சரித்திரம் பேசுகிறது – யாரோ

கூன் பாண்டியன்

 

ஹர்ஷன், புலிகேசி, நரசிம்மன் என்று சமகாலத்தில் வாழ்ந்த சரித்திர நாயகர்களைப் பற்றி எழுதி முடித்தபின் நாம் சரித்திரத்தில் அடுத்த காலத்தைப் பற்றி தானே எழுதவேண்டும்?

தவறு. அதே நாளில் இன்னொரு நாயகன் இருந்து கோலோச்சினான். அவனும் மன்னர்களை வென்றான். சரித்திரம் அவனைச் சொல்லாமல் போவதெப்படி? அவன் பாண்டியன் நெடுமாறன்! கூன் பாண்டியன் என்ற பெயரெடுத்தவன். திருஞானசம்பந்தர் கதையில் இவனைப்பற்றி எழுதினோம். ஆனால் அதில் இவன் சப்போர்டிங் ஆக்டர். . இன்று அவன் நமது ஹீரோ!

சோழ நாட்டின் மீது படையெடுத்து உறையூரை முற்றுகையிட்டு அங்கு ஆட்சி செய்து வந்த மணிமுடிச் சோழனை போரில் வெற்றி பெற்றான். சோழ மன்னன் தன் புதல்வியான மங்கையர்க்கரசியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தான். ஏராளமான சீர்வரிசைகளோடு குலச்சிறை என்ற பெயருடைய அறிஞரையும் அமைச்சராக விளங்கும்படி அனுப்பி வைத்தான். மங்கையர்க்கரசி பாண்டிய நாட்டின் அரசியாக முடிசூடிக்கொண்டாள்.

படையெடுத்து சேர மன்னனொருவனோடு போர் செய்து வெற்றியும் பெற்றான். பகைவரைப் புடைத்தான்; பாழி, செந்நிலம் குறுநில மன்னர்களை வென்றான். திருநெல்வேலியையும் வென்றான்.

சமண மதத்தில் ஈடுபட்டு – பிறகு திருஞானசம்பந்தரின் அருளால் – சமணர்கள் வாதங்களில் தோற்கடிக்கப்பட்டு – கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடுமாறனானது.. இவை எல்லாம் நாம் முன்பே கூறியுள்ளோம். அதில் தோல்வியுற்ற 8000 சமணர்கள்- கழுவில் ஏற்றப்பட்டு கொல்லப்பட்டனர். இலக்கியங்களும் – சரித்திரமும் – இது சைவ மதத்தின் மறுமலர்ச்சி என்று கூறி விட்டு வேறு கதைகளுக்குச் செல்லும்.

இங்கு நாம் ஒரு நிமிடம் நின்று அந்த 8000 பேரின் ஜனப்படுகொலையை கண்டனம் செய்து மௌனம் சாதித்துப் பிறகுத் தொடர்வோம்.

நமது பழைய நண்பர் – சீனப் பயணியான ‘யுவான்சுவாங்’ – இவன் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தான் அவனது நாட் குறிப்பில் அவன் கூறுவதாவது

• பாண்டிய நாட்டில் உப்பும் முத்தும் மிகுதி. அருகிலிருந்த தீவுகளில் இருந்து முத்துக்கள் கொண்டு வரப்படுகின்றன.
• வெப்பம் மிக்க நாடு இது. இந்நாட்டு மக்கள் கருத்தமேனி உடையவர்கள்;உறுதியும் போர் வலிமையும் உடையவர்கள்;
• பாண்டி நாடு வணிகத்தில் வளம் பெறுகிறது. செல்வத்தால் சிறந்துள்ளது
-எனப் பாண்டிய நாட்டினைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

நெடுமாறன் 63 நாயன்மார்களில் ஒருவனாகினான்.

பின்னாளில் சுந்தரர் இவரைத் திருத்தொண்டத் தொகையில்:

நிறை கொண்ட சிந்தையான் நெல்வேலிவென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்!

Image result for நெடுமாற  நாயனார்

ஒரு கதை சொல்வோம்:

காஞ்சிபுரம் அரண்மனை. பல்லவ மகாராணி வானவன் மாதேவி சோகத்துடன் இருந்தாள். அந்த பாண்டிய இளவரசி மாமல்லனைத் திருமணம் செய்து மகாராணி வானவன் மாதேவியாகி 10 ஆண்டுகள் அன்று நிறைந்திருந்தது. மகன் மகேந்திரன், மகள் குந்தவி குதூகலாமாக விளையாடிக் கொண்டிருந்தது கூட அவளது மனதைத் தூண்டவில்லை. மகேந்திரவர்மனின் ராணி புவனமகாதேவியின் முகத்திலும் கவலை படர்ந்திருந்தது.

