“தவிப்பு சேர்த்தது” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்


Create a flyer that stands out

 

ஒரு காலத்தில் எல்லாம் சுகமாகப் போய்க் கொண்டு இருந்தது! நடுத்தர சதீஷ் குடும்பத்தினர் சிரிப்பும், குதுகலமும் ததும்பி இருந்தார்கள். வீட்டில் பூஜை-ஸத்ஸங் நடத்தி, அன்னதானம் செய்வார்கள். தெருவில் எல்லோருடனும் பழகி, சௌக்கியம் விசாரிப்பார்கள். அது ஒரு கனாக்காலம் போல் தோன்றியது. இப்போது என்ன ஒரு மாறுதல்! எல்லோருக்கும் வருத்தம். வியப்பாக இருந்தது.

 

தனியார் நிறுவனத்தில் சதீஷிற்கு நல்ல உத்தியோகம். ஒரு வருடமாகத் திரும்பி வருவதற்கு ராத்திரி பத்து மணியாகிவிடும். அவ்வப்போது அலுவலகப் பார்ட்டியினாலும் இப்படி. வெளியூர் பயணங்கள், அங்கேயும் பார்ட்டிகளில் கலந்து கொண்டான்.

 

பார்ட்டிகளில் தடையின்றி மது இருக்கும். முன்பெல்லாம், சதீஷ் மது அருந்துவதில்லை. புது நண்பர்கள் கிடைத்தார்கள். மது அருந்துபவர்கள். “எங்களைப் பார், ஒன்றும் ஆகாது” எனச் சொல்லி மதுவைத் தந்தார்கள். “வேண்டாம், பழக்கம் இல்லை” என்று சொல்லத் துணிச்சல் அவனுக்கு இல்லை.

 

சதீஷ், மது அருந்த ஆரம்பித்ததை வீட்டினரிடமிருந்து மறைத்தான். மனம் உறுத்தியது. குற்ற உணர்வை சமாதானம் செய்யவே வீடு திரும்புகையில் ஏதாவது ஆடம்பரமாக வாங்கி வருவதை ஆரம்பித்தான்.

 

மனைவி ராதா, முனைவர் பட்டம் பெற்றவள். பாரபட்சம் பார்க்காமல் உதவுவாள். நன்றாகச் சமைப்பாள். அக்கம்பக்கத்தினருக்குத் தாராளமாகத் தருபவள். முதல் குழந்தை, சுதா ஐந்தாவதில், இளையவனான சுமன் இரண்டாவது வகுப்பில். படிப்பில் சுமார், கை வேலையிலும், விளையாட்டிலும் கெட்டி.

 

சுதா, சுமன் தெருவின் மற்ற பிள்ளைகளுடன் பள்ளிக்கூடம் போவார்கள். உயிர்த் தோழனான குமார் வாயிலிருந்து முதல் முதலில் அதைக் கேள்விப்பட்டார்கள். ஒரு நாள், குமார் அவர்களைப் பார்த்தவுடன் ஸ்கூல் பையைக் கீழே போட்டு விட்டு, பல்லைக் கடித்தபடி, “உங்க அப்பாவால, எங்க அம்மா….” கண்களில் கண்ணீர் முட்ட, மேற்கொண்டு சொல்ல முடியாமல் ஓடிப்போய் பையை எடுத்துக்கொண்டு ஓடி விட்டான்.

 

குழந்தைப் பருவம் தான். ஆனால் சுதா- சுமன் இருவருக்கும் குமார் எதைக் குறிப்பிடுகிறான் என்று யூகிக்க முடிந்தது. அவர்கள் அப்பா சதீஷ், குமாரின் அப்பாவுடன் பல நாட்கள் தள்ளாடியபடி திரும்பி வருவதைப் பார்த்திருந்தார்கள். குமார் அப்பாவிடமும் துர்நாற்ற  வாடை வரும். சுதா, சுமன் கண்ணீர் சுற்றென்றது. குமார் உயிர்த் தோழன் ஆச்சே!

 

ஆறு ஏழு மாதங்களாக வெள்ளி, சனிக்கிழமை, வேலையிலிருந்து வரும் போதே ஸதீஷ் தள்ளாடியபடி, அந்தத் துர்நாற்றத்துடன் வருவதுண்டு. மது அருந்துவதால் என ராதாவுக்குத் தெரியும். அச்சப் பட்டு கவலையில் நடுங்குவாள். இதைப் பார்த்து, சுதா சுமன் பயப்படுவார்கள். மறு நாள் இது எதுவுமே நடக்காதது போல் இருப்பான் சதீஷ்.

