கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

 

 

 

 

 

 

 

 

vபரணீதரன்

திரு ஶ்ரீதர் – பரணீதரன் – மெரீனா

ஒருவரே பல துறைகளில் வித்தகராக இருக்கமுடியுமா? முடிந்திருக்கிறது ! பரணீதரன் என்ற பெயரில் ஆன்மீக எழுத்தாளராகவும், மெரீனா என்ற பெயரில் நாடகங்கள், கதைகள், கட்டுரைகள் எழுதுபவராகவும், ஶ்ரீதர் என்ற பெயரில் கார்டூனிஸ்ட்டாகவும் தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்தான் ‘சீடி’ எனச் செல்லமாக அழைக்கப்பட்ட திரு ஶ்ரீதர் அவர்கள்.

எழுபதுகளில் ஆனந்த விகடன் அட்டையிலும், உள்ளே ஜோக்குகளாகவும் அவரது கார்ட்டூன்கள் மிகவும் பிரபலமானவை. காஞ்சி மகாப்பெரியவாளின் பரிபூரண ஆசியுடன், இவரது பக்திப் பயணக் கட்டுரைகள் – அருணாசல மகிமை, ஆலய தரிசனம் (246 புண்ணியத் தலங்கள் பற்றிய கட்டுரைகள்) – மற்றும் அன்பே அருளே (பரமாச்சாரியருடனான அனுபவங்கள்), மகாத்மாவின் மனைவி (கஸ்தூரிபா காந்தி வாழ்க்கை வரலாறு), சின்ன வயதினிலே (தன் வாழ்க்கைக் குறிப்புகள்) போன்றவை எல்லோராலும் விரும்பி வாசிக்கப் பட்டவை!

ஆனந்தவிகடனில் தொடராகவும், பின்னர் நாடகமாகவும் மேடையேற்றப் பட்ட தனிக்குடித்தனம் (1969), ஊர் வம்பு, கால் கட்டு, மாப்பிள்ளை முறுக்கு, கூட்டுக் குடித்தனம், சாமியாரின் மாமியார் போன்றவை மத்திய வர்க்க பிராம்மணக் குடும்பங்களின் வாழ்க்கையை நகைச்சுவையுடனும், சுய எள்ளலுடனும் எழுதப்பட்டவை – சாகா வரம் பெற்றவை! சென்னைத் தமிழில் எழுதப்பட்ட வடபழனியில் வால்மீகி, ஸ்வீகாரம் போன்ற புதினங்களும் மெரீனாவின் பன்முகத் தன்மை கொண்ட எழுத்துக்கு சான்றுகள்.

ஶ்ரீதர் டிசம்பர் 25, 1925ல் பிறந்தார். தனது குடும்பசூழல் காரணமாக, திருமணம் செய்துகொள்ளாமல், குடும்பத்திற்காகவே வாழ்ந்தார். 1947ல் வணிகவியலில் பட்டம் பெற்றார். அப்போதே கார்ட்டூன்கள் வரையத் தொடங்கியவர், ரிசர்வ் வங்கியில் கிடைத்த வேலையை ஒதுக்கி விட்டு, தன் மனதுக்குப் பிடித்த கார்ட்டூனிஸ்ட் வேலையைச் செய்தார்! ‘சீலி’ என்ற பெயரில் சுதேசமித்திரனில் ஓவியங்கள் வரைந்தார்.

