சாளுக்கிய விக்ரமாதித்யன்
ஹர்ஷன், புலிகேசி, நரசிம்மன், கூன் பாண்டியன் என்று சமகாலத்தில் வாழ்ந்த சரித்திர நாயகர்களைப் பற்றி விலாவாரியாக எழுதினோம். அவர்கள் காலத்திற்குப் பின் என்ன ஆயிருக்கும்? வேறென்ன? பழி! பழிக்குப் பழி!! ரத்தம்! ரத்தத்திற்கு ரத்தம்!!
மகேந்திரன் தோற்றதற்கு நரசிம்மன் வாதாபியை அழித்துப் பழி தீர்த்தான். அதற்குப் பழி தீர்க்க இன்னொருவன் வருவான். இது காலம் காலமாக வருவது தானே!
பொதுவாக நாம் ஒரு ஹீரோவை தேர்ந்தெடுத்து அது பற்றிக் கதை புனைவோம். இம்முறை ஹீரோ என்று யாரும் இல்லாத சப்ஜெக்ட்! ஹீரோ யார் என்பது வாசகர் கண்ணோட்டதில் தான் இருக்கிறது!
புலிகேசியின் மறைவுக்குப் பிறகு பாதாமியில் (வாதாபி) பெருங்குழப்பம் ஏற்பட்டது. புயலுக்குப் பின் அமைதி என்பார்கள். ஆனால் பாதாமியில் பல்லவப் புயல் ஓய்ந்திருந்தாலும் – உள்நாட்டுப் புயல் சுழல் காற்றாக வீசியது. புலிகேசி ஏற்படுத்தியிருந்த ஆளுநர்கள் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தார்கள். புலிகேசியின் மகன்கள் நால்வர் : சந்திராதித்யன், ஆதித்யவர்மன், விக்ரமாதித்யன், ஜெயசிம்மவர்மன். புலிகேசியின் முதல் இரு மகன்களும் அத்தகைய ஆளுநர்களாக இருந்தவர்கள் – தங்கள் சுதந்திரத்தை அறிவித்தனர்.
முதல் பலி! சந்திராதித்யன் திடீரென்று இறந்தான். எப்படி என்ற கேள்விக்கு சரித்திரத்தில் பதில் இல்லை. பல அரசியல் மரணங்கள் மர்மமானாவையே! இதுவும் அதில் ஒன்று. ஆதித்யவர்மன் – விக்ரமாதித்யன் இருவரும் தங்களில் யார் மன்னனாவது என்று திட்டம் தீட்டினர். விக்ரமாதித்யன் தனது தாய் வழிப் பாட்டனரான கங்க மன்னன் துர்வினிதன் உதவியை நாடினான். படை திரட்டினான். அவனது தம்பி ஜெயசிம்மவர்மன் அவனுக்குத் துணையாக இருந்தான். ஆதித்யவர்மன் – நரசிம்மபல்லவன் உதவியை நாடினான். ஆம்! தந்தையின் மரணத்திற்குக் காரணமாயிருந்த அதே பல்லவன் உதவி! ஆட்சி மோகம் – எதையும் செய்யத் தூண்டும் போலும்! நரசிம்மவர்மனும் ஆதித்யவர்மனுக்கு ஆதரவாக ஒரு பல்லவப் படைப் பிரிவு ஒன்றை அனுப்பி வைத்தான். உள்நாட்டுப்போர் கடுமையாக இருந்தது. விக்ரமாதித்யன்-துர்விநீதன் அணி ஆதித்யவர்மன்-பல்லவர் படையைத் தோற்கடித்தனர். ஆதித்யவர்மன் கொல்லப்பட்டான். பல்லவர் படையின் பெரும்பகுதி காஞ்சிக்கு திரும்பியது. பாட்டனார் துர்விநீதன் – இன்றைய அரசியல்வாதி போல – நரசிம்மன் படைகள் பாதாமியை விட்டு சென்றதை ‘நரசிம்மனைத் தான் தோற்கடித்த வெற்றியாக’ கொண்டாடி பட்டயம் அறிவித்தான். அடுத்து, விக்ரமாதித்யன் அருகிருந்த மற்ற ஆளுநர்கள் அனைவரையும் வென்றான்.