 

இதனாலேயே இப்போதெல்லாம் இவர்கள் வீட்டில் எட்டு மணிக்குப் பிறகு ஒரு நிசப்தம் நிலவியது. அருகில் வசிக்கும் யாரும் அங்கே போக அஞ்சுவார்கள். முன்பு இப்படி இல்லையே!

 

மாலை எட்டு மணிக்குள் சுதா, சுமன் அவசர அவசரமாகப் படித்துக் கொண்டு இருப்பதைப் பார்க்கலாம். ஏன் இந்த அவசரம்? சதீஷ் வரவை வேதனையுடன் எதிர்பார்ப்பதினால்தான்!

 

அதற்கு ஏற்றாற்போல், காலைத் தேய்த்துக் கொண்டு, ஷர்ட் பட்டன் மேலும் கீழுமாகவும், வீதிக்கே கேட்கும் அளவிற்குப் பாடிக்கொண்டே வருவான் சதீஷ். அவனிடமிருந்து மது அருந்திய வாடை குடல் வரை போகும். பிள்ளைகளிடம் இனிப்பு கொடுத்து அசட்டுச் சிரிப்பு சிரிப்பான். வாடை சகிக்கவில்லை என்றாலும் சுதா, சுமன் பயத்துடன் வாங்கிக் கொள்வார்கள். மறுத்தால், திட்டி, உதைப்பான். இதுவரை திட்டாத, கை ஓங்காத சதீஷ், இப்போது இப்படி!

 

ராதா நிலைமையைச் சமாளிக்க சதீஷை சாப்பிட அழைப்பாள். சாப்பிட்டு விடுவான். மதுவின் அளவு அதிகரிக்க, முகத்தைச் சுளித்துக் கொண்டு, தட்டைத் தூக்கி எறிந்து விட்டு, வெளியே போய்விடுவான். இரவு ஒன்றரை மணிக்குத் திரும்பி வருவான். அவனுடைய கூச்சல் கத்தலால் தூக்கம் இல்லாமல் போகும். ராதா துக்கத்தில் விசும்புவாள்.

 

அடுத்த நாள் தலைவலியுடன் எழுந்திருப்பான். இரவில் செய்தது, சொன்னது எதுவும் ஞாபகம் இருக்காது. இது “ப்ளாக் அவ்ட்” (black out) என்பது, அது பிற்காலத்தில்தான் புரிய வந்தது. மிகவும் சங்கடப்பட்டாள் ராதா. . சதீஷின் சொற்கள், செயல்கள் மூவரின் நெஞ்சையும் வாட்டியது. அவன் இவ்வளவையும் செய்து விட்டு ஒன்றும் ஆகாதது போல் இருப்பதை ஏற்றுக் கொள்ள அவர்களுக்கு மிகக் கடினமாக இருந்தது.

 

சுதாவின் பள்ளித் தோழி கிரிஜா, தன் வீட்டுப் பக்கத்தில் உள்ள சர்ச்சிற்கு வியாழக்கிழமைகளில் பலபேர் வந்து போவதை ஆர்வத்துடன் கவனித்தாள். ஆண்கள்-பெண்கள் எனப் பிரிந்து சென்றதைப் பார்த்து கொஞ்சம் வியந்தாள். ஒவ்வொருமுறையும் அதே முகங்கள். ஒன்றாக வந்து, சென்றார்கள். இது என்னது எனத் தெரிந்து கொள்ள அந்த சர்ச் பாதிரியாரிடம் கேட்டாள். அவர்கள் ஒரு குழு அமைப்பு என்றும், ஒரு விஷயத்திற்காக வருவதாகச் சொல்லிச் சென்று விட்டார்.

 

கிரிஜா விடவில்லை. சுதாவை தன்னுடன் அழைத்துச் சென்று இருவரும் என்னவென்று எட்டிப் பார்த்தார்கள். அங்கு எழுதியுள்ளதை நகல் எடுத்து ராதாவிடம் காட்டினார்கள். மற்ற அம்மாக்கள் கோபித்துக் கொள்வார்கள், ராதா விளக்கம் அளிப்பாள் எனத் தெரிந்து அவளிடம் சீட்டைக் காட்டினார்கள்.

 

ராதா காகிதத்தைப் பார்த்ததும், அழ ஆரம்பித்தாள். குழந்தைகள் பயந்து போனார்கள். கிரிஜாவை அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு, “தாங்க்ஸ்” என்றாள் ராதா. குழந்தைகள் இருவருக்கும் எதுவும் புரியவில்லை.

