இவை உண்மையோ பொய்யோ யாமறியோம். தவறாக இருந்தால் தெரிவிக்கவும். மன்னிப்புப் கேட்கிறோம்.
நன்றி: தேவி பாரதி – மின்னம்பலம்
மாமல்லன் கவிதையொன்றை எழுதி அதை தருமு சிவராமிடம் வாசிக்கக் கொடுத்தாராம். சிவராமு அதைக் கவிதையென்று ஒப்புக்கொள்ளவில்லையாம். மாமல்லன் சும்மா விடவில்லையாம். ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சிவராமு மீது புகார் ஒன்றைக் கொடுத்தாராம். மண்டையைப் பிய்த்துக்கொண்ட காவல் அதிகாரி சிவராமுவை அழைத்து சார் நீங்கள்தான் கொஞ்சம் விட்டுக்கொடுத்து அவரது கவிதைகளைக் கவிதைகள்தாம் என ஏற்றுக்கொள்ளக் கூடாதா? எங்களுக்கிருக்கும் வேலைச் சுமைகளுக்கிடையில் இந்த வழக்கை எப்படி கையாள முடியும் என அழாக்குறையாகக் கெஞ்சினாராம். மேற்குறிப்பிட்ட சம்பவம் புனைவா, நிஜமா எனத் தெரியாது. ஆனால், தமிழ் இலக்கியவாதிகளின் கலகச் செயல்பாடுகள் சார்ந்து இதுபோன்று உலவி வந்த எண்ணற்ற புனைவுகள் உண்டு.
காணாமல்போன பகடி
ஆனால், அவை போன்ற கலகச் செயல்பாடுகளுக்கான இடம் கொஞ்சம் கொஞ்சமாக அருகிக் கடைசியில் இல்லாமலேயே போனது. கேலிக்கும் கிண்டலுக்கும் பகடிக்கும் இடமில்லாமல் போனது. இப்போது கூட்டங்கள் ஒழுங்காக நடக்கின்றன. வரவேற்புரை, தலைமையுரை, சிறப்புரை, கருத்துரை, நன்றியுரை எனக் கூட்டங்கள் சரியான நேரத்தில் தொடங்கி சரியான நேரத்தில் முடிந்துவிடுகின்றன. மாற்றுக் கருத்துடையவர்கள் கூட்டங்களுக்கு வருவதையேகூடத் தவிர்த்துவிடுகிறார்கள். கூட்டங்கள் அலுப்பூட்டும்விதத்தில் தொடங்கி, அலுப்பூட்டும்விதத்தில் தொடர்ந்து அலுப்பூட்டும்விதத்திலேயே முடிந்துவிடுகின்றன.
1990களின் தொடக்கம் என நினைக்கிறேன், ஈரோட்டில் பழமலையின் கவிதைத் தொகுதி ஒன்றின் வெளியீட்டு விழா. கவிஞர் அக்னிபுத்திரன் தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் உரையாற்றுவதற்காக அ.மார்க்ஸ், கோவை ஞானி உள்ளிட்ட பல ஆளுமைகள் ஈரோடு வந்திருந்தனர். எனக்கும் அப்போது ஈரோட்டில் இருந்த கௌதம சித்தார்த்தனுக்கும் பழமலையின் அந்தத் தொகுப்புப் பிடிக்கவில்லை. ஆனால், மற்றவர்கள் அதைப் பெரிதாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். நானும் சித்தார்த்தனும் ஏதாவது குறும்பு செய்ய நினைத்தோம். பழமலையின் கவிதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அக்னிபுத்திரனிடம் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகக் கேட்டோம். அவை சுமாரான கவிதைகள்தாம். ஆனால், புதிதாக முயற்சி செய்திருக்கிறார் என்பதால் பாராட்ட வேண்டியிருக்கிறது என்றார்.