விக்ரமாதித்யனது குறிக்கோள்கள் : முதலில் நரசிம்ம பல்லவனது படைகளை பாதாமியிலிருந்து முற்றிலும் துரத்தவேண்டும். புலிகேசியின் ராஜ்யத்தை ஒன்று சேர்க்கவேண்டும். அப்புறம் தந்தையின் தோல்விக்குப் பழி வாங்கவேண்டும்! பாதாமியில் – கொரில்லா போர்முறையால் – மிஞ்சியிருந்த பல்லவப் படைகளுக்கு மெல்ல மெல்ல அழிவை ஏற்படுத்தினான். அமெரிக்காவின் வியட்நாம் போல பல்லவனுக்கு பாதாமி ஆயிற்று. நரசிம்மன் வீரனானாலும் விவேகமானவன். புலிகேசியை வென்று பழி தீர்த்தபின் பாதாமியில் தன் படைகள் இருக்கத் தேவையில்லை என்று உணர்ந்தான். பதின்மூன்று வருடம் கழித்து – பல்லவ படைகளை திரும்ப அழைத்துக் கொண்டான்.
பாதாமியில் விக்ரமாதித்யன் – முதலில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டான்.. புலிகேசி மறைந்து ஐந்து வருடம் சென்றது. வடக்கிலிருந்து – கன்னோசியிலிருந்து செய்தி வந்தது. ஹர்ஷன் காலமானான். அந்த ராஜ்யம் – ராஜ்யச் சண்டையால் சிதறிப்போனது. மேலும் ஏழு வருடம் கழிந்தது! கி பி 654 ல் – விக்ரமாதித்யன் சுற்றியிருந்த பகையனைத்தையும் ஒடுக்கினான். மகாராஜாவாக பட்டம் சூட்டிக்கொண்டான். துணையிருந்த தம்பி ஜெயசிம்மவர்மனுக்கு விக்ரமாதித்யன் ‘லதா’ என்ற ராஜ்யத்தின் (இன்றைய தெற்கு குஜராத்) ஆளுனராக்கினான். ஆண்டுகள் மெல்ல உருண்டோடியது. விக்ரமாதித்யன் படை பெருக்கினான். விக்ரமாதித்யன் – ‘கூட்டணி ஒன்றே பலம்’ என்று உணர்ந்திருந்தான்.
காலம் கனியக் காத்திருந்தான்.
பல்லவ ராஜ்யத்துக்கு பொதுவாகவே ஒரு பிரச்சினை! வடமேற்கு திசையில் கங்க நாடு, மற்றும் சாளுக்கிய நாடு. தெற்கே பாண்டிய, சோழ நாடுகள். இடையே பாக்குவெட்டி போல பல்லவ நாடு மாட்டிக்கொண்டது. சுற்றி பகை இருந்தால்- எந்த நாடு தான் அமைதியாக இருக்கும்? தெற்கே… மதுரையில் பாண்டியன் நெடுமாறன். தன் சகோதரி பல்லவ ராணியானதால் கொஞ்சம் நாள் அடக்கி வாசித்தான். ஆயினும் தனக்கும் பல்லவனுக்கும் உள்ள இடைவெளி அதிகமானது என்று உணர்ந்தான். நரசிம்மனது பலம் பாண்டிய நாட்டுக்கு பலவீனம் என்று நினைத்தான்.
ஒரு ஃபிளாஷ்பேக்:
நரசிம்ம பல்லவன் – பாண்டியர்களிடமிருந்து காஞ்சியைப் பாதுகாக்கும் பொறுப்பை மானவர்மனிடம் விட்டுப் புறப்பட்ட கதை படித்தோமே! பிறகு – காஞ்சிக்கருகில் மணிமங்கலம் மற்றும் பல போர்களில் நரசிம்ம பல்லவனிடம் தோற்ற புலிகேசி பின் வாங்கத் துவங்கியதையும் பார்த்தோம். அன்று தளபதி பரஞ்சோதி நரசிம்ம பல்லவனிடம் கூறினான்:
“அரசே! நமது படை மிகவும் பலம் பொருந்தி உள்ளது. இம்முறை நான் தலைமையேற்று சென்று வாதாபியை அழித்து புலிகேசியையும் அழித்து வருகிறேன். பாண்டிய நாட்டிலிருந்து வரும் தகவல்கள் சற்று கவலை அளிப்பதாக உள்ளது. நாம் வாதாபி செல்லும் போது பாண்டியன் மாறவர்மன் காஞ்சி மீது படையெடுக்க வரக்கூடும் என்று நமது ஒற்றர்கள் கூறுகின்றனர். சங்கரமங்கை நமக்கும் பாண்டிய நாட்டுக்கும் எல்லையில் உள்ளது. அங்கு இருக்கும் நமது எல்லைப்படை சிறியது. அங்கு பாண்டியன் படையெடுத்தால் தாங்கள் காஞ்சியிலிருந்து படை நடத்த வேண்டும்”- என்றான். பரஞ்சோதி சொன்னபடியே நடந்தது. பாண்டியன் சங்கரமங்கையில் பல்லவ எல்லைப்படையுடன் போரிட்டு வெற்றிபெற்றான். நரசிம்மன் படையுடன் சென்று பாண்டியனைத் துரத்தி வெற்றிபெற்றான். மாறவர்மனும் தன் படையைப் பெருக்கி காலம் கனியக் காத்திருந்தான்.