ஶ்ரீதர் அவர்களின் தகப்பனார் திரு சேஷாசலம் (அம்மா – ருக்மணி), தமிழில் ர்’கலாநிலையம்’ என்ற இலக்கியப் பத்திரிகையை (1928 – 1935) நடத்திவந்தார். கம்பன், ஷேக்ஸ்பியர் காவியங்களை நாடகமாக்கினார். பள்ளிச் சிறுவனாக இருக்கும்போதே, ஶ்ரீதர், வீட்டில் நடக்கும் நாடக ஒத்திகைகளைப் பார்த்து, வசனங்களை மனப்பாடமாகச் சொல்வாராம் – நாடகங்கள் நடக்கும் போது, வசனங்களை ‘ப்ராம்டிங்’(வசனம் மறந்து விட்டால் பின்னாலிருந்து எடுத்துக் கொடுப்பது!) செய்வாராம் – பின்னாளில் நாடகங்கள் எழுதவும், இயக்கவும் இந்த அனுபவமே அத்திவாரமாக இருந்திருக்கலாம்!

ஆனந்த விகடனில் வாசன் அவர்களால் ஆசிரியர் குழுவில் இணைந்தார். 1968 முதல் 1985 வரை அவர் ஆ.வி யில் பணி புரியும்போது ஏராளமாக எழுதினார். தான் பயணித்த பல புண்ணிய ஸ்தலங்களின் புராணங்களைப் பற்றி பரமாச்சாரியாரின் ஆசிகளுடன் எழுதிய தொடரே ‘ஆலய தரிசனம்’. கோல்கொண்டா, ஷீர்டி, பண்டரீபுரம், ஹிமாலயாஸ், கோமுக், பத்ரிநாத், கேதார்நாத், வாரணாசி-ராமேஸ்வரம், கேரளா, கர்நாடகா கோயில்கள் என இவர் பயணித்து எழுதிய பக்திப் பயணக் கட்டுரைகள், பக்தி இலக்கியத்தில் ஓர் ஆவணமாகக் கொள்ளத்தக்கவை.

பரமாச்சாரியார் மீது கொண்ட பக்தியும், அன்பும் அவரை ‘அன்பே அருளே’ என்ற புத்தகத்தை எழுத வைத்தன. அதில் அவர் தனது பரமாச்சாரியாருடன் ஆன ஆன்மீக அனுபவங்களையும், நிகழ்வுகளையும் பக்திப் பரவசத்துடன் எழுதியிருப்பார். வாசிப்பவர்கள் நெகிழ்ந்து, கண்ணீர் மல்க அந்தப் பரவச நிலையை அடைவார்கள் – அது பரணீதரனின் எழுத்தின் வலிமை! பரமாச்சாரியருக்கும், பரணீதரனுக்கும் இடையே இருந்த பந்தம் இறைவன் அளித்த வரம் என்றால் அது மிகையில்லை!

மேலும், சேஷாத்ரி சுவாமிகள் வாழ்க்கை, பாடகாச்சேரி சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் பற்றிய கட்டுரைகளையும் எழுதியுள்ளார். காளிதாசனின் ரகுவம்சம், ஆர் கே நாராயணனின் கைடு, ஸ்வாமி & ஃப்ரெண்ட்ஸ் போன்றவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் – (பிரபல எழுத்தாளர் ஆர் கே நாராயணன், கார்டூனிஸ்ட் ஆர் கே லக்‌ஷ்மண் – இவருடைய் கசின்ஸ் என்பது உபரிச் செய்தி!)

SIX MYSTICS IN INDIA – இவரது ஆங்கிலப் புத்தகம்.

ஆனந்த விகடனில் பணிபுரியும்போது, பல ஆன்மீகத் தலைவர்களுடனும், காமராஜ், ராஜாஜி போன்ற அரசியல் தலைவர்களுடனும், நடிகர் சிவாஜி, இயக்குனர் கே.பாலச்சந்தர் போன்ற கலைஞர்களுடனும் ஏற்பட்ட தொடர்பு, பல அனுபவக் கட்டுரைகள் எழுதக் காரணமாயின.

