மருமகளே …!
மாமியார் பேய் என்கிறாய்
மாமனார் நாய் என்கிறாய்
நாத்தனார் நரி என்கிறாய்
தன் பிறந்த வீடே
தாஜ்மஹால் என்கிறாய் !
கப்பல்போல்
கார் இருந்தாலும்
ஏ. சி இல்லையென
ஏசி விடுகிறாய் !
தன் மகன்
தஞ்சாவூர் பொம்மைபோல்
தலையாட்டினாலும்
அம்மா பிள்ளையென
சும்மா சும்மா சொல்கிறாய் !
மாமியார் கண்ணீரெல்லாம்
நீலிக் கண்ணீர்
மகனை கண்ணீரால்
இழுப்பது என்கிறாய் !
உன் சுடுசொற்கள்
என் உள்ளத்தை
கனல்போல் சுட்டு
காயப்படுத்தினாலும்…
‘பாட்டீ’ என
பேரக்குழந்தை குரல்
பாசமுடன் ஒலித்து
பூங்கரங்களால் – என்
கழுத்தைக் கட்டும்போது
உன் சுடுசொற்கள்
என் மனக்காயமெல்லாம்
காணாமல் போய்விடுகிறது!