ஃபிளாஷ்பேக் முடிந்தது!!
வருடம் 668: சரித்திரத்தின் ஒரு முக்கிய வருடம். நரசிம்ம பல்லவன் அரியணை ஏறி முப்பத்தெட்டு வருட ஆட்சி ஆனது. நரசிம்மவர்ம பல்லவன் காலமானான். காஞ்சி சோகத்தில் ஆழ்ந்தது. குறிப்பாக யுவராஜன் இரண்டாம் மகேந்திரன் பெரும் துக்கத்துடனும் கவலையுடனும் இருந்தான். நரசிம்ம பல்லவரின் பெரும் ராஜ்யத்தைக் கட்டிக்காப்பது என்பது பெரும் பொறுப்பாயிற்றே. அன்று அவனுக்கு வயது நாற்பதைக் கடந்திருந்தது. அவனது மகன் பரமேஸ்வரனுக்கு இருபது வயது.
இரண்டாம் மகேந்திரன் பதவிக்கு வந்ததை விக்ரமாதித்யன் கவனித்தான். மாறவர்மனும் கவனித்தான். முதலாம் மகேந்திரன் காலத்திலிருந்து, நரசிம்மன் காலம் வரை – பல்லவர்கள் தங்கள் எதிரிகளை காஞ்சிக்கு அருகில் வரவிட்டு- பிறகு அவர்களுடன் யுத்தம் செய்தனர். இரண்டாம் மகேந்திரன் அரசனானதும் கங்கநாட்டுக்குப் படையுடன் சென்றான். கங்க மற்றும் விக்கிரமாதித்யன் படையுடன் நடந்த சண்டையில் இரண்டாம் மகேந்திரன் படைகள் தோல்வியுற்றுக் காஞ்சி திரும்பியது. இரண்டாம் மகேந்திரனும் காயமுற்றுத் திரும்பினான். போர்க்காயங்கள் மகேந்திரனை பாதித்தது. இரண்டு வருடங்களே ஆட்சி செய்த நிலையில் இரண்டாம் மகேந்திரன் காஞ்சியில் மாண்டான்.
இளவரசன் பரமேஸ்வரவர்மன் பல்லவ நாட்டுக்கு அரசனானான். பாட்டனார் நரசிம்மவர்ம பல்லவரின் யுத்தங்களில் பங்கு கொண்டிருந்த பரமேஸ்வரன் சுற்றி நின்ற பகையை அறிந்திருந்தான். விக்ரமாதித்யனுக்கும், நெடுமாறனுக்கும் சமீபத்தில் ஏற்பட்ட நட்பு பற்றியும் அறிந்திருந்தான். ஏன் தனது முன்னோர்கள் எதிரியை காஞ்சி அருகில் வரவிட்டு – பிறகு சண்டையிட்டனர் என்றும் அறிந்திருந்தான். தனது தந்தை கங்க நாட்டுக்கு படையெடுத்து தோற்றதும் அவன் மனதில் இருந்தது. விக்ரமாதித்யன் – ‘காலம் வந்தது’ என்று கருதி படைகளை ‘காலன்’ போல் காஞ்சி நோக்கி நடத்தினான். பரமேஸ்வரன் படைகள் காஞ்சிக்கருகில் தாக்கின. போரில் வெற்றி-தோல்வி எப்படி வருகிறது என்பது ஒரு மிஸ்டரி. காஞ்சிக்கோட்டை மிக வலுவான கோட்டை. அதை முற்றுகையிட்டு வெல்வதென்பது இயலாததாக இருந்தது. பரமேஸ்வரன் காஞ்சிக்கோட்டைக்குள் பின் வாங்கினான். விக்ரமாதித்யன் – தன் தந்தை போல தெற்கு நோக்கி சென்று காவேரிக்கரையில் உறையூரில் தங்கினான். பாண்டியன் மாறவர்மன் மதுரையிலிருந்து உறையூர் வந்திருந்தான். இருவரும் சந்தித்து நட்புப் பாராட்டினர். எதிர்காலக் கூட்டணி பற்றியும் – பொது எதிரியான பல்லவனை வெல்வதற்காக திட்டம் போட்டனர்.
