு வந்தவுடன், யாரோ பை கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு வேகமாக அலுவலகம் நோக்கி நடையைக் கட்டினேன்.
என்று கதை முடிகிறது.
மண்டபம் மாறிப்போன குழப்பம் கதையின் இறுதில் வந்தாலும், கதையின் க்ளைமாக்ஸ், விருப்பத்தை ஒருவர் மற்றவருக்குத் தெரிவிக்காததை விவரிக்கும் ஒரு சில வரிகள் எனத் தோன்றுகிறது.
முப்பது ஆண்டுகளாக கதைகள், கட்டுரைகள், கவிதைகள் கிட்டத்தட்ட 30 புத்தககங்கள் வெளியாயிகி உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கவிதைகளும் கதைகளும் இரு முழுத் தொகுப்புகளாக வெளிவந்து நல்ல கவனத்தைப் பெற்றுள்ளன. இரண்டு நாவல்களும் எழுதியுள்ளார்.