கடந்த இரண்டு மாதமாக ரீடா (வயது 16) மிகப் பயந்து போய் இருந்ததாக அவள் தாயார் ஜான்சி சொன்னாள். பயம் தோன்றும் போது நெடுநேரம் தூக்கத்திலேயே கழித்து விடுவாளாம். வற்புறுத்தி எழுப்பி, சாப்பிட வைப்பார்களாம்.
யாராவது அவளைக் கோபித்துக் கொண்டால், கடினமான பாடம் படிக்கும்போது, குறைந்த மதிப்பெண் வாங்கினால், வீட்டில் வாக்குவாதம் நேர்ந்தால் இப்படி நிகழ்வதை மூத்த மகள் ராணி கவனித்ததாகப் பகிர்ந்தார். தான் இவற்றை எல்லாம் கவனித்ததில்லை என்றாள் ஜான்சி.
மனநல நிபுணர்களான எங்களது தரப்பில், மேலும் மதிப்பீடுகள் செய்ததில், ரீடாவிற்கு “அட்ஜஸ்மென்ட் ரியாக்க்ஷன் (Adjustment Reaction)”, அதில் உணர்வுகள் பாதிக்கப்பட்டதாக முடிவானது. இது உருவான விதத்தை விவரிக்கிறேன்.
இவர்கள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர், அக்காவுடன் ரீடா வசித்தார். தந்தை அரசு நிறுவனத்தில் குமாஸ்தா. பத்து வருடமாக ரத்த அழுத்தம், மாரடைப்பு வந்ததால் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். தனக்கு ஏதோ ஒன்று நேர்ந்துவிட்டால் குடும்பம் பாதிக்கப் படும் என்ற கவலையால் சலிப்பும், கோபமுமாக இருந்தார். இதனால் ரத்த அழுத்தம் அதிகமாக, டாக்டர் எச்சரித்தார்.
ஜான்சி இல்லத்தரசி. தைரியசாலி. தான் எவ்வாறு துணிவாக இருப்பதைப் போலவே ரீடாவும், ராணியும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். பாசம், கனிவு காட்டினால் தைரியம் வராது என்று நம்பியதால் ஜான்சி மிகக் கண்டிப்பாக இருந்தாள். அப்பாவிற்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை, கோபம் அதிகமானது.
அதனால் தான் ரீடாவிற்கும், ராணிக்கும் பாசம் காட்டுவது, பாசத்தை அடையாளம் காண்பது, வெளிப்படுத்துவது, எப்படிப் பழக வேண்டும், தற்காப்பின் எல்லைகள் இந்தத் திறன்கள் எல்லாம் மிகக் குறைந்து இருந்தது. ஜான்சி, பின் பற்றாததால் அவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் அமையவில்லை.
ஜான்சி, யோசித்து முடிவு எடுக்க மாட்டாள். எது சரியென்று படுகிறதோ அதைச் செய்வாள். இதற்கு கணவருடன் தர்க்கம் செய்வாள். அவளைப் பொறுத்தவரை, அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் அவரது முடிவு சரியாக இருக்காது என்ற கருத்து. விளைவு? பிள்ளைகளின் முன் தினமும் விவாதிப்பதில், அவர்களின் பதட்டமும் மனக்கசப்பும் அதிகரித்தது!
பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் துச்சமாகப் பேசும் போது ரீடாவின் கவனத்தைத் திசை திருப்ப ராணி முயலுவாள். அவளுடன் புத்தகம் படிப்பாள், பொம்மலாட்டம் காட்டுவாள், படங்கள் வரைவாள். அந்நேரங்களில் ரீடாவை பாசத்துடன் அரவணைத்தாள், சிறுவயதிலிருந்தே.
இருந்தும் ரீடா நகத்தைக் கடிப்பாள், கைகள் நடுங்கும். சண்டை நிற்பதாக இல்லை என்றால், ரீடா அதைத் தாங்கி கொள்ள முடியாததால் தூங்கிவிடுவாள். பல சமயங்களில் இது மாலை ஆறு-எழு மணிக்கும் கூட நேரும். அடுத்த நாள் தாமதமாக எழுந்து, குளிக்காமல், ஏதோ சாப்பிட்டு வீட்டுப் பாடங்களை முடிக்காமலேயே பள்ளிக்கூடம் போவாள்.
தண்டனை கிடைக்கும். மதிப்பெண் குறையும் நாட்களில் ரீடா வந்தவுடன் தூங்கி விடுவாள். மனத் தவிப்பிற்கு அனுசரித்தது உடல்; மனத் தவிப்பை உடல் மொழி தூக்கம் என்று பாவித்து, அவ்வாறே செய்ய உடல் தானே பழகி விட்டது.