மெரீனா என்ற பெயரில் அவர் எழுதிய நாடகங்கள் மிகவும் பிரபலமானவை – ஒவ்வொரு நாடகமும் நூறு முறைக்கு மேல் மேடையேற்றப் பட்டவை! பூர்ணம் விஸ்வநாதன், கூத்தபிரான் ஆகியோரின் நடிப்பா, மெரீனாவின் வசனங்களா என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு கலாநிலையம் வழங்கிய நாடகங்கள் வெற்றி பெற்றன. பயணங்களில் சந்தித்தவர்கள், நாடகப் பாத்திரங்கள் ஆனார்கள்! இயல்பான வசனங்கள், நடிப்பு இவற்றால், நாடகம் பார்க்கும் உணர்வே இருக்காது. நாமும் அந்த வீட்டிலேயே இருந்து நடப்பவைகளைப் பார்ப்பது போல இருக்கும் – நம் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, மாமியார், நாத்தனார், ஓர்ப்படி என பாத்திரங்களுடன் நாமும் ஒன்றிவிடுவோம்!

‘கஸ்தூரி திலகம்’ நாடகம் போடும்போது, நடிகர் ஆர் எஸ் மனோகர் உதவியுடன், மேடையில் ஒரு ரயிலின் மூன்றாம் வகுப்புப் பெட்டியின் செட் போட்டுக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி சாதனை புரிந்துள்ளார்.

1985 வைகுண்ட ஏகாதசி அன்று, 25 மணி நேரங்களில், தன்னுடைய 11 நாடகங்களைத் தொடர்ச்சியாக நடத்தியிருக்கிறார்! நாடகங்களுக்கிடையே இன்டெர்வெல் -30 நிமிடங்கள்!

1991 – சாமியாரின் மாமியார் நாடகத்தை, இரண்டு இடங்களில், இரண்டு குழுக்களுடன் ஒரே சமயத்தில் அரங்கேற்றியிருக்கிறார்!

1994 ல், ‘எங்கம்மா’ என்னும் இவர் நாடகம், பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, எல்லா ரேடியோ நிலையங்களிலும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பப்பட்டது! –

தாணு, ராஜு போன்றவர்களின் கார்ட்டூன்களினால் ஈர்க்கப் பட்டு, தன்க்கென ஒரு பாணியைக் கடை பிடித்தார் ஶ்ரீதர். சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை ஶ்ரீதருடைய கார்டூன்கள்.

ஶ்ரீதர் அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தில், திருப்பூர் கிருஷ்ணன், கார்டூனிஸ்ட் கேசவ், ஆ.வி. ஶ்ரீனிவாசன், கிருஷ்ணகான சபா பிரபு, காத்தாடி ராமமூர்த்தி, பத்மா சுப்ரமணியம், நல்லி செட்டியார், பாரதி பாஸ்கர் ஆகியோர் தங்கள் நினைவுகளைப் பகிந்து கொண்டார்கள். மிகவும் ஆத்மார்த்தமாக நடந்த, நெகிழ்ச்சியான நிகழ்வு.

எல்லா பாராட்டுக்களிலிருந்தும் ஒதுங்கியே இருந்தவர் ஶ்ரீதர். மிகவும் வற்புறுத்தி வழங்கப்பட்ட ‘நாடக சூடாமணி’ விருது பற்றி கிருஷ்ண கான சபா பிரபு சொன்னார்.

‘சிறந்த ஆன்மீக எழுத்தாளர்’ ஒருவருக்கு பரணீதரன் பெயரில் ஒரு விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திருப்பூர் கிருஷ்ணன் முன் வைத்தார். ஆனந்த விகடன் ஶ்ரீனிவாசன், சக்தி விகடன் மூலம் ஒரு விருது வழங்குவத்ற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதி அளித்தார்.

பன்முகத் தன்மையுடன், ஒருவரால் இவ்வளவு சாதிக்க முடியுமா என்று வியப்பாக இருக்கிறது – பரமாச்சார்யாரின் அசியும், இறைவன் அனுக்ரகமும் பெற்ற இவர் ஓர் அவதார புருஷர் தான்!

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.