 

மறுநாளே ராதா பாதிரியாரைச் சந்தித்து அந்த காகிதத்தில் எழுதியிருந்த “alcoholics anonymous” (ஆல்க்ஹாலிக்ஸ் அனானிமஸ்) பற்றி விசாரித்தாள். அவர் விளக்கியதில் புரிந்தது. இது குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்தவர்களின் குழு அமைப்பு. திரும்ப மதுப் பழக்கத்திற்குப் போகாமல் தடுத்து தடுத்தி கொள்வதற்காகச் சந்திக்கிறார்கள் என்று அறிந்து கொண்டாள். யாருக்கும் குழுவிற்கு வருபவர்களைப் பற்றிய தகவல்கள் தரமாட்டார்கள் அதனால் தான் “அனானிமஸ்” என்றதைப் பாதிரியார் விளக்கினார.

 

இவர்களால் சதீஷிற்கு உதவ முடியுமா என்றதையும் அவர் தெளிவு செய்தார். ராதாவை அவர்களின் குழுவில் வந்து கலந்து கொள்ளப் பரிந்துரைத்தார்.

 

அவ்வாறே ராதா செய்தாள். குழுவில் வலுவான ஆதரவு கிடைத்தது. ராதா மனதில் புதுத் தெம்பு வந்தது. பிரேம் என்பவரும், அவரின் மனைவி ஊர்மிளாவும் அவளுக்கு ஊக்கம் கொடுத்து உதவ முன் வந்தார்கள். ராதா மேலும் அறிந்து கொண்டது, மது அருந்துபவரின் மனைவிகளுக்கும் “ஏல்-எனான்” (Al-Anon) குழந்தைகளுக்கும் “எல்-டீன்” (Al-Teen) என்ற குழுக்கள் உண்டு. 

 

பிரேமுடன் குழுவின் மற்றும் மூன்று நபர்கள் சேர்ந்து சதீஷை சந்திக்க வந்தார்கள். சதீஷ் அவர்களிடம் மிகக் கடுமையாகப் பேசி விரட்டி விட்டான். இவ்வாறு ஆகும் என்று அவர்கள் அறிந்ததே. ராதாவைச் சமாதானப் படுத்தி, எவ்வாறு இதைக் கையாள வேண்டும் என்று அவளுக்குப் புரிய வைத்தார்கள்.

 

மது அருந்துவது எப்போது உபாதை ஆகின்றது என்பதை விளக்கினார்கள். ராதா தெளிவாகப் புரிந்து கொண்டது: சமீபத்தில் சதீஷ் வேலையில் நண்பர்கள் தூண்டுதலினால், “வேண்டாம்” என்று சொல்லத் திறன் இல்லாததினால் குடிப்பது ஆரம்பித்தது. அவன் தனியாகவும் குடிப்பது மதுவிற்கு அடிமையாகி வருவதைக் காட்டுகிறது. குடிப்பது சரிதான் என்று சாதித்து, வேலை அழுத்தத்தினால் குடிப்பதாகத்  தர்க்கம் செய்வது (இதற்கு முன்னால் இல்லாத வேலைப் பளுவா?), அனாவசிய ஆடம்பரச் செலவுகள் எல்லாமே அறிகுறிகள். குறிப்பாக, குடிப்பதால் வீட்டில் என்ன தொல்லைகள் நேர்கின்றது என்றதை சதீஷ் புரிந்து கொள்ளாதது, இவையெல்லாம் சதீஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமை என்பதைக் காட்டுகிறது.  

 

பிரேம்-ஊர்மிளா பக்கத்திலிருந்ததாலோ, அவர்களும் சதீஷ்-ராதா வயது தான் என்பதாலோ, பல முறை சதீஷைச் சந்தித்துப் பேச ஆரம்பித்தார்கள். தற்செயலாக சதீஷ் குடிக்காமலிருந்த போதும் சில சந்திப்புகள் நேர்ந்தது. இதை உபயோகித்து, அவர்கள் தாங்களும் குடிபோதையில் எந்த அளவிற்குச் சரிந்து, பின்னர் சுதாரித்து, மதுப்பழக்கம் விட்ட பின் நிலை உயர்ந்ததைப் பற்றி பகிரங்கமாகப் பல உதாரணங்களுடன் பகிர்ந்தார்கள்.