பெரியவள் ராணி போகப் போகச் சரியாகும் என நினைத்துத் தன்னை தேற்றிக் கொண்டாள். ஆகவில்லை.
ரீடாவிற்கு எந்த ஒரு தவிப்பு இருந்தாலும் அதைப் பற்றி ராணியிடம் கூட வெளிப்படையாகப் பேச முடியாத சூழல். அக்கா பாசக்காரி. அம்மாவைப் பற்றிப் பேசுவதைப் பார்த்தோ, கேள்விப் பட்டாலோ, கடுமையாகக் கண்டிப்பாள். அதனால்தான் ரீடா மனதிற்குள் புதைத்தாள். பாசத்திற்கு ஏங்கினாள். வேறு என்ன செய்ய?
இவர்கள் தெய்வ பக்தி உள்ளவர்கள். ஞாயிற்றுக்கிழமை தொழுகை போவது, ஸன்டே ஸ்கூலுக்குக் குழந்தைகள் அவசியம் போய் ஆக வேண்டும். தானதர்மம் செய்வதைக் கடைப்பிடிப்பதை அவர்களின் அக்கம்பக்கத்தினர் பாராட்டிப் பேசினார்கள். குடும்பத்தின் சொல்லாத விதி: என்ன நடந்தாலும் வெளிப்படுத்தக் கூடாது. அமைதி காப்பது போல் காட்ட வேண்டும். இதைப் பின்பற்றுவது, அழுத்தம் கொடுத்தது. தன் கழுத்தைப் பிடித்து வைத்தது போல ரீடா உணர்ந்தாள்.
ரீடாவிடம் மனத்திடத்தின் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாதது பல விதங்களில் தென்பட்டது. அவளை, யார் எதைக் கேட்டாலும், அச்சம் மேலோங்கும். குழம்பிப் போய்விடுவாள். மற்றவர்கள் சொல்வதைச் செய்வாள். மறு பேச்சு பேச மாட்டாள். தனக்கு எதுவும் தெரியாது என்பதை உறுதியாக மனதில் ஏற்றுக் கொண்திருந்தாள். இப்படி இருப்பது அவளுக்கே வேதனை தரும். அதை ஏற்றுக் கொண்டு நெஞ்சில் சுமக்க முடியாததால் தூங்கிவிடுவாள்.
ரீடாவை அவர்களுடைய வாடகை வீட்டில் வசிக்கும் ஆண்களைத் தவிர்த்து வேறு ஆண்களுடன் பேச, பழகப் பெற்றோர் தடை விதித்தனர். மூன்றாவது வகுப்பு வரை ஆண்-பெண் கலந்த பள்ளிக்கூடம். இப்போது பெண்களின் பள்ளிக்கூடம்.
ரீடா படிப்பில் நிறைய சுமார். ராணி வகுப்பில் முதல் இடம் பெறுபவள். பெற்றோர் அவளை மிகப் பெருமையுடன் பேசுவார்கள். ரீடாவை மற்றவர்கள் முன், ராணியுடன் ஒப்பிட்டு ஏளனமாகத் தாழ்த்திப் பேசுவார்கள். அப்போது தான் ரீடாவிற்கு உரைக்கும், அதிகமாக முயன்று நல்ல மதிப்பெண் எடுப்பாள் என நினைத்தார்கள், அவளுடைய மனiத்தவிப்பை பொருட்படுத்தவில்லை, இதில் அவளது தன்னம்பிக்கை இன்னும் குறைந்து போகிறது என்பதைக் கண்டு கொள்ளவில்லை.
இந்த சூழ்நிலையில் ரீடாவின் மாதவிடாய் ஆரம்பமானது. வளரும் பிராயத்தில் பல உடல்-சுரப்பி உற்பத்தியானதால் வெவ்வேறு உணர்வுகள் தோன்றியன, தன்னுள்ளே நேரும் பல விதமான கிளர்ச்சி அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது. இதை யாரிடம் பேச என்று புரியாமல் விழித்தாள். சினேகிதிகள் இல்லை. அவ்வளவு நெருக்கமானவர்கள் யாரும் இல்லை.
இந்த நிலையில் தான் அவர்கள் வாடகை வீட்டிற்குக் குடி வந்த வினோத் (வயது 24) ரீடாவைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு வாழ்த்து, எப்படி இருக்கிறாள் என விசாரிப்பான். அவளுக்குக் கூச்சமாக இருந்தது. மனதைத் தேற்றியது, நெகிழ்ச்சியானது.
வினோத்துடன் சந்தித்துப் பேசுவதில், அவளுக்கு இந்த நெருக்கம் பல உடல் உணர்வை ஏற்படுத்தியது. அந்த வயதிற்கான பருவநிலை, வளர்ச்சியின் அறிக்கை இது என்பதை யாரும் அவளுக்கு சொல்லித் தரவில்லை.
நாட்கள் போக, ஓரிரு முறை வினோதின் கை உரசியது. அவளுக்குள் கிளர்ச்சி உண்டாயிற்று, ஏதோ செய்தது. ரீடா இதையும் வினோத் கிசுக்கிசு செய்வதையும் அவள் தடை செய்யவில்லை. இன்னொன்றை கவனித்தாள், இப்போதெல்லாம் அவள் நீண்ட நேரம் தூங்குவதில்லை என்று.
இப்படி போய்க்கொண்டு இருக்க, ஒரு நாள் வினோத் தனக்கு வேலை கிடைத்ததைச் சொல்லி அவளுடைய கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றான். ஸ்தம்பித்துப் போனாள்.
திடீரென ஏதோ பயம் சூழ்ந்தது. யாரிடமும் ரீடாவால் சொல்ல முடியவில்லை. இந்தக் குழப்பத்தில் அடுத்த நான்கு வாரத்திற்கு வினோத்தைச் சந்திக்க வில்லை. ஏதோ கேட்டு, முத்ததிதினால் கர்ப்பம் தரிக்குமா? என்ற கவலை அவளை வாட்டியது. தன்னை உற்று கவனித்தாள், சந்தேகம் எழுந்தது.
அன்றையிலிருந்து ரீடா திரும்ப நீண்ட நேரம் தூங்க ஆரம்பித்தாள். இப்போதும், மனம் வாட்டியதை உடல் கேட்டு, நடந்து கொண்டது! யதேச்சையாக வினோத்திற்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிற்று என்றும், அவன் தன் சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்றதைப் பற்றியும் கேள்விப் பட்டாள். ரீடாவிற்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.
பள்ளிக்குச் செல்ல மறுத்தாள். பெற்றோருக்கு அப்போது தான் ஏதோ பிரச்சினை என்று தோன்றியது. அவர்கள் குடும்ப டாக்டர் எங்களிடம் போகச் சொன்னதில், அழைத்து வந்தார்கள். பள்ளிக்கூட அதிகாரியுடன் பேசி பத்து நாள் சலுகை வாங்கியதாகச் சொன்னார்கள்.
நான் கேள்விகள் கேட்க, கடந்த எட்டு மாத நிலைமையை விளக்கினாள் ஜான்சி. ரீடாவைப் பற்றிப் பல கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் விழித்தாள். இதை மாற்றத் தேவை என்பதை ஜான்சி புரிந்து கொள்ளவே கேள்விகளை நான் அவ்வாறு வடிவமைத்தேன். இந்த யுக்தி பலன் அளித்தது. பதில் தெரியாததை மாற்ற ஜான்சி முன் வந்தாள். அவள் தானாக செய்ய முடிவெடுத்தால் செய்வாள், மற்றவர் பரிந்துரை சொல்லிக் கேட்டு அல்ல. இதனாலேயே கேள்விகளை அவ்வாறு அமைக்க வேண்டியதாயிற்று.
பெண்களின் குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டுவதில் குறியாக இல்லாமல், அதற்குப் பதிலாக பெண்களின் சக்தியை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று பல ஸெஷன்களில் கலந்துரையாடினோம். இதன் பிரதிபலிப்பு வீட்டில் தென்பட்டது. வீட்டில் அவள் செய்ய வேண்டிய பல விதமான வழிமுறைகளை ஆலோசித்து அமைத்தோம். அதன் தாக்கம் தெரிய, குடும்பத்தினர் பேசும், பழகும் விதங்கள் மாற ஆரம்பித்தது.
இந்த மாற்றம் முக்கியம் என்பதற்காகவே நான் ரீடாவுடன் முதலில் ஆரம்பிக்கவில்லை. இப்போது தொடங்கினேன். ரீடாவுடைய முதல் பயம், தான் கர்பம்மா என்று மனம் வலித்தது. இதை முதலில் எடுத்துக் கொண்டு, அவளுடைய பாடப் புத்தகத்தை வைத்துக் கொண்டு அவளுடன் உரையாடி, கதைகள் வடிவமாகவும் விளக்கினேன். ரீடா தெளிவடைய அந்தப் பயம் பறந்து போனது. இவ்வாறு தெளிவுபடுத்தினால் குழந்தைகள் உறவாடலில் அதிகம் ஈடுபடுவார்கள் என்பது தவறான கருத்து என்றதையும் ஜான்சிக்குக் கூடவே விளக்கினேன். விஷயம் தெரிந்து கொள்வது சரியான முடிவுகள் எடுப்பதில் உபயோகமாக இருக்கும்.
ரீடா தான் அனுபவிப்பது உடலின் மாற்றங்கள், உடல்-மனம் தாக்கம், என்பதைப் புரிந்து கொண்டு, நிம்மதி அடைந்தால். மன அழுத்தங்கள் தாள முடியாததனால் தான் தான் வெகு நேரம் தூங்குகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளப் பல ஸெஷன்கள் ஆயின.
ஆரம்பத்தில் தான் வினோத்துடன் பேசிப்-பழகியது, முத்தம் பெற்றது கெட்டது ஏதோ செய்து விட்டதாகக் கருதினாள். பாவம் செய்ததாக நினைத்தாள். விளக்கமாகப் பேசியதில், தன் உணர்வுகள், அவைகளின் செயல்பாட்டைப் புரிந்து கொண்டது இந்தத் தவறான கருத்தை மாற்றிக் கொள்ள உதவியது. இதைத் தாண்டிய பின், அவளால் தன்னுடைய சந்தேகங்களைப் பற்றி வெட்கப் படாமல் பேச முடிந்தது.
ரீடா தன்மேல் வைத்திருந்த மிக மோசமான அபிப்பிராயங்களை மாற்றி அமைக்க ஆரம்பித்தோம். இதன் முதல் படி, வகுப்பிற்கு மறுபடி போவது தான் என்றேன். என்னை நம்பினாள், சென்றாள்.
அடுத்த ஏழு நாட்களுக்கு என்னுடன் ஸெஷன்கள். அதில் அன்றைக்கு நடந்ததை எடுத்து அலசினோம். அதில் அவளுடைய பயம், அச்சம், துன்பங்கள், துயரங்கள் எனப் பல உணர்வுகளைப் பார்த்தோம். ஒவ்வொன்றாய் எடுத்து அத்துடன் வந்த சிந்தனை, சூழல்களை வரிசைப் படுத்தி எவ்வாறு கையாண்டாள் என்பதைப் பார்த்தோம். இடையூறாக நேர்ந்ததை மாற்றி அமைக்கும் யுக்திகளை ரோல்-ப்ளே மூலமாகச் செய்ததில் நன்றாகப் புரிந்து கொண்டாள்.
மேற்கொண்டு, அம்மா-பிள்ளை இணையப் பல பதினைந்து நிமிட ஸெஷன்கள் அமைத்தேன். முதலில் ரீடாவுடன், அதற்குப் பிறகு வீட்டில் ஜான்சியும் தன் பங்கைத் தொடர்ந்து செய்து வந்ததில் மாற்றங்கள் தென்பட்டன.
இந்த முறை அப்பாவை ஸெஷன்களில் சேர்த்துக் கொண்டோம். அவரின் உடல்நிலை பற்றிய கவலையினால் ஏற்பட்ட சூழ்நிலையை அவர் புரிந்து கொள்ளப் பல ஸெஷன்கள் தேவைப்பட்டது. அதிலிருந்து அவருடைய பயத்தின் உற்பத்தி ஆகும் விதங்களை, அதன் தாக்கத்தைப் பார்த்தோம். அவர் தன் இயலாமை பற்றியும் அதனால் தன் மதிப்பு குறைவதையும் பற்றிப் பேசத் தொடங்கினார்.
இத்சமயத்தில், ஜான்சியுடன் இணைந்து ஸெஷன்கள் தொடங்கினேன். இதில் இருவர்களின் உறவுமுறையை மையமாக வைத்துப் பேசி வந்தோம். இவர்கள் தங்கள் வாக்குவாதங்களினால் பெண்கள் மீது ஏற்படும் தாக்கத்தைப் புரிந்து கொண்டு, மாற்றிச் செயல்பட, பல வாரங்கள் ஆயின. .
இது போய்க் கொண்டு இருக்கையில், ஸன்டே வகுப்பில் ரீட்டா சில பொறுப்புகள் ஏற்பதற்கான ஏற்பாட்டை அவளையே செய்ய வைத்தேன். தயக்கத்துடன் செய்தாள். ஒரு வாரத்தில் அதனால் தெம்பு பிறந்ததை உணர முடிந்தது. இப்போது பள்ளிக்கூடத்தில் ஏதாவதொரு பொறுப்பைத் தினம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம். தினம் ஒரு சந்தேகம் தீர்ப்பதென்று.
இவ்வளவு நாளாகச் செய்யாததைச் செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம். முதல் நாள் மிகவும் சங்கடப் பட்டாள். தோழியிடம் ஆரம்பித்தாள். தொடர்ந்து செய்யச் செய்ய, தானாகக் கவனித்தாள்: தூங்குவது எழு மணி நேரம், அதற்கு மேல் தேவையில்லை!