சுந்தர ராமசாமி
திரு சுந்தர ராமசாமி நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு முக்கியமான எழுத்தாளர். பல எழுத்தாளர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஒரு ஆதாரமாய் விளங்கியவர். நாகர்கோவிலுக்கு வரும் எந்த எழுத்தாளரும் அவரைச் சந்தித்து அளவளாவாமல் திரும்ப மாட்டார்கள். புதுக்கவிதை வளர்ந்து ஓரளவு அங்கீகாரம் பெற்றுவந்த காலகட்டத்தில் ‘பசவய்யா’ என்ற என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார். இவரது விமர்சனக் கட்டுரைகள், கொஞ்சம் காட்டமாக இருந்தாலும், குறிப்பிடத்தக்கவை.
இவருடைய ‘புளியமரத்தின் கதை’ நாவல் வரலாற்றின் திருப்புமுனைகளில் ஒன்று என்று சொல்லலாம். இவருடைய மற்றொரு நாவலான ‘ஜேஜே சில குறிப்புகள்’ பெரிய அளவில் பேசப்பட்ட மற்றும் விமர்சனத்திற்கு உள்ளான ஒரு படைப்பு. அதற்கு அந்த நாவலின் வடிவம் தான் காரணம் என்று சொல்லலாம்.
இவரது எங்கள் டீச்சர் என்னும் கதை
அந்தக் காலத்து மகாராஜாக்கள்தான் கல்வி தேவதையை எத்தனை பெரிய மனசுடன் ஆராதனை செலுத்தியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இந்த பிரம்மாண்டமான கட்டடம் இங்கு எழும்பிவிடுமா?
என்று வியக்கும் வார்த்தைகளுடன் தொடங்குகிறது..
கதை எட்டாம் வகுப்பு மாணவன் பார்வையில் சொல்லப்படுகிறது. அந்தப் பள்ளியைப்போன்று வேறு பள்ளிகள், கல்லூரிகள் கூட இல்லையாம்.
ஒரே ஒரு ஆசிரியை மட்டும் (பத்மாவதி டீச்சர்) இருக்கிறார். நாற்பது ஆசிரியர்களுக்கு மத்தியில் ஒரு பெண்துணையின்றி பணியாற்றுவது அவருக்கு நரக வேதனையாக இருந்ததாம். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வருகிறபோது முறையிடப் போவதாகவும் சொல்லிக்கொண்டிருகிறார். இந்தக் காரணத்தால் பத்மாவதி டீச்சர் ராஜினாமா செய்து விடுவார் என்றுகூட பேசிக்கொண்டார்கள்
இந்த நிலையில் ஒரு ஆசிரியை பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார் என்று தெரியவருகிறது. அந்த டீச்சர் வந்து சேரும் நாளும் வந்தது. புது டீச்சரை பார்க்கும் ஆவலுடன் மாணவர்கள் அசெம்ப்ளி ஹாலில் கூடிவிடுகிறார்கள் . பத்மாவதி டீச்சர் உடன்வரும் எலிசபத் டீச்சர் .. அந்தக் காட்சியை இப்படி விவரிக்கிறார்.
பத்மாவதி டீச்சர் எதிர்சாரி ஏணிப்படி வழியாக, கால்களில் படி இடராது சாக்லேட் கலர் பட்டுச் சேலையை இடது கை விரலால் நாசூக்காகத் தூக்கிப் பிடித்தபடி இறங்கி, மிடுக்குடன் நடந்துவந்து எலிசபெத்தின் கைகளை அன்புடனும் முகத்தில் செட்டான சிரிப்புடனும் பற்றி, ஒரு குழந்தையை அழைத்துச் செல்வதுபோல் வெயிட்டிங் ரூமுக்கு அழைத்துச் சென்றார். நிகழ்ந்தது இவ்வளவுதான். அந்த வேளையின் சாமர்த்தியம்தானோ என்னவோ! எல்லாம் கடவுளின் ஜோடனை போல் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துவிட்டது.
இரண்டு பேரில் ‘யார் அழகு’ என்று மாணவிகள் விவாதம் செய்து கொண்டார்கள். கண்கொள்ளாக் காட்சியாக இரண்டு ஆசிரியைகளும் ஒன்றாக வரும்பொழுது இந்தக் கேள்வி எல்லோர் மனத்திலும் தோன்றுவது இயற்கைதானே?
