பஞ்சுமுகில் மஞ்சமெனக் கொஞ்சமதில்
படுத்துலகைச் சுற்றச் செய்யும்
இஞ்சியுயர் கோட்டைகளை இங்கிருந்தே
எளிதில்கைப் பற்றச் செய்யும்
கஞ்சமலர்த் தேன்சுவைத்துக் காவியத்தின்
கள்ளருந்தி மயங்கச் செய்யும்
எஞ்சியுள இன்பங்கள் அத்தனையும்
இத்தரையில் முயங்கச் செய்யும்
( இஞ்சி — மதில் சுவர் )
ஊக்கமெனும் ஒருபுயலை உளக்கடலில்
உருவாக்கி வீசச் செய்யும்
தீக்கதிரும், தீம்புனலும் தெறித்திடவே
தெளிவாகப் பேசச் செய்யும்
தூக்கியெறி துன்பங்கள், நோக்கிவரும்
தொல்லையவை கடக்கச் செய்யும்
ஏக்கமெனும் உணர்வினையும் இனிமைபட
இயம்பியதைச் சுவைக்கச் செய்யும்
இனித்திருக்கும் நினைவுகளும் கனவுகளும்
இயைந்தொன்றாய் நிகழச் செய்யும்
கனித்தமிழின் சாறருந்திக் காலமெலாம்
களிப்புடனே திகழச் செய்யும்
அனைத்துலக மக்களெலாம் உறவென்ற
அன்புறவால் நெகிழச் செய்யும்
பனித்துளியில் பனையடக்கும் ஆச்சரியம்
பாட்டினைப்போல் புவியில் உண்டோ?
Very very nice,superb
LikeLike