‘பாவம்… சீனாவில் ஆயிரத்திற்கும் மேலே, ‘கொரானோ
வைரஸ், மர்மக் காச்சலாலே பாதிக்கப் பட்டு இறந்துட்டாங்-
களாம்.. நம்ம பிரதமர் மோடியும் இந்தியாவிலிருந்து என்ன
உதவி வேணும்னாலும் கேளுங்க.. செய்யறோம்னு சீன
அதிபர்கிட்டே சொல்லியிருக்காராம்..’ என்று, டி.வி., நியூஸ்
பார்த்துக் கொண்டிருந்த நான் மனைவியிடம் சொல்லிக்
கொண்டிருந்தேன். என் மகள் மிதிலாவும் உடன் இருந்தாள்.
‘என்னப்பா.. ரொம்ப சிம்பிள்.. பல வருடங்களுக்கு முன்-
னே இது மாதிரி ஒரு விஷக் காச்சல் சீனாவில் வந்தபோது
நம்ம நடிகர் சூர்யா போய் நம் நாட்டு மூலிகை மருந்து
கொடுத்து அதை முழுவதும் குணப்படுத்திட்டாரே.. இப்ப
நம்ம பிரதமர் மோடி அவரை அனுப்பி இந்தக் காச்சலையும்
சரிப்படுத்தச் சொல்லலாமே…’ என்றாள்.
சட்டென்று ஒரு நிமிடம் நிதானித்து அவளைப் பார்த்தேன்.
‘ஏழாம் அறிவு’ என்ற திரைப் படத்திலே சூர்யா சீனாவிற்குப்
போய் இதுபோன்ற ஒரு மர்மக் காய்ச்சலைச் சரி பண்ணிய-
தாகக் காட்டியது நினைவிற்கு வந்தது.
நானும், என் மனையியும் புன்னகையோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். இளம் உள்ளங்களில், திரைப்
படத் தாக்கத்தின் வீரியம் எங்களுக்குப் புரிந்தது.