கூட்டத்தில் பேசிய ஞானி உள்ளிட்ட எல்லோரும் பழமலையின் அந்தத் தொகுப்பை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார்கள். அக்னிபுத்திரன் எங்களிடம் சொன்னதற்கு மாறாக அவரது கவிதைகள் மகத்தானவை என்பது போல் பேசினார். எனக்குக் கடும் கோபம். நேராக மேடைக்குப் போய்விட்டேன். அக்னிபுத்திரன் நேர்ப் பேச்சில் சொன்னதைச் சொல்லி மேடையில் இப்படி ஏன் பேச வேண்டும் எனக் கேட்டேன். தான் அப்படிச் சொல்லவே இல்லை என மறுத்தார். நான் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்த கௌதமச் சித்தார்த்தனையும் அப்போது அருகிலிருந்த வேறு இருவரையும் சாட்சிக்கு அழைத்தேன்.உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஞானியை முகஸ்துதி செய்கிறார் என்றுகூட விமர்சித்தேன்.
பெரிய களேபரமாகிக் கூட்டம் பாதியிலேயே நின்று விட்டது.
பிறகு எல்லோருமாகச் சேர்ந்து அருகிலிருந்த டீக்கடை ஒன்றுக்குப் போய் டீ குடித்து, தம் அடித்தவுடன் நிலைமை இயல்புநிலைக்குத் திரும்பியது. கூட்டமும் தொடர்ந்து நடைபெற்றது. மார்க்ஸ் என் கேள்விகளில் இருந்த நியாயங்களைப் பற்றிப் பேசினார். முகஸ்துதியாளர் என விமர்சித்ததற்காக நான் ஞானியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.
அதே போல் ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலுக்காக ஈரோட்டில் நடந்த விமர்சனக் கூட்டமொன்றிலும் ரகளை ஏற்பட்டது. அப்போது ஈரோட்டில் எந்த இலக்கியக் கூட்டம் நடைபெற்றாலும் கடைசியில் அடையாளத்திற்காகவாவது கொஞ்சம் ரகளை நடக்கும்.
இலக்கியவாதிகளின் கலகச் செயல்பாடு பல விதங்களில் நடந்தது. சாரு நிவேதிதா மதுரை சுப மங்களா நாடக விழாவில் நடத்திய நாடகத்தில் ஆபாசமான காட்சிகள் தென்பட்டதாகப் பார்வையாளர்கள் சிலர் அவரையும் அவரது குழுவினரையும் தாக்கியதாகச் செய்திகள் வந்தன.
சென்னையில் மது விடுதியொன்றில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது சாரு நிவேதிதாவுக்கும் விமர்சகர் வளர்மதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வளர்மதி, சாரு நிவேதிதாவின் பல்லை உடைத்துவிட்டதாக இந்தியா டுடேயில் வந்த செய்தியொன்றும் நினைவுக்கு வருகிறது.
2000இன் தொடக்கத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டின்போது எழுத்தாளர் சுந்தர ராமசாமியைச் சிலர் அவமானப்படுத்த முற்பட்டதாக வந்த செய்தி அப்போதைய தீவிர இதழ்களில் விவாதத்திற்குள்ளானது.
பொதுவாக தமிழ் இலக்கிய கூட்டங்கள் பல அதிக முயற்சிகள் அல்லது கச்சிதத்திற்கான முனைப்பு இல்லாமல் ஒருங்கிணைக்கப்படுபவை. பேசுபவர் கேட்பவர் இருவரும் ஆர்வமில்லாமல் இருப்பதையே புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட கூட்டங்களில் பார்க்க முடியும். மேலும் 40 வயதுக்கு குறைவானவர்களை இலக்கியக் கூட்டங்களில் தொடர்ந்து காண்பது அபூர்வம். ஒருவகையான சோம்பலே இலக்கிய கூட்டங்களில் நிலவும்.
அழகியசிங்கர்:
சமீப காலத்தில் நான் நிகழ்த்தும் இக்கூட்டங்களில் சிறப்பான முறையில் ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். தொடர்ந்து புதுமையான முறையில் இக் கூட்டங்களை நாம் நடத்திச் செல்லவேண்டும். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு அவசியம் தேவை.
வெற்றிகரமாக ஒரு இலக்கியக் கூட்டத்தை நடத்த முடிந்த ஒருவரால் வாழ்வில் எதையும் சாதித்துவிட முடியும் என்றே தோன்றுகிறது. காரணம் அந்த அளவு இலக்கியக் கூட்டம் நடத்துவது சள்ளையான பிரச்சனைகளும் மனவெறுமையும் ஏற்படுத்திவிடக்கூடியது.
