டெலி·போன் சத்தம் போட்டு என்னைக் கூப்பிட்டது.
ரிஸீவரை காதுக்கு கொடுத்தவன் அதிர்ந்து நின்றேன்.
‘ஸார்.. உங்கள் மனைவிக்கு ஒரு சின்ன ஆக்ஸிடன்டாகி, அவளை எஸ்.பி. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம்..’
என்றது ஒரு குரல் மறுமுனையில்.
‘ஓ.. மை காட்… ‘ என்று, என்னுடன் பேசிக் கொண்டி-ருந்த என் நண்பன் ரகுவையும் இழுத்துக் கொண்டு, வீட்டைப்
பூட்டிக் கொண்டு காருக்கு ஓடினேன்.
‘என்னடா… என்ன ஆச்சு…? ஏன் இப்படி பதட்டப்படறே… ‘ என்று என்னுடன் நண்பன் ரகுவும் ஓடி வந்தான்.
‘டேய் மைதிலிக்கு ஏதோ ஆக்ஸிடென்டாம்.. ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்திருக்காங்களாம்… வா வா….’ என்று
கார் கதவைத் திறந்து டிரைவர் ஸீட்டில் உட்கார்ந்தேன். நண்பன் ரகுவும் ஏறிக் கொண்டான்.
‘கடவுளே… அவளைக் காப்பாற்று… இன்னும் ஐந்து நிமிஷத்துலே என்னை அங்கே கொண்டு சேர்த்திடு.. அவளுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது… முருகா.. முருகா…’ என்று கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தேன்.
ஐந்து நிமிடங்கள் போயிருக்கும்.. கண்களைத் திறந்து பார்த்தவன் என் வீட்டிற்குப் பக்கத்திலேயே நான் இருப்-
பதைப் பார்த்தேன்.
‘சே.. முருகா.. உன்கிட்டே மனமுருகி வேண்டிக்கொண்டேனே இன்னும் ஐந்து நிமிஷத்தில் நான் ஆஸ்பத்திரியில் இருக்கணும்னு. இப்பவும் இங்கேயே இருக்கேனே.. இப்படி பண்ணிட்டியே…’ என்று அதட்டலாய்க் கேட்டேன் முருகனிடம், சிறிது கோபமும் கொப்பளிக்க…
காரில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் நண்பன் ரகு மெதுவாகச் சிரித்தபடியே, ‘ டேய் உனக்கு ஒண்ணு
தெரியுமா… காரில் டிரைவர் ஸீட்டில் உட்கார்ந்து ஐந்து நிமிடத்தில் சேர்ந்துடணும் சேர்ந்துடணும்னு கடவுள்கிட்டே
வேண்டிக்கிட்டாப் போறாது… காரை ஸ்டார்ட் பண்ணி, ஆஸ்பத்திரியை நோக்கி ஓட்டணும்.. அப்பத்தான் நம்ம
இலக்கை அடைய முடியும். பக்தியுடன் நாம வேண்டிக்கிட்ட ப்ரார்த்தனையை கடவுள் நிறைவேற்றிக் கொடுக்க
நம்ம முயற்சியும் சிறிது வேணும். நீ காரை ஸ்டார்ட் செய்து கவனமா, நிதானமா ஓட்டும்போது வழியில் வாகன
நெரிசல்கள் ஒன்றும் இல்லாமல் கடவுள் கவனித்துக் கொள்ளலாம்.. அவ்வளவுதான்… நீ காரையே ஸ்டார்ட் செய்யாம
உட்கார்ந்திருந்து கடவுள் மேல் குற்றம் சொன்னா எப்படி..?’ என்றான்.
அசடு வழிய காரை ஸ்டார்ட் செய்தேன்.