பரமேஸ்வரன் அரசியலை ஆராய்ந்து பார்த்தான்: ‘விக்ரமாதித்யன் உறையூரில் இருக்கிறான். விக்ரமாதித்யன், பாண்டியன், கங்க மன்னன் மூவரும் சேர்ந்தால் அது மாபெரும் கூட்டணி. அதை முளையிலேயே கிள்ள வேண்டும்’. இந்த எண்ணங்களுடன் – காஞ்சியிலிருந்து வெளி வந்து – கங்க நாட்டின் மன்னன் பூவிக்ரமனை பெரும்படை கொண்டு தாக்கினான். பரமேஸ்வரனின் கழுத்தணியில் ‘உக்ரோதயா’ என்ற பெரிய மாணிக்க கல் பதிக்கப்பட்டு போர்க்களத்தை சிவப்பாக்கியது. போரில் வெற்றி-தோல்வி எப்படி வருகிறது என்பது ஒரு மிஸ்டரி. கங்க மன்னன் பூவிக்ரமன் – பரமேஸ்வரன் நேரடி யுத்தம். பரமேஸ்வரனது கழுத்தணி எதிரியிடம் சிக்கியது. (வாசகர்களே! இந்த உக்ரோதயத்திற்கு ஒரு சரித்திரம் உண்டு. இனி வரும் ‘சரித்திரம் பேசுகிறது’ – இதழில் அது பற்றி கூறப்படும்)!
பரமேஸ்வரன் பின் வாங்கினான். ஆயினும் தோல்விகளால் துவளவில்லை. ஒரு படையை பாதாமி நோக்கி அனுப்பினான். விக்ரமாதித்யன் உறையூரில் இன்பச்செலவில் இருந்தான். பரமேஸ்வரனது கங்க நாட்டுப் படையெடுப்பு தோல்வியடைந்த சேதி கேட்டு பாண்டியனுடன் விருந்து உண்டு மகிழ்ந்த நேரத்தில் – பரமேஸ்வரன் படை பாதாமியை நோக்கிச் செல்லும் சேதி வந்தது. விருந்து பாதியிலே முடிந்தது. விக்ரமாதித்யன் தனது மகன் வினயாதித்யா, பேரன் விஜயாதித்யா இருவர் தலைமையில் பெரும்படையை உறையூரிலிருந்து – பாதாமி செல்லப் பணித்தான். தானும் விரைவில் தொடர்ந்தான்.
பரமேஸ்வரன் தனது படைகளுடன் வெகு விரைவாக உறையூர் பாதையில் பயணித்தான். சாளுக்கியப்படைகள் – பரமேஸ்வரன் உறையூர் வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. உறையூரிலிருந்து 2 கல் அருகில் பெருவாளநல்லூர் என்ற இடத்தில் யுத்தம் நடந்தது. போரில் வெற்றி-தோல்வி எப்படி வருகிறது என்பது ஒரு மிஸ்டரி. இம்முறை பல்லவப்படை பெரும் வெற்றி பெற்றது. பரமேஸ்வரன் – பல செல்வங்களை அவர்களிடமிருந்து கைப்பற்றினான். சாளுக்கியப் படைகள் பாதாமிக்குப் பின் வாங்கியது.
சில வருடங்களுக்கு அமைதி நிலவியது.. ஒரு மாறுதலுக்காக சாளுக்கிய, பல்லவ, பாண்டிய அரசுகள் தங்கள் நாட்டை ஆட்சி செய்வதில் கவனத்தைச் செலுத்தினர். ஆனால் நீறு பூத்த நெருப்புப்போல யுத்தங்கள் அடுத்த தலைமுறையில் தொடரும். ஆவலுடன் காத்திருக்கும் வாசக நண்பர்களே.. விரைவில் சந்திப்போம்.