சோழ நாட்டு இளவரசி மங்கையர்க்கரசி புவனமகாதேவியின் பாதுகாப்பில் அதே அரண்மனையில் இருந்தாள். அவளது வதனமும் வாடிக்கிடந்தது.

காரணம் – மாமல்லனும், அவனது மாபெரும் பல்லவ சைன்னியமும் அதற்கு முதல் நாள் தான் வாதாபி படையெடுப்பதற்காக காஞ்சியை விட்டுப் புறப்பட்டிருந்தது. இலங்கை இளவரசன் மாவீரன் மானவன்மன் காஞ்சியில் அவனது விருந்தினானாக இருந்தான். புறப்படுமுன் நரசிம்மன் மானவன்மனிடம்: “மானவன்மா இந்த காஞ்சி நகரையும், இந்த ராணிகளையும், இந்தக் காஞ்சி மக்களையும் உனது பாதுகாப்பில் விட்டு விட்டு செல்கிறேன். அந்த பாதுகாப்பின் போர்வையில் எனது வாதாபிப் பயணம் நடக்கும்.”

மானவன்மன் :”நண்பா! காஞ்சியைக் கண்ணைப் போலக் காப்பேன். கவலை கொள்ளற்க”

நரசிம்மன்: “நமது படையின் ஒரு பிரிவு காஞ்சியிலிருந்து அருகில் திருக்கழுக்குன்றத்தில் இருக்கும். தேவைப்பட்டால் அதை வரவழைத்துக் கொள். பாண்டியன் நெடுமாறன் மீது நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் ஆதரவற்றிருக்கும் காஞ்சி -அதைக் கவர்ந்து கொள் என்று பாண்டியன் மனதை அவனது சமண குருக்கள் கலைக்கக் கூடும்.”

வானவன் மாதேவி திடுக்கிட்டாள்.

தம்பி நெடுமாறன் அப்படியும் செய்வானோ?

மானவன்மன்: “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லு முன்

வானவன் மாதேவி: “அரசே .. அப்படி ஏதும் நடக்கத் தொடங்கினால் நான் என் தம்பியைக் கொன்று விடுவேன்”

நரசிம்மன் சிரித்தான்.

“மகாராணி.. நெடுமாறனை ஒன்றும் செய்து விடாதே! நான் பல்லவ மன்னனாக காஞ்சியைக் காக்கும் பொறுப்பினால் இப்படி பேசினேன்“

வெறிச்சோடிய அரண்மனையில் நெடுமாறன் பிரவேசித்தான்.

மங்கயற்கரசியின் வதனத்தில் ஒரு கணம் மகிழ்ச்சி. மறுகணம் பயம். இவன் காஞ்சியைத் தாக்க வந்தானா?

“நெடுமாறா? எங்கு வந்தாய்?” – வானவன் மாதேவியின் குரல் கடுமையானது.

‘அக்கா. காஞ்சியைக் கொள்ளையிடவே வந்தேன்!” -அவனது கண்கள்  மங்கையற்கரசியைக் காதலுடன் நோக்கின.

வானவன் மாதேவி – அவன் பார்வையை சரியாகக் கவனிக்கவில்லை – அவளது தேகம் நடுங்கியது.

“துரோகி” – என்று கையில் குறுவாளை எடுத்து நெடுமாறனைக் குத்த பாய்ந்தாள்.

“என்ன அக்கா! இது விபரீதம்? என்னை ஏன் கொல்ல வருகிறாய்? நான் கொள்ளையடிப்பதாகச் சொன்னது – உனது தோழி மங்கயற்கரசியை தானே? மற்றும் மாமல்லர் படையெடுக்கச் சென்றபின் உங்களுக்கு உதவி வேண்டுமா என்று விசாரிக்கவே வந்தேன்”

வானவன் மாதேவி – பெருமூச்சுவிட்டாள்.

‘தம்பி .. என்னை மன்னித்து விடடா! உன்னைத் தவறாக எடை போட்டேன்!”

அன்றிரவு..

‘அக்கா. இந்நாளில் இந்த சரித்திரக்காலக் கட்டத்தில் ஒரே உறையில் பல கத்திகள் – இருக்கின்றன. ஹர்ஷன்- புலிகேசி- நரசிம்மன் பற்றும் நெடுமாறன்’ இதில் சில உரசல்கள் – சில ரத்தங்கள்.. பல அழிவுகள். எதிர்காலத்திலும் இப்படி கத்திகள் உரசும்.. அது பல்லவர் – பாண்டியராக இருக்கலாம். அதை நாம் கூறுவதற்கில்லை.. ஆனால் இன்று .. பாண்டிய – பல்லவர்கள் உன்னால் – சேர்ந்தே இருப்போம்.” – என்றான்.

அவன் வார்த்தைகள் பின்னாளில் பலித்தது.. அந்தக் கதைகளையும் சரித்திரம் பேசவுள்ளது..

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.