விடுமுறை நாளில் பள்ளியில் நடத்தப்படும் இலக்கியக் கூட்டங்களுக்கு என்றே தனிமரபு இருக்கிறது போலும். ஆட்கள் வந்தால் தான் ஆச்சரியம் அடைவார்கள்
திருவண்ணாமலையில் பவாசெல்லத்துரையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல இலக்கிய நிகழ்வுகள் தமிழ் சூழலில் மிக முக்கியமானவை. அதுபோலவே கவிஞர் கலாப்ரியா குற்றாலத்தில் ஆண்டு தோறும் நடத்தி வரும் கவிதைப்பட்டறையும் புதிய இலக்கிய போக்கினை உருவாக்கப் பெரிதும் காரணமாக இருந்து வருகிறது.
எஸ் ராமகிருஷ்னன்
கட்டணக் கேட்டல் நன்று: ஜெயமோகன் பக்கம்
கட்டண உரையெனும் இப்புதிய திறவு, பல்வேறு இலக்கியக் களங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. களைகளற்று பொத்தாம்பொது கடந்து , ஒரு தேர்ந்த இலக்கின் வாசக அலை உருவாகலாம். ஹவுஸ்புல்களற்ற திடமான தெரிவுகளின் விருப்ப இருக்கைகளால் அரங்கம் அர்த்தமாகலாம். எந்தச் சூழலிலும் தேடலின் முனைப்புடன் ஆர்வமாய் அங்கு வந்து சேரும் இலக்கிய ருசும்பிகளின் வருகையால் கட்டண உரை மேலும் கவனம் பெறலாம்.
கவனித்து கொண்டாடப்படவேண்டிய எழுத்தாளர்களின், படைப்பாளிகளின் எண்ணங்களும் சிந்தனைகளும் உரைகளும் என்றும் இலவசமல்ல எனும் தன் உணர்வின் வெளிப்பாட்டிற்கான முதல் நகர்வே இந்த கட்டண உரை. கட்டணக் கேட்டல் நன்று ! –
கட்டண உரையெனும் இப்புதிய திறவு, பல்வேறு இலக்கியக் களங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. களைகளற்று பொத்தாம்பொது கடந்து , ஒரு தேர்ந்த இலக்கின் வாசக அலை உருவாகலாம். ஹவுஸ்புல்களற்ற திடமான தெரிவுகளின் விருப்ப இருக்கைகளால் அரங்கம் அர்த்தமாகலாம். எந்தச் சூழலிலும் தேடலின் முனைப்புடன் ஆர்வமாய் அங்கு வந்து சேரும் இலக்கிய ருசும்பிகளின் வருகையால் கட்டண உரை மேலும் கவனம் பெறலாம்.
கவனித்து கொண்டாடப்படவேண்டிய எழுத்தாளர்களின், படைப்பாளிகளின் எண்ணங்களும் சிந்தனைகளும் உரைகளும் என்றும் இலவசமல்ல எனும் தன் உணர்வின் வெளிப்பாட்டிற்கான முதல் நகர்வே இந்த கட்டண உரை. கட்டணக் கேட்டல் நன்று !
வழக்கமாக ஒரு விதி உண்டு, ஒருகூட்டத்தில் ஒருவர் சொதப்பியாக வேண்டும். சென்னையில் என் முந்தைய நூல் வெளியீட்டு விழா 2004ல். அதில் நண்பர் சோதிப்பிரகாசம் சொதப்பினார். எல்லாருமே நன்றாக பேசிய கூட்டத்தில் நானே சொதப்பியிருக்கிறேன். – ஜெயமோகன்
பொதுவாக இலக்கியக்கூட்டங்கள் என்றாலே வெற்றிலைப் பாக்கு கறைகளுடன் கூடிய இருட்டான மாடிப்படிகள் அமைந்த, கொட்டாவியை அடக்கிக் கொண்டு இருபது அல்லது முப்பது நபர்கள் அசுவாரசியமாக கவனித்துக் கொண்டிருக்கிற, கதர்ச்சட்டையும் ஜோல்னா பையுமாக “இலக்கியவாதிகள்” என்று நெற்றியில் எழுதி ஒட்டி வைத்திருக்கிற சில நபர்களுமாக (அவர்களில் கட்டாயம் ஒருவர் தலை நிறைய முடியுடன் குடுமி வளர்த்திருப்பார்) டீயும் பிஸ்கெட்டும் கொடுப்பார்கள். வெளியே பழைய புத்தகக் கடைகளுமாக இருக்கும்
இன்றைக்கு இலக்கிய உலகில் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது. சக எழுத்தாளின் வீட்டுக்கு செல்லும் போது பருகத்தருகிற எதையும் குடிக்க பயமாயிருக்கிறது. ஒரு படைப்பை விமர்சனம் செய்ய அதைப் படித்தாக வேண்டிய கட்டாயம் ஒன்றுமில்லாத நிலையே இருக்கிறது. படிக்காமலேயே விமர்சனம் செய்யலாம். “இவன்தான் இப்படித்தான் எழுதுவான்” என்று முத்திரை குத்தி முன்தீர்மானத்துடனேயே அணுகுகிறார்கள். எதையும் படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள். என் எழுத்துக்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள். செருப்பால் கூட அடியுங்கள். ஆனால் படித்து விட்டு செய்யுங்கள். – நாஞ்சில் நாடன்
ஜெயமோகனின் ஊட்டி இலக்கியக்கூட்டங்களைப் பற்றி ஒருவர் (வினவு) பகடியாடுகிறார்.