 

பல முறை இவ்வாறு ஆனதும் சதீஷ் தன் இயலாமையைப் பற்றி கொஞ்சம் விளக்கம் அளிக்க ஆரம்பித்தான். பிரேம் இவை எப்படி மதுப்பழக்கத்துடன் இணைந்து இருக்கிறது என்றதை எடுத்துச் சொன்னான். பயன் இல்லை. சதீஷ் அன்று இரவும் குடித்தான்.

 

இது போல் நான்கு-ஐந்து முறை நடந்தது. இந்த நேரத்தில், ராதா சதீஷிடம் ஏன் அவனுடைய இந்த நிலை அவளுக்குச் சரிவரவில்லை என்றும், குழந்தைகள் தவிப்பையும் சொன்னாள். மாமனார்-மாமியார் தனக்கு ஆதரவாக இருப்பதை ராதா வலியுறுத்தினாள். குற்ற உணர்வைத் தருவதற்கு இல்லை, உதவுவதற்கு. பிரேம், ஊர்மிளா, மாமனார் தன்னுடன் முயற்சிகளை எடுக்கிறார்கள் என்றதையும் விவரித்தாள்.

 

சிகிச்சை பற்றிய தகவல்களை “ஆல்கஹால் அனானிமஸ்” தலைவர் விளக்கினார். இதையும் உணர்த்தினார், சதீஷ் தானாக உணர்ந்து, தனக்குச் சிகிச்சை தேவை என்று எண்ணினால்தான் சிகிச்சை வெற்றியாகும் என்று சொல்லி, முடிவை சதீஷ் கையில் விட்டார்கள்.

 

எல்லா மனநல சிகிச்சைகள் போல, குடிப்பழக்கத்திற்கும், “தயார் மனப்பான்மை”(preparedness) அவசியமானது. கூடவே நம்பிக்கையும் தேவை. மது அருந்துவதால் பல இன்னல்கள் ஏற்படுகின்றது என்று உணர்ந்து, குடிப்பதை விட்டு விடுவது அவசியம் என்று தீர்மானிக்க வேண்டும். குடும்பத்தினர் ஒத்துழைப்பும் தேவை என்றும் கூறினார்.

 

இந்த தருணத்தில் தான் சதீஷை, ஆல்கஹால் அனானிமஸ் தலைவர் எங்களது சிகிச்சை இடத்திற்கு அழைத்து வந்தார்.

 

சில வாரங்களுக்குப் பின் சுதா-சுமன் ராதாவை குமார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். குமார், அவன் அம்மா இருவரும் வருத்தப் பட்டார்கள். கோபமாகப் பேசி, வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதைக் கிரிஜா பார்த்து விட்டாள். தன் தோழி சுதா அழுவதைப் பார்த்து, மனதிற்குள் அவளுக்கு மேலும் உதவ வேண்டும் என்று முடிவு செய்தாள். ஆனால் என்ன செய்ய?

 

பத்து நாளைக்கு கிரிஜாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அன்று சர்ச்சில் அதே கூட்டம். கிரிஜா ஓடிப்போய் சுதாவை அழைத்தாள். இருவரும் குமார் வீட்டிற்கு சென்றார்கள். குமாரைச் சமாதானம் செய்து ராதாவிடம் பேச அழைத்து வந்தார்கள். கிரிஜா அந்த சர்ச் கூட்டத்தைப் பற்றி தான் ராதாவிடம் சொன்ன பின், அவர்கள் வீட்டில் பல மாற்றம் தெரிய ஆரம்பமானதை குமாரிடம் விவரித்தாள்.

 

ராதா மிகப் பாசத்துடன் குமாரிடம் பேசத் தொடங்கினாள். அவனுடைய அம்மா என்னமோ ஏதோ என்று நினைத்து ஓடி வந்தாள். அவர்களின் கோபம் தணிந்ததும், ராதா, தான் “ஆல்கஹால் அனானிமஸை” அணுகியதைப் பற்றி விளக்கினாள். தனக்கு எடுத்துச் சொன்னதை அவர்களிடம் சொன்னாள். குமார் அம்மா “அப்படியா” என்று விழித்தாள். ராதா அவளை ஆசுவாசப்படுத்தினாள். தானும் சதிஷும் அவர்கள் வீட்டிற்கு வந்து அவள் கணவரிடம் பேசுவதாகச் சொன்னாள். தன் பிரியச்சகீ கிரிஜாவைப் பெருமையுடன் சுதா நினைத்துக் கொண்டாள்!