பள்ளியில் இருந்த மாணவர்களுக்கு அந்த இரு டீச்சர்கள் மேலும் மிகுந்த மரியாதையுடனும், கூடவே ஒருவித பாசத்துடன் அவர்களை பார்க்கிறார்கள். அந்த இருவருக்கும் இடையில் இருந்த நட்பும் அன்னியோன்யமும் மாணவர்களுக்கு நெகிழ்ச்சியைத் தந்தது.
எங்கள் மனசும் எண்ணமும் அவர்களை சுற்றி படிய எங்கள் மேல் கொண்டிருந்த பாசமும் பாடம் கற்றுத் தருகையில் வெளிப்பட்ட அவர்கள் திறமையும் மட்டுமல்ல காரணங்கள். ஒவ்வொருக்கொருவர் கொண்டிருந்த நேசமும் தோழமை உணர்ச்சியும் எங்கள் மனசை வெகுவாக கவர்ந்தன. அவர்கள் மனசுக்குள் அந்தரங்கம் எங்கள் இதயங்களில் எதிரொலித்தது
அந்த நட்பு ஸ்ருதி கலைந்தது போதாத காலம். பத்மாவதி டீச்சர் B பிரிவு ஆசிரியை. எப்போதுமே அந்தப் பிரிவு மாணவர்கள்தான் படிப்பில் முதல் பல ராங்குகளைத் தட்டிச் செல்வார்கள். அதற்கு பத்மாவதி டீச்சரின் திறமைதான் காரணம்.
மண்டை ஒட்டைக் கழற்றிப் பாடங்களை உள்ளே வைத்து மூடிவிடுவதில் அவர் காட்டும் திறமை அலாதியானது .
அந்த டீச்சர் மனது வைத்தால் ஒரு பெருச்சாளிக்குக் கூட பிதாகரஸ் தியரத்தை கற்றுக் கொடுத்து விடுவார் என்று மாவட்ட கல்வி அதிகாரியே சொல்லுவாராம்.
இன்னொரு பிரிவின் ஆசிரியையாக எலிசபெத் டீச்சர் பொறுப்பேற்கிறார். அதில்தான் கதைசொல்லியும் படிக்கிறான்.
ஒரு காலாண்டு தேர்வில் பத்மாவதி டீச்சரின் மாணவர்கள் சிலர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க, இந்த பிரிவு மாணவர்கள் மிகக்குறைந்த மதிப்பெண்கள் பெற்றார்கள் பலர் ஒற்றை இலக்கம்தான். இந்த விஷயம் டீச்சரை மிகவும் பாதித்து விட்டது எப்படியாவது இந்த மாணவர்களை அடுத்த பிரிவு மாணவர்களுக்கு போட்டியாக நல்ல மதிப்பெண்கள் தர வைக்க முடிவு செய்கிறார்.
இதுவரை தனது பிரிவு மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லித் தரப்படவில்லை என்று புரிந்து கொண்டு, போனது போகட்டும் ‘உங்கள் அத்தனை பேரையும் சிப்பாய் மாதிரி அணிவகுத்து போக வைக்க என்னால் முடியும்’ என்று ஒரு முடிவோடு எலிசபெத் டீச்சர் பாடம் நடத்த ஆரம்பிக்கிறார்.
முந்தைய ஆண்டுகளில் அடிப்படைப் பாடங்கள் சரியாகச் சொல்லித்தரப்படவில்லை என்றும் புரிகிறது.எனவே, அடிப்படையிலிருந்து மாணவர்களைத் தயார் செய்கிறார். ஒவ்வொரு நாளும் வீட்டுப்பாடம். இடைவிடாது கடுமையாக உழைப்பு. குழந்தைகளும் மனதை கொடுத்து படிக்க ஆரம்பிகிறார்கள். இந்த வருஷம் ‘சீதாலட்சுமி நினைவுப் பரிசு’ நமக்குத்தான் என்றெல்லாம் சொல்லி ஊக்கப்படுத்தி வருகிறார். மாணவர்களுக்கு நம்பிக்கையே இல்லை எனினும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை ஏற்படத்தொடங்குகிறது. பேச்சுவாக்கில் இது சம்பந்தமாக இரண்டு பிரிவு மாணவர்களுக்கும் இடையில் சில சமயம் வாய்ச்சண்டை கூட மூள்கிறது
எலிசபெத் டீச்சரின் தன்னம்பிக்கை வீண்போகவில்லை. அரையாண்டுத் தேர்வில் எலிசபெத் டீச்சர் பிரிவில் படிக்கும் சரோஜினி நூற்றுக்கு நூறு வாங்கிவிட்டாள். அதேசமயம் பத்மாவதி டீச்சர் பிரிவில் படிக்கிற, எப்போதும் 100 மார்க் வாங்குகிற ராமன், அந்த முறை நூறு மார்க்கை தவற விட்டுவிட்டான்.