ஊட்டி சந்திப்பு குறித்து நிறைய சந்தேகங்கள், அளவிலா சம்சயங்கள், முடிவில்லா விசாரணைகள், வந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே அவை குறித்து ஒரு நீண்ட பொதுவான விளக்கம் தரப்படவேண்டியதாகி இருக்கிறது. இது ஒரு சிக்கலான தத்துவப் பிரச்சினையாக இருப்பதால் இலக்கியத்தை மேம்போக்காக சொறிபவர்கள் மேலே படிக்க வேண்டாமென்று அன்புடன் ஆணையிடுகிறேன். லுக்கி லக், பாரு நிவேதிதா போன்ற பதிவுலகின் கஞ்சா காக்டெயில் வழிந்தோடும் வஸ்துக்களை வெறியுடன் குடிக்கும் அடிமைகள் தயவு செய்து கன்ட்ரோல் பிளஸ் டபிள்யு அழுத்தி டாப்பை மூடிவிட்டு சென்று விடுங்கள். இதையே எத்தனை தடவை எழுதுவது, சலிப்பாக இருக்கிறது. ஒரு வேளை நான் எழுத்தை வெறுத்துவிட்டு ரஜினியுடன் இமயமலை சென்று செட்டிலாகிவிட்டேன் என்றால் அதற்கு இதுவே காரணமாக இருக்குமென்று தோன்றுகிறது.
அதே நேரம் வார்த்தைகளால் விளங்கிக் கொள்ள முடியாத, சூக்குமம் சூல் கொண்டுள்ள, குழப்பத்திற்கும் – தெளிவிற்கும் நடுவே நாட்டியமாடும் நன்னெறிக் கருத்துக்களை அபிநயிக்கும் பதிவுகளை பொறுமையாக, விடாப்பிடியாக, தலைவலியோடு, தம்மத்தின் பெருமிதத்தோடு படிக்கும் வாசகர்கள் நிமிர்ந்த நடையுடன் மேலே படிப்பதற்கு தடையொன்றும் இல்லை.
இலக்கியம் பற்றி பேச நாலு பேர் இருந்தாலே அதிகம். 40-50 பேர் உள்ள ஒரு கூட்டம் மாதாமாதம் கூடிப் பேசுகிறது. ஒவ்வொரு மாதமும் 20-25 பேராவது வருகிறார்கள். சென்னையின் ‘நடு சென்டரான’ கோபாலபுரத்திலிருந்து வடபழனி போவதற்கே எனக்கெல்லாம் தாவு தீர்ந்துவிடுகிறது, இவர்கள் சென்னையின் பல மூலைகளிலிருந்து – செங்கல்பட்டு, குரோம்பேட்டை, அம்பத்தூர் என்றெல்லாம் பேர் கேட்டேன் – வருகிறார்கள். ஜெயமோகன் வந்தால் எண்ணிக்கை 100-150 பேராக அதிகரித்துவிடுமாம். கேட்கவே சந்தோஷமாக இருந்தது. மேலும் மேலும் சிறப்பாக நடக்க என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!