குமார் அப்பாவிற்குப் பழக்கம் ஆரம்பித்து வைத்ததால், சதீஷையே அவரை சிகிச்சைக்குத் தயார்ப் படுத்தும் முயற்சி எடுக்க நானும் சொன்னேன். ராதாவை அவனுடைய மனைவியிடம் பேசித் தயார் செய்யப் பரிந்துரைத்தேன். செய்தார்கள்.

 

சதீஷ் தனக்குச் சிகிச்சை தேவை என்று தோன்ற வைத்ததே தன் குடும்பத்தினால் தான் என்றான். போதையில் வாங்கி வருவதை அவன் கூச்சல் போடாமல் இருக்க, எடுத்துக் கொள்வார்கள். மறு நாள் அவனிடமே கொடுத்து விடுவதுண்டு. சிகிச்சையின் போது தன் செயலின் பாதிப்புகளை, எந்த அளவிற்குக் காயப் படுத்தியது என்பதைப் புரிந்து கொண்டேன் எனப் பகிர்ந்தான்.

 

குமார் குடும்பம் தவிக்கும் தவிப்பைப் பார்த்தது சதீஷை தன் நடத்தையைப் பற்றி மேலும் சிந்திக்கச் செய்தது. குற்ற உணர்வை மறைக்க மது மீண்டும் அருந்துவது சுலபமாக நடக்காக் கூடும். இந்த அனுபவம் அதைத் தவிர்த்தது. 

 

சதீஷின் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன்களும், மனதிடமும் வளர பயிற்சிகள் ஆரம்பித்தோம். ஏனென்றால், சதீஷிற்கு மதுப்பழக்கம் ஆனதே தன் உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாததால் தான். உயர்ந்த அதிகாரிகள் சொல்வதற்கு மறுக்கத் தைரியம் இல்லாததால் குடிக்கத் தொடங்கினான். மனதிடம் இல்லாததால் “இது தேவையா?” என்று ஆராயவில்லை. பழக்கத்தைப் பற்றியோ, அதன் விளைவுகளையோ எண்ணவில்லை. இவற்றைச் சரிசெய்யாவிட்டால் சிகிச்சைக்குப் பிறகு அதே வேலை, அதே கூட்டங்கள், திரும்ப மது அருந்தல் ஆரம்பமாக நேரிடும்.

 

பாரதியின் “மனதில் உறுதி வேண்டும்!” வளர, அதைச் சுற்றியுள்ள மற்ற திறன்கள் மேம்படவே, குமாரின் அப்பாவை சதீஷின் பொறுப்பாக ஒப்படைத்தேன். இதைச் செய்ததில், சதீஷிற்கு தன்நம்பிக்கை, மதுவிற்கு அடிமையை விடுவித்த  சந்தோஷம் ஏற்படும், மதுவைத் தொடாமல் இருக்க ஊக்குவிக்கும் என நம்பினேன். நம்பிக்கை வீண் போகவில்லை.  கால்பந்து விளையாடத் தொடங்கினார்கள்.

 

ராதாவின் பங்கு பெரிதளவில் உதவியது. முனைவர் என்பதால் பல தகவல்களைப் படிக்கத் தந்து, அதை மற்றவர்களுடன் பகிர்வதற்குக் குழுக்கள் அமைத்துச் செய்யச் சொன்னேன். அக்கம்பக்கத்திலும், சர்ச் சமூக கூடத்திலும் சுதா, சுமன் மற்றும் குமாரை வைத்து மதுப் பழக்கம், அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை பற்றி ஸ்ட்ரீட் ப்ளே தயாரித்து அதைச் செய்தார்கள்.

 

இங்கு தான் பெரிய அளவில் வெற்றி என்றுகூடச் சொல்லலாம். நான்கு ஐந்து மாதத்திற்குப் பிறகு அக்கம்பக்கத்தில் உள்ள இரண்டு நபர்கள் சிகிச்சைக்கு தங்கள் மனைவிகளுடன் வந்தார்கள். சுதா, சுமன் தங்களது அனுபவங்களை வெளிப்படையாகப் பேசியதில், அவர்கள் வகுப்பில் உள்ள குழந்தைகள் தங்கள் வீட்டில் சொல்லி முயல, ராதாவின் மூலம் எங்களிடம் வந்தார்கள். அதுதான் இதில் முக்கியமான விஷயம், குடிக்கிறார்கள் என்று மூடி மறைத்தால் அது அதிகமாகும்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.