‘பி’ பிரிவு மாணவர்களை ஜெயித்து விட்ட சந்தோஷத்தில் மாணவர்கள் இதனைப் பெரும் வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள். மீண்டும் வாய்ச்சண்டை ஏற்படுகிறது. கைகலப்பு ஏற்படுவதற்கு முன்பாக மணி அடிக்கப்பட்டு விடுகிறது
தலைமை ஆசிரியர் நேரில் வந்து விடைத்தாள்களை கொடுத்து டீச்சரை மாணவர்கள் முன்னால் பாராட்டியது இந்தப் பிரிவு மாணவர்கள் கொண்டாடும் விதமாக அமைந்துவிட்டது. எலிசபெத் டீச்சருக்கும் மிகுந்த சந்தோஷம். ஒரு சாதனை புரிந்துவிட்ட மகிழ்ச்சி
அந்த மகிழ்ச்சியில் ஒரு களங்கம் ஏற்பட்டு விடுகிறது. கேள்வித்தாள் ‘செட்’ செய்த எலிசபெத் டீச்சர் கேள்விகளை சரோஜினிக்கு முன்னமேயே தெரிவித்து விட்டதாக பத்மாவதி டீச்சர் சொன்னதாகத் தெரியவருகிறது. சரோஜினி நூற்றுக்கு நூறு வாங்கியதற்கு காரணம் அதுதானாம். எலிசபெத் டீச்சருக்கு மிகுந்த மனவருத்தம். ‘டீச்சரா அப்படிச் சொன்னார்’ என்று மிகவும் மனம் வருந்துகிறார்
ஆண்டுத் தேர்வில் எப்படியும் தனது மாணவர்களை நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்கிற தீர்மானத்தோடு மீண்டும் விடாமுயற்சியோடு சொல்லித் தருகிறார் எலிசபெத் டீச்சர். பேப்பர் ‘செட்’ செய்யப்போவது வேறு பள்ளியின் ஆசிரியர் எனவே சென்றமுறை போல பழி வந்து விடாதல்லவா? முன்பு ஏற்பட்ட களங்கம் போய்விடும் அல்லவா?
ஆண்டுத் தேர்வில் முதல் மதிப்பெண் அதாவது நூற்றுக்கு நூறு பெற வைப்பது ஒரு சவாலாகவே மாறிவிடுகிறது ஆண்டு தேர்வுக்கான ‘சீதாலக்ஷ்மி’ பரிசு தனது பிரிவுக்கே கிடைக்க வேண்டும் என்று முழு மனதுடன் முயற்சி செய்கிறார்கள்
ஆனால் அது நிறைவேறவில்லை அதுகூட பொறுத்துக் கொள்ளலாம் எலிசபெத் டீச்சருக்கு அவப்பெயரும் வந்துவிட்டது
பரிட்சை எழுதும் பொழுது சரோஜினி ஒரு கணக்கில் சிறு தவறு ஒன்று செய்திருக்கிறாள். எலிசபெத் டீச்சர் “கடைசி கணக்கு வரை பார்த்தாயா.. என்ன அவசரம்?” என்று சரோஜினி கேட்டது ஒரு குற்றமாகப் பாவிக்கப்பட அவமானப்பட நேர்கிறது.
அதற்குப்பின் நான் அவரை சந்திக்கவில்லை வேலையை ராஜினாமா செய்துவிட்டு கோட்டயத்திற்கு சென்றுவிட்டதாக பையன்கள் பேசிக்கொண்டார்கள்.
என்று கதை முடிகிறது.
ஒரு மாணவனின் எண்ண ஓட்டத்தில் கதை சொல்லப்பட்டு இருப்பதும், வர்ணனைகளும் மிகச் சிறப்பானவை. கதையை முழுவதும் படித்து அனுபவிப்பது நல்லது.
ஒரு போலீஸ்காரருக்கும் அர்ச்சகருக்கும் இடையே நடக்கும் ‘பிரசாதம்’, துணிக்கடையில் கண் தெரியாத உதவியாளரின் கதையான ‘விகாசம்’, ஏழ்மையில் வாடும் ஓவியரின் கதையான ‘சீதை மார்க் சீயக்காய்த்தூள். …. என பல சிறுகதைகள் பரவலாகப் பேசப்படும